Remove ads
From Wikipedia, the free encyclopedia
முன்னேசுவரம் அல்லது முன்னேச்சரம் (Munneswaram) இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும்.[சான்று தேவை] மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகீசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.[சான்று தேவை]
முன்னேச்சரம் | |
---|---|
முன்னேச்சரம் | |
ஆள்கூறுகள்: | 7°34′50.35″N 79°49′1.85″E |
பெயர் | |
பெயர்: | முன்னேச்சரம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடமேற்கு |
மாவட்டம்: | புத்தளம் |
அமைவு: | சிலாபம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வடிவாம்பிகா சமேத முன்னைநாதர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை (கோவில்) |
வரலாறு | |
நிறுவிய நாள்: | பெரும்பாலும் கி.பி. 1000ம் ஆண்டு |
கட்டப்பட்ட நாள்: | 1753 |
அமைத்தவர்: | கீர்த்திசிறீ ராசசிங்கன் |
இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளது. முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகை சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இங்குள்ள காளி கோவிலில் பௌத்தர், கத்தோலிக்கர்களும் வழிபடுகின்றனர்.[சான்று தேவை]
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.[1] இக்கிராமத்தில் சிங்களவரும், தமிழரும் கலந்து வாழ்கின்றனர்.
வேறெந்த ஆலயத்திலும் இல்லாதவாறு இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமக்கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும். இத்திருவிழாக்களுக்கு கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மிகுந்த பக்தியோடு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
இறைவன் இரவலர் கோலம் பூண்டு, தாருகாவனத்து முனிவர்களின் அகங்காரத்தை அடக்கிய அருள் வண்ணத்தைச் சித்தரிக்கும் பொருட்டு பிட்சாடணோற்சவத் திருவிழா இடம்பெறுகின்றது. இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாசாடண மூர்த்தி விக்கிரகம் ஈடிணையற்ற கலையழகைக் கொண்டு விளங்குகின்றது. கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு இறைவன் திருவுலா வருவார்.
முன்னேசுவர ஆலயத்தில் இடம்பெறும் மற்றொரு உற்சவமாகிய அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும். இது ஒரு சிவாலயமாக இருக்கின்ற போதிலும், சக்திக்கு இத்துணை முக்கியத்துவமளிப்பது குறிப்பிடத்தக்கது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.