From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கை (ஆங்கிலம்: evolution) (தமிழ்நாட்டு வழக்கு: பரிணாம வளர்ச்சிக் கொள்கை; இலங்கை வழக்கு: கூர்ப்புக் கொள்கை) என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறாக உள்ளது சிறந்து மிகுதலை தொல்காப்பியம் தொட்டு பல பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர்.[1]
பொதுவாக இப்படி வளர்ச்சி மாற்றங்கள் இருபெரும் வழிகளில் உந்தப்படுவதாகக் கருதப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்கைத் தேர்வு என்று பெயர். இது ஓரினத்தில் தலைமுறை தலைமுறையாய் பரவிவரும் பண்புகளில் தங்கள் இனத்தின் நல்வாழ்வுக்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவியாய் இருக்கும் பயனுடைய பண்புகள் அவ்வினத்திற் பரவலாக பாதுகாக்கப்பட்டும், கெடுதி தரும் பண்புகள் அருகியும் அற்றும் போகின்றன என்ற கருத்தாக்கம். இப்படிப் பயனுடைய பண்புகள் இருந்தால் அவை அடுத்த தலைமுறையிலும் பிழைக்க வாய்ப்பிருப்பதால், இவை பரப்பப்பட்டு நிலைபெறுவதாகக் கருதப்படுகின்றது.[2][3] பல தலைமுறைகளாக வளர்ச்சியுறும்பொழுது ஓர் உயிரினத்தின் பண்புகள் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப, தக்க, இசைவான மாற்றங்கள் அடைகின்றன.[4] இவற்றை இயல் தேர்வு அல்லது இயற்கைத் தேர்வு என்று அழைக்கிறார்கள். படிவளர்ச்சி மாற்றத்திற்கு இரண்டாவது உந்துதலாக அமைவது தன் நேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது மரபணு பிறழ்வு நகர்ச்சி (Genetic drift) என்று பெயர்.
இக்கொள்கை புவியிலுள்ள உயிர்களின் பொது மூலத்திலிருந்து எல்லா உயிரினங்களின் தோற்றத்தை விளக்குவதால், உயிரியல் பிரிவின் மையக் கொள்கையாகத் திகழ்கிறது.
பொது மூலம் மற்றும் மரபு பற்றிய எண்ணங்கள் கிரேக்க காலங்கள் தொட்டே குறிப்பிடப்பட்டிருந்தாலும்,[5] இலமார்க் எனும் பிரான்சிய மெய்யியலாளரின் இனமாற்றம் பற்றிய சிந்தனைகள் மூலமே முதலில் புகழ்பெற்றது. 1859 ஆண்டு சார்லஸ் டார்வின் என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளர், சிற்றினங்களீன் தோற்ற:en:On the Origin of Species என்னும் அறிவியல் கட்டுரையின் மூலம் தற்கால படிவளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.[6] டார்வின் காலத்தில் உயிரியல் பண்புகள் மரபுவழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்படுவது தெரிந்திருந்தாலும், அவை எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதன் விளக்கம் அறியப்படவில்லை. 1865ல் கிரெகர் மென்டல் எனும் பாதிரியார் பட்டாணிச் செடிகளின் கலப்பினங்களை ஆராயும் பொழுது மரபணுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.[7]
அதற்குப் பின்னர் 1940ம் ஆண்டில் ஜேம்ஸ் வாட்ஸன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் என்பவர்கள் மரபணு ஈரிழைச்சுருளி வடிவம்(double helix) கொண்டதை நிறுவினர்.[8] இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு 1962 ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.[9] இதன் மூலம் மரபுரிமை பற்றிப் புலனாயிற்று.
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையிற் சில அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளது. அதே நேரம், வேறு பல அறிவியலாளர்களால் எதிர்க்கப்பட்டும் இகழப்பட்டும் வந்துள்ளது.
முதன்மைக் கட்டுரைகள்: மரபு, மரபணு
மாந்தர்களின் கண் நிறம், அவர்களின் சில நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை போன்ற பல உயிரியல் பண்புகளைப் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறுதல் மரபு என்று கூறப்படும். எந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பது பெற்றோர்களின் மரபணுக்கள் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்தது. இவ்வாறான மரபுரிமை மரபணுக்களின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.
முதன்மைக் கட்டுரை: இயற்கைத் தேர்வு
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவு மற்றும் இடம் ஆகியவற்றுக்குப் போட்டி (சிங்கம் மற்றும் கழுதைப்புலி ஒரே இடங்களில் வாழ்ந்து, ஒரே இரையை வேட்டையாடுபவை), மற்றும் தனது இனத்துள் உணவு மற்றும் துணைக்காகப் போட்டி (சிறந்த ஆண் சிங்கமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவாடிக் குட்டிகள் இடும்) எனப் பல்வேறு நிலைகளில் போட்டி உள்ளது. இவ்வாறான போட்டி எனும் இயக்கத்துடன், இயற்கைச் சூழல்களின் இயக்கங்களும்(வறட்சி, குளிர், வெய்யில் போன்றவை) உயிரினங்களைப் பாதிக்கும்.
இவ்வாறாகப் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும். சமாளிக்க இயலா உயிர் மற்றும் உயிரினங்கள் அற்றுப்போகும். எடுத்துக்காட்டாக, மற்ற பூச்சிகளைவிட மேம்பட்ட உருமறைப்பு (camouflage) கொண்ட ஒரு பூச்சி தன்னை உணவாகக் கொள்ளவரும் பறவையின் கண்களுக்குத் தென்படாததால், மற்ற பூச்சிகளைவிட அதிகமாக வாழ்ந்து, தனது வழித்தோன்றல்களுக்குத் தனது மேம்பட்ட உருமறைப்பு எனும் உயிரியல் பண்பினைக் கொடுக்கும். அதேபோல், பறவைகளிலும், மேம்பட்ட உருமறைப்புப் பெற்ற பூச்சிகளைக் கண்டுபிடிக்கவல்ல மேம்பட்ட கண்பார்வை எனும் உயிரியல் பண்புபெற்ற பறவை, மற்ற பறவைகளை விட அதிக உணவு பெறுவதால், செழித்துத் தனது குஞ்சுகளுக்கும் அப்பண்பினைச் செலுத்தும். கோடுகள் எனப்பட்ட தந்தங்களுக்காக மாந்தர்களால் மிகுதியாக வேட்டையாடப்பட்ட ஆப்பிரிக்க யானைகளிடையே தந்தங்கள் அற்ற தன்மை மேலோங்குவதாக அறியப்பட்டுள்ளது.
போட்டி மற்றும் இயற்தேர்வு என்பவை தொடர்ந்து இயங்கி உயிரினங்களின் உயிரியல் மற்றும் நடத்தைப் பண்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும்.
உயிரணுக்கள் இழையுருப்பிரிவு (mitosis) எனும் செயல்பாட்டின் மூலம் நகலாக்கம் (replication) செய்கின்றன. இச்செயல்பாட்டில், கதிரியக்கம் (radiation), கிருமிகள் போன்ற பல காரணங்களினால், நகலாக்கத்தில் பிழைகள் ஏற்படக்கூடும். இப்பிழைகள் உயிரணு மரபுப்பிறழ்வு எனக் கூறப்படும். இப்பிறழ்வுகளால், உயிரினங்களின் உயிர்ப்பண்புகள் மற்றும் நடத்தைப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.
உயிரணுப்பிறழ்வுகள் எழுந்தமானமானவை (random). இவ்வாறான பிறழ்வுகளினால் ஏற்படும் மாற்றங்கள், பெரும்பாலானவை உயிரினத்திற்குத் தீங்கானவை, அல்லது நடுநிலையானவை. அரிய ஒருசில மாற்றங்கள் மட்டுமே அப்போதைக்குள்ள சூழல்களுக்குப் பயனுள்ளவை. பயனுள்ள பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் பிழைத்துச் செழிக்கும். தீங்கிழைக்கும் பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் மாண்டு போகும்.
உயிரினங்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் இயற்கை இயக்கங்கள் உயிரினங்களின்மேல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் சூழலில், சில உயிரினங்களில் நடக்கும் உயிரணுப் பிறழ்வுகளினால் தோன்றும் சில மாற்றங்கள் உயிரினங்கள் தங்கள் சூழலுக்குத் "தக்க"வகையில் அமைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவ்வாறான மாற்றங்கள் தகவமைவு எனக் கூறப்படும்.
படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் முன்வைப்போர் பின்வரும் ஐந்து காரணங்களை[10][11] முன்வைக்கின்றனர்.
அறிமுகநூல்கள்
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)படிவளர்ச்சிக் கொள்கைக் கருத்துகளின் வரலாறு
உயர்நிலை கருத்துகள்
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link){{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link){{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.