From Wikipedia, the free encyclopedia
இருக்கு வேதம் (சமசுகிருதம்: ऋग्वेद - ரிக்வேத; ஆங்கில மொழி: Rigveda) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக பொ.ஊ.மு. 1500க்கும் பொ.ஊ.மு. 1100க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இருக்கு வேதம் என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது. அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
இருக்கு வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று. ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக(மந்திரங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. ’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ’ருக்’ என்று பெயர். இந்த 1028 சூக்தங்களில் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை.
இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் (சோமபானம்), நல்ல மழை, தானிய விளைச்சல், தானம்,(தட்சனை) அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் கிராதர்கள் என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷை (விடியற்காலை), அஸ்வினிதேவர்கள் என்போரும், சவிதா, விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிரகஸ்பதி, தியாயுஸ் (பிதா), பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜன்யன் (மழை), அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள், சரசுவதி, அர்யமா, அதிதி, ரோதசி, மித், ரிபுட்சா, நாசத்ய, தாதா, யக்ஞன், கிராவா, சேத்திரபதி, இளா, விராட் புருஷன், பிரசாபதி, மன்யு, வாசஸ்தோஷ்பதி, விசுவகர்மா, பிதுர்கள், நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற தேவர்களும் இந்நூலில் போற்றப்படுகிறார்கள். இருக்கு வேதத்தில் காணப்படும் வேறு கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.
இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் முதன்மையான ரிக்வேத கால முனிவர்கள், வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான், தீர்க்கதமா, கோதமர், மேதாதிதி, சியாவாஷ்வ, குதச, மதுச்சந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக், பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி ஆவர்.
இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் அரசர்களில், திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவா, நகுசன், யயாதி, மாந்தாதா, புரு, குசிக், திரிச்சு மற்றும் குசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இருக்கு வேதத்தில் குறிப்பிடும் பகையரசர்கள் மற்றும் படைத்தளபதிகளில் முதன்மையானவர்களில் சிலர், தஸ்யூக்கள் [அசுரர்கள்], இமயமலைவாழ் கிராத இனத்து அரசர்களான சம்பராசூரன், விருத்திராசூரன், சுஷ்ணன், குத்ஸன், பிப்ரு, வங்கிருத், கரஞ்ச், பர்ணய், மற்றும் வர்ச்சி.
இருக்கு வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள், இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ, வைஸ்வதி, ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா, விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, மன்னன் சுதாசின் மனைவி சுதேவி மற்றும் சூர்யா.
ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். இருக்கு வேதத்தில் அரிசி பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. அவர்கள் அருந்தும் சிறப்பான பானம், சோம பானம் ஆகும்.(இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்) ஆனால் அவர்கள் சுரா பானம் அருந்துவது இல்லை. சவ்வரிசி முதன்மையான உணவாக இருந்தாலும், வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.
ஆரிய மக்கள் வாழும் இருப்பிடங்களை ‘கிராமங்கள்’ என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி’ என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா’ என்றும் அழைத்தனர். ’சாம்ராட்’, ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப்’ (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதி’ ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். இருக்கு வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதும் ஆகும்.
இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி (ராவி ஆறு), 2 அசிக்னி (செனாப் ஆறு), 3 சிந்து ஆறு, 4 விபாஷ் (ஜீலம் ஆறு), 5 சுதுத்ரி (சத்லஜ் ஆறு), 6 திருஷ்த்வதி (சரசுவதி ஆறு), 7 கக்கர் (யமுனை) நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் கங்கை நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும் (ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் கங்கை ஆறு, இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் (கிராதர்கள்வாழ்ந்த பகுதி) அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது.
இருக்கு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் ஐதரேய உபநிடதம் ஆகும். இது 'ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.