From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் 29 வது மாநிலமாகும். இதன் வரலாற்றுக் குறிப்புகள் வேதகாலத்தில் இருந்து துவங்குகிறது. மேலும் இது குறித்து பொ.ஊ.மு. 800 காலகட்டத்தைச் சேர்ந்த சமஸ்கிருத நூலான அய்தரேய பிராமணாவில் காணப்படுகிறது.[1][2][3] அஸ்மகம் மகாஜனபதம் (பொ.ஊ.மு. 700–300) என்பது கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்த பழங்கால அரசுகளாகும்.[4] இப்பகுதி மக்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இராமாயணம், மகாபாரதம், மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில், அஸ்மகம் இந்தியாவின் பதினாறு நாடுகளில் ஒன்றாக இருந்தது. இது சாதவாகணர்களால் (பொ.ஊ.மு. 230 -பொ.ஊ. 220), வெற்றி கொள்ளப்பட்டது. இவர்கள் உருவாக்கிய தலை நகரம் அமராவதி ஆகும். இந்தப் பேரரசு சாதகரனி காலத்தில் உச்சம் பெற்றது. பேரரசின் இறுதிக் காலத்தில், பேரரசுக்கு உட்பட்டிருந்த தெலுங்கு பிராந்தியச் சிற்றரசுகள் தன்னுரிமை பெற்று தனியரசாயினர். இரண்டாம் நூற்றாண்டின் பிற்காலத்தில், ஆந்திர இச்வாகு மரபினர் கிருஷ்ணா ஆற்றின் கிழக்குப் பகுதி நெடுக்கிலும் ஆட்சி செலுத்தினர்.
நான்காம் நூற்றாண்டில், பல்லவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதியை தெற்கு ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்கு விரிவாக்கி, தங்கள் தலை நகராக காஞ்சிபுரத்தை நிர்மாணித்தனர். இவர்களின் ஆற்றல் முதலாம் மகேந்திரவர்மன் (571–630) மற்றும் முதலாம் நரசிம்மவர்மன் (630–668) ஆகியோர் காலத்தில் உயர்ந்திருந்தது. பல்லவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தெலுங்கர்களின் தெற்குப் பகுதிகளிலும், தமிழகத்திலும் ஆதிக்கம் செலுத்தினர்.
பொ.ஊ. 624 முதல் 1323 வரையிலான காலகட்டத்தில் காக்கதிய மரபினர் ஒன்றுபட்ட ஆட்சியின் கீழ் தெலுங்கு பிராந்தியங்களைக் கொண்டுவந்தனர். இந்தக் காலகட்டத்தில், தெலுங்கு மொழியில் நன்னயா எழுதிய இலக்கியங்கள் தோன்றின.
பொ.ஊ. 1323 இல் தில்லி சுல்தான் கசியத் அல்-தின் துக்ளக், தெலுங்கு பிராந்தியங்களை வெற்றி கொள்ள உலுக் கான் (பின்னர் முகமது பின் துக்லக் என்ற பெயரில், தில்லி சுல்தானாக ஆனவன்) தலைமையில் ஒரு பெரிய இராணுவத்தை அனுப்பி, வாரங்கல்லை முற்றுகை யிட்டனர். இதனால் காகத்திய வம்சம் வீழ்ச்சியுற்று தில்லி துருக்கிய அரசாட்சியிடம் இருந்து போராடும் நிலைக்கு வழிவகுத்தது, சாளுக்கியச் சோழர் மரபுடன் (பொ.ஊ. 1070-1279) தெற்கிலும், நடு இந்தியாவில் பாரசீக தாஜிக் சுல்தான் ஆட்சியாளர்களிடமும் ஆந்திரப் பிராந்தியத்தினர் போராட வேண்டி இருந்தது. இறுதியில் துருக்கிய தில்லி சுல்தான்களை எதிர்து முசுனரி நாயக்கர்களின் வெற்றியில் முடிவடைந்தது.
தெலுங்குப் பகுதிகள் விஜயநகர பேரரசின் (பொ.ஊ. 1336-1646) கிருஷ்ணதேவராயரின் கீழ் விடுதலைப் பெற்றது. பிற்காலத்தில் பாமினி சுத்லானியப் பேரரசின் குதுப் ஷாஹி மரபினர் பேரரசை வெற்றி கொண்டார்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின் (பிரஞ்சுக்காரர்கள் மார்க்விஸ் டெ புஸ்சி- கேஸ்ட்டங்னோ கீழும் மற்றும் ஆங்கிலேயர்கள் ராபர்ட் கிளைவ்வின் கீழும்) குதுப் ஷாஹி மரபினரன் ஆட்சி 1765 இல் முடிவுக்கு வந்தது, முகலாய மன்னர் ஷா அலமாம் அவர்களிடம் இருந்து கிளைவ் விசாகப்பட்டினத்தைப் பெற்றார். மேலும் அவர்கள் 1792 இல் விஜயநகரம் மகாராஜா விஜய ராம கஜபதி ராஜுவைத் தோற்கடித்து பிரித்தானிய மேலாதிக்கத்தை ஏற்படுத்தினர்.
நவீன ஆந்திராவாவுக்கான அடித்தளத்தை காந்தியின் கீழ் நடந்த இந்திய சுதந்திரப் போராட்டம் ஏற்படுத்தியது. சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க வேண்டுமென்று பொட்டி சிறீராமுலு, தங்குதுரி பிரகாசம் பந்துலு மற்றும் கந்துகுலி வீரசேலிங்கத்தின் சமூக சீர்திருத்த இயக்கங்களும் பரப்புரையைத் துவக்கி போராடியதின் விளைவாக ஆந்திரப் பிரதேசம் கர்நூலை தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் முதல் முதலமைச்சராக விடுலைப் போராட்ட வீரர் பந்துலு பொறுப்பேற்றார். இதன்பின் ஆந்திரத்திர அரசியலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு நிலையான அரசியல் கட்சிகளுடன் ஜனநாயக சமுதாயத்தில், நவீன பொருளாதாரத்தின், என். டி. ராமா ராவ் முதலமைச்சராக ஆனார்.
இந்தியா விடுதலையின் பெற்ற 1947 க்குப் பின்னர். முஸ்லீம் ஐதராபாத் நிசாம் இந்தியாவுடன் இணையாமல் தனி நாடாக இருக்க விரும்பினர், ஆனால் இந்தியா போலோ நடவடிக்கை என்ற இராணுவ நடவடிக்கையின் வழியாக இந்திய ஒன்றியத்தில் 1948 ஆண்டு ஐதரபாத் ராஜ்ஜியத்தை தன்னுடைய ஆட்சிப்பகுதிக்குள் இணைத்துக் கொண்டது. ஆந்திரவேஇந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாகும், இது 1953 இல் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. 1956, ஆந்திரப் பிரதேசத்துடன் ஐதராபாத் இராஜ்ஜியத்தில் உள்ள தெலுங்கு பேசும் பகுதிகளை இணைக்கப்பட்டது. பின்னர் ஆந்திராவில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து தனிமாநிலமாக்க வேண்டும் என போராட்டம் எழுந்ததன் காரணமாக இந்திய மக்களவையில் தெலங்கானா மாநிலத்தை ஆந்திராவின் பத்து மாவட்டங்களை பிரித்து உருவாக்க 2014 பெப்ரவரி 18 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[5]
ஆந்திர தேசம் தொடர்பான குறிப்புகள் இந்திய இதிகாச கவிதைகளில் (இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ) காணப்படுகிறன. இதில் ஆந்திரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் குறிப்பிடப் படுகின்றனர். மகாபாரதத்தில் உருக்மி விதர்ப்ப நாட்டைச் சேர்த்து தக்காண பீடபூமி, விந்திய மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகள், இன்றைய ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகம் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ளதாக அறியப்பட்ட (கடலில் மூழ்கடிக்கப்பட்ட) தீவுக் கூட்டம் ஆகியவற்றை ஆண்டதாகக் கூறப்படுகிறது. ராமன் நாடு விட்டு வனவாசம் சென்றபோது இன்றைய பத்ராச்சலம் காட்டைச் சுற்றி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பண்டைய இலக்கியங்கள் பல நூற்றாண்டுக்கால வரலாறைக் குறிக்கிறது என்றாலும், தொல்லியல் சான்றுகள் என்றால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நிலவுகிறது. பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பிரதிபாலபுர அரசு, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பட்டிப்ரோலு என்ற பகுதியில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தென் இந்தியாவில் பழைய அரசுகளில் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மன்னன் குபேரன் பொ.ஊ.மு. 230 இல் இந்த பட்டிப்ப்ரோலு பகுதியில் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டிப்ப்ரோலு பிராமி கல்வெட்டுகள் நவீன தமிழ் மற்றும் தெலுங்கு கல்வெட்டுகளுக்கு முன்னோடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
பொ.ஊ.மு. நான்காவது நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக, தக்காணத்தில் அதன் ஒரு மாநிலமாக ஆந்திரா இருந்தது. சந்திரகுப்த மௌரியரின் (322-297) அரசவைக்கு வந்த செய்த மெகஸ்தனிஸ் கூற்றின்படி, ஆந்திரர்களிடம் அரண் சூழ்ந்த 30 நகரங்கள் மற்றும் 1,000,000 காலாட்படை, 2,000 குதிரைப்படை மற்றும் 1,000 யானைகள் கொண்ட இராணுவம் இருந்தது.[6]
ஆந்திரத்தின் தடையற்ற அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு சாதவாகனர் மரபின் எழுச்சியின் போது தொடங்கியது. மச்ச புராணத்தின்படி, இந்த மரபில் 456 ஆண்டுகளில் 29 ஆட்சியாளர்கள் இருந்தனர். இந்த மரபு பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. இரண்டாம் ஆம் நூற்றாண்டுவரை இருந்தது. நாசிக்கில் இருக்கும் கௌதமிபுத்ர சதகர்ணியின் (23 வது சாதவாகன ஆட்சியாளர்) காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டின்படி, பேரரசின் பகுதிகளாக தீக்கற்பத்தின் தெற்கில் பெரும்பகுதியான ஒரிசா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் போன்றவற்றைக் கொண்டதாக குறிக்கிறது. சாதவாகனர்களின் அரசவை மொழியாக பிராகிருதம் இருந்தது, இதன் மன்னர்கள் வைதீக மதத்தை ஆதரித்தனர்.
சாதவாகனர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆந்திரத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது, உள்ளூர் ஆட்சியாளர்களான சிற்றரசர்கள் தன்னாட்சி பெற்றனர். பொ.ஊ. 180 முதல் பொ.ஊ. 624 காலகட்டத்தின் இடையே, ஆந்திரத்தின் கட்டுப்பாட்டை இஷ்வாகு, பிரிகாதபாளையனா, சலங்கயனா, விஷ்ணூகுந்தினர், வாகாடகர், பல்லவர், ஆனந்த கோத்ரிகா, கலிங்கர் மற்றும் பிற சிறிய அரசாட்சியினர் கொண்டிருந்தனர். இதில் முதன்மையானவர்களாக இஷ்வாகு மரபினர் இருந்தனர். இந்த நேரத்தில் கல்வெட்டு மொழியாக பிராகிருத்த்திற்கு பதிலாக சமஸ்கிருதம் வளர்ந்தது.
ஆந்திர இச்சுவாகு மரபினர் (சமஸ்கிருதம்: इक्श्वाकू) கிருஷ்ணா ஆற்றை ஒட்டிய பகுதியில் இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தங்கள் அரசை நிறுவினர். இவர்கள் தலைநகரமாக விஜயபுரி (நாகார்ஜுணகொண்டா) இருந்தது. தொல்லியல் சான்றுகளின்படி இச்சுவாகுவினர் சாதவாகனர்களை கிருஷ்ணா ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெற்றி கொண்டனர் என்றும், இவர்கள் ஆந்திராவுக்கு வடக்கேயிருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.[7] இச்சுவாகு மரபினரின் கல்வெட்டுக்கள் நாகார்ஜுண கொண்டா, ஜக்கய்யபேட்டை, அமராவதி, பட்டிப்ப்ரோலு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் வைதீக மதத்தை ஆதரித்தனர்.
சில அறிஞர்கள் இந்த மரபினர் பண்டைய இந்து மதம காவியங்கள் குறிப்பிடும் இச்வாகுவுடன் தொடர்புடையதாக நம்புகின்றனர், மேலும் இராமாயண ராமர் (விஷ்ணு அவதாரம்) இச்வாகு குலத்தில் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறார். நாகார்ஜுண கொண்டா பள்ளத்தாக்கு, ஜக்கய்யபேட்டை, ராமிரெட்டிபல்லி ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள், இந்த கருத்துக்கு ஓரளவு ஆதரவு வழங்குகிறது.
வாயு புராணத்தில், மனுவுக்கு ஒன்பது மகன்கள் இருந்தார்கள்; இவர்களில் மூத்தவரான இஷ்வாகு சூரிய குலத்தை உருவாக்கி, அயோத்தியை திரேதா யுகத்தின் ஆரம்பத்தில் ஆட்சி புரிந்தார். அவருக்கு 100 மகன்கள் இருந்தார்கள்; மூத்த மகனான விகுஷியை அயோத்தி அரசராக அவரது தந்தையால் முடிசூட்டப்பட்டர். விகுஷியின் சகோதரர்களில் ஐம்பது பேர்ருக்காக வட இந்தியாவில் சிறிய சிற்றரசுகள் நிறுவப்பட்டது, மற்றும் நாற்பத்து எட்டு சகோதரர்களுக்கு தெற்கில் அரசாட்சிகள் நிறுவப்பட்டன என்று கூறுகிறது.
பல்லவப் பேரரசர்கள் (தெலுங்கு: పల్లవులు;) தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இருந்து நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை தென் இந்தியாவை ஆட்சி செய்தனர். இப்பேரரசு மகேந்திரவர்மன் (571-630) மற்றும் நரசிம்மவர்மன் (630-668) ஆட்சிக் காலத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. இப் பேரரசு தெற்கு தெலுங்கு மற்றும் வட தமிழகப் பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.
பல்லவர்கள் திராவிடக் கட்டடக்கலைக்கு அளித்த ஆதரவு கவத்திற்குரியது, இதற்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் விளங்குகிறது. சீன பயணியான யுவான் சுவாங் பல்லவ ஆட்சியின் கீழ் இருந்த காஞ்சிபுரத்திற்கு வந்து, மற்றும் அதன் நல்லரசைப் புகழ்ந்துள்ளார்.
இவர்கள் காலத்தில் வடக்கில் வாதாபி சாளுக்கியர்களுடனும் மற்றும் தெற்கில் தமிழ் அரசர்களான சோழர் மற்றும் பாண்டியர்கள் ஆகியோருடன் மோதல்கள் இருந்தது. எட்டாவது நூற்றாண்டில், பல்லவர்களை சோழர்கள் வெற்றி கொண்டனர்
விஷ்ணுகுந்தின மரபினர் பொ.ஊ. ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் தென் இந்தியாவில் தக்கானப் பீடபூமி, கலிங்கம் போன்ற பல பகுதிகளை ஆட்சி புரிந்தவர்களாவர். இப்பேரரசை 420இல் நிறுவியவர் இந்திரவர்மன் ஆவார். பொ.ஊ. 514இல் இப்பேரரசு சுருங்கி தெலுங்கானப் பகுதியை மட்டும் ஆண்டது. இப்பேரரசின் வீழ்ச்சியின் போது, கோதாவரி ஆற்றுக்கு வடக்கே இருந்த கலிங்க நாடு தன்னாட்சி உரிமை பெற்றனர். கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கே இருந்த பகுதிகள் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டன. சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியால் விஷ்ணுகுந்தினப் பேரரசின் பிற பகுதிகள் கைப்பற்றப்பட்டு, பொ.ஊ. 624இல் விஷ்ணுகுந்தினப் பேரரசு வீழ்ச்சியுற்றது.
பொ.ஊ. 624 முதல் 1323 க்கு இடைப்பட்ட காலத்தில், தெலுங்கு மொழி இலக்கியங்கள் பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றின் கலவையாக உருவானது. பொ.ஊ. 848 காலகட்டத்தில் (கங்கா விஜயாதித்தா காலத்தில்) இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரையான காலகட்டத்தில், தெலுங்கு மொழியில் முழு இலக்கிய படைப்புகளாக முன்னேறியது. இந்த நேரத்தில், அது பழைய தெலுங்கு எழுத்து வடிவில் எழுதப்பட்டது; அல்-பிருனி அவரது 1000 கிதாப் அல்-ஹிந்த் இல் "ஆந்த்ரி" என்ற எழுத்து வகையைக் குறிப்பிடப்படுகிறார். 11 ஆம் நூற்றாண்டின்ல், கீழைச் சாளுக்கிய மன்னனான ராஜராஜ நரேந்திரனின் அரசவையில் தெலுங்கு புலவர் நன்னயாவால் மகாபாரதம் தெலுங்கில் இயற்றப்பட்டது. நவீன தெலுங்கு எழுத்துகள் 11 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த பழைய தெலுங்கு எழுத்து வடிவில் இருந்து உருவானது.
கீழைச் சாளுக்கியர்கள் வாதாபி சாளுக்கியர்களின் ஒரு கிளை ஆவர். இரண்டாம் புலிகேசி வேங்கியை பொ.ஊ. 624 இல் கைப்பற்றி அதன் ஆட்சியாளராக அவரது சகோதரரான, குப்ஜா விஷ்ணுவர்தன்னை (624-641), நியமித்தார். இந்த விஷ்ணுவர்தன்னின் மரபினரே, கிழக்கு சாளுக்கியர்கள் என அழைக்கப்படுகின்றனர், இந்த மரபினர் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகள் தெற்கில் நெல்லூர் முதல் வடக்கே ஸ்ரீகாகுளம் வரையிலான நிலப்பரப்புவரை பரவி இருந்தது.
குங்கா விஜயாதித்தனிடம் இருந்து வேங்கி இராஷ்டிரகூடர்களிடமும் பின் கல்யாணி சாளுக்கியரிடமும் வந்தது. (10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில்) பின் 1118 இல் சோழர் வசம் வந்தது, குலோத்துங்க சோழன் கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆறாம் விக்ரமாதித்னிடம் தோற்று வேங்கியை இழந்தார். அதேபோல சோழர்கள் தலைக்காட்டை போசள மன்னன், விட்டுணுவர்தனனிடம் இழந்தனர், இதனால் வேங்கி மீண்டும் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு வந்தது.
கல்யாணி சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தனின் மரணத்துக்குப் பின் சாளுக்கியப் பேரரசு 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சியுற்றது. இதனால் கீழைச் சாளுக்கிய அரசின் பகுதிகள் போசளப் பேரரசு, காக்கதிய பேரரசு, யாதவர்கள் ஆகியோரால் மூன்று பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
சோழர்கள் ஆந்திராவை பொ.ஊ. 1010 முதல் 1200 வரை ஆண்டனர். இவர்களின் ஆந்திர பிரதேசத்தின் கோதாவரி ஆற்றிலிருந்து தெற்கே மாலத்தீவு வரை நீண்டிருந்தது.
காக்கத்திய மரபினர் ஆந்திரத்தில் பொ.ஊ. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சியாளர்களாக உயர்ந்தனர். துவக்கத்தில் மேலைச் சாளுக்கியரிடம் பணியாளர்களாக, வாரங்கல் அருகே ஒரு சிறிய பிரதேசத்தில் பணி ஆற்றிவந்தனர்.
காக்கத்திய இரண்டாம் புரோலா (பொ.ஊ. 1110-1158) காகதீய பிரதேசத்தின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தார். இவரது வாரிசான, ருத்ர (பொ.ஊ. 1158-1195), தன் ஆட்சிப் பரப்பை கிழக்கே கோதாவரி வடிநிலப்பகுதிவரை விரிவாக்கினார். ருத்ர வாரங்கலில் கோட்டையைக் கட்டி அங்கே இரண்டாவது தலைநகராக்கினார்.
அடுத்த ஆட்சியாளரான மகாதேவா, ஆட்சிப் பரப்பை கடலோரப்பகுதிவரை விரிவாக்கினார். இவர் பொ.ஊ. 1199 இல் கணபதி தேவாவுக்கு முடிசூட்டினார். கணபதி தேவா முதன் முதலில் தெலுங்கு நிலப்பரப்புகளை இணைத்த முதல் மன்னராவார். சாதவாகனர் போலல்லாமல், காகத்தியர்கள் அரசவை மொழியாக தெலுங்கைப் பயன்படுத்தி தெலுங்கு அரசர்களாக இருந்தனர். 1210 ஆம் ஆண்டில், கணபதி வேங்கி சோழர்களை தோற்கடித்தார். மேலும் வடக்கே அனகாபள்ளிவரை தனது பேரரசை விரிவுபடுத்தினர்.
ராணி ருத்திரமாதேவி (இறப்பு பொ.ஊ. 1289 அல்லது 1295) சோழர்கள் மற்றும் தேவகிரி யாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தார். இவர் இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த சில அரசிகளில் ஒருவராவார். இவர் தன்னுடைய பேரன் பிரதாபருத்ராவை முடி சூட்டி மன்னராக்கினார். பிரதாபருத்ரா தன் ஆட்சியின் போது உள் மற்றும் வெளி எதிரிகளுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டார். இவர் தன் ஆட்சிப்பரப்பை மேற்கில் ராய்ச்சூர் வரையிலும் தெற்கில் ஓங்கோல் மற்றும் நல்லமலா மலைகள் வரையிலும் விரிவாக்கினார். இவர் காலத்தில் பல நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்த சீர்திருத்தங்களில் சில விஜயநகரப் பேரரசால் கைக்கொள்ளப்பட்டன. காகதீய அரசின் மீது முஸ்லிம்களின் தாக்குதல்கள் 1310 இல் தொடங்கியது. 1323 இல் காகதியா பேரரசு தில்லி சுல்தானகத்தால் வெற்றி கொள்ளப்பட்டது.
முசுனூரி நாயக்கர்கள் தில்லி சுல்தான்களிடம் இருந்து தெலுங்கு நிலங்களை மீட்டெடுத்து ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அரிகரர் மற்றும் புக்கா ஆகியோர் பிரதாபருத்ராவில் கருவூல அதிகாரிகளாக இருந்தவர்களாவர். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடும் முசுனூரி நாயக்கர்களைக் கண்டு இவர்கள் ஈர்க்கப்பட்டனர்.
பிரதாபருத்ரா முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டபோது.[8] இரண்டு தெலுங்கு நாயக்கர்களான, அன்னையா மந்திரி மற்றும் கொலானி ருத்ரதேவா ஆகியோர் படையெடுப்பிற்கு எதிராக ஒன்றுபட்டனர். வேங்கியில் இருந்து ஒரு நாயக்கர் (இன்றைய மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது), முசுனூரி புரோளைய நாயக்கர் ஆகியோர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[9][10] 1326 இல், புரோளைய நாயக்கர் வாரங்கலை விடுவித்துவித்தார்.[11] புரோளைய நாயக்கர் மற்றும் அவரது தாயாதி, காப்பநேடு ஆகியோரின் வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு, மற்ற மாநிலத்தினர் (கம்பலி, ஹொய்சள, துவாரகா சமுத்திரம், அரவேடு போன்றவை ) தங்கள் சுதந்திரத்தை விரும்பினர்.
உலுக் கான் வாரங்கல்லில் முதலாம் ஹரிஹரர் மற்றும் புக்கா் ஆகியோரைப் பிடித்து. இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றி, அவர்களை ஹோய்சலா தலைவனுடைய கிளர்ச்சியை ஒடுக்க சுல்தானால் அனுப்பப்பட்டனர். மாறாக, சகோதரர்களால் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது.
இதனால் சுல்தானால் தெற்கு நோக்கி ஒரு பெரிய இராணுவம் அனுப்பப்பட்டது, ஆனால் ஒரு தொற்றுநோய் மற்றும் நாயக்கர் எதிர்ப்பினால் படை நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஹொய்சளரின் உதவியுடன், காப்பநேடுவால் ஆந்திரப் பிரதேசம் விடுவிக்கப்பட்டது.
1345 இல் முகமது பின் துக்ளக்கை எதிர்த்து தேவகிரியில் முஸ்லீம் பிரபுவான ஹசன் காங்கு பாமினி சுல்தானகத்துக்கு அடித்தளம் அமைத்தார். இவர் அலாவுதீன் பாமன் ஷா என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டு, 1347 இல்த ன் தலைநகரை குல்பர்காவுக்கு மாற்றினார். அலாவுதினின் இந்த ஆட்சி ரெச்செர்லா நாயக்கர்களின் ஆட்சியை உறுதியற்றதாக்கியது. காப்பநோடு அலாவுதீனுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு காவுலாசு கோட்டையில் சரணடைந்தனர்.
1351 ஆம் ஆண்டில், முகமது பின் துக்ளக் இறந்தார். எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், அலாவுதீன் இறந்தார் இதன்பின் முகமது ஷா முடி சூட்டிக்கொண்டார். காப்பநோடுவால் அவரது மகன் விநாயக தேவனை பாமினியின் பிடியில் உள்ள காவுலாசு மற்றும் புவனகிரி ஆகியவற்றை விடுவிக்க அனுப்பப்பட்டார்; விஜயநகர பேரரசர் புக்கா ராயரின் உதவியுடன் தேவா வெற்றி பெற்றார்; என்றாலும், அவர் இறுதியில், தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 1365 இல் காப்பநேடு கோல்கொண்டா, வாரங்கல் ஆகியவற்றை கைப்பற்றினார். பாமினி மற்றும் வாரங்கல் அரசாட்சிகளுக்கு இடையே எல்லையாக கோல்கொண்டா தேர்வு செய்யப்பட்டது. இதற்கு காப்பநேடு முகமது ஷாவுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 1370 இல் அன்னபோட்ட நாயக்கரான ரெச்செர்லா என்பவர் பாமினி படையெடுப்பின் ஒரு பகுதியாக வாரங்கல்லை எதிர்த்து படை நடத்தினார், பீமாவரத்தில் நடந்த போரில் காப்பநேடு கொல்லப்பட்டார். காப்பநேடுவின் மரணத்திற்குப் பின் சுல்தான்கள் விரைவில் அவரின் கூட்டாளிகளை வென்று, ஆந்திரப் பிரதேசத்தை வெற்றி கொண்டனர்.
ரெட்டி மரபினர் முதலில் காகதீய பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசுகளாக இருந்தனர். இரண்டாம் பிரதாப ருத்ராவின் மரணத்தைத் தொடர்ந்து காகதீய பேரரசு வீழ்ச்சியடைந்தது. இதன் பிறகு, ரெட்டி குறுநிலத் தலைவர்கள் சுதந்திரம் அடைந்தனர். இதன் விளைவாக ரெட்டிப் பேரரசு உருவானது. ரெட்டிகள் வடக்கில் ஸ்ரீகாகுளம் தொடங்கி தெற்கில் காஞ்சி வரையிலும், இன்றைய மிக ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகளின் பெரும் பகுதியை ஆட்சி செய்தனர்.[12][13][14][15] 1909 ஆண்டைய எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய சாதிகளும் இனங்களும் என்ற நூலில், ரெட்டி கிராமத் தலைவர்கள் மற்றும் காப்பிலியர் தலைவர்களின்ன்று பட்டியல் முறைப்படி விவரிக்கப்படுகிறது.
ரெட்டிப் பேரரசு (1326-1448) ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கடலோர ஆந்திரப் பகுதிகளை ஆட்சி செய்தது.[12][15][16][17][17][18][19][20][21] புரோலய வேமா ரெட்டி ரெட்டி மரபின் முதல் அரசராவார்.[22] நாட்டின் தலைநகராக தலைநகரமாக முதலில் அடான்கி இருந்தது. இது பின்னர் கொண்டவீடுக்கு மாற்றப்பட்டு பிற்காலத்தில் ராஜமுந்திரி தலைநகரமாக மாற்றப்பட்டது.[23] இவர்களது ஆட்சியில் அமைதியும், கலை இலக்கியங்களில் பரந்த வளர்ச்சி ஆகியவை இருந்தன. மகாபாரத்த்தை தெலுங்கில் மொழிபெர்த்த புலவர் எர்ராப்ரகடா, இந்தக் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார்.
விஜயநகரப் பேரரசு அரிகரர், புக்கர் என்ற சகோதரர்களால் நிறுவப்பட்டது. இவர்கள் போசள படைகளின் தளபதிகளாகவோ அல்லது காக்கத்தியரிடம் கருவூல அதிகாரிகளாக இருந்தவர்களாவர். வாரங்கல்லை 1323 இல் முஸ்லீம்கள் கைப்பற்றியபோது அங்கு கைது செய்யப்பட்ட சகோதரர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின்னர் தில்லி சுல்தானால் இவர்களை தக்காணத்தில் கிளர்ச்சியில் ஈடுபடும் இந்து மன்னர்களை அடக்குவதற்காக படைகளோடு அனுப்பப்பட்டனர். தங்கள் முதல் தாக்குதலை தார்வாடாவுக்கு அண்மையில் போசளப் பேரரசர் மூன்றாம் வீர வல்லாளனுக்கு எதிராக நடத்தினர். சகோதரர்கள் பின்னர் முனிவர் வித்யாரண்யரின் செல்வாக்கினால் மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பி, தில்லி சுல்தான்களிடம் இருந்து விடுதலைக்காக பிரகடனம் செய்தனர்.
முதலாம் ஹரிஹரரால் (ஆட்சிக்காலம் 1336-1356) அவரது தலைநகராக விஜயநகரத்தை தெற்கு துங்கபத்திரை அற்றின் அருகில் நல்ல பாதுகாப்பு நிலையில் நிறுவப்பட்டது. பேரரசு 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிருஷ்ணதேவராயரின் கீழ் அதன் உச்சநிலையை அடைந்தது, இக்காலகட்டத்தில் தெலுங்கு இலக்கியம் வளர்ச்சியடைந்தது. விஜயநகர ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் தென் இந்தியா முழுவதும் புதியதாக கட்டியும், விரிவாக்கமும் செய்யப்பட்டன. ஆந்திரப் பிரதேசத்தில் லேபாக்ஷி, திருப்பதி திருக்காளத்தி போன்ற இடங்களில் பல கட்டுமானங்கள் செய்யப்பட்டன. இவர்களின் பெரிய மற்றும் மிகவும் உயர்ந்த கட்டடத் தொகுப்பு இன்றைய கர்நாடகத்தின் ஹம்பியில் உள்ளது.
1323 ஆம் ஆண்டில், தில்லி சுல்தான் கீயாஜ்-உத்-தின் துக்ளக் தெலுங்கு நாட்டை வெற்றி கொள்ள உலுக் கானின் தலைமையில் ஒரு பெரிய இராணுவத்தை அனுப்பினார். உலுக் கானின் தலைமையிலான படைகள் தெலுங்கு நாட்டை வெற்றிகொண்டன. 1347 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானுக்கு எதிரான எழுச்சி ஏற்பட்டு சுயாட்சி கொண்ட முஸ்லீம் நாடு (பாமினி சுல்தான்கள்) தென் இந்தியாவில் அலாவுதின் பாமன் சாவால் நிறுவப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுல்தானகம் உட்பூசலால் பாதிக்கப்பட்டது. இதனால் குதுப் ஷா மரபினர் தெலுங்கு நாட்டில் சுல்தானகத்தை நிறுவி ஆந்திர வரலாற்றில் ஒரு முதன்மையான பங்கை வகித்தனர்.
இந்த மரபினர் ஆந்திரப் பிரதேசத்தை 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து 16 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆண்டனர். பாமினி சுல்தானியத்தில் பணியாற்றிய சுல்தான் குலி குதுப் ஷா, 1496 இல் ஐதராபாத்து இராச்சியத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரே இந்த மரபை தோற்றுவித்தவர், 1518-ல், முகமது ஷா இறந்த பிறகு, ஆளுநர் குலி குதுப் ஷா தனது சுதந்திரத்தை அறிவித்தார்.
1687 ஆம் ஆண்டில், அவுரங்கசீப் படையெடுத்து தனது அரசுடன் கோல்கொண்டாவை இணைத்துக் கொண்டு, ஒரு நிசாமை (கவர்னர்) நியமித்தார். முகலாய நிசாம்களின் கட்டுப்பாட்டில் சுமார் 35 ஆண்டுகள் ஆந்திரம் இருந்தது. 1707 இல் அவுரங்கசீப்பின் இறந்தார், அதன்பின் முகலாய ஆட்சி பலவீனமடைந்து, இதனால் மாகாணங்களின் மீதான கட்டுப்பாட்டை அது இழந்தது. இது இந்தியாவின் மீது அதிகாரத்தை நிலைநிறுத்திய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வந்தது.
ஆந்திராவின் வடக்குப் பகுதிவரையின பகுதிகள் பிரித்தானியரின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. பிறகு ஐதராபாத் நிஜாம் ராயலசீமா பகுதியில் உள்ள ஐந்து பிரதேசங்களை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுத்தார், நிசாம்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐதராபாத்து இராச்சியத்துக்கு சுயாட்சியை பிரித்தானிய ஆட்சி ஒப்புதல் வழங்கியது. இந்த மாகாணத்தில் நில மானிய முறைமை வழக்கிலிருந்தது. இதனுடன் ஜமீந்தார் முறை குள்ளா மற்றும் கோதாவரி பகுதி எங்கும் நிஜாம்க்களின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த ஜமீன்தார்கள், ஒரு நிலப்பிரபுத்துவ முறையில் ஆட்சி செய்தனர். ஜமீன்தாரி முறை சுதந்திரத்திற்குப் பின்னர் அழிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. ஐதராபாதின் முஸ்லீம் நிஜாம் எதிர்ப்புக்கு இடையில், ஐதராபாத்து இராச்சியத்தை இந்தியா படை நடவடிக்கையின் வழியாக இந்திய ஒன்றியத்தில் 1948 இல் இணைத்துக் கொண்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தெலுங்கு பேசும் மக்கள் (உருது ஐதராபாத்தின் சில பகுதிகளிலும் ஐதராபாத் மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் பேசப்படுகிறது) 22 மாவட்டங்களில் இருந்தனர்: ஐதராபாத் மாநிலத்தில் ஒன்பது மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் 12 மாவட்டங்கள், பிரஞ்சு கட்டுப்பாட்டு ஏனாமில் ஒரு மாவட்டம். 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்தில் இருந்து, இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில், ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் மாநில தெலுங்கு பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டன.
சென்னையை தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் தங்களுக்குச் சொந்தமானதாக் கருதினர். 1920 களின் முற்பகுதியில், சென்னை மாகானத்தின் முதலமைச்சராக இருந்த பனகல் ராஜா கூவம் நதியே ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் இடையே எல்லை இருக்க வேண்டும் என்று கூறினார். 1928 ஆம் ஆண்டு சி. சங்கரன் நாயர் சென்னை தமிழர்களுக்கு சேர்ந்ததாக ஏன் இருக்க் கூடாது என விளக்கி மத்திய குழுவுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், ஆனால் சென்னை நகரம் தமிழ் இப்பிராந்தியத்தில் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் முன்னாள் மதராஸ் மாகாணத்து தெலுங்கர்கள் சென்னையை ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக்க கோரி எழுப்பிய முழக்கம் 'மதராஸ் மனதே' ("சென்னை நம்முடையது") என்பதாகும்..
செயல்வீரர் பொட்டி ராயலசீமா, கடலோர ஆந்திரா அகிய தெலுங்கு பேசும் பகுதிகளைச் சேர்த்து ஆந்திரப் பிரதேச தனிமாநிலத்தை உருவாக்க வாதிட்டார். பிரதமர் ஜவகர்லால் ஆந்திர மாநிலம் அமைக்க உறுதியளிக்காவிட்டால் அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தார். பிரதமர் நேரு ஆந்திர மாநிலத்தை அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் 19 அக்டோபர் 1952 அன்று, சென்னையில் உண்ணாவிரத்த்தைத் தொடங்கினார். ஆந்திர காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தை ஏற்க மறுத்தது, ஆனால் அவரது உண்ணாவிரத நடவடிக்கை பரவலாக அறியப்பட்டது. தொடர் உண்ணாவிரதத்தால் 1952 திசம்பர் 15 அன்று நள்ளிரவுக்குப் பிறகு, இறந்தார். இவர் வாழ்ந்த வீடு 126 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை என்ற முகவரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீராமுலுவின் உடலை அடக்கம் செய்ய நடந்த இறுதி ஊர்வலம், அவரது தியாகத்தை பாராட்டியபடி. ஊர்வலம் மவுண்ட் ரோட்டை அடைந்த போது, ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து ஊர்வலம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஊர்வலத்தில் வந்தவர்கள் பொதுச் சொத்துக்களை அழிக்கத் தொடங்கினர். செய்தி விரைவில் பரவி பல இடங்களில் கலவரம் மூண்டது அனகாபள்ளி. விஜயவாடா ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமைதியின்மை பல நாட்கள் தொடர்ந்தது.
1952 திசம்பர் 19 அன்று பிரதமர் நேரு சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் அமைக்கப்படும் என அறிவித்தார். 1953 அக்டோபர் 1 அன்று, மதராஸ் மாநிலத்தின் (கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா) தெலுங்கு பேசும் பகுதியில் பதினோறு மாவட்டங்களை பிரித்து கர்னூல்லை தலை நகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. மாநிலத்தின் முதல்வராக ஆந்திர கேசரி தங்குதுரி பிரகாசம் பந்துலு ஆனார்.
1953 ஆம் ஆண்டு டிசம்பரில், மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவதற்கான கூடியது.[24] மக்களின் விருப்பத்தின் காரணமாக, கமிஷன் ஐதராபாத் மாநிலத்தை ஒழித்து, அதில் உள்ள கன்னட மொழி பேசும் பகுதிகளை மைசூர் மாநிலத்தடனும், மராத்தி மொழி பேசும் பகுதிகளை பம்பாய் மாநிலத்துடனும் இணைக்குப் பரிந்துரைத்தது.
மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் (தெ) ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளான தெலங்கானவையும் ஆந்திர மாநிலத்தையும் இணைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது. அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு, நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு (Gentlemen's agreement of Andhra Pradesh, 1956) ஒன்றை அளித்தது.
தெலுங்கானா மற்றும் ஆந்திர இணைந்துள்ளதற்கு எதிரான செயல்கள் 1969, 1972, மற்றும் 2009 இல் டிசம்பர் 2009 இல் ஏற்பட்டது. 2009 திசம்பர் 9 அன்று, இந்திய அரசு ஒரு தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக கடற்கரை ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதிகளில் எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. இதனால் இணைப்பு முடிவு 2009 திசம்பர் 23 அன்று காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அரசின் இந்த ஒத்திவைப்புக்கு எதிராக தெலுங்கானா இயக்கத்தினரின் தற்கொலைகள், வேலைநிறுத்தங்களை, ஆகியவை தொடர்ந்தன.[25][26]
2013 சூலை 30 அன்று, காங்கிரஸ் காரியக் கமிட்டி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க பரிந்துரைத்த தீர்மானத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் கொடுத்தது. 2014 பெப்ரவரி, பாராளுமன்றத்தில் மசோதா முன் வைக்கப்பட்டு,[27] ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம், 2014 படி வடமேற்கு ஆந்திரத்தில் இருந்து பத்து மாவட்டங்களைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க அனுமதித்து, 2 ஜூன் 2014 அன்று சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டது.[28] மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, மார்ச் 1 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.[29] தெலுங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக 2 ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் குறித்து விசயங்களில் முதன்மை பங்காற்றிய முக்கியப் பிரமுகர்கள்; காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, தெலுங்கானா இராட்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) தலைவர் சந்திரசேகர் ராவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆவர். ஆந்திர பிரிவாக்கத்துக்காக சந்திரசேகர் ராவ் பரப்புரை இயக்கத்தை நடத்தினார். இந்த பிரச்சாரத்தினால் சந்திரபாபு நாயுடு, சோனியா காந்தி மற்றும் ஸ்வராஜ் சுவராஜ் ஆகியோர் பிளவுவுக்கு தங்கள் கட்சிகளின் ஆதரவைக் கொடுக்க வழிவகுத்தது. முன்னாள் ஆந்திர முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி மற்றும் விஜயவாடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராஜகோபால் போன்ற அரசியல் தலைவர்கள், பிளவை எதிர்த்தாலும், அமைதி காத்து அதை அனுமதித்ததாக அவர்களின் ஆதரவாளர்களின் நம்பிக்கை ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.