மலாயா அவசரகாலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம். From Wikipedia, the free encyclopedia
பிரிக்ஸ் திட்டம், (மலாய்: Rancangan Briggs; ஆங்கிலம்: Briggs Plan) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது; மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) அச்சுறுத்தல்களைச் சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்.
மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருள் உதவிகளைத் துண்டிப்பது; மலாயாக் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிப்பது; இவையே பிரிக்ஸ் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.[1]
பிரிக்ஸ் திட்டத்தை உருவாக்கியவர் எரோல்டு பிரிக்ஸ் (General Sir Harold Briggs). இவர் அப்போது மலாயா பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார். புறநகர்களிலும் கிராமங்களிலும் வாழும் பொது மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை பிரித்தானியர்கள் அறியத் தொடங்கினர். [2].
அந்த வகையில் சிதறிக் கிடக்கும் பொதுமக்களை ஒரு புது குடியிருப்பில் குடியேற்றம் செய்தால் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைக்காது. அதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் தோற்கடிக்கப் படும் என்று பிரிட்டிஷார் கருதினர்.
பிரிக்ஸ் திட்டத்தின் கீழ் மலாயா முழுமைக்கும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன. அந்தப் புதுக்கிராமங்களில், பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப் பட்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், மலாயாவின் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினர்; வலுக்கட்டாயமாக அவர்களின் குடியிருப்பு நிலங்களில் இருந்து, புதுக்கிராமங்கள் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு முகாம்களுக்கு மாற்றப் பட்டனர்.
பெரும்பாலான இந்த மறுக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர்.[3]
’பிரிக்ஸ்’ திட்டம் பல முகப்புக் கூறுகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பொதுமக்களை வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதாகும். 470,509 கிராமப்புற மலாயா மக்கள் மறுக் குடியேற்றம் செய்யப் பட்டனர்.
அவர்களில் 400,000 சீனர்களும் அடங்குவர். கிராமப்புற மலாயா மக்கள் காடுகளின் விளிம்புப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புதுக்கிராமங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கிராமங்கள் முள்வேலிகளால் பாதுகாக்கப் பட்டன. காவல் சாவடிகள் இருந்தன. இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தொடக்கக் காலங்களில் மக்கள் அந்தத் திட்டத்தை விரும்பவில்லை.
இருப்பினும் நல்ல ஆரோக்கியமான இருப்பிட வசதிகள் அமைத்துக் கொடுக்கப் பட்டதால், காலப் போக்கில் அந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த மனைப் பகுதிகளுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. பண உதவியும் செய்யப்பட்டது.[4]
1949-இல், மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது; கம்யூனிஸ்டு அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 10,000மலேசிய சீனர்கள், சீன மக்கள் குடியரசுக்கு (People's Republic of China) நாடு கடத்தப் பட்டனர்.[5]
ஒராங் அஸ்லி மக்கள் (Orang Asli) கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதாகப் பிரித்தானியர்கள் நம்பியதால், பிரிக்ஸ் திட்டத்தினால் ஒராங் அஸ்லி பழங்குடி மக்களும் கட்டாய இடமாற்றத்திற்கு இலக்காகினர்.[6][7]
மலாயாவின் அவசரகாலம் ஒரு முடிவிற்கு வரும்போது ஏறக்குறைய 40,000 பிரித்தானிய, பொதுநலவாயத் துருப்புகள்; 8,000 கம்யூனிஸ்டு கொரில்லாக்களுக்கு எதிராக ஈடுபட்டு இருந்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.