From Wikipedia, the free encyclopedia
வைஷ்ணோ தேவி (Vaishno Devi) மாதா ராணி, திரிகூடா, அம்பே மற்றும் வைஷ்ணவி என்றும் அழைக்கப்படுகிறார். இந்து தாய் தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படுகிறார்.[1] வைஷ்ணோ தேவி மகாகாளி, மஹாலக்ஷ்மி மற்றும் மஹாசரஸ்வதி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களில் இருந்து அவதாரம் எடுத்ததாக கருதப்படுகிறது.
வைஷ்ணோ தேவி | |
---|---|
புனித குகையில் அமைந்துள்ள 3 பாறைகள்; மகா காளி, மகாலட்சுமி & மகா சரஸ்வதி | |
அதிபதி | பெண் தெய்வம்; மலைகளின் தெய்வம் |
வேறு பெயர்கள் | வைஷ்ணவி, மாதா ராணி, திரிகூடா, அம்பே, துர்கா,ஜெகதம்பா |
தேவநாகரி | वैष्णो देवी |
வகை | ஆதிசக்தி, துர்க்கை, மகா காளி, லட்சுமி (இந்துக் கடவுள்), சரசுவதி |
இடம் | வைஷ்ணவ தேவி, கட்ரா, இந்தியா |
பெற்றோர்கள் | இரத்னகர்சாகர் & சம்ரிதி - ஸ்ரீபுரம் |
எழுத்தாளர் ஆபா சௌஹான், வைஷ்ணோ தேவியை விஷ்ணுவின் சக்தி மற்றும் லக்ஷ்மியின் அவதாரம் என்று அடையாளப்படுத்துகிறார். எழுத்தாளர் பிண்ட்ச்மேன், ஆதிசக்தியை அடையாளப்படுத்தி, வைஷ்ணோ தேவி அனைத்து சக்திகளையும் கொண்டிருப்பதாகவும், மேலும் "யாத்ரீகர்கள் வைஷ்ணோ தேவியை துர்காவுடன் அடையாளப்படுத்துகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார்.
தேவி பாகவத புராணத்தின் படி, இவர் திரிகூடத்தில் ருத்ரசுந்தரி என்று குறிப்பிடப்படுகிறார்.
வராஹ புராணத்தின் திரிகால மாஹாத்மியத்தில், இவர் திரிகாலத்திலிருந்து (திரிமூர்த்திகளிடமிருந்து பிறந்த தெய்வம்) தோன்றி மகிஷா என்ற அசுரனை வதம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.[2]
வாராஹி தந்திரத்தின்படி, இந்த சக்திபீடம் சுமங்கல திரிகூடபர்வதம் என்று பெயரிடப்பட்டது.[3]
வைஷ்ணோ தேவியின் தோற்றம் மற்றும் பைரவ நாதரின் கதை:
பிரபல தாந்திரீகரான பைரவ நாத், இளம் வைஷ்ணோ தேவியை விவசாய கண்காட்சியில் பார்த்ததாகவும், அவளை வெறித்தனமாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. வைஷ்ணோ தேவி அவனிடமிருந்து தப்பிக்க திரிகூட மலைகளுக்குத் தப்பி ஓடினார் எனவும், பின்னர் மகாகாளியின் வடிவத்தை எடுத்து ஒரு குகையில் தனது வாளால் பைரவநாத் தலையை வெட்டினார் எனவும் சொல்லப்படுகிறது. இதை, பேராசிரியரும் எழுத்தாளருமான ட்ரேசி பிண்ட்ச்மேன் விவரிக்கிறார். "சுமார் தொள்ளாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணோ தேவி ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில் தோன்றி, ஹன்சாலி (இன்றைய கத்ராவிற்கு அடுத்துள்ள) கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பிராமணருக்கு பூமிகா ஓடைக்கு அருகில் உள்ள உள்ளூர் மக்களுக்கு விருந்து கொடுக்கும்படி கட்டளையிட்டார். விருந்து நேரத்தில், கோரக்நாத்தின் சீடரான பைரவ் நாத் தோன்றி இறைச்சி மற்றும் மதுபானம் கேட்டார். ஆனால் இது பிராமணர்களின் விருந்து என்பதால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று வைஷ்ணோ தேவி கூறினார். வைஷ்ணோ தேவியைப் பார்த்த பைரவநாதருக்கு அவர் மேல் ஆசை வந்தது. அதனால், அவனிடமிருந்து தப்பிக்க, தேவி, திரிகூட மலையின் பாதையில் பல இடங்களில் நின்று ஓடினார். தற்போது பங்காங்கா (அம்பிலிருந்து கங்கை நதி உருவானது), சரண் பாதுகா (புனித கால்தடங்கள்), அர்த்த குன்வாரி என்று அழைக்கப்படும் இடங்கள் — தேவி ஒன்பது மாதங்கள் ஒரு குகையில் இருந்ததாகக் கூறப்படும் இடம், — இறுதியாக பவன், குகை இப்போது தேவியினுடைய வீடு என்று அறியப்படுகிறது. அங்கு சாமுண்டி (காளியின் ஒரு வடிவம்) வடிவத்தை எடுத்து, பைரவ நாத்தின் தலையை வெட்டினார். அவரது உடல் குகையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது, மேலும் அவரது தலை இப்போது பைரவ நாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் மலையின் மேல் இறங்கியது. பைரவ நாதர் தன் செயலுக்காக பின்னர் வருந்தினார். அதனால், அவருக்கு, தன் தரிசனத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கும் பைரவ நாத் தரிசனம் கிடைக்காவிட்டால் அவர்களின் யாத்திரை பலனளிக்காது என்று அருளாசி வழங்கினார். வைஷ்ணோ தேவி பின்னர் 3 சிறிய பாறைகளாக தோன்றி இன்றுவரை அங்கேயே இருக்கிறார். ஸ்ரீதர் குகையில் உள்ள பாறைகளுக்கு பூஜை செய்யத் தொடங்கினார், அவருடைய சந்ததியினர் இன்றும் அதைத் தொடர்கிறார்கள்." என்று கூறுகிறார்.[4]
பேராசிரியரும் எழுத்தாளருமான மனோகர் சஜ்னானி கூறுகிறார்: இந்து நம்பிக்கைகளின்படி, வைஷ்ணோ தேவியின் அசல் உறைவிடம் கத்ரா நகரத்திற்கும் குகைக்கும் நடுவில் உள்ள அர்த்த குன்வாரி ஆகும். பைரவ நாதர் வைஷ்ணோ தேவியைப் பிடிக்க அவளைப் பின்தொடர்ந்து ஓடியபோது, தாயின் வயிற்றில் ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் இருக்கிறதோ, அதுபோல 9 மாதங்கள் குகையில் தியானம் செய்தார் என்று கூறப்படுகிறது. மலையிலுள்ள குகை ஒன்றின் அருகே சென்ற தேவி, அனுமனை அழைத்து, "நான் ஒன்பது மாதங்கள் இந்தக் குகையில் தவம் செய்வேன், அதுவரை பைரவநாதரைக் குகைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் அனுமன். பைரவநாதர் இந்த குகைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இன்று இந்த புனித குகை 'அர்த்த குன்வாரி' என்று அழைக்கப்படுகிறது.[5]
யாத்ரீகர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரிலிருந்து ஹெலிகாப்டர், ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ள கத்ரா கிராமத்திற்கு பயணிக்கின்றனர். கத்ராவிலிருந்து, வைஷ்ணோ தேவி கோயிலுக்கு நடைப்பயணமாக மேல்நோக்கிப் பயணம் தொடங்குகிறது. திரிகூட மலைக்கு அருகில் செல்லும் வழியில் பங்காங்கா நதி உள்ளது. வைஷ்ணோ தேவி தரையில் அம்பு எய்து கங்கை நதியைக் கொண்டு வந்து அனுமனின் தாகத்தைத் தணித்ததாகக் கூறப்படுகிறது. அனுமன் மறைந்த பிறகு, வைஷ்ணோ தேவி தன் தலைமுடியை தண்ணீரில் கழுவினார் என்று புராணம் சொல்கிறது. " பால் " என்றால் முடி மற்றும் " கங்கா " என்பது புனித கங்கை நதிக்கு ஒத்ததாக இருப்பதால், பங்கங்கா நதி 'பால்கங்கா நதி' என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் தூய்மையை நிரூபிக்க பங்கங்கா நதியில் குளிக்க வேண்டும். பங்கங்காவிற்குப் பிறகு சரண் பாதுகா கோவில் உள்ளது. வைஷ்ணோ தேவி தப்பித்து ஓடும் பொழுது, பைரவநாதரைப் பார்க்க ஒரு பாறையில் நின்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த பாறையில் தேவியின் கால்தடங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் இவரது கால்தடங்கள் வழிபடப்படுகின்றன. சரண் பாதுகாவை தரிசனம் செய்த பிறகு, பக்தர்கள் அர்த்த குன்வாரி கோயிலுக்கு வருகிறார்கள். பைரவ நாத்திடமிருந்து தப்பிக்க ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் தாயின் வயிற்றில் இருக்கிறதோ, அதுபோல வைஷ்ணோ தேவி இந்த குகையில் 9 மாதங்கள் தியானம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்த குன்வாரியை தரிசனம் செய்த பிறகு, பக்தர்கள் பைரவ நாத் கோவிலுக்கு செல்கின்றனர். வைஷ்ணோ தேவி பைரவரைக் கொன்ற பிறகு, பைரவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார் என்று கூறப்படுகிறது. வைஷ்ணோ தேவி, யாத்ரீகர்கள் இவரின் தலையை தரிசனம் செய்யவில்லை என்றால், அவர்களின் யாத்திரை பலிக்காது என்று ஆசிர்வதித்தார். வைஷ்ணோ தேவியின் கோவிலான பவனுக்குச் செல்லும் முன் பக்தர்கள் பைரவநாதரின் தலையை தரிசனம் செய்கிறார்கள். வைஷ்ணோ தேவியைக் குறிக்கும் 3 பாறைகளை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் இந்திய யூனியன் பிரதேசத்தில் உள்ள திரிகூட மலைகளில் கத்ராவில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில் ஒரு முக்கியமான இந்துக் கோயிலாகும் . வைஷ்ணோ தேவி என்று போற்றப்படும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சக்தி பீடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.[6] இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது, பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக கூடும்.[7] வைஷ்ணோ தேவி கோவில் இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். எழுத்தாளர்கள் மைக்கேல் பார்னெட் மற்றும் ஜானிஸ் கிராஸ் ஸ்டெய்ன், "ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் ஆண்டு வருமானம் சுமார் $16 பில்லியன் ஆகும், இது முக்கியமாக பக்தர்களின் காணிக்கை மூலம் பெறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கோயிலில் விவேகானந்தர் போன்ற பல முக்கிய துறவிகள் வழிபாடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய இரண்டும் வைஷ்ணோ தேவி கோயிலில் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய பண்டிகைகள் ஆகும். இந்த கோவில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சட்டம் எண். XVI/1988 இல் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட குழு கோவிலை நிர்வகித்து வருகிறது. மேலும், இந்தக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.