கண்டம் From Wikipedia, the free encyclopedia
அந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா (Antarctica) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைப் பொழிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலம் ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக் கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்[2]. அண்டார்டிகாவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.
பரப்பளவு | 14,000,000 km2 (5,400,000 sq mi)[1] |
---|---|
மக்கள்தொகை | 5,000 தற்காலிக வாழிகள் |
இணைய மே.நி.ஆ. | .aq |
அண்டார்டிக்கா என்ற பெயர் ஒரு கிரேக்க கூட்டுச் சொல் ἀνταρκτική (ஆன்டர்க்டிக்கே), ἀνταρκτικός (antarktikós),[3] ஆகும். இதன் பொருள் "ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான", "வடக்கிற்கு எதிரிடையாக" என்பது ஆகும்.[4]
அரிசுட்டாட்டில் தனது நூலான மீட்டியரோலாஜியில் அன்டார்டிகா பற்றி கி.மு 350-இல் எழுதியுள்ளார்.[5] கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக வரைபடத்தில் டயர் மரின்ஸ் இந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ரோமானிய எழுத்தாளர்களான ஹைஜினஸ் மற்றும் அபூலியஸ் (கி.பி. 1-2 நூற்றாண்டுகள்) தென் துருவத்தை ரோமானிய கிரேக்க பெயரான பொலஸ் அண்டார்டிக்கஸ்,[6][7] என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்தாட்டிக்காவில் ஏறத்தாழ 5000 மீட்டர் (16,000 அடி) அளவிற்குத் தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணைப் பார்க்கமுடியும். ஏனெனில், 98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிட்மிகு சீதோஷ்ண நிலையியே இருக்கும். அண்டார்டிகா. நாம் வாழும் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அமைந்துள்ளது.உலகின் 7-வது கண்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, ஐந்தாவது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகில் உள்ள தண்ணீரில் 68 விழுக்காடு அண்டார்டிகாவிலேதான் உள்ளது. ஒரு துளி மழை கூடப் பெய்யாத இடம் எதுவென்ற வினா எழுப்பினால், அண்டார்டிகா என்று உடனே தயக்கம் எதுவுமின்றித் தாராளமாக விடையளிக்கலாம்.. உலகிலேயே கொடுமையான குளிரும் ( 89 டிகிரி ஷெல்சியஸ் ), பனிக்காற்றும் ( 1300 Km/Hr ) நிறைந்து, ஒரு உலக அதிசயமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை.
அங்கேயும் மிக உயர்ந்த வின்சன் மாஸிப் என்ற உயர்ந்த ( 4892 மீட்டர்கள்) மலைச்சிகரம் உண்டு.ஆனால் அது நமது எவரஸ்ட் சிகரத்தை விட பாதி தான்.அதே போல் அங்கே ரோஸ் ஐலன்ட் எனும் தீவில் மவுண்ட் எருபஸ் என்ற எரிமலையும் உண்டு.அதுமட்டுமல்லாமல் அங்கே 70 அழகிய குடிநீர் ஏரிகளும் இருக்கின்றன.
கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா, முதலில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தாலும், தொடர்ந்து தங்கிப் பார்க்கும் நிலையில், விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். அண்டார்டிகாவில் பனிப்புயல் 300 கி.மீ. வேகம் வீசும்.'கட்ஸ்' எனப்படும் சூறாவளி சுழன்று சுழன்று வீசும். மிகவும் இதமான சீதோஷ்ணநிலை போல் தோன்றும் நிலை சுமார் அரைமணி நேரத்திற்குள் உயிருக்குப் போராடும் பனிப்புயலாகவும் மாறிவிடும் அபாயமும் உண்டு.. குளிரால் எற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம் என்று கூறலாம். பூமியில் அதிர்ச்சி அல்லது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி கடற்கரை நோக்கி மெல்ல நகரும். அதுசமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்க, புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை இலேசாக மூடிவிடும். இதனை பனிப்பிளவு என்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி, இதன்மீது கால் வைத்துவிட்டால், அந்த நபர் அதலபாளத்தில் விழுந்து உடனடி உறைதல் காரணமாக ( Hypothermia ) உறைந்து போய்விடுவார். பனிப்புயலின் வேகத்தால் உறைபனிப்பாளங்கள் பல்வேறுவிதங்களில் சீவி விடப்படுவதால், பனிப்பாளங்கள் சமதரையாக இல்லாமல் மேடு பள்ளமாகவே இருக்கும். அவற்றின்மீது நடக்க முற்பட்டால், உடைந்துபோன கண்ணாடித் துண்டுகள்போல் கால்களைக் கிழிக்கும்
வெப்ப நிலையானது மிகக் குறைந்தபட்சம் மைனஸ் 80 செல்சியஸ் முதல் மைனஸ் 90 செல்சியஸ் வரை இருக்கும்.அதிகபட்சம் 5 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருக்கும்.
அண்டார்டிகாவில் கடந்த 1,000 ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு தற்பொழுது பனிக் கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றனவாம்.இதை ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்ப அளவு அதிகரிப்பு வேகம் பிடித்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக அங்கே யாரும் பயணம் செய்தது இல்லை.அண்டார்டிகா குறித்து அறிந்திராத நாட்களிலேயே, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகின் தென் துருவம் நோக்கிப் பயணிக்க முற்பட்டன.
ரோல்ட் அருன்ட்சன் என்னும் பெயருடைய நார்வே நாட்டைச் சேர்ந்தவர், 14, டிசம்பர், 1911 -இல் பகல் 3 மணியளவில், தென் துருவத்தில் கால் பதித்துத் தன் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
அதே சமயம் அவருக்கு இணையாக வேறு ஒரு பாதையில் பயணத்தைத் துவக்கிய, இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபட்கான் ஸ்காட் என்பவர், 17, ஜனவரி 1912-இல் தென் துருவத்தை அடைந்தார். அங்கே நார்வே நாட்டு கொடி பறப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். மன விரக்தியில் திரும்பிய ஸ்காட்டும் அவருடன் பயணித்த நால்வரும் பனிப்புயலில் சிக்குண்டு இறந்துபோனார்கள். பின்னாளில் தாங்கள் அமைத்த ஆய்வு தளத்திற்கு அமெரிக்கா,அருன்ட்சன்,ஸ்காட் என்று பெயர் சூட்டி இருவரையுமே கெளரவித்தது.
மனிதர்கள் வாழ சாத்தியமேயில்லை என்றாலும்.வருடத்திற்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கி இருக்கிறார்கள்.இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சித்து வருகிறது.
இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.பனிப் பிரதேச மகாராசாக்கள் பெங்குவின்கள் நிறைய உண்டு.மோசேஸ், சீல் என சில உயிரினங்களும், பனிப் பிரதேச சூழலுக்கு வாழும் தன்மையுள்ள மைக்ரோ மற்றும் பெரிய தாவரங்களும் இங்கு வாழ்கின்றன.
பல நாடுகள் அந்தார்திகாவின் சில பிராந்தியங்களின் இறையாண்மை உரிமையைக் கோருகின்றன. இந்த நாடுகளில் சில நாடுகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களின் இறையாண்மையை அங்கிகரித்துள்ளன,[8] ஆனால் இந்த நடவடிக்கைகள் உலகளவில் செல்லுபடியாகும்படி அங்கீகரிக்கப்படவில்லை.[1]
1959 முதல் அண்டார்டிக்கா மீதான புதிய உரிமைகோரல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன, இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் ராயல் மாட் லேண்ட் மற்றும் யாரும் உரிமைகோராத நிலப்பகுதி ஆகியவ்வை உள்ள தென்துருவ நிலப்பிரதேசத்தை நோர்வே முறையாக வரையறுத்தது.[9] அண்டார்டிக்காவின் நிலையை 1959 அன்டார்டிக்கா ஒப்பந்தம் மற்றும் பிற தொடர்புடைய ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது, இவை கூட்டாக அண்டார்டிகா உடன்படிக்கை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அண்டார்க்டிக்கா ஒப்பந்தத்தின்படி 60 ° S க்கு தெற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பு மற்றும் பனித் தாழ்வாரங்களும் அந்தார்டிக்கா பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சோவியத் ஒன்றியம் (பின்னர் உருசியா), ஐக்கிய இராச்சியம், அர்ஜென்டினா, சிலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பன்னிரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.[10] இதன்படி அண்டார்டிகா பிரதேசமானது அறிவியல் பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது, இங்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியப்பணிகளுக்கான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது, அதேசமயம் அன்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை தடை செய்தது. இது பனிப்போர் காலத்தில் நிறுவப்பட்ட முதலாவது ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாகும்.
1983 ஆம் ஆண்டில் அன்டார்க்டிக் உடன்படிக்கை நாடுகள் அன்டார்க்டிக்காவில் சுரங்கங்களை ஒழுங்குபடுத்தும் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.[11] சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு [12] இப்பகுதியில் எந்த கனிம அகழ்வுப் பணிகளையும் செய்யாமல் தடுக்க பொது அழுத்த பரப்புரையை முன்னெடுத்தது, பெரும்பாலும் இது கிரீன்பீஸ் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது,[13] 1987 முதல் 1991 வரை ரோஸ் கடல் பகுதியில் உள்ள அதன் சொந்த அறிவியல் நிலையமான - வேர்ல்டு பார்க் பேஸ்ஸை இயக்கியது.[14] அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகளை ஆவணப்படுத்த வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டன.[15] 1988 ஆம் ஆண்டில், அண்டார்டிக் கனிம வளங்கள் (CRAMRA) ஒழுங்குமுறை மாநாட்டின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[16] அடுத்துவந்த ஆண்டில், ஆஸ்திரேலியாவும் பிரான்ஸும் மாநாட்டின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தன, இதனால் மாநாட்டின் அனைத்து நோக்கங்களுக்கும் முடிவெய்தின. அதற்கு பதிலாக அன்டார்க்டிக்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முழுமையான நிர்வாகத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர்.[17] அண்டார்டிக் உடன்படிக்கைக்கையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது.[17][18] இதன்படி அன்டார்க்டிக்காவின் அனைத்து சுரங்கங்களையும் தடைசெய்து, அண்டார்டிக்காவை "சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை இருப்பு" என்று குறிப்பிடுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.