பாப்பரசரால் வழிநடத்தப்படும் மிகப்பெரிய கிறித்தவத் திருச்சபை From Wikipedia, the free encyclopedia
கத்தோலிக்கத் திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.
கத்தோலிக்க (καθολικός, katholikos) என்ற பதம் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் உலகளாவிய அல்லது அனைவருக்கும் பொதுவான என்பதாகும். இதன்படி கத்தோலிக்க திருச்சபை என்பது, இயேசு கிறிஸ்துவால் உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட திருச்சபை என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவரே, கிறிஸ்தவ சமூகத்தை முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபை என்று அழைத்தார். புனித பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தைக்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.[1] "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.
ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.
11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.
திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது.
டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.
முதலாம் வத்திக்கான் சங்கம் (1869–1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும்.
சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
திருமறைச் சுவடி என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையினர் நம்பி ஏற்கின்ற கொள்கைத் தொகுப்பின் சுருக்கம் ஆகும். ஆங்கிலத்தில் Catechism என்று அழைக்கப்படுகின்ற இத்தொகுப்பு சின்னக் குறிப்பிடம் என்றும் அறியப்பட்டது. கடந்த 450 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கப்பட்ட இச்சிறு நூல் திருத்திய பதிப்பாக 2007ஆம் ஆண்டு திருமறைச் சுவடி (புதிய குறிப்பிடம்) என்னும் பெயரில் வெளிவந்தது. இது வினா-விடை வடிவில் அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக 1578இல் அச்சேறிய முதல் தமிழ் நூலாகிய தம்பிரான் வணக்கம் என்னும் ஏட்டையும், தத்துவபோதகர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (தமிழகத்தில்: 1606–1656) எழுதியதாகக் கருதப்படும் சின்னக் குறிப்பிடம் ஏட்டையும் கருதலாம்.
தந்தை/மகன்/தூய ஆவியின் பெயராலே ஆமென்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். / ஆமென்
அருள் நிறைந்த மரியே வாழ்க!ஆண்டவர் உம்முடனே.பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.உம்முடைய திருவயிற்றின் கனியாகியஇயேசுவும் ஆசி பெற்றவரே.தூய மரியே,இறைவனின் தாயே,பாவிகளாய் இருக்கிற எங்களுக்காகஇப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ தொடக்கத்தில் இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை... இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை... வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை... கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதர் வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென்.
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக / உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். -
என் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்.
இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே / இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன். வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.