உறையூர் (Uraiyur) தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
உறையூர்
உறந்தை | |
---|---|
புறநகர் | |
அடைபெயர்(கள்): கோழியூர் | |
ஆள்கூறுகள்: 10.8308°N 78.6799°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 316.86 ft (96.58 m) |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
வரலாறு
உறையூர் தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று. இன்று திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு பகுதியாக இருந்தாலும், வரலாற்றில் இது ஒரு தனிபெரும் நகரமாகவே திகழ்ந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகரமாகும். உறந்தை எனவும், கோழியூர் எனவும் இதனை வழங்குவர்.
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின்
- புறநானூறு (39)
என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.[1]
புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் கொடை பெருமையை இவ்வாறு பாடுகிறார்.
குமரி அம் பெருந் துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவைஆயின் இடையது
சோழ நல் நாட்டுப் படினே கோழி
உயர் நிலை மாடத்து குறும்பறை அசைஇ
- புறநானூறு (67)
பிசிராந்தையார் அன்னச்சேவலிடம் இவ்வாறு கூறுமாறு பா அமைந்துள்ளது. அன்னச்சேவலே, குமரித்துறையில் அயிரை மீனை உண்டு, உன் பெட்டையோடு வடமலை செல்கிறாய். இடையே சோழநாட்டுக்குப் போகும்போது கோழியூரின்(உறையூர்) உயர்நிலை மாடத்தில் உள்ள சோழனிடம் நான் பிசிராந்தையாரின் சேவல் என்று சொன்னாய் என்றால், அவன் உன் பெட்டைக்கோழிக்கு நல்ல ஆபரணங்களைத் தருவான்.
செங்கடல் செலவு நூலிலும் உறையூர் பற்றியக் குறிப்பைக் காணலாம். உறையூரின் பெயர் இதில் அர்காலோ எனவும் அர்காரூ எனவும் வழங்கப்படுகிறது.[2] இங்கிருந்து முத்துகளும், மென்பருத்தித் துணிகளும் வாங்கப்படுவதாக குறிக்கப்பட்டு இருக்கின்றது.[3]
இவைத் தவிர தமிழ்ப் பெருங்காப்பியமான இளங்கோ இயற்றிய சிலப்பதிகாரத்திலும் உறையூர் கூறப்படுகின்றது.
காவுந்திஐயையும் தேவியும் கணவனும்
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனன் புரிந்து என்
- சிலம்பு (புகார்க் காண்டம், நாடு காண் காதை)
முன்னொரு காலத்தில் சோழமன்னனின் யானை உறையூரை அடைந்தபோது, அதனை ஒரு கோழி தாக்கி வென்றது. அதனால் சோழன் தன் தலைநகரை அங்கு அமைத்துக்கொண்டான். கோழியூர் எனவும் பெயரிட்டான்.[4] இளங்கோ கோவலனும், கண்ணகியும், கவுந்தி அடிகளும் உறையூருக்குச் செல்லும்போது, உறையூரைக் கோழிச்சேவல் யானையை வீழ்த்தின இடம் என்று குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். இப்பாடலில் முறம் செவி வாரணம் என்றால் யானையையும், புறம் சிறை வாரணம் என்றால் கோழிச்சேவலையும்[5] குறிக்கும்.
முற்காலச் சோழர்கள் வலிமையிழந்து சோழ நாடும் வீழ்ச்சியுற்ற பின்னரும், சோழச் சிற்றரசர்கள் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்தினர்.[6]
உறையூரின் புலவர்கள்
சங்ககாலப் புலவர்கள்[7]
- உறையூர் இளம்பொன் வாணிகனார்
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்
- உறையூர் முது கண்ணன் சாத்தனார்
- உறையூர் முதுகூத்தனார்
நாயன்மார்கள்[8]
ஆழ்வார்கள்[8]
கோயில்கள்
வெக்காளியம்மன் கோயில், நாச்சியார் கோயில், பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் மற்றும் உறையூர் அழகிய மணவாளர் கோயில் உறையூர் பெரியாரியம்மன் திருக்கோவில் செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் திருக்கோவில்ஆகிய கோயில்கள் உறையூரில் புகழ்பெற்றக் கோயில்களாகும்.
பள்ளிவாசல்
தமிழகத்தின் பழமையான பள்ளிவாசலான கல்லுப்பள்ளி பொ.ஊ. 734-ஆம் ஆண்டு அன்றைய உறையூரில் (தற்பொழுது மலைக்கோட்டை பகுதியில்) கட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வு
தொல்பொருள் ஆராய்ச்சி உறையூரில் 1965 முதல் 1969 வரை நடத்தப்பட்டது.[9] அப்போது எழுத்துகள் பொறிக்கப்பட்டக் கருப்பு மற்றும் சிகப்பு நிற மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.