From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை ஹிலாரியுஸ் (Pope Hilarius) கத்தோலிக்க திருச்சபையின் 46ஆம் திருத்தந்தையாக 461ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாளிலிருந்து பெப்ருவரி 29, 468 வரை ஆட்சி செய்தார்.[1] அவரது மரணத்துக்குப் பின் அவர் ஒரு புனிதராக கத்தோலிக்க திருச்சபையால் ஏற்கப்பட்டார்.[1]
திருத்தந்தை புனித ஹிலாரியுஸ் | |
---|---|
46ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | நவம்பர் 19, 461 |
ஆட்சி முடிவு | பெப்ருவரி 29, 468 |
முன்னிருந்தவர் | திருத்தந்தை முதலாம் லியோ |
பின்வந்தவர் | திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஹிலாரியுஸ் (ஹிலாருஸ்) |
பிறப்பு | சார்தீனியா, மேற்கு உரோமைப் பேரரசு |
இறப்பு | பெப்ருவரி 29, 468 உரோமை, மேற்கு உரோமைப் பேரரசு |
கல்லறை | புனித இலாரன்சு பெருங்கோவில் |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | நவம்பர் 17 |
ஏற்கும் சபை | உரோமன் கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, கீழைக் கத்தோலிக்க திருச்சபைகள், கீழை மரபுவழி திருச்சபை |
ஹிலாரியுஸ் சார்தீனியாவில் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை. திருத்தந்தை லியோவின் ஆட்சிக் காலத்தில் ஹிலாரியுஸ் அவருக்கு தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்தார். அவர் உரோமைத் திருப்பீடத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தீவிரமாக உழைத்தார்.
449இல் முறைமாறி கூட்டப்பட்ட எபேசு பொதுச்சங்கத்தின்போது ஹிலாரியுஸ் திருத்தந்தை லியோவின் வழிமுறைகளைச் செயல்படுத்த முனைந்து உழைத்தார். அப்பொதுச்சங்கம் காண்ஸ்டாண்டிநோபுள் ஆயராக இருந்த ஃபிளேவியனைக் கண்டித்ததை ஹிலாரியுஸ் எதிர்த்தார்.
திருத்தந்தை லியோவின் கடிதத் தொகுப்பில் ஹிலாரியுஸ் எழுதிய ஒரு கடிதமும் உள்ளது. அது பேரரசி புல்க்கேரியா (en:Pulcheria) என்பவருக்கு எழுதப்பட்டது. அக்கடிதத்தில் அவர் திருத்தந்தையின் கடிதத்தைப் பொதுச்சங்கத்திற்குப் பிறகு பேரரசியிடம் ஒப்படைக்கத் தவறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால், எபேசில் நடந்த முறைகேடான சங்கத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை அவர் திருத்தந்தைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. அவர் உரோமைக்கோ காண்ஸ்டாண்டிநோபுளுக்கோ செல்வதை விரும்பாத அலெக்சாந்திரிய தியோஸ்கூருஸ் என்பவரின் கைகளிலிருந்து தப்பிச் சென்று, திருத்தந்தைக்கு செய்தி அளிக்க பெரும் பாடுபட்டார்.[1]
ஹிலாரியுசுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் லியோ உரோமைத் திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். ஹிலாரியுசு திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார் என்றாலும் லியோவைப் போன்று புகழ்பெறவில்லை. இருப்பினும் அவர் ஆற்றிய பணிகளுள் சில குறிப்பிடத் தக்கவை.
திருச்சபையில் நிகழ்ந்த நீசேயா பொதுச்சங்கம் (ஆண்டு: 325), எபேசு பொதுச்சங்கம் (ஆண்டு: 431), கால்செதோன் பொதுச்சங்கம் (ஆண்டு: 451) திருத்தந்தை லியோ கால்செதோன் பொதுச்சங்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவற்றில் அடங்கியிருந்த போதனைகளை வலியுறுத்தி ஹிலாரியுஸ் கீழைத் திருச்சபைத் தலைவர்களுக்கு எழுதியதாகத் தெரிகிறது.
ஹிலாரியுஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த திரிபுக் கொள்கைகளைக் கண்டித்தார். உரோமைத் திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார்.
இத்தாலியில் ஹிலாரியுஸ் "ஆரியுசுக் கொள்கை" (en:Arianism) என்று அழைக்கப்பட்ட ஒரு திரிபுக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியுசுக் கொள்கை, இயேசு கிறிஸ்து பற்றிய ஒரு தவறான கருத்தைப் பரப்பியது. அதாவது, "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" என்றும், "கடவுளாக் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புளுள்ளும் இயேசு ஒரு முதன்மையான படைப்பு மட்டுமே" என்றும் ஆரியசுக் கொள்கை கூறியது.
திருத்தந்தை ஹிலாரியுஸ் உரோமையின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் திரிபுக்கொள்கையினருக்கு உரோமையில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் எசுப்பானியா, கால் (இன்றைய பிரான்சு பகுதி) முதலிய பிரதேசங்களில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியுஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார்.
திருத்தந்தை ஹிலாரியுஸ் 465ஆம் ஆண்டில் உரோமை நகரின் புனித மரியா பெருங்கோவிலில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்தது.
திருத்தந்தை உரோமை நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். புனித யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான புனித யோவானுக்கு அர்ப்பணித்தார். இது பற்றிய விளக்கம் வருமாறு:
திருத்தந்தை லியோவின் காலத்தில் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் லியோவின் பதிலாளாகச் செயல்பட்ட ஹிலாரியுஸ் தம் கருத்தை ஆதரிக்கவில்லை என்று கருதிய சிலர் அவரைப் பிடிக்க திட்டம் தீட்டினார்கள் இதை அறிந்த ஹிலாரியுசு அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த புனித நற்செய்தி யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர்தப்பினார். இவ்வாறு தாம் உயிர்பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்த ஹிலாரியுஸ் புனித யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு மேற்கூறிய சிறுகோவிலைக் கட்டுவித்தார்.
455ஆம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியுஸ் பல நன்கொடைகளை வழங்கினார்.
மேலும், திருத்தந்தை ஹிலாரியுஸ் புனித இலாரன்சு பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார்.
திருத்தந்தை ஹிலாரியுஸ் 468ஆம் ஆண்டு, பெப்ருவரி மாதம் 29ஆம் நாள் இறந்தார். அவர் அழகுபடுத்திய புனித இலாரன்சு பெருங்கோவிலில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவர் இறந்த நாளான பெப்ருவரி 28ஆம் நாளில் அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.