From Wikipedia, the free encyclopedia
புல்லரிசி என்பது ஒரு சிறுகூலம் ஆகும். கோதுமையைப்போலக் காணப்பட்டாலும் நீளமாகவும், சற்று மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும் இந்தச் சிறுதானியம் பல நிறங்களைக் கொண்டது. இது பச்சை,சிவப்பு, பழுப்பு,மஞ்சள்,சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. வாயில் போட்டு சுவைத்தால் கோதுமையின் சுவைதான் ஆனால் புல்லரிசியில் கெட்டியான மாவு கிடைக்கிறது. இப்பயிர் மண் வளம் இல்லாத, உலர்ந்த, அதிககுளிரான மிக உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இச்சிறுகூலம் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. இதில் மாப்பிசின் உள்ளதாயினும் கோதுமையில் கிடைக்கும் மாப்பிசினைவிட சிறந்தது அல்ல. இம்மாவில் செய்யப்படும் உரொட்டி கறுப்பாகவும் அடர்வாகவும் இருக்கும். இதைக் கறுப்பு உரொட்டி (Black bread) என்பர். இந்த உரொட்டி சுவையானது. செருமனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதன்மையான உணவாக உள்ளது. இங்கு புல்லரிசி)உரொட்டிக்குத் தேவை அதிகம். அதனால் இது மதிப்பு மிக்கதாகவும், விலை மிகுந்ததாக உள்ளது.
புல்லரிசி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஒற்றை விதையிலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | கம்மெலினிட்சு (Commelinids) |
வரிசை: | போயேல்சு (Poales) |
குடும்பம்: | போயேசியே (Poaceae) |
துணைக்குடும்பம்: | போயாய்டியே (Pooideae) |
சிற்றினம்: | டிரிட்டிக்காசியே (Triticeae) |
பேரினம்: | செக்கேல் |
இனம்: | செ. சீரியேல் |
இருசொற் பெயரீடு | |
செக்கேல் சீரியேல் | |
வேறு பெயர்கள் | |
செக்கேல் ஃபிரேகைல் (M.Bieb.) |
இது நடுவண் துருக்கியிலும் கிழக்கு துருக்கியிலும் அயல்பகுதிகளிலும் தானாக வளரும் கோதுமைசார் இனங்களுள் ஒன்று. பயிரிட்டு வளர்க்கப்பட்ட இச்சிறுகூலம் சிறிய அளவில் சின்ன ஆசியாவில் (துருக்கியில்) கட்டல்கோயூக்கு அருகில் உள்ள மட்பாண்டங்களுக்கு முந்தைய புதிய கற்கால பி கான் அசன் III போன்ற புதிய கற்காலக் களங்களில் காணப்பட்டது.[1] இது தவிர, கிமு 1800 – 1500 காலப்பகுதியில் நடுவண் ஐரோப்பாவின் வெண்கலக் காலம் வரையில் தொல்லியல் களங்கள் எதிலும் இச்சிறுகூலம் காணப்படவில்லை.[2] இந்தக் கூலத்தின் தொல்லியல் சான்றுகள் பண்டைய உரோமிலும் இரைன், தான்யூபு ஆற்றுப் பகுதிகளிலும் அயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் கிடைத்தாலும்,[3] பிளினி முதுவல் இதை ஏற்காமல் இது மிக வலிவில்லாத உணவாகவும் பஞ்சத்தில் பசிதீர்க்க மட்டுமே உதவும் என்றும் எழுதுகிறார்[4] மேலும் இதன் கடுஞ்சுவையை ஈடுகட்ட இதனுடன் சுபெல்ட்டு கலக்கப்படுகிறது எனவும் அப்போதும் கூட இது வயிற்றைக் கலக்கிவிடுகிறது எனவும் எழுதுகிறார்.[5]
இடைக்காலத்தில் இருந்து மக்கள் நடுவண் ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் புல்லரிசி பரவலாகப் பயிரிடப்பட்டுவருகிறது. பிரான்சு-செருமனி எல்லைக்கோட்டுக்கு கிழக்கிலும் அங்கேரிக்கு வடக்கிலும்பல பகுதிகளில் இது முதன்மை உரொட்டி செய்யும் கூலமாகப் பயன்பட்டுவருகிறது. தென் ஐரோப்பாவில், இது சில அருகிய பகுதிகளில் மட்டுமே பயிரிடப்பட்டுவருகிறது.
வடக்கு சிரியாவின் யூப்பிரட்டீசு பள்ளத்தாக்கில் தெல் அபு குரேயா அறுதிப் பழங்கற்காலத்துக்கு முன்பே புல்லரிசி பயிரிடப்பட்டதாக கூறப்படுவது[6] இதுவரை ஏற்கப்படாமல் விவாதத்திலேயே உள்ளது. கூலத்தை மட்டுமே வைத்து காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் கதிரியக்க்க் கரிமக் காலக்கணிப்பு ஒரேசீராக பொருந்தவில்லை எனவும் வைக்கோலையோ பதரையோ வைத்து காலக்கணிப்பு செய்யப்படவில்லை எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன.[7]
பனிக்காலத் தரைக் கவிப்பாக, புல்லரிசி இலையுதிர்காலத்தில் நட்டுப் பயிரிடப்படுகிறது. உறைநிலைக்கு மேல் வெதுவெதுப்பாக நிலவும் சூரிய ஒளியில் உள்ள பனிக்காலத்தில் பனிப்படர்வு இருந்தாலும்கூட இது வளருகிறது. இதனால் இதனூடே பனிக்கால வன்களைகள் வளர்வதில்லை;[8] அப்போது இது நேரடியாக அறுவடை செய்யப்படலாம் அல்லது அடுத்த கோடைப்பயிருக்கு தழையுரமாக இளவேனிற்காலத்தில் உழவும்படலாம். இது பனிக்காலத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இது பொதுவான தோட்ட வளர்ப்பு பயிராகும்.
இலைப்புழு, இலைவண்டு, பழ ஈ, தண்டுதுளை ஈ, கூல வண்டு, அந்துப் பூச்சி, கூல மூட்டைப் பூச்சி, எசியான் ஈ, துருப்பூச்சி ஆகியவை இப்பயிரின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் பூச்சி இனங்களாகும்.[9]
கனிமங்கள் | ||
---|---|---|
சுண்ணகம் | 33 mg | |
இரும்பு | 2.67 mg | |
மங்கனீசு | 121 mg | |
பாசுவரம் | 374 mg | |
பொட்டாசியம் | 264 mg | |
சோடியம் | 6 mg | |
துத்தநாகம் | 3.73 mg | |
செம்பு | 0.450 mg | |
மகனீசியம் | 2.680 mg | |
திங்களம் | 0.035 mg |
புல்லரிசி கிழக்கு ஐரோப்பாவிலும் நடுவண் ஐரோப்பாவிலும் வடக்கு ஐரோப்பாவிலும் பயிரிடப்படுகிறது. முதன்மையான புல்லரிசி பயிரீட்டுப் பகுதி வடக்கு செருமனியில் தொடங்கி, போலந்து, உக்கிரைன், பேலேருசு, லிதுவேனியா, லாவ்ழ்சியா ஊடாக, நடுவண் உருசியா, வடக்கு உருசியா வரை பரவியுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் தென் அமெரிக்காவில் அர்செண்டீனா, பிரேசில், சிலி ஆகிய பகுதிகளிலும் ஆத்திரேலியாவில் ஓசியானாவிலும் நியூசிலாந்திலும் துருக்கியிலும் கசக்சுத்தானிலும் வடக்கு சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
புல்லரிசி விளைச்சல் முதன்மையாகப் பயிரிடும் பெரும்பாலான நாடுகளில் 2012 அளவில்பெரிதும் குறைந்துவிட்டது; எடுத்துகாட்டாக, உருசிய புல்லரிசி விளைச்சல் 1992 இல் இருந்த 13.9 மில்லியன் டன் 2012 இல் 2.1மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல, போலந்தில் 1992 இல் இருந்த 5.9 மில்லியன் டன் 2005 இல் 2.9 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது; செருமனியில் 3.3 மில்லியன் டன்னாக இருந்து 3.9 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; பேலேருசுவில் 3.1 மில்லியன் டன்னாக இருந்து 1.1 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; சீனாவில் 1.7 மில்லியன் டன்னாக இருந்து 0.7 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.[10] புல்லரிசி விளைச்சலின் பேரளவு உள்நாட்டிலேயோ அருகில் அமைந்த நாடுகளிலோ நுகரப்படுகிறது; உலகச் சந்தைக்கு அவ்வளவாகச் செல்வதில்லை.[சான்று தேவை]
புல்லரிசி பேரளவில் எர்காட் பூஞ்சை நோயால் தாக்கப்படுகிறது.[11][12] இந்த நோய்வாய்ப்பட்ட புல்லரிசியை உண்ணும் மாந்தரும் விலங்குகளும் எர்காட்டிய நோய்க்கு ஆளாகின்றனர். இந்நோய் உடல், உள நலத்தைத் தாக்கி காக்கை வலிப்பு, பொய்க்கருவுறல், எண் தடுமாற்றம், பொய்க்கனவுகளும் கற்பனைகளும் தூண்டப்படல், ஏன், இறப்பும் கூட ஏற்படுத்தலாம். வரலாற்றியலாக, புல்லரிசியை முதன்மை உணவாக நம்பிவாழும் ஓதமிக்க வடபுல நாடுகளை இந்நோய் தாக்கி கொள்ளைநோயாக பரவுகிறது.[13]
புல்லரிசியின் கூலமணி மாவாக அரைக்கப்படுகிறது. புல்லரிசி மாவில் கூடுதல் கிளியாடினையும் குறைவான குளூட்டெனினையும் கொண்டுள்ளது. எனவே, இது கோதுமையை விட குறைந்த மாப்பிசினையே கொண்டுள்ளது. இதி கரையும் நாரிழை உயரளவில் உள்ளது. தீட்டப்படாத புல்லரிசி, கோதுமையின் மேல்புரையில் ஆல்கில்ரிசோர்சினால்கள் உயரளவில் உள்ளன. இவை பீனாலிக் அமிலங்களாகும். உலர் எடையில் இது 0.1 முதல் 0.3% வரையிலான அளவுக்கு அமைந்துள்ளது.[14]புல்லரிசி மாவாலான புல்லரிசி வெதுப்பியும் பம்ப்பர்னிக்கல் உணவும் வடக்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவலாக உண்ணப்படும் முதன்மை உணவாக உள்ளது.[15][16]புல்லரிசி புரை உரொட்டி செய்யவும் பன்படுகிறது.
புல்லரிசி புல்லரிசித் தேறல், புல்லரிசி பீர் போன்ற சாராயங்களைக் காய்ச்சவும் பயன்படுகிறது. புல்லரிசி குவாசையும் மருந்தாகும் சாறையும் தருகிறது. புல்லரிசி வைக்கோல் விலங்குகள் படுக்க விரிக்கப்படுகிறது. இது தரைக்கவிப்பு பயிராகவும் நிலம் பண்படுத்தும் தழையுரமாகவும் வைக்கொல் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.
புல்லரிசியின் இயற்பியல் பான்மைகள் இறுதி உணவுப்பொருளின் பண்புகளை மாற்றுகிறது. இதனால் அரிசியின் உருவளவும் மேற்பரப்பும் புரைமையும் மாறுகிறது. அரிசியின் மேர்பரப்பு உலர்தலிலும் வெப்பப் பரிமாற்றத்திலும் பங்கு வகிக்கிறது.[17] சிறு கூலமணிகள் உயர் வெப்பப் பரிமாற்றத்தைப் பெற்றுள்ளன; எனவே வேகமாக உலர்கின்றன. புரைமை குறைந்த கூலமணிகள் உலரும்போது குறைந்த அளவு நீரையே இழக்கின்றன.[17]
கோதுமை, பார்லி, அதன் கலப்பினங்களைப் போலவே புல்லரிசியும் மாப்பிசினைக் கொண்டுள்ளது. எனவே இது உடற்குழு நோய் உள்ளவருக்கும் மாப்பிசின் கூருணர்வு நோயாளிகளுக்கும் கோதுமை ஒவ்வாமை உள்ளவருக்கும் ஏற்றதல்ல.[18] என்றாலும், சில கோதுமை ஒவ்வாமை நோயாளிகளுக்கு புல்லரிசியும் பார்லியும் ஒத்துக்கொள்கின்றன.[19] எர்காட் பூஞ்சையால் தாக்குற்ற புல்லரிசியை உண்ணும் மக்களுக்கு எர்காட்டிய நோய் (Ergotism) உண்டாகிறது. இந்நோய் (LSD-25 ) போன்ற நச்சுகளைத் தோற்றுவிக்கிறது. தற்கால உணவு பாதுகாப்பு வழிமுறைகளால், இந்நோய் பொதுவாக வராது என்றாலும், காப்புமுறைகள் பின்பற்றாவிட்டால் இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பரவலான நோயாக விளங்கியது.[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.