தமிழரின் பாரம்பரிய நடனம் From Wikipedia, the free encyclopedia
பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம்தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.
விலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறி, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது. ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த சாதியக் கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் சாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய நவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை, சாவுமேளம் ,தப்பாட்டம் என முத்திரை குத்தியது.
ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உள்ளன. இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு. தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.