From Wikipedia, the free encyclopedia
ரவுப் (ஆங்கிலம்: Raub Town; மலாய்: Pekan Raub; சீனம்: 劳勿) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ரவுப் மாவட்டத்தில் அமைந்துள்ள் ஒரு நகரம். அந்த மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பகாங் மாநிலத்தில் மிகப் பழைமையான நகரமாகக் கருதப் படுகிறது.
ரவுப் | |
---|---|
Raub | |
நகரம் | |
சின்னம் | |
ஆள்கூறுகள்: 3°47′42.8″N 101°51′21.5″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | ரவுப் |
உருவாக்கம் | 18-ஆம் நூற்றாண்டு |
தொகுதி | ரவுப் |
அரசு | |
• வகை | நகராண்மைக் கழ்கம் |
• மாவட்ட அதிகாரி | கைருல் அனுவார் முகமது[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 977.207 km2 (377.302 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 91,731 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 27600 |
மலேசியத் தொலைபேசி | 06 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
ரவுப் நகரம் கோலாலம்பூரில் இருந்து 110 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
19-ஆம் நூற்றாண்டில், இங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1889-இல் ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கம் (Raub Australian Gold Mine) தோற்றுவிக்கப் பட்டது. சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த மக்கள் பலர், ரவுப் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்கு படையெடுத்தனர்.
ரவுப்பில் பிரித்தானியர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருக்கின்றன. ரவுப் மேசன் சாலையில் அந்தக் கட்டடங்களைக் காண முடியும். இந்த நகரில் இருக்கும் ஒரு போலீஸ் நிலையம்தான் மலேசியாவிலேயே மிகவும் பழமையான போலீஸ் நிலையம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் போலீஸ் நிலையம் 1906-இல் கட்டப்பட்டது.[3]
ரவுப் நகரம் 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டது. இது மலேசிய வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு தங்கச் சுரங்கக் குடியேற்றப் பகுதியாகும். 1961-ஆம் ஆண்டில் தங்கம் தோண்டுவது நிறுத்தப் பட்டது.
இருப்பினும், அண்மைய காலங்களில் உலகளாவிய நிலையில் தங்கத்தின் விலையேற்றத்தால், அந்தச் சுரங்கத்தை மீண்டும் மீட்டெழுச்சி செய்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
முன்பு காலத்தில், ஒவ்வொரு தாம்பாளத் தட்டு மணலைத் தோண்டி எடுக்கும் போது, ஒரு பிடி தங்கம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை ஜே.ஏ.ரிச்சர்ட்சன் என்பவர் The Geology and Mineral Resources of the Neighbourhood of Raub Pahang எனும் நூலில் (பக்:36) எழுதி இருக்கிறார்.
ஒரு முதியவரும் அவருடைய இரு மகன்களும் ஒவ்வொரு முறையும் மணலைத் தோண்டும் போது ஒரு கைப்பிடி தங்கம் கிடைத்ததாகக் கிராமத்துக் கதைகளிலும் சொல்லப் படுகின்றன.[4] Meraup எனும் மலாய்ச் சொல்லில் இருந்து Raub எனும் சொல் உருவானது. மெரவுப் என்றால் தோண்டுதல் என்று பொருள்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தங்கம் தோண்டுவதில் ரவுப் பிரசித்தி பெற்று விளங்கியது. 1889-இல் பதிவு செய்யப்பட்ட ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Raub Australian Gold Mine) இங்கே செயல்பட்டு வந்தது.
தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் பெயர் ஆஸ்திரேலியன் சிண்டிகேட் லிமிடெட் (Australian Syndicate Ltd). பின்னர், ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Australian Gold Mining Co. Ltd) என பெயர் மாற்றம் கண்டது. 1961-ஆம் ஆண்டு வரை தங்கச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது.
ரவுப் தங்கச் சுரங்கத்தில் தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கு, சுழல் தண்டு (shaft mining) முறையைப் பயன்படுத்தினார்கள். அம்பைப் போன்ற சுழல் தண்டைப் பூமிக்குள் செலுத்தி மண்ணைத் தோண்டி எடுத்து, அதில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுத்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில், தங்கச் சுரங்கத் தொழில் துறையினால் ரவுப் மாவட்டம் பெயர் பெற்று விளங்கியது.
ரவுப் நகரின் பிரதான சாலையின் பெயர் பிப்பி சாலை (Bibby Road). ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனத்தின் முதல் நிர்வாகியாகச் சேவை செய்த வில்லியம் பிப்பியின் (William Bibby) பெயர் அந்தச் சாலைக்கு சூட்டப்பட்டது.
ரவுப் நகரில் மேலும் ஒரு முக்கியமான சாலை மேசன் சாலை (Mason Road). ரவுப் மாவட்ட அதிகாரியாக இருந்த ஜே.எஸ்.மேசன் என்பவரின் பெயர் அந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது.[5]
2011-ஆம் ஆண்டில் இருந்து, பெனின்சுலர் கோல்ட் (Peninsular Gold) எனும் ஒரு புதிய நிறுவனம், ரவுப் தங்கச் சுரங்கத்தை மீட்டெழுச்சி செய்து வருகிறது. அதே பழைய இடத்திலேயே தோண்டுதல் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், உள்ளூர் மக்கள் அந்த மீட்டெழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுரங்கத்தில் இருந்து வெளியாகும் சையனைட் தூசுகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
அவர்கள் நாள் ஒன்றுக்கு 0.5 லிருந்து 0.8 வரையிலான பி.பி.எம். அளவு ஹைட்ரஜன் சையனைட் (hydrogen cyanide) விஷ தூசுகளைக் கிரகிப்பதாகப் புகார் செய்துள்ளனர். பி.பி.எம். அளவு என்றால் ஒரு மில்லியனில் ஒரு பகுதியாகும். (Part Per Million).
1940களில் மலாயா நாட்டு மக்களுக்கு பயங்கரமான அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி, பிரித்தானிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும், அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர்.
மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன. மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் (Briggs Plan)[6] அமல் படுத்தியது. மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
பிரிக்ஸ் திட்டத்தை உருவாக்கியவர் ஏரால்ட் பிரிக்ஸ் (General Sir Harold Briggs)[7] என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.
அந்த வகையில், ரவுப் சுற்றுவட்டாரத்தில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். 1948-இல் செரோ, சாங் லீ, சுங்கை ருவான், சுங்கை செத்தாங்; 1949-இல் செம்பாலிட், சுங்கை லூய், திராஸ்; 1960-இல் சுங்கை கிளாவ் போன்ற புதுக் குடியிருப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. பெரும்பாலான இந்தக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர்.
மலாய்க்காரர்கள் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததால், அவர்களுக்கு குறைவான அளவில்தான் புதுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்தியர்கள் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்ததால், அவர்கள் வாழ்ந்த ரப்பர் தோட்டக் குடியிருப்புகளில் முள்வேலிகள் அமைத்துத் தரப்பட்டன. தற்சமயம், ரவுப் மக்கள் பல்வகையாக இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் சீனர்கள் ஆகும். அவர்கள் தங்கச் சுரங்கங்களில் முன்பு வேலை செய்ய வந்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.
ரவுப்பில் இருந்த தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்ட பின்னர், அதன் முக்கியப் பொருளாதாரச் செயல்பாடாக விவசாயம் அமைந்தது. பிரதான உற்பத்திப் பொருளாக ரப்பர், கொக்கோ போன்றவை இருந்தன.
உள்நாட்டுப் பழங்களான டுரியான், பலாப்பழங்கள் பயிர் செய்யப்படுகின்றன. ரவுப்பில் உற்பத்தி செய்யப்படும் டுரியான்கள் மலேசியாவிலேயே மிகச் சிறந்தவை என புகழாரம் செய்யப் படுகின்றது.[8]
பேருந்துச் சேவையே முக்கியமான பொது போக்குவரத்துச் சேவையாக விளங்குகிறது. ரவுப் நகரில் இருந்து மற்ற சிறு சிறு நகரங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. பெந்தோங், குவாந்தான், கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற சிறு பெரு நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள் உள்ளன.
பேருந்துச் சேவைகளை, பகாங் லின் சியோங், யூனியன், செண்ட்ரல் பேருந்து நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. கிழக்குக் கரை நகரங்களான குவா மூசாங், கோத்தா பாரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் மையத் தளமாக ரவுப் நகரம் விளங்குகிறது.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P80 | ரவுப் | அரிப் சாப்ரி அப்துல் அசீசு | ஜனநாயக செயல் கட்சி |
நாடாளுமன்றம் | சட்டமன்றம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P80 | N6 | பத்து தாலாம் | அப்துல் அசீசு மாட் கிராம் | பாரிசான் நேசனல் |
P80 | N7 | திராஸ் | சூங் சியூ ஓன் | ஜனநாயக செயல் கட்சி |
P80 | N8 | டோங் | சாருடின் மோயின் | பாரிசான் நேசனல் |
ரவுப் மாவட்டத்தில் ஏழு துணை மாவட்டங்கள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.