சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
இராகுல் சாங்கிருத்தியாயன் (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) (தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन) இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.[1] அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.
ராகுல சாங்கிருத்யாயன் | |
---|---|
'ராகுல சாங்கிருத்யாயன்' இந்திய அஞ்சல் தலை | |
பிறப்பு | 1893 ஏப்ரல் 9 உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 1963 ஏப்ரல் 14 டார்ஜிலிங், மேற்கு வங்கம்,இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | எழுத்தாளர். |
விருதுகள் | 1958:சாகித்ய அகாதமி விருது 1963: பத்ம பூஷண் |
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் [2] கட்டுக்கோப்பான ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை நினைவாகும்.[3]
இராகுல்ஜி ஆரம்பப்பள்ளி வரை படித்தார். ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல் முடிகிறது. இந்நூல் gana முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.அவற்றுள் சில
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.[4]
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய த்ததுவவியல் பேராசிரியராய் நியமித்தது.
விருதுகள் | துறை | வழங்குபவர் |
---|---|---|
மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது | இந்திப் பயண இலக்கியப் பங்களிப்பிற்கு | இந்திய அரசின் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் |
மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது | சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பான இந்திப் புத்தகங்கள் எழுதுதல் | இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.