From Wikipedia, the free encyclopedia
பஞ்சமி நிலம் (Depressed Class Land) என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ஆம் ஆண்டில் பிரித்தானியவின் இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.[1]
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பறையர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.[2][3][4] இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16 ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[5] பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும், 2.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பட்டியலின மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு பறையர்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது.[6]
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களுக்கு நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது.[7] மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதிதிராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற காரணத்தால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.
பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ளது.
1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா என்பவர் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன. Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
பஞ்சமி நிலங்களை பட்டியல் வகுப்பினருக்குத் தவிர பிற வகுப்பினர்க்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது. [8]பட்டியலின, பறையர்களுக்கு ஆதி திராவிடர் இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவசப் பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள திருவண்ணாமலை, வட ஆற்காடு மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. விவரம் அறியாது விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.[9][10] [11] [12].
செங்கல்பட்டு மாவட்டம், காரணை கிராமத்தில் 1994இல் துவங்கிய பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக,1994 அக்டோபர் 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.[13] 2011 சனவரியில் பஞ்சமி நிலங்களை மீட்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஒரு குழு அமைத்தது.[14] பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து குழு அமைத்துள்ளது.[15]
தடா பெரியசாமி என்பவரால் மண்ணுரிமை மீட்பு இயக்கம் தொடங்கப்பட்டு நிலம் மீட்புப் பணிகள் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுக்க உள்ள நிலத்தைக் கணக்கெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.[16][17] தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன. இந்த நிலங்கள் ஆதிதமிழர்களின் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சதவிகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் அனுபவிக்கப்படுகிறது. மொத்தம் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறரால் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.[18]
சாத்தை பாக்யராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் தேசம் கட்சி அதன் தற்போதைய தலைவர் ஆசைதம்பி தலைமையில் பஞ்சமி நிலங்களை மீட்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பன்னம்பாறை கிராமத்தை சேர்ந்த சுரேசு பன்னம்பாறை என்பவர் துவங்கிய பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம் என்னும் அமைப்பு மூலம் பல்வேறு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
கருப்பையா அவர்கள் தலைமையிலான தலித் விடுதலை இயக்கம் பஞ்சமி நில மீட்புக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.மதுரையில் 12 எக்கர் நிலமானது இவ்வமைப்பினால் மீட்கப்பட்டு உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.