Remove ads
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை From Wikipedia, the free encyclopedia
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.
இராணி இலட்சுமிபாய் (சான்சி இராணி) | |
---|---|
ஜான்சியின் மகாராணி | |
இராணி இலட்சுமிபாய் | |
முன்னிருந்தவர் | இராணி ரமா பாய் |
பின்வந்தவர் | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
துணைவர் | மகாராஜா கங்காதர் ராவ் |
மரபு | மராட்டியப் பேரரசு |
தந்தை | மொரோபந்த் தம்பே |
தாய் | பகீரதி தம்பே |
பிறப்பு | மணிகர்ணிகா 19 நவம்பர் 1828 காசி, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1858, சூன் 18 குவாலியர், இந்தியா |
நவம்பர் 19, 1828 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி.[1] இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா என்பதாகும்.[2] இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார்.[3] இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார்.[4] இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.[5] மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.[6] பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.
இவரது தந்தை சான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார். அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான்.[7] தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும், இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்கு தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.[8]
மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்ஹவுசி பிரபு, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.[9]
ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது.[10] போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும், பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதால் இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது.[11][12] இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.[13]
ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857 ஆம் ஆண்டு சூன் 8ஆம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும், விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.[14] இதனையே காரணமாக வைத்து, 1858 ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் திகதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.[15] ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் மார்ச்சு 31ஆம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், ஆயிரம் பேர் கொண்ட ஹியூரோஸ் தலைமையிலான குதிரைப்படை என்பீல்ட் ரக துப்பாக்கிகளின் உதவியோடு அவர்களைத் தாக்கி 1500 பாரத வீரர்களை மரணமடையச் செய்தது. மாவீரன் தாந்தியா தோபேயும் மிகுந்த மனவருத்தத்துடன் புறமுதுகிட நேரிட்டது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு, பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். ஜான்சி ராணிக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.[12][12]
ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த சான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. பாரதநாட்டின் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் மாவீரன் குதாபக்ஷ், பீரங்கி படைத்தளபதி கௌசல்கான் ஆகியோரும் மரணமடைந்தனர். கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர். ஆங்கில கொள்ளையர்கள் நகர வீடுகளில் புகுந்து மாணிக்கமணிகளையும், பொன்னையும், பொருளையும், பல இடங்களிலும் பெண்களையும் சூறையாடி தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.[16]
ஜான்சி இராணி 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார்.[18] அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.
ஆங்கிலேயர்களால் ஜான்சியைவிட்டு வெளியேறச்சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம்பெற்றது. அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்று டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார்.[19]
இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் சான்சி ராணி போரிட்டார்.[20] இப்போரின்போது படுகாயமடைந்து சான்சி ராணி, அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார்.[21] ஆனால் வீழ்ந்தது ராணிதான் என்று ஆங்கிலேயருக்கு தெரியாததால், அவரது உடல் உடனடியாக பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது.[22] பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.
மஹாஸ்வேத தேவியால் 1956ஆம் ஆண்டில் வங்காள மொழியில் எழுதப்பட்ட தி குவீன் ஆஃப் ஜான்சி (சகரீயாலும் மந்திரா செங்குப்தாவாலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.) என்ற நூலில் மகாராணி லட்சுமிபாயின் வாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.[28] இதற்காக வரலாற்று ஆவணங்களும் (பெரும்பாலும் ராணியின் பேரனான ஜி. சி. தம்பேயால் வழங்கப்பட்டவை) நாட்டார் கதைகளும் கவிதைகளும் வாய்மொழி மூலங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டார்.[29]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.