Remove ads
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை முதலாம் லியோ (Pope Leo I) கத்தோலிக்க திருச்சபையின் 45ஆம் திருத்தந்தையாக கி.பி. 440 செப்டம்பர் 29ஆம் நாளிலிருந்து 461, நவம்பர் 10ஆம் நாள் வரை ஆட்சிசெய்தார்.[1]
திருத்தந்தை புனித முதலாம் லியோ | |
---|---|
45ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 29 செப்டம்பர் 440 |
ஆட்சி முடிவு | 10 நவம்பர் 461 |
முன்னிருந்தவர் | மூன்றாம் சிக்ஸ்துஸ் |
பின்வந்தவர் | ஹிலாரியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லியோ |
பிறப்பு | கி.பி. சுமார் 400 தஸ்கனி, இத்தாலி |
இறப்பு | உரோமை நகரம் | 10 நவம்பர் 461
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 10 நவம்பர்; 11 ஏப்ரல் |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் |
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருச்சபை வரலாற்றிலேயே முதன்முதலாக "பெரிய" ("மகா") என்னும் அடைமொழி பெற்ற முதல் திருத்தந்தை இவரே. இந்த அடைமொழி பெற்ற இரண்டாம் திருத்தந்தை "முதலாம் கிரகோரி" (ஆட்சி: 590-604) ஆவார்.
முதலாம் லியோ கி.பி. சுமார் 400ஆம் ஆண்டில் இத்தாலிய உயர்குடியைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு அவர் பிறந்த இடமாக இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தைக் குறிக்கிறது.
திருத்தந்தை முதலாம் லியோவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் மிகவும் பேர்பேற்றதாகக் கருதப்படுவது அவர் 452இல் வடக்கிலிருந்து இத்தாலியை நோக்கிப் படையெடுத்துவந்த அட்டிலா என்னும் ஹுண் (en:Huns)இனப் போர்த்தலைவரை சந்தித்து அப்படையெடுப்பு நிகழாமல் தடுத்து, இத்தாலியைப் பாதுகாத்தது ஆகும்.
மேலும், திருத்தந்தை லியோ திருச்சபையின் முக்கிய பொதுச்சங்கங்களுள் ஒன்றாகிய கால்செதோன் பொதுச்சங்கத்தில் (451) (en:Council of Chalcedon) நிகழ்ந்த விவாதங்களுக்கு அடிப்படையான கருத்துக்கோப்புகளை வழங்கியது ஆகும். இச்சங்கமானது இயேசு கிறிஸ்து யார் என்பது பற்றி விவாதித்தது. இயேசு உண்மையிலேயே கடவுளாகவும் உண்மையிலேயே மனிதராகவும் உள்ளார் என்றும், இயேசுவின் மனித இயல்பும் இறை இயல்பும் ஒரே தெய்விக ஆள்தன்மையில் குழப்பமோ பிளவோ இன்றி இணைந்துள்ளன என்றும் வரையறுத்தது.[2]
"திருத்தந்தையர் வரலாறு" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு தரும் தகவல்படி, திருத்தந்தை லியோ இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தில் பிறந்தார். கி.பி. 431இல் அவர் திருத்தொண்டர் (தியாக்கோன்) பணியை திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் ஆட்சியின்கீழ் தொடங்கியிருந்தார். அப்போது அலெக்சாந்திரியா நகர் மறைமுதல்வர் சிரில், பாலத்தீனத்தின்மீது யூவனல் என்பவர் ஆட்சியதிகாரம் தமக்கு உண்டு என்றதை உரோமைத் திருச்சபை கண்டிக்கவேண்டும் என்று கேட்டு லியோவுக்கு (அல்லது திருத்தந்தை முதலாம் செலஸ்தீனுக்கு) கடிதம் எழுதினார். இதிலிருந்து லியோ ஒரு முக்கிய பதவியில் இருந்தார் எனத் தெரிகிறது.
ஏறக்குறைய அச்சமயத்தில் யோவான் காசியன் என்பவர் நெஸ்டோரியுசு என்பவரின் திரிபுக்கொள்கையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணித்தார். அத்தகைய நூலை எழுதும்படி லியோ காசியனிடம் கேட்டிருந்தார்.
மேலும், உரோமைப் பேரரசரே லியோவின் உதவியை நாடிவந்தார். உரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த கால் பிரதேசத்தில் இரு மேலதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துமோதலைத் தீர்த்துவைக்க லியோ அனுப்பப்பட்டார்.
இவ்வாறு கால் பகுதிக்கு அரசு சார்பாக லியோ தூது சென்ற சமயத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ், 440 ஆகத்து மாதம் 11ஆம் நாள் உயிர்நீத்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே முதலாம் லியோ.
லியோவின் திருத்தந்தைப் பணிக்காலம் கத்தோலிக்க திருச்சபையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக உரோமைத் திருச்சபையின் மைய அதிகாரம் பேரளவாக உறுதிப்படுத்தப்பட்டது.
திருத்தந்தை வழங்கிய போதனைகள் பெரும்பாலும் இயேசு கிறிஸ்துவின் இயல்பு பற்றியும், இயேசு கொணர்ந்த மீட்புப் பற்றியும் அமைந்தன. அவர் அளித்த மறையுரைகள், அவர் எழுதிய மடல்கள் போன்றவற்றில் இந்தப் போதனை அடங்கியுள்ளது.
திருத்தந்தை லியோ தம் பணியைப் பற்றி விவரிக்கும்போது, தாம் புனித பேதுருவின் வாரிசில் வருவதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு முந்திய திருத்தந்தையர் தாம் புனித பேதுருவின் பணிப்பொறுப்பில் வாரிசுகள் என்றும், பேதுரு உரோமையில் பணிசெய்து, மறைச்சாட்சியாக உயிர்துறந்து அங்கேயே அடக்கப்பட்டிருப்பதால் உரோமைத் திருப்பீடம் தனி அதிகாரம் கொண்டது என்று மட்டுமே போதித்திருந்தனர்.
திருத்தந்தை லியோ தாம் பதவி ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிகழ்வின் போது ஆற்றிய மறையுரையில் கீழ்வருமாறு கூறினார்:
நிலையாக இருக்கின்ற பாறையான இயேசு, பாறையான பேதுருவுக்கு வழங்கிய நிலையான தன்மையைப் பேதுரு தம் வழிவருவோருக்கு வழங்கினார்
அதிலிருந்து திருத்தந்தையர் தம்மை புனித பேதுருவின் வழித்தோன்றல்களாக மட்டுமன்றி, தாம் பிற ஆயர்கள் மேலும் நம்பிக்கைகொண்டோர் மேலும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதை வலியுறுத்தத் தொடங்கினர்.
திருத்தந்தை லியோ, இத்தாலி நாட்டு ஆயர்கள் தம் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தார். மிலான் மற்றும் வட இத்தாலியின் பிற பகுதிகளில் அருட்பணி ஒழுங்காக நடைபெறவும், தவறுகள் திருத்தப்படவும், கருத்து வேறுபாடுகள் அகற்றப்படவும் அவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
எசுப்பானியாவில் தோன்றிய பிரிசிலிய கொள்கை (en:Priscillianism) மனித உடல் தீமையானது என்று கூறியதை லியோ கண்டித்து, அக்கொள்கையை மறுப்பதற்கான வழிமுறைகளைக் காட்டினார்.
அதுபோலவே, வடக்கு ஆப்பிரிக்க திருச்சபையிலும் சர்ச்சைகள் ஏற்பட்டபோது அவற்றிற்குத் தீர்வுகாண ஆயர்கள் திருத்தந்தை லியோவை அணுகினர்.
பிரான்சு நாட்டின் தென்பகுதி தமது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று ஹிலரி என்னும் ஆயர் கூறியபோது, திருத்தந்தை லியோ அக்கருத்தை ஏற்க மறுத்ததோடு, ஹிலரி தமது மறைமாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே அதிகாரம் கொண்டவர் என்று வலியுறுத்தினார்.
மறைமாவட்டங்களின் ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்தந்த மறைமாவட்டத்தின் குருக்கள், இறைமக்களைச் சார்ந்தது என்று லியோ கூறினார். "அனைவருக்கும் பணி புரிய அழைக்கப்பட்டவர் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றொரு கொள்கையை அவர் முன்வைத்தார்.
திருத்தந்தை லியோ பிரான்சு நாட்டில் ஆயர் ஹிலரியின் வேண்டுகோளை மறுத்து வெளியிட்ட கட்டளையை அப்போது மேற்கு உரோமைப் பேரரசனாக இருந்த மூன்றாம் வலென்டீனியன் உடனடியாக செயல்படுத்துமாறு கட்டளையிட்டார். அந்த ஆணையில் பேரரசன் கூறியது "திருத்தந்தை லியோ வழங்கிய கட்டளை உரோமை நகரின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது" என்பதாகும்.
ஆனால் அக்காலகட்டத்தில் மேற்கு உரோமைப் பேரரசின் அரசியல் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. கீழை உரோமைப் பேரரசில் திருச்சபை மற்றும் அரசியல் அமைப்புகள் தங்கள் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் வலியுறுத்தத் தொடங்கின. மேற்கு உரோமைப் பேரரசின் ஆட்சியிலிருந்து விடுபட்டு, உரோமை நகருக்குப் பதிலாக காண்ஸ்டாண்டிநோபுள் நகரத்தை முதன்மைப்படுத்தும் முயற்சி நடைபெற்றது.
இவ்வாறு, உரோமைப் பேரரசின் கீழைப் பகுதி அதன் மேற்குப் பகுதியை விட திருத்தந்தை லியோவின் அதிகாரத்தை ஏற்க அதிக தயக்கம் காட்டியது. எடுத்துக்காட்டாக, 449ஆம் ஆண்டில் திருத்தந்தை லியோ ஒரு முக்கியமான கடிதத்தை (கடிதம் 28) காண்ஸ்டாண்டிநோபுள் ஆயரான ஃபிளேவியன் என்பவருக்கு அனுப்பினார். அதில் அவர் கீழைத் திருச்சபையில் நிலவிய ஒரு தவறான கொள்கையைக் கண்டித்திருந்தார். அக்கொள்கை, "இயேசு கிறிஸ்துவில் இறைத்தன்மை என்னும் ஒரே தன்மைதான் உண்டு" என்றும், "இயேசு கிறிஸ்துவின் மனிதத்தன்மையை அவருடைய இறைத்தன்மை தன்வயமாக்கிக்கொண்டது" என்றும் கூறியது.
உடனடியாக இரண்டாம் தியோடோசியுசு மன்னன் ஒரு பொதுச்சங்கத்தை 449 ஆகத்து மாதம் எபேசு நகரில் கூட்டினார் (431இல் எபேசு நகரில் நிகழ்ந்த பொதுச்சங்கம் இதிலிருந்து வேறுபட்டது). திருத்தந்தை லியோ பொதுச்சங்கத்தில் நேரடியாகப் பங்கெடுக்காவிட்டாலும், தமது பெயரில் மூன்று பதிலாள்களை அனுப்பி, அவர்களிடத்தில் அவர் ஃபிளேவியனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் கொடுத்து அனுப்பினார். இயேசு கிறிஸ்து பற்றிய தவறான கொள்கையைக் கண்டித்த அந்த நகலானது 449 ஆகத்து மாதத்தில் எபேசு நகரில் நடக்கவிருந்த பொதுச்சங்கத்தில் வாசிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது திருத்தந்தையின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் எபேசு சங்கம் திருத்தந்தை லியோவின் கடிதத்தைக் கண்டுகொள்ளவில்லை. காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் ஃபிளேவியனை எதிர்த்து நின்று, இயேசு பற்றிய தவறான கொள்கையைப் பரப்பிக்கொண்டிருந்த யூட்டிக்கஸ் en:Eutyches) என்பவரே காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் ஆவார் என்றும், அவரது கொள்கையை எதிர்த்தவரான ஃபிளேவியன் கண்டனத்துக்கு உள்ளானவர் என்றும் பொதுச்சங்கம் அறிவித்தது.
தாம் அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்த 499ஆம் ஆண்டு பொதுச்சங்கம் முறைகேடாகக் கூட்டப்பட்ட ஒரு "போலிச் சங்கம்" (robber council) என்று கூறி, அதற்கு தாம் இசைவுகொடுக்கப் போவதில்லை என்று லியோ மறுத்துவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வேறொரு பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. அதைக் கூட்டியவர் லியோ அல்ல, மாறாக உரோமைப் பேரரசர். சங்கம் கால்செதோன் நகரில் கூடியது. கால்செதோன் நகரம் இன்றைய துருக்கி நாட்டை ஐரோப்பா கண்டத்திலிருந்து பிரிக்கின்ற பொசுபோரசு (Bosphorus) என்னும் நீரிணைக் கரையில் உள்ளது. அச்சங்கம், 499இல் எபேசில் நடந்த சங்கம் எடுத்த முடிவுகள் சட்டத்திற்கு மாறானவை என்று தீர்மானம் இயற்றியது. இயேசு கிறிஸ்து பற்றி திருத்தந்தை லியோ வழங்கிய போதனையே உண்மையான திருச்சபைப் போதனை என்று அறிக்கையிட்டது. அதாவது, இயேசு கிறிஸ்துவில் இரு இயல்புகள் உள்ளன: ஒன்று இறையியல்பு மற்றொன்று மனித இயல்பு. இவ்விரு இயல்புகளும் ஒரே தெய்விக ஆளில் குழப்பமோ பிளவோ இன்றி இணைந்துள்ளன. இந்த உண்மையானது வலியுறுத்தப்பட்டது.
திருத்தந்தை லியோ அனுப்பிய கடிதத்தில் அடங்கியிருந்த மேற்கூறிய கொள்கை விளக்கம் பொதுச்சங்கத்தில் வாசித்து அறிவிக்கப்பட்டதும், சங்கத்தில் கூடியிருந்த ஆயர்கள் ஒரு குரலாக, "லியோ வழியாகப் பேதுரு பேசியுள்ளார்" என்று கூறித் தம் இசைவைத் தெரிவித்தனர். இச்செய்தி பொதுச்சங்க நடவடிக்கைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விவரம் என்னவென்றால், கால்செதோன் நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தாலியில் கூட வேண்டும் என்றும், அதற்குத் தாம் அனுப்பிய பதிலாள்கள் தலைமை தாங்கவேண்டும் என்றுதான் திருத்தந்தை லியோ கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், திருச்சபை வாழ்வில் முக்கிய நிகழ்வான ஒரு பொதுச்சங்கம் கூடுவது பற்றி தமது விருப்பத்தைச் செயல்படுத்துவதில், அவ்வளவு உறுதியான அதிகாரம் கொண்டிருந்த திருத்தந்தை லியோ கூட வெற்றிபெற முடியவில்லை.
கால்செதோன் பொதுச்சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களுள் ஒன்று திருத்தந்தை லியோவுக்குப் பிடிக்கவில்லை. அதாவது, உரோமை நகர் மேற்கு உரோமைப் பேரரசின் தலைநகராகவும், காண்ஸ்டாண்டிநோபுள் நகர் கீழைப் பேரரசின் தலைநகராகவும் இருந்ததால், திருச்சபை அதிகாரத்தைப் பொறுத்த மட்டிலும் இரு நகர்களும் ஒரே சிறப்புரிமை கொண்டுள்ளன என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது "28ஆம் தீர்மானம்" (canon 28) என்று அழைக்கப்படுகிறது. இத்தீர்மானத்தின் படி உரோமை நகருக்கு அடுத்தபடியாக கிறித்தவ திருச்சபையில் இரண்டாம் இடத்தை காண்ஸ்டாண்டிநோபுள் பிடிக்கும் என்றாயிற்று. ஆனால், வரலாற்றைப் பார்த்தால், கீழைப் பேரரசுப் பகுதியில் திருச்சபையின் பண்டைய மையங்களாக இருந்த இரு முக்கிய நகரங்கள் அலெக்சாந்திரியா மற்றும் அந்தியோக்கியா ஆகும்.
ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த திருத்தந்தை லியோ, பொதுச்சங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அதிகாரப்பூர்வ இசைவு வழங்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 453, மே மாதம் 21ஆம் நாள் அவர் கால்செதோன் சங்க நடவடிக்கைகளுக்கு இசைவு அளித்தபோதிலும், மேற்கூறிய 28ஆம் தீர்மானத்தை ஒருபோதுமே ஏற்கவில்லை.
வரலாற்றில் நடந்த இந்த நிகழ்வைக் கருதும்போது, திருச்சபையில் திருத்தந்தையின் அதிகாரம் எப்போதுமே அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது.
452ஆம் ஆண்டில் ஹுண் இனத்தைச் சார்ந்த படைத்தலைவரான அட்டிலா என்பவர் வட இத்தாலியின் மீது படையெடுத்து வந்து அதன் பெரும்பகுதியை அழிவுக்கு உட்படுத்தினார். ஐரோப்பாவில் உருசிய நாடு ஊரல் மலை (en:Ural) பகுதி, செருமானிய ரைன் ஆற்றுப் பகுதி, தன்யூப் ஆற்றுப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி, பால்டிக் கடல் வரை ஹுண் பேரரசு (en:Hun Empire) பரவியிருந்தது. அங்கிருந்து வந்து இத்தாலியைப் பிடித்து, பின்னர் உரோமையை வந்தடையும் வண்ணம் புறப்பட்ட அட்டிலா வட இத்தாலியின் மாந்துவா (en:Mantua) நகரை அணுகியபோது, திருத்தந்தை லியோ நேரடியாகச் சென்று அட்டிலாவை சந்தித்துப் பேசினார் (en:Attila and Leo). அட்டிலாவும் அவருடைய படைகளும் படையெடுப்பைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. அவை தரும் செய்திகள் இவை: ஹுண் இனப் படைத்தலைவரான அட்டிலா, உரோமைப் பேரரசனான மூன்றாம் வாலென்டீனியனின் சகோதரியான ஹொனோரியா என்பவரை மணந்துகொள்ள விரும்பினார். எனவே மணப்பெண்ணை மிகுந்த செல்வங்களோடு தன்னிடம் அனுப்பித் தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் உரோமைப் பேரரசின் மீது போர்தொடுக்கப் போவதாகவும் அட்டிலா மிரட்டினார். ஆனால் வாலென்டீனியன் தன் சகோதரியை அனுப்ப மறுத்துவிட்டார்.
அட்டிலாவை சமாதானப்படுத்தும் பொருட்டு வாலென்டீனியன் ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். அக்குழுவின் தலைவராக திருத்தந்தை லியோவும் அவரோடு இரு ஆட்சியாளர்களும் சென்றனர். தூதுக்குழுத் தலைவர் லியோவும் படையெடுத்து வந்த அட்டிலாவும் என்ன பேசினர், எவ்விதத்தில் உடன்பாடு எட்டப்பட்டது என்பது குறித்து அதிக விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அட்டிலா படையெடுப்பைக் கைவிட்டு, தன் படைகளோடு தன்யூப் ஆற்றுக்கு அப்பால் பின்வாங்கினார் என்பது வரலாற்று உண்மை.
வரலாற்று ஆசிரியர்கள் இது பற்றி வேறுபட்ட கருத்துகள் தெரிவித்துள்ளனர். திருத்தந்தை லியோ அட்டிலாவுக்குப் பேரளவான பொன் கொடுத்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஏற்கனவே திரட்டிக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை சுமந்துகொண்டு மேலும் படையெடுப்பைத் தொடர்வது சிரமமாக இருந்திருக்கலாம். அப்போது வட இத்தாலியாவில் பரவிய கொள்ளை நோய், உணவுப் பற்றாக்குறை போன்றவை காரணமாகலாம். கிழக்கே தன்யூப் ஆற்றின் கரையில் கிழக்குப் பேரரசன் மார்சியானுசு ஹுண் பேரரசைத் தாக்கியது காரணமாகலாம்.
கிறித்தவ மதத்தைச் சேராத அட்டிலா, திருச்சபைத் தலைவரான லியோவைக் கண்டு, சமய நம்பிக்கையின் அடிப்படையில் பணிந்திருக்க வாய்ப்பில்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் திருத்தந்தை லியோ, சமரச முயற்சி செய்து வெற்றி பெற்றார் என்பது ஏற்கப்படுகிறது.
விசிகோத்து மன்னனான அலாரிக் என்பவர் கிபி 410இல் உரோமை மீது படையெடுத்துச் சென்ற சிறிது நாள்களிலேயே மரணத்தைச் சந்தித்ததுபோன்று தனக்கும் நேர்ந்துவிடுமோ என்று அட்டிலா பயந்திருக்கலாம். ஒரு வரலாற்றாசிரியர், திருத்தந்தை லியோ அட்டிலாவின் முன் நின்று பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் பிரமாண்டமான ஒரு மனிதர், குருவுக்கு உரிய உடையை அணிந்துகொண்டு, கையில் ஒரு வாளை ஏந்தியவராய் தன்னையும் தன் படையையும் மிரட்டியது போன்ற ஒரு காட்சி அட்டிலாவின் கண்முன் தோன்றியது என்றும், பயந்துபோன அட்டிலா பணிந்தார் என்றும் கூறுகிறார்.
எவ்வாறாயினும், திருத்தந்தை லியோவுக்கும் அட்டிலாவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சந்திப்புக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின், 455இல் வாண்டல் இனத்தவர் (en:Vandals) உரோமை நகரைத் தாக்கிக் கொள்ளையடிக்க வந்த போது வாண்டல் படைத்தலைவரான கென்செரிக்கையும் (en:Genseric) படைகளையும் உரோமை நகரின் தடுப்புச் சுவர்களுக்கு வெளியே சந்தித்த திருத்தந்தை லியோவால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயினும் உயிர்ச் சேதம் மற்றும் தீவைப்பு தடுக்கப்பட்டது ஒரு சாதனையே.
திருத்தந்தை லியோ 461ஆம் ஆண்டு, நவம்பர் 10ஆம் நாள் இறந்தார். அவருடைய உடல் உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலின் உள்முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 688இல் கோவிலுக்கு உள்ளே அடக்கப்பட்டது. கல்லறை மீது சிறப்பான விதத்தில் ஒரு பீடமும் நிறுவப்பட்டது.
1754இல் திருத்தந்தை லியோவுக்கு திருச்சபையின் மறைவல்லுநர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. திருச்சபையின் போதனையைத் தெளிவாகவும் விளக்கமாகவும் பல மறையுரைகள், நூல்கள், விளக்கவுரைகள் வழியாக அளித்து, திருச்சபையை மிகத் திறமையாக வழிநடத்திச் சென்றதால் அவருக்கு "பெரிய" ("மகா") (Great) என்னும் அடைமொழிகொடுத்து அழைப்பது வழக்கம்.
திருத்தந்தை லியோவின் திருவிழா மேற்கு திருச்சபையில் நவம்பர் 10ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. கீழைத் திருச்சபை அவரது விழாவை பெப்ருவரி 18ஆம் நாள் கொண்டாடுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.