முதிர் அகவையர்

From Wikipedia, the free encyclopedia

முதிர் அகவையர்

முதிர் அகவையர் (adult) அல்லது வயது வந்தோர் என்பது மனிதர் அல்லது உயிரினங்களில் பொதுவாக இனப்பெருக்கத்திற்கு தகுதியான பூப்படைந்தவர்களைக் குறிப்பதாகும். மனிதரில் இந்தச் சொல்லிற்கு சமூகத்திலும் சட்டத்திலும் பிற சிறப்பு பொருள்களும் உள்ளன; காட்டாக சட்டப்படி பெரும்பாலான நாடுகளில் 18 அகவை எட்டியவர்கள் வயது வந்தோர் (மேஜர்) எனக் கருதப்படுகின்றனர். இது பல நாடுகளில் 14 முதல் 21 வரை மாறுபடுகிறது. சட்டத்தின் பார்வையில் இவர்கள் தனி நபர்களாகவும் கட்டற்ற நிலையில் முடிவுகள் எடுக்கக் கூடியவராகவும் பொறுப்பானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

Thumb
வயது வந்தோருக்கு மட்டும்
Thumb
சில முதிர் அகவையர்.

முதிர்வடைதலை உடலியங்கியல், உளவியல் வளர்ச்சி, சட்டம், தனிநபர் நன்னடத்தை, அல்லது சமூக தகுநிலைகளில் வெவ்வேறாக வரையறுக்கலாம். இவ்வாறான வெவ்வேறு வரையறைக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கலாம். ஒரு நபர் உயிரியல் வரையறைப்படி இனப்பெருக்கத்திற்கு தகுதிபெற்ற முதிர்ந்தவராக இருப்பினும் சட்டப்படி, குறிப்பிட்ட அகவையை எட்டாதநிலையில், சிறு வயதினராக இருக்கலாம். மாறாக சட்டப்படி முதிர்நிலையை எட்டிய ஒருவர் முதிர் அகவையருக்கான முதிர்ச்சியையோ பொறுப்பையோ கொள்ளாமல் இருக்கலாம்.

உயிரியல் வரையறை

வரலாற்றின்படியும் பண்பாட்டுக் கூறுகளின் படியும் பூப்படைந்தவர்கள் வயதுக்கு வந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்; இரண்டாம் நிலை பாலினக் கூறுகளாக பெண்களுக்கு மாத விடாய், முலை பெருத்தல் என்பனவும் ஆண்களுக்கு விந்து வெளியேற்றம், மீசை முளைத்தல் என்பனவும் இருவருக்கும் பிறப்புருப்புகளில் மயிர் முளைத்தலும் இந்நிகழ்வை அறிவிக்கின்றன. முந்தையக் காலங்களில் சிறுவர்நிலையிலிருந்து நேரடியாக முதிர் அகவையராக கருதப்பட்டனர்[1]

சமூகத்தில் விடலைப் பருவம் வரையறுக்கப்பட்டுள்ள தற்காலத்தில் முதிர் அகவையர் இரண்டாக பிரிக்கப்படுகின்றனர்: உயிரியல்சார் முதிர்நிலை மற்றும் சமூக முதிர்நிலை. உயிரியல்சார் முதியவர்கள் இனப்பெருக்கத் தகுதி பெற்று கருவுறத் தக்கவராகவும் இரண்டாம் நிலை பாலினக் கூறுகளை கொண்டவராகவும் உள்ளனர்; சமூக முதிர்நிலை பண்பாட்டுக் கூறுகளாலும் சட்டத்தினாலும் வரையறுக்கப்படுகிறது. எனவே இடம்,பொருள், ஏவலைப் பொறுத்து மூத்தவர் என்பதன் விளக்கத்தை கொள்ளல் வேண்டும்.

நடப்பில் வளர்ந்த நாடுகளில், தனி நபரைப் பொறுத்து வேறுபடும் என்றாலும், பூப்பெய்துவது பெண்களுக்கு 10 முதல் 11 அகவையிலும் ஆண்களுக்கு 12 அல்லது 13 அகவையிலும் நிகழ்கிறது.[2][3]

சட்டத்தின் வரையறை

சட்டத்தின்படி ஒப்பந்தங்களில் தனிநபராக ஈடுபடக்கூடியவர் வயதுவந்தோர் எனப்படுகின்றனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் கட்டுப்படுத்தும் உரிமையை இழக்கும் (கூடவே அவர் குறித்தப் பொறுப்புகளிலிருந்து விடுபடும்) அகவை, திருமணம், வாக்குரிமை, பணி புரியத் தகுதி, படைத்துறையில் சேர்க்கை, வாகனமோட்டும் உரிமம், வெளிநாடு செல்ல, மதுவகைகள் குடிக்க (மது விலக்கு இல்லாதிருக்கையில்), புகையிலை பொருட்கள் பாவிக்க, உடலுறவு கொள்ள, சூதாட, விபசாரத்தில் ஈடுபட/பாவிக்க எனப் பல செயல்பாடுகளுக்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அகவைகளில் சட்டம் வயதுவந்தோரை வரையறுத்துக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட இடங்களுக்கான அனுமதியும் வயதுவந்தோருக்கே கொடுக்கப்படுகிறது.

தன்னலப்படுத்தலுக்காக சிறுவர்களை வேலை வாங்குவதை தடுக்கும் வண்ணம் சிலநாடுகளில் பணிபுரிய அகவையை சட்டம் வரையறுக்கிறது. உடலுறவு வணிகம் தாராளமயமாக்கப்பட்டுள்ள நாடுகளிலும் வயதுவந்தோரே ஒளிதங்களில் நடிகராக வேடமிட முடியும். வன்முறை மற்றும் பாலின்ப காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைக் காண 18 அகவைக்கு மேலுள்ளவராக இருத்தல் வேண்டும்.

முதிர் அகவையினராக கருதப்பட சட்டத்தின் வரையறுப்பு பல நாடுகளிலும் வேறுபடுகின்றது: பொதுவாக 16 முதல் 21 வயது வரை இது வேறுபடுகின்றது. ஆபிரிக்காவின் சில பண்பாடுகளில் 13 வயது நிறைந்தோரே முதிர் அகவையினராக கருதப்படுகின்றனர்.

யூத வழமைகளில், 13 அகவை நிறைந்த பின்னர் முதிர்ச்சி பெற்றவராக கருதப்படுகின்றனர்; இதற்கு அவர்கள் தங்கள் தயார்நிலையை வெளிக்காட்டும் வண்ணம் தோரா மற்றும் பிற வழக்கங்களை கற்க வேண்டும். கிறித்தவ விவிலியத்தில் மற்றும் யூத சமயநூல்களில் முதிர் அகவையினருக்கோ அல்லது திருமணத்திற்கோ வயது எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் வத்திகான் திருமணத்திற்கு ஆண்களுக்கு 16 அகவை என்றும் பெண்களுக்கு 14 அகவை என்றும் நன்னடத்தை நெறியாக அறிவித்துள்ளது.[4][5] மத்திய காலங்களில் ஒரு நபரை வயதுவந்தோராக விசாரிக்கவும் தண்டிக்கவும் ஏழு வயதை நிர்ணயித்திருந்தனர்.[6]

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் (இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்சு), இந்தியா,சீனா உள்ளிட்டு உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சட்டப்படியான முதிர் அகவையருக்கான அகவை (வரலாற்றுப்படி 21) 18 ஆகும். சில விலக்குகளாக:

  1. ஐக்கிய இராச்சியம்: இசுக்காட்லாந்து (16)
  2. கனடாவின் பிரித்தானியக் கொலம்பியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்டுலாந்து மற்றும் லாப்ரடார், வடமேற்கு ஆட்சிப்பகுதிகள், நோவா இசுகோசியா, நுனாவுட்டு, யூகோன் ஆட்சிப்பகுதி; ஐக்கிய அமெரிக்காவின் நெப்ராஸ்கா , அலபாமா மற்றும் தென் கொரியா (19)
  3. இந்தோனேசியா மற்றும் சப்பான் (20)

18 வயதுக்குட்படோரை முதிர் அகவையராகக் கருதும் நாடுகள்

15 வயது

16 வயது

17 வயது

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.