From Wikipedia, the free encyclopedia
அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் அல்லது அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுபவை வலியைப் போக்கும் வலிநீக்கியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சலடக்கியாகவும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்துவதாகவும் காணப்படும், இயக்க ஊக்கிகளுக்குரிய (steroids) மூலக்கூறுகளைக் கொண்டிராத மருந்துகள் ஆகும். இந்த மருந்துக் குழுவில் மிகவும் பரவலாக அறியப்பட்ட அசுப்பிரின் (aspirin), இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்ஃசென் (naproxen) போன்றவை விளங்குகின்றன.
இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |
புரோசிட்டாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் ஊடகம் போலத் தொழிற்படுகிறது. புரோசிட்டாகிளாண்டினின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட்ட வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம்.
புரோசிட்டாகிளாண்டின் கொழுப்புக்காடியான அரக்கிடோனிக் காடியில் இருந்து உருவாகுகின்றது, இந்த உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நொதியமாக சைக்கிளோஆக்சிசனேசு விளங்குகிறது, அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் அல்லாத மருந்துகள் இந்த நொதியத்தைத் தடுப்பதனால் புரோசிட்டாகிளாண்டின் உருவாகுதல் நிறுத்தப்படுகிறது, இதன் மூலம் அழற்சி, வலி, காய்ச்சல் என்பன கட்டுப்படுத்தப்படுகின்றன. சைக்கிளோஆக்சிசனேசு சமநொதியங்களாகக் காணப்படுகிறது; சைக்கிளோஆக்சிசனேசு – 1 (COX-1), சைக்கிளோஆக்சிசனேசு – 2 (COX-2), சைக்கிளோஆக்சிசனேசு – 3 (COX-3) என்பன அவையாகும். அநேகமான அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் அல்லாத மருந்துகள் மேற்கூறப்பட்ட நொதியங்கள் இரண்டையுமே தாக்குகிறது, அதேவேளை ஒன்றை மட்டும் தெரிந்தெடுத்துத் தாக்கும் மருந்துகளும் உண்டு.
இந்த இயல் இயக்க முறையைப் பற்றி அசுப்பிரின் மூலம் விளக்கிய சோன் வேன் (1927-2004) இதற்காக நோபெல் பரிசைப் பெற்றார். பெரும்பான்மையான இயல் இயக்க முறையின் பகுதிகள் இன்னமும் தெளிவாக அறியப்படாமலேயே உள்ளன.
வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு அல்லாத மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பான்மையானவை தற்போது பயன்பாட்டில் இல்லை.
நிமெசுலைட் (Nimesulide) : சல்ஃபோனனிலைட்டுக்கள் பிரிவைச் சேர்ந்தது, மிகவும் தீவாய்ப்புடையது (ஆபத்தானது); கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
உடனடியான வலி, அழற்சி போக்கியாக அல்லது நீண்ட நாட்களாக இருந்துவரும் வலியைப் போக்குவதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படுகிறது. சில இவ்வகை மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு குடற்புற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கவல்லது என்று அறியப்பட்டுள்ளது.[1][2] பின்வரும் நோய்களில் இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன:
அசுப்பிரினானது குருதிச் சிறுதட்டுக்கள் ஒருங்கிணைவதை நிறுத்துகிறது, இதனால் குருதிக்குழாய்களில் குருதி உறைவது தடுக்கப்படுகிறது, இதன் மூலம் சில இதயக்குழலிய நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
பெரும்பான்மை அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு அல்லாத மருந்துகள் 3-5 வரையிலான pKa பெறுமானம் கொண்ட வலுவற்ற காடிகளாகும். இரைப்பையில் இருந்தும் குடலில் இருந்தும் நன்கு அகத்துறிஞ்சப்படுகின்றன, பின்னர் குருதிப்புரதங்களுடன் பிணைக்கப்பட்டு கல்லீரலில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, இறுதியில் செயலற்ற விளை பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
பெரும்பான்மையான பக்கவிளைவுகள் இரையகக் குடலியத் தொகுதியிலும் சிறுநீரகத்திலும் நிகழ்கின்றன. இவ்விளைவுகள் மாத்திரையின் உள்ளெடுக்கப்படும் அளவைப் பொறுத்தது ஆகும். அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்ட இரைப்பையில் புண்ணால் ஓட்டை ஏற்படல், குருதிப்போக்கு என்பன இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானதாகும்.
பக்க விளைவுகளைக் காட்டும் அட்டவணை [3]
தொகுதி | எதிர் விளைவுகள் |
---|---|
இரையகக் குடலியத் தொகுதி | வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, குடற்புண், இரத்தசோகை, இரையகக் குடலியக் குருதிப்போக்கு, துளை உண்டாதல், வயிற்றுப்போக்கு |
சிறுநீரகத் தொகுதி | உப்பு – நீர் தேக்கி வைத்திருத்தல், வீக்கம், யூரேட்டுக்கள் கழிவு அகற்றப்படல் குறைவடைதல், பொட்டாசியம் உயர்வடைதல் |
மைய நரம்புத் தொகுதி | தலைவலி, தலை சுற்றல், மயக்க உணர்வு, மனச்சோர்வு, விரைவாகச் சுவாசித்தல் |
கருப்பை | கருவளர்ச்சிக்காலம் அதிகமாதல், பிரசவம் தடைப்படல் |
ஏனையவை | ஒவ்வாமை, தாழ் குருதியமுக்கம், ஆஸ்துமா, அரிப்புத்தோல் |
ஆய்வொன்றின் படி இவ்வகையான மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டுள்ளது.[4] வேறொரு ஆய்வில் ஏட்ரியக் குறு நடுக்கத்திற்குரிய (atrial fibrillation) ஆபத்தானது இம்மருந்துகளைப் பயன்படுத்துவதால் அதிகமாகிறது எனவும் அறியப்பட்டுள்ளது.[5]
இரையக சீதமென்சவ்வில் மருந்தின் அமில மூலக்கூறுகள் நேரடியாக உறுத்துவதாலும், சைக்கிளோஒக்சிசனேசு நொதியங்கள் தடுக்கப்படுவதால் இரையகத்திற்குப் பாதுகாப்பு வழங்கும் புரோசுடாகிளாண்டின் அளவு குறைக்கப்படுவதாலும் இரையகக் குடலியத் தொகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இரையகச் சீதமென்சவ்வை இயற்கையாக புறக்காரணிகளில் இருந்து பாதுகாக்க புரோசுடாகிளாண்டின், இருகாபனேற்று, சீதம் ஆகியன உதவுகின்றன, புரோசுடாகிளாண்டின் உற்பத்தி தடுக்கப்படுவதால் இரையக அமிலத்தின் உற்பத்தி பெருகி இருகாபனேற்று, சீதம் ஆகியவற்றின் அளவுகள் குறைவடைகின்றன இது இரையகப்புண் ஏற்பட வழிகோலுகிறது.
பொதுவான இரையகக்குடலிய எதிர் விளைவுகள்:
மருந்தின் நீண்ட நாள் பயன்பாடு மற்றும் மிகையான மருந்து அளவு இரையகப் புண் உண்டாவதற்குரிய சூழ் இடர் காரணியாக திகழ்கின்றது. டிக்ளோஃபெனாக் மற்றும் இபுப்புரொஃபெனைக் காட்டிலும் கெற்றோபுரொஃபென், இன்டோமெதாசின், பிரோக்சிகம் உபயோகிப்பதில் இரையகக்குடலிய எதிர் விளைவுகள் அதிகமாக உள்ளன. குடற்பயன்பூச்சுக் கொண்டிருக்கும் அசுப்பிரின் போன்ற மருந்துகளின் உபயோகம் எதிர்விளைவுகளைக் குறைகிறது. இரையகக்குடலிய எதிர் விளைவுகள் சில முறைகள் மூலம் தடுக்கப்படலாம்; புரோட்டான் பம்பு தடுப்பிகளான ஒமிப்ரசோல் போன்றவை இரையக அமிலம் சுரப்பதைத் தடுக்கின்றன.
குருதிப்போக்கின் காரணமாக, பெருங்குடல் புண் அழற்சி (ulcerative colitis) அல்லது குரோன் நோய் போன்ற குடல் அழற்சிய நோய்கள் உள்ள போது ஒருபோதும் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பயன்படுத்துதல் கூடாது, பரசிட்டமோல் அல்லது கோடின் போன்ற மாத்திரைகள் குடல் அழற்சிய நோய்கள் உள்ள போது வலிபோக்கியாக உபயோகிக்கலாம்.
சிறுநீரக இரத்த ஓட்டவியலில் பாரதூரமான பாதிப்புகளை புரோசுடாகிளாண்டின் அளவு குறைக்கப்படுவதன் மூலம் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் ஏற்படுத்துகின்றன. இங்கு உப்பு – நீர் தேக்கி வைக்கப்படல், உயர் குருதி அழுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்க விளைவுகளாகும். சில அரிதான சந்தர்ப்பங்களில் இந்த அழற்சிக்கு எதிரான மருந்துகள் சிறுநீரக அழற்சியையும் சிறுநீரக கூட்டறிகுறிகளையும் சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தலாம்.
இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பிரசவத்தின் போது உபயோகித்தல் நல்லதல்ல, இதனால் பிறந்த உடனே மூடப்படவேண்டிய தமனி நாளம் (ductus arteriosus) கருவறையில் உள்ளபோதே மூடப்படலாம், மேலும் குறைப்பிரசவமும் நிகழலாம். மாறாக, பரசிட்டமோல் பிரசவத்தின் போது பாதுகாப்பான மருந்தாக விளங்குகிறது, எனினும் மருந்தின் அளவு அதிகமாகக் கூடாது.
பொதுவானவை: கல்லீரல் நொதியங்கள் உயர்வடைதல், தலைவலி, தலைச்சுற்று. பொதுவில்லாதவை: பொட்டாசியம் உயர்வடைதல், குழப்பநிலை, சுவாசக்குழாய் சுருங்குதல், அரிப்பு, முக-உடல் வீக்கம்.
மருந்து | தீவிரம் | எதிர் விளைவு | பரிந்துரை |
---|---|---|---|
அங்கியோடென்சின் நிலைமாற்றும் நொதியத் (ACE) தடுப்பிகள் | மிதமானது | பரழுத்தந்தணிப்பி இயல்பையும் உப்பு மிகைச் சிறுநீர் இயல்பையும் குறைக்கலாம். | இரத்த அழுத்தத்தையும் இதயத் தொழிற்பாட்டையும்
அவதானித்தல் |
புரோபெனேசிட் | மிதமானது | யூரிக் அமிலத்தை வெளியேற்றும் இயல்பு குழப்பப்படும். | புரோபெனேசிட்டுடன் அசுப்பிரின் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். |
இலிதியம் | மிதமானது | குருதியில் இலிதியத்தின் அளவு உயரலாம், அதனது சிறுநீருடன் வெளியேறும் அளவு குறையலாம். | இலிதியம் நச்சுமையைக் கண்காணித்தல் |
வார்ஃபரின் | மிதமானது | குருதிப்போக்கு ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம். | புரோதுரோம்பின் நேரத்தைக் கணித்தல் (PT) |
மெதோற்ரெக்செற் | கடுமையானது | மெதோற்ரெக்செற் நச்சுமை உருவாகலாம். | மெதோற்ரெக்செற் பயன்படுத்திய பத்து நாட்களுக்குள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பயன்படுத்துதல் கூடாது. |
சைக்கிளோஒக்சிசனேசு – 2 தடுக்கும் மருந்துகள் பயன்பாட்டில் உள்ள போது சாதாரண மற்றைய இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பயன்படுத்துதல் கூடாது. இதே போல, நாளாந்தம் அசுப்பிரின் பயன்படுத்தும் ஒருவர் மற்றைய இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பயன்பாட்டைத் தவிர்த்தல் வேண்டும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.