போபால் பகுதியை ஆண்ட அரசி From Wikipedia, the free encyclopedia
ஷாஜகான் பேகம் (Shah Jahan Begum) (29 ஜூலை 1838 - 16 ஜூன் 1901) மத்திய இந்தியாவிலிருந்த போபாலின் சுதேச அரசை இரு தடவை ஆட்சி செய்தவராவார். முதல் முறை தனது தாயாரின் உதவியாலும் (1844 - 60), இரண்டாவதாக (1868 - 1901) தனியாகவும் போபாலின் பேகமாக இருந்தார்.
சுல்தான் ஷாஜகான் பேகம் | |
---|---|
போபாலின் பேகம் | |
ஆட்சிக்காலம் | 30 அக்டோபர் 1868 – 16 ஜூன் 1901 |
முன்னையவர் | முதலாம் சிக்கந்தர் பேகம் |
பின்னையவர் | முதலாம் சுல்தான் ஜஹான் |
பிறப்பு | இசுலாம்நகர், போபால் இராச்சியம், தற்போதைய மத்தியப் பிரதேசம், இந்தியா) | 29 சூலை 1838
இறப்பு | 16 ஜூன் 1901 (வயது 62) போபால் இராச்சியம், தற்போதைய இந்தியா |
துணைவர் | பாகி முஹம்மது கான் சித்திக் ஹசன் கான் |
குழந்தைகளின் பெயர்கள் | போபாலின் பேகமான முதலாம் சுல்தான் ஜஹான் |
உருது | سلطان شاہ جہاں بیگم |
மரபு | போபால் |
தந்தை | ஜஹாங்கிர் முகமது கான் |
தாய் | போபாலின் பேகமான முதலாம் சிக்கந்தர் பேகம் |
மதம் | சுன்னி இசுலாம் |
போபாலுக்கு அருகிலுள்ள இசுலாம்நகரில் பிறந்த ஷாஜகான், போபாலின் சிக்கந்தர் பேகம் என்பவருக்கும், சில நேரத்தில் போபாலின் நவாப் என்றும் அறியப்படும் ஜஹாங்கிர் முகமது கான் என்பவருக்கும் ஒரே குழந்தையாகப் பிறந்தார். 1844 ஆம் ஆண்டில் தனது ஆறு வயதில் போபாலின் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார். இவருக்கு உரிய வயதாகாத காரணத்தால் இவரது தாய் அரசப் பிரதிநிதியாக இருந்தார். இருப்பினும், 1860ஆம் ஆண்டில், தனது தாயாரால் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்னர் தனது தாயின் இறப்புக்குப் பிறகு (1868) போபாலின் பேகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார்.
மாநிலத்தின் பொறுப்பை ஏற்றவுடன், வரி வருவாய் முறையை மேம்படுத்தினார். தனது வீரர்களின் சம்பளத்தை உயர்த்தினார். இராணுவத்தின் ஆயுதங்களை நவீனப்படுத்தினார். ஒரு அணையும் ஒரு செயற்கை ஏரியும் கட்டினார். காவலர் படையின் செயல்திறனை மேம்படுத்தினார். மேலும், இராச்சியம் இரண்டு முறை பிளேக் நோயைச் சந்தித்த பின்னர் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டார் (மக்கள் தொகை 7,44,000 ஆகக் குறைந்தது). தனது வரி வருவாயின் பற்றாக்குறையை சமன் செய்ய, அபினி சாகுபடியை ஊக்குவித்தார்.
இவர், உருது மொழியில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் கௌஹர்-இ-இக்பால், இவரது ஆட்சியின் 1 மற்றும் 7 ஆம் ஆண்டுகளைப் பற்றியும், அந்த நேரத்தில் போபாலின் சமூக-அரசியல் நிலைமைகளைப் பற்றிய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. இவரது இந்த சுயசரிதை ஆங்கிலத்தில் ஏன் அக்கவுண்ட் ஆப் மை லைப் என்ற பெயரில் இவரது கல்வி ஆலோசகராக இருந்த சி.எச். பெய்ன் என்பவரால் எமொழிபெயர்க்கப்பட்டது. பின்னர், அக்தர்-இ-இக்பால் என்ற அதன் இரண்டாவது பகுதியை எழுதினார். 1918ஆம் ஆண்டில் இவர் இஃபாத்-உல்-முஸ்லீமாத் என்ற நூலையும் எழுதினார். இதில் ஐரோப்பா, ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலுள்ள பர்தா பற்றிய வழக்கங்களின் கருத்துக்களை விவரித்து எழுதியிருந்தார்.
போபாலில் இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான தாஜ்-உல்-மசாஜித் கட்டுமானத்தைத் தொடங்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனாலும், இவரது மரணம் காரணமாக கட்டுமானம் முழுமையடையாமல் இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. 1971இல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. போபாலில் "தாஜ்மகால் அரண்மனை"யையும் கட்டினார். இவர், மக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பினாலும் தனது பலவீனமான உடல்நலம் காரணமாகவும், கப்பல் விபத்துக்கள் பற்றிய பயம் காரணமாகவும் எப்போதும் அவ்வாறு செல்லவிடாமல் தடுத்தது [3]
ஷாஜகான் பேகம் இங்கிலாந்தின் சர்ரேயின் வோக்கிங்கில் ஒரு பள்ளிவாசலைக் கட்டுவதற்கு கணிசமான நன்கொடைகளை வழங்கினார். அலிகரில் முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி நிறுவவும் இவர் தாராளமாக பங்களித்தார். பின்னர், இது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. [4]
இவரது இறுதி ஆண்டுகள் நியாயமான முறையில் இயங்கும் மாநிலத்தின் தலைமையில் கழிந்தன. [3] 1901 ஆம் ஆண்டில் இவர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு. 1901 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இறந்தார். இவருக்குப் பின்னர், இவரது மகள் சுல்தான் ஜெஹான் அரியணையை ஏற்றுக்கொண்டார். [5]
இவரது ஆட்சியின் போது போபால் மாநிலத்தின் முதல் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. 1876 மற்றும் 1878ஆம் ஆண்டுகளில் அரையணா மற்றும் காலணா மதிப்பில் அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டட்ன. 1876ஆம் ஆண்டின் வெளியிடப்பட்ட ஒரு எண்கோண வடிவ முத்திரையில் "எச்.எச். நவாப் ஷாஜகான் பேகம்" என்ற உரை உள்ளது. இவரது பெயரைக் கொண்ட கடைசி முத்திரைகள் 1902 இல் "எச்.எச். நவாப் சுல்தான் ஜஹான் பேகம்" என்ற உரையுடன் வெளியிடப்பட்டன. [6] (போபாலின் மாநில அஞ்சல் சேவை 1949 வரை அதன் சொந்த அஞ்சல் தலைகளை வெளியிட்டது; 1908ஆம் ஆண்டு முத்திரைகள் வெளியானதில் இருந்து 1945 வரை அதிகாரப்பூர்வ முத்திரைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் "போபால் மாநிலம்" அல்லது "போபால் அரசு" என்ற உரைகள் இருந்தன. 1949ஆம் ஆண்டில் போபாலின் சொந்த முத்திரைகளில் கடைசி இரண்டு கூடுதல் முத்திரைகள் வழங்கப்பட்டன. ) [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.