Remove ads
ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம் From Wikipedia, the free encyclopedia
வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) 1943ல் இந்தியில் எழுதி வெளியிட்ட நூல். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[1][2]
நூலாசிரியர் | ராகுல் சாங்கிருத்யாயன் |
---|---|
உண்மையான தலைப்பு | वोल्गा से गंगा (From Volga to The Ganga) |
மொழிபெயர்ப்பாளர் | கண. முத்தையா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | மானிடவியல் வரலாறு |
வகை | சிறுகதை |
வெளியீட்டாளர் | தமிழ்ப் புத்தகாலயம் |
வெளியிடப்பட்ட நாள் | தமிழ் பதிப்பு: ஆகஸ்டு, 1949 இந்திப் பதிப்பு: 1943 |
ஊடக வகை | அச்சு(நூல் அட்டை) |
பக்கங்கள் | 368 |
வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி. கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி. 1942ல் முடிகிறது. இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு (ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும், முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே கதையாக எழுதியுள்ளார்.
முதல் மூன்று கதைகளிலும் வால்கா நதிக்கரையிலிருந்து மத்திய ஆசியா வரை படிப்படியாக வந்த இனக்குழுவின் கதைகளை காணலாம். இந்த படிநிலையில், முதல்கதையில் தாய்வழிச்சமூகமாக இருந்த குழுவில் தலைமைப் பதவிக்கான போட்டியோடு முடிகிறது , இந்தக்கதையில் சமூகம் முழுக்கவே ஒரே குடும்பமாக, சொத்துடமை இல்லாத புராதனபொதுவுடைமை சமூகமாக இருக்கிறது. இரண்டாம் கதையில் ஒரே குடும்பமாய் இருந்த சமூகம் ஒரே குழுவாக மாறி தாய் தலைமை பதவியை வகித்தாலும், அவள் அந்தப் பஞ்சாயத்தின் தலைவியாகவே இருக்கிறாள். மூன்றாவது கதையிலேயே பெண்ணின் தலைமை பிடுங்கப்பட்டு தந்தை வழிச் சமூகமாக மாறிவிடுகிறது, பெண்ணின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவளும் ஒரு பண்டமாகவே கருதப்படுகிறாள், ஆனாலும் ராகுல்ஜி பெண்ணின் வீரத்தை மதுரா என்ற பாத்திரத்தில் பறைசாற்றுகிறார்.
இந்த மூன்று கதைகளில் புருகூதன் கதையில் செம்பும், வெண்கலமும் புழக்கத்திற்கு வருவதையும், கற்கால கால கருவிகள் காலாவதியாகி புதுயுகத்திற்குள் புகுகிறார்கள். அதேபோல தங்கமும் ஆபரணமாக உருப்பெறுகிறது. மக்களைக் காத்து போரில் வழிநடத்தி எதிரிகளை வெல்லும் தலைவன் இந்திரன் எனப்படுகிறான், இந்த இந்திரனே அடுத்த கதையில் தேவர் குலத் தலைவனான இந்திரனாக மாற்றம் பெற்று வேதங்களால் புகழப்படுகிறான். புருதானன் மற்றும் அங்கிரா கதைகளில் சிந்து சமவெளி நகர மக்களுடன் ஆரியர்களுக்கு ஏற்பட்ட போரும் அந்த நகரங்கள் அழிக்கப்பட்ட வரலாறும் கூறப்படுகிறது.
மக்கள் சமூகமாய் இருந்த இனக்குழு அரசபதவியை உருவாக்கியபோது, அரசபதவியை சுரண்டலுக்கான கருவியாகப் பயன்படுத்தி பிரிவினையை உருவாக்கும் வேலையை விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பரத்வாஜர் போன்றவர்களை வைத்து புரோகிதர்கள் செயல்பட்டதை சுதாஸ் கதையிலும், பிரம்ம சூத்திரம் உருவாக்கி முற்பிறவி, கரும காரியங்களை பயன்படுத்தி மீண்டும் மக்களை அடிமைப் படுத்தும் வேலையை பிரவாஹன் செய்ததையும் அதை யாக்கியவல்கியர் மேற்கொண்டு முன்னெடுத்து செலுத்தியதையும் பிரவாஹன் கதையிலும் சாட்டையடியாய் விளாசுகிறார் ராகுல்ஜி. பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததையும் பந்துலமல்லன் கதையில் கூறப்படுகிறது.
இந நான்கு கதைகளிலும் மக்களின் பஞ்சாயத்து முற்றிலும் முழுதாக ஒழிக்கப்பட்டு சர்வாதிகாரமும் கொண்ட சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப்பட்ட காலகட்டம் பின்னணியாக வைக்கப்பட்டு குப்தர்களின் அரசாட்சி முறை விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது, அதே சூழலில் பௌத்த தத்துவமும், பௌத்த ஜனசங்க ஆட்சிமுறையும், அஸ்வகோஷ் போன்றவர்கள் வாயிலாகவும் விளக்கப்படுகிறது. இந்திய கலை உலகத்துக்கு அஷ்வகோஷால் நாடகக் கலை வடிவம் பெற்றதையும், காளிதாசர், பானபட்டர் போன்ற படைப்பாளிகளும் தங்கள் படைப்புத்திறனை அரச துதி பாடுவதற்கு பயன்படுத்தியதையும் ராகுல்ஜி ஒரு பாத்திரமாக மாறி சாடுகிறார்.
இம்மூன்று கதைகளிலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வருகையையும், கொள்ளையையும் மற்றும் அவர்களது அரசாட்சியையும் அவர்களை ஒட்டுமொத்தமாய் எதிர்க்காத இந்திய அரசர்களையும் ராஜ புத்திரர்களின் வீரத்தையும், இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி முறையையும் கூறுகிறார். அக்பர்-பீர்பால் பற்றிய கதைகளை அக்பரும் பீர்பாலும் தோடர்மாலும் பேசிக்கொள்வதாகவும் அவர்களுடைய பேச்சு மதங்களை தாண்டிய மனிதத்தைப் பற்றியதாகவும் அதை நோக்கிய பயணத்தைப் பற்றியும் இருக்கிறது.
இந்நான்கு கதைகளிலும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் கூறப்படுகிறது. ரேக்கா பகத் கதையில் ஜமீன்தாரி முறையின் தோற்றத்தையும், ஆங்கிலேய ஆதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும் அதன் தோற்றத்தை அலசி ஆராய்பவர்களில் ஒருவரான, ரேக்காபகத், ஜமீன்தாரி முறையால் என்ன ஆனார் என்பதும், அவர் ஜமீன்தாரி முறைக்கு எதிராக என்ன செய்தார் என்பதும் அடங்குகிறது. மங்களசிங் கதையில், சிப்பாய் கலகம் செய்தவர்கள், கவனிக்கத் தவறிய,செய்யத் தவறிய ஆனால், செய்திருக்க வேண்டிய செயல்களை செய்யும் ஒரு வீரனான மங்கள சிங்கின் கதையைக்கூறி சிப்பாய் கலகத்தையும் அதை முன்நின்று நடத்தியவர்களையும் விமர்சிக்கிறார் ராகுல்ஜி. சபதர் மற்றும் சுமேர் ஆகிய இரண்டு கதைகளும் கி.பி 1922 முதல் இரண்டாம் உலகப்போர் காலம் வரையிலான இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும், மகாத்மா காந்தியின் போராட்டமுறைகளையும் விமர்சிக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இக்கட்டான நிலையையும், பாசிச, நாசிசத்தால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும், பொதுவுடைமை மட்டுமே இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் என்பதையும், (எக்காலத்திலும்) நடுநிலை வகிப்பதாய் சொல்பவர்களையும் சாடுகிறார்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் தமிழ் மொழியாக்கம் ஒலி வடிவத்திலும் இலவசமாக கிடைக்கிறது. இயல் குரல் கொடை என்ற அமைப்பினர் ஒலி வடிவத்தில் அதன் அத்தியாயங்களை வெளியிட்டுள்ளார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.