From Wikipedia, the free encyclopedia
தென் துருவம், அல்லது தென் முனை (South Pole), என்பது புவியின் தென் அரைக்கோளத்தில் உள்ள, அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இதை புவியியல் தென் துருவம் என்றும் புவிசார் தென் துருவம் என்றும் அழைப்பதுண்டு. இது காந்தவியல் தென் துருவத்தில் இருந்தும் வேறுபட்டது. இது புவியின் தென் அரைக்கோளத்தின் தென் கோடியில் அமைந்துள்ள புள்ளியாகும். இது வட துருவத்துக்கு நேர் எதிரே, அண்டார்ட்டிக்காக் கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 1956இல் ஐக்கிய அமெரிக்கா, அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் எனும் நிரந்தரமான நிலையம் ஒன்றை 1956 ஆம் ஆண்டில் அமைத்தது. அன்று முதல் இந் நிலையத்தில் பணியாட்கள் நிரந்தரமாக இங்கே பணி புரிகின்றனர்.
பல நோக்கங்களுக்குப் புவிசார் தென்துருவம் புவிஇன் சுழல் அச்சும் புவி மேற்புறமும் சந்திக்கும் தெற்குப் புள்ளியாக வரையறுக்கப்படுகிறது; மற்றதோர் இத்தகையப் புள்ளி புவிசார் வட துருவம் ஆகும். இருப்பினும், புவியின் சுழல் அச்சு சில சிறிய 'தள்ளாட்டங்களைக்' கொண்டுள்ளதால் இந்த வரையறை மிகத் துல்லியமான வேலைகளுக்குப் பொருத்தமானதல்ல.
தென் முனைக்கான புவியியல் ஆள்கூற்று முறைகள் வழமையாக 90°S என்றே கொடுக்கப்படுகின்றன; ஏனெனில் இதன் நிலநிரைக்கோடுகள் வடிவவியலில் வரையறுக்க முடியாதும் பொருத்தமற்றும் உள்ளன. அப்படிக் கொடுக்க வேண்டியத் தேவை எழுந்தால் 0° எனக் கொடுக்கப்படுகிறது. தென்முனையில் அனைத்து திசைகளும் வடக்கு நோக்கியே உள்ளன. இக்காரணத்தால் இங்கு திசைகள் முதன்மை நெடுநிரைக்கோட்டின் வடக்கில் உள்ள "கட்டத்தாள் வடக்கு" சார்ந்து கொடுக்கப்படுகின்றன.[1]
புவிசார் தென்துருவம் அன்டார்க்டிக்கா கண்டத்தில் உள்ளது.எனினும் புவியின் வரலாற்றில் நடந்த கண்டப்பெயர்ச்சிகளின்போது அக்கண்டத்தில் இல்லை. இந்த இடம் எவ்வித அடையாளக்கூறுகளும் இன்றி, வெறுமையாக, பெருங்காற்றால் பெருக்கப்பட்ட உயரமான பனிக்கட்டிகளாலான மேட்டுப்பகுதியாக உள்ளது. கடற்மட்டத்திலிருந்து 2,835 மீட்டர்கள் (9,301 அடி) உயரத்தில் மிக அண்மையக் கடலான திமிங்கில வளைகுடாவிலிருந்து ஏறத்தாழ 1,300 கிமீ (800 மைல்கள்) தொலைவில் உள்ளது. துருவத்திலுள்ள பனிக்கட்டி ஏறத்தாழ 2,700 மீ (9,000 அடி) தடிமனாக உள்ளதால் இதற்கடியில் உள்ள நிலப்பரப்பு கடல் மட்டத்திலேயே உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[2]
துருவப் பனி விரிப்பு கட்டத்தாள் வடக்கிற்கு 37° முதல் 40° வரையில் மேற்காக ஆண்டுக்கு ஏறத்தாழ 10 மீட்டர்கள் நகர்வதாக அறியப்பட்டுள்ளது.[3] இதனால் இங்கு நிறுவப்பட்டுள்ள நிலையமும் பிற செயற்கை கூறுகளும் புவிசார் தென்துருவத்திடமிருந்து நேரப்போக்கில் தள்ளி அமைகின்றன.
இந்தப் பனி நகர்வை ஈடுகட்ட ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளன்று ஓர் கொண்டாட்ட விழாவில் புவிசார் முனையத்தின் புதிய இடம் குறிக்கப்பட்டு அங்கு அமெரிக்கக் கொடியும் சிறு அறிவிக்கையும் நகர்த்தப்படுகின்றன.[4] இந்த அறிவிக்கையில் ருவால் அமுன்சென்னும் இராபர்ட்டு எஃப். இசுகாட்டும் தென்துருவத்தை எட்டிய நாட்கள், அவர்களது சிறு மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன; இதில் இவ்விடத்தின் உயரமாக 9,301 அடி (2,835 மீ) குறிக்கப்பட்டுள்ளது.[5][6] தற்போதுள்ள அறிவிக்கையில் சனவரி 1 அன்றைய சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்களின் நிலைகள், மற்றும் துருவத்தை நோக்கிய செப்பு நட்சத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளன.[7][8]
சடங்கார்ந்த தென் முனையம் என்பது ஒளிப்படங்கள் எடுப்பதற்காகத் தென் முனைய நிலையத்தில் குறிக்கப்பட்டுள்ள இடமாகும். இது புவிசார் தென்முனையத்திலிருந்து சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் அடிப்பீடத்தின் மேல் உலோக கோளமொன்றும் அதனைச் சுற்றி அண்டார்க்டிக்கா உடன்பாட்டில் ஒப்பமிட்டுள்ள நாடுகளின் கொடிகளும் நாட்டப்பட்டுள்ளன.
தென் துருவத்தை எட்டுவது மிகவும் கடினமான செயலாகும். பெருங்கடற்பகுதியாக உள்ள வட துருவத்தைப் போலன்றி தென் துருவம் ஓர் மலைப்பாங்கான கண்டப்பகுதியாகும். மேலும் மிகவும் உயரத்தில் சூறைக்காற்று நிலவும் இடத்தில் அமைந்துள்ளது. மனிதர்கள் வாழும் பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. அண்மையிலுள்ள கடற்பகுதியிலிருந்து நில ஆய்வாளர்கள் ஆயிரம் மைல்களுக்கும் மேலாகப் பனிபடர்ந்த நிலப்பகுதியில் மலையேற்றங்கள் நடத்தி பீடபூமியை அடைய வேண்டும். இதனால் இப்பகுதிக்கு ஆய்வுக்குப் பல நூற்றாண்டுகளாக யாரும் செல்லவில்லை.
1820இல், பல புவி ஆய்வாளர்கள் முதன்முதலாக அண்டார்டிக்கா கண்டத்தைக் கண்டறிந்தனர். இவர்களில் முதலாவதாக உருசியாவைச் சேர்ந்த ஃபாடி பெல்லிங்சாசென்னும் மிக்கைல் லாசரெவ்வும் முன்நடத்திய குழுவினர் இருந்தனர். ஓராண்டு கழித்து அமெரிக்கரான ஜான் டேவிஸ் இக்கண்டத்தில் காலடி பதித்த முதலாமவராகச் சாதனை படைத்தார்.
அண்டார்ட்டிக்கா கடற்கரையின் புவியியலை 19வது நூற்றாண்டின் பிற்பகுதி வரை யாரும் புரிந்துகொள்ளவிலை. 1839-40இல் அங்கு தேடலாய்வு நிகழ்த்திய அமெரிக்க கடற்படை அதிகாரி சார்லசு வில்க்சு அண்டார்ட்டிக்காவைத் தனி கண்டமாக அறிவித்தார்.[9] மாறாக 1839–43இல் இங்கு தேடலாய்வு நிகழ்த்திய ஜேம்சு கிளார்க்கு ரோசு தென்துருவம் வரை தன்னால் கப்பலிலேயே செல்ல முடியும் என்று நம்பி தனது முயற்சியில் தோல்வியடைந்தார்.[10]
1901-04இல் பிரித்தானிய தேடலாளர் இராபர்ட்டு பால்கன் இசுகாட்டு முதன்முதலாக அண்டார்ட்டிகா கடற்கரையிலிருந்து தென் துருவம் வரையான வழித்தடம் ஒன்றை கண்டறிய முயன்றார். எர்னெசுட்டு சாக்கெல்டனுடனும் எட்வர்டு வில்சனுடனும் இணைந்து தெற்கில் எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ அவ்வளவு செல்லலாம் எனத் துவங்கினார்; திசம்பர் 31, 1902இல் ஆள்கூறு 82°16′ S உள்ள இடத்தை அடைந்தார்.[11] பின்னர் சாக்கெல்டன் தலைமையில் மீண்டும் தென் துருவத்தை எட்ட முயன்றனர். சனவரி 9, 1909இல் மூன்று கூட்டாளிகளுடன் சாக்கெல்டன் – துருவத்திலிருந்து 112 மைல்கள் தள்ளியுள்ள – ஆள்கூறு 88°23′ S என்றவிடத்தை அடைந்தார்; மேலும் தொடரவியலாத நிலையில் திரும்பினார்.[12]
புவிசார் தென் முனையத்தை அடைந்த முதல் மனிதர்களாக நோர்வேயின் அமுன்சென்னின் குழுவினர் திசம்பர் 14, 1911இல் சாதனை புரிந்தனர். அமுன்சென் தாம் தங்கியிருந்தவிடத்தை போல்ஹைம் எனப் பெயரிட்டார்; இவ்விடத்தைச் சுற்றிய புவிப்பகுதிக்கு நோர்வேயின் மன்னர் ஹாக்கோன் VII நினைவாக மன்னர் ஹாக்கோன் VII விட்டே எனப் பெயரிட்டார். இராபர்ட்டு பால்கன் இசுகாட்டும் மீண்டும் தனது இரண்டாவது முயற்சியாகவும் அமுன்சென்னுக்குப் போட்டியாகவும் துருவத் தேடலில் இறங்கினார். இசுகாட்டும் அவரது நான்கு கூட்டாளிகளும் சனவரி 17, 1912 அன்று, அமுன்சென் துருவத்தை எட்டிய 34வது நாளில், தென் துருவத்தை அடைந்தனர். அவர்கள் நால்வருமே திரும்புகையில் பசியாலும் மிகுந்த குளிராலும் மடிந்தனர்.
1914இல் எர்னெசுட்டு சாக்கெல்டன் தென் முனையத்தின் வழியாக அண்டார்ட்டிக்காவை கடக்க முயற்சித்தார்.ஆனால் அவரது கப்பல் 11 மாதங்களுக்குப் பிறகு கடற்பனியில் உறைந்து மூழ்கியது; நிலப்பரப்பின் மீதான பயணம் மேற்கொள்ளப்படவில்லை.
அமெரிக்க வான்படை அதிகாரி ரிச்சர்டு எவலின் பெய்ர்டு அவரது வானூர்தி ஓட்டியின் துணையுடன் நவம்பர் 29, 1928 அன்று தென்துருவத்தின் மேல் பறந்த முதலாமவராகச் சாதனை புரிந்தார்.
இதற்குப் பின்னர் 31 அக்டோபர் 31, 1956 வரை மனிதர்கள் யாரும் தென் முனையத்தின் மீது கால் பதிக்கவில்லை. அன்றைய நாளில் அமெரிக்க கடற்படை அட்மிரல் ஜார்ஜ் ஜே.துஃபேக் கடற்படை வானூர்தியில் சென்று அங்கு இறங்கினார். 1956-57ஆம் ஆண்டுகளில் வான்வழியே எடுத்துச்செல்லப்பட்ட கட்டிடப் பொருட்களைக் கொண்டு அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் நிறுவப்பட்டது. அது முதல் ஆய்வாளர்களும் ஆதரவு பணியாளர்களும் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு இந்த நிலையம் இயங்கி வருகிறது.[2]
அமுன்சென்னையும் இசுகாட்டையும் அடுத்து நிலப்பரப்பு வழியாக (சற்றே வான்வழி ஆதரவுடன்) தென் முனையத்தை அடைந்தவர்கள் எட்மண்ட் இல்லரியும் (சனவரி 4, 1958) விவியன் புக்சும் (சனவரி 19, 1958) ஆகும்.பொதுநலவாய அண்டார்ட்டிக்கா குறுக்கான தேடலாய்வின் பகுதியாக இவர்கள் தங்கள் குழுவினருடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். அடுத்து தரைவழியே பல தேடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1987இல் பேட்றியட் ஹில்சில் ஏற்பாட்டு வசதி அடித்தளம் நிறுவப்பட்டபிறகு அரசு ஆதரவற்ற தேடலாளர்களும் தென் முனையத்தை எட்டுவது எளிதாயிற்று.
திசம்பர் 30, 1989 அன்று அர்வேட் புக்சும் ரைன்ஹோல்ட் மெஸ்னெரும் எவ்வித விலங்கின, தானூர்தி உதவியும் இன்றி பனிநடைக்கட்டைகளை மட்டுமேக் கொண்டு காற்றின் உதவியுடன் தென் துருவத்தின் வழியே அண்டார்ட்டிக்காவைக் கடந்து சாதனை புரிந்தனர்.[13][14]
பெருங்கடலிலிருந்து எவ்வித உதவியும் இன்றி தென் முனையத்தை விரைவாக அடைந்த பெருமை நோர்வேயின் கிறிஸ்டியன் ஐடேவினதாகும்; 2011இல் ஹெர்குலிஸ் முனையிலிருந்து 24 நாட்கள் ஒருமணி நேரத்தில் தென் முனையத்தை அடைந்தார்.[15]
2011/12 கோடைகாலத்தில், தங்களின் தனித்தனியான தேடல் பயணங்களில் நோர்வேயின் அலெக்சாண்டர் காம்மேயும் ஆத்திரேலியர்கள் ஜேம்சு கேஸ்ட்ரிசனும் ஜஸ்டின் ஜோன்சும் நாய்கள் அல்லது பருந்துகளின் உதவியின்றி அண்டார்ட்டிக்கா கடலோரத்திலிருந்து தென் முனையம் வரை சென்று திரும்பியதாக அறிவித்தனர். இரண்டு பயணங்களும் அடுத்தடுத்த நாட்களில் ஹெர்குலிசு இன்லெட்டிலிருந்து கிளம்பியபோதும் திரும்புகையில் கடைசி சில கிலோமீட்டர்களுக்கு இணைந்து வந்ததாகக் கூறுகின்றனர்.[16][17][18]
தெற்கத்திய குளிர்காலத்தில் (மார்ச்சு–செப்டம்பர்), தென் முனையத்தில் சூரிய ஒளியே படுவதில்லை. இடைப்பட்ட மே -சூலை மாதங்களில் மிகவும் இருண்டதாக (நிலவொளியைத் தவிர்த்து) காணப்படும். மார்ச்சு, ஏப்ரலிலும் ஆகத்து,செப்டம்பரிலும் நீண்ட அந்திக்காலங்களைக் காணலாம். கோடைகாலத்தில் (செப்டம்பர்–மார்ச்சு), சூரியன் தொடர்ந்து தொடுவானத்தில் காணப்படும். அந்தக் காலத்தில் சூரியன் எதிர்கடிகாரச் சுற்றில் நகர்வதாகத் தெரியும். எப்போதுமே கீழ்வானில் தெரியும் சூரியன் திசம்பரில் உயர்ந்த நிலையாக 23.5° வரை எட்டும். புவிப்பரப்பில் படும் சூரிய யொளி வெண்ணிற பனிப்பரப்பால் எதிரொளிக்கப்படும். சூரிய ஒளியின் வெப்பம் கிட்டாததாலும் 2,800 மீட்டர்கள் (9,186 அடி) உயரத்தில் உள்ளதாலும் புவியில் மிகக் குளிர்மையான இடங்களில் ஒன்றாகத் தென் துருவம் விளங்குகிறது. இருப்பினும் தென்துருவம் உலகின் மிகக் குளிர்ச்சியான இடமில்லை; அண்டார்டிக்காவிலுள்ள வோசுடாக் நிலையமே இப்பெருமைக்குரியதாகும். இது தென் துருவத்தை விட உயரத்தில் உள்ளது.[19] தென் துருவ வெப்பநிலை வடதுருவ வெப்பநிலையை விடக் குளிர்மையாக உள்ளது. இது கண்டநிலப் பரப்பின் மத்தியில் உயரத்தில் அமைந்திருப்பதால் ஏற்படுகிறது. வடதுருவம் ஓர் பெருங்கடலின் மத்தியில் கடல்மட்டத்தில் அமைந்துள்ளதால் பெருங்கடல் வெப்பத்தை சேமிக்கும் பரப்பாகச் செயல்பட்டு அங்கு கடுமையான குளிர்நிலை எட்டுவதில்லை.
கோடைகாலத்தின் மத்தியில், சூரியன் தனது உயர்ந்தநிலையான 23.5 பாகையில் இருக்கையில், சனவரியில் தென் முனைய வெப்பநிலை -25.9 Cஆக உள்ளது. ஆறுமாத "நாள்" முடிவடைந்து சூரியன் கீழிறங்கும்போது வெப்பநிலையும் இறங்கத் தொடங்குகிறது.சூரிய மறைவு (மார்ச்சின் கடைசி) மற்றும் சூரியன் எழுச்சி (செப்டம்பர் கடைசி)யின்போது வெப்பநிலை -45 செல்சியசாக உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை நிலையாகச் சராசரி -58 செல்சியசாக உள்ளது. தென்முனைய நிலையத்தில் பதியப்பட்டுள்ள மிகக்கூடிய வெப்பநிலை திசம்பர் 25, 2011இல் -12.3 செல்சியசு ஆகும்.[20] இங்கு பதியப்பட்டுள்ள மிகக் குறைந்த வெப்பநிலை சூன் 23, 1982ஆம் ஆண்டில் -82.8 செல்சியசு ஆகும்.[21][22][23] (உலகில் எந்தவொருவிடத்திலும் பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை வோசுடோக் நிலையத்தில் சூலை 21, 1983 அன்று பதிவான -89.2 செல்சியசாகும்).
தென்துருவத்தில் பாலைவன வானிலை நிலவுகிறது; மழை பெய்வதில்லை. காற்றின் ஈரப்பதம் சூன்யத்தை அண்மித்துள்ளது.இருப்பினும் வலுவான காற்று அடிப்பதால் பனிப்பொழிவு நிகழும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்குப் பனிச்சேகரிப்பு கிட்டத்தட்ட 20 cm (7.9 அங்) ஆக உள்ளது.[24]
தட்பவெப்ப நிலைத் தகவல், தென் முனையம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | -14 (7) |
-20 (-4) |
-26 (-15) |
-27 (-17) |
-30 (-22) |
-31 (-24) |
-33 (-27) |
-32 (-26) |
-29 (-20) |
-29 (-20) |
-18 (-0) |
-12.3 (9.9) |
−12.3 (9.9) |
உயர் சராசரி °C (°F) | -25.9 (-14.6) |
-38.1 (-36.6) |
-50.3 (-58.5) |
-54.2 (-65.6) |
-53.9 (-65) |
-54.4 (-65.9) |
-55.9 (-68.6) |
-55.6 (-68.1) |
-55.1 (-67.2) |
-48.4 (-55.1) |
-36.9 (-34.4) |
-26.5 (-15.7) |
−46.3 (−51.3) |
தாழ் சராசரி °C (°F) | -29.4 (-20.9) |
-42.7 (-44.9) |
-57.0 (-70.6) |
-61.2 (-78.2) |
-61.7 (-79.1) |
-61.2 (-78.2) |
-62.8 (-81) |
-62.5 (-80.5) |
-62.4 (-80.3) |
-53.8 (-64.8) |
-40.4 (-40.7) |
-29.3 (-20.7) |
−52.0 (−61.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -41 (-42) |
-57 (-71) |
-71 (-96) |
-75 (-103) |
-78 (-108) |
-82 (-116) |
-80 (-112) |
-77 (-107) |
-79 (-110) |
-71 (-96) |
-55 (-67) |
-38 (-36) |
−82.8 (−117) |
சூரியஒளி நேரம் | 558 | 480 | 217 | 0 | 0 | 0 | 0 | 0 | 60 | 434 | 600 | 589 | 2,938 |
Source #1: [25] | |||||||||||||
Source #2: குளுமையான அண்டார்ட்டிக்கா[26] |
புவியின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு நேரம் அங்குள்ள நிலநிரைக்கோட்டைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் நாளின் நேரங்கள் சூரியன் விண்ணில் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. காட்டாக நடுப்பகலில் சூரியன் அவ்விடத்தில் உச்சியில் இருக்கும். இத்தகைய கோட்பாடு தென்முனையத்தில் பிழையுறுகிறது. இங்கு கதிரவன் ஆண்டுக்கு ஒருமுறையே விடிந்து சாய்கிறான். அனைத்து நிலநிரைக்கோடுகளும் நேரவலயங்களும் இங்கு இணைகின்றன. எனவே தென் முனையத்தை எந்தவொரு நேர வலயத்திலும் சேர்க்க முடியாது.
இருப்பினும் நடைமுறை வசதிகளுக்காக அமுண்ட்சென்-ஸ்காட் தென் முனைய நிலையம் நியூசிலாந்தின் நேர வலயத்தைப் பின்பற்றுகிறது. இந்த நிலையத்தின் தேவைகளை வழங்கும் அமெரிக்க மக்முர்டோ நிலையம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சைச் சார்ந்துள்ளதால் இவ்வாறு பின்பற்றப்படுகிறது.
இங்கு நிலவும் மிகக் கடுமையான வானிலையால் இங்கேயே உருவான தாவரங்களும் விலங்கினங்களும் எதுவுமில்லை. அரிதாக வழிமாறிய இசுகுவா எனப்படும் கடற்பறவைகளும் பனிப் பெட்றல் எனப்படும் அண்டார்ட்டிக்கா பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.[27]
2000இல் தென் முனையப் பனிக்கட்டிகளில் நுண்ணுயிரிகள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டது; இருப்பினும் அறிவியலாளர்கள் இவை இங்கேயே உருவாகியிருக்கும் எனக் கருதவில்லை.[28]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.