From Wikipedia, the free encyclopedia
பொலிவியா (Bolivia), அலுவல்முறையில் பொலிவியப் பன்னாட்டு மாநிலம் (Plurinational State of Bolivia) என்பது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கு ம்ற்றும் கிழக்கில் பிரேசில் நாடும், தென்கிழக்கில் பரகுவேயும் தெற்கில் அர்ஜென்டீனாவும், தென்மேற்கில் சிலியும் வடமேற்கே பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. நாட்டின் மூன்றில் ஒரு பகுதி அந்தீசு மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்நாட்டின் பெரிய நகரங்களும் வணிக நகரங்களும் பொலிவிய மேட்டுநிலப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பொலிவிய அல்லது ஆந்தீசு மேட்டுநிலமே உலகில் திபெத் மேட்டுநிலத்திற்கு அடுத்து உயரமான இடத்தில் உள்ள மேட்டுநிலமாகும்.
பொலிவியப் பன்னாட்டு மாநிலம் | |
---|---|
குறிக்கோள்: "La Unión es la Fuerza" (எசுப்பானிய மொழி) "ஒற்றுமையே வலிமை"[1] | |
நாட்டுப்பண்: "பொலிவியானோஸ், எல் ஆதோ ப்ரொபீசியோ" (எசுப்பானிய மொழி) | |
தலைநகரம் | சுக்ரே (அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை) லா பாஸ் (நிர்வாகம் மற்றும் சட்டமன்றம்) |
பெரிய நகர் | சான்ட்டா க்ரூஸ் டெ லா சியேறா 17°48′S 63°10′W |
ஆட்சி மொழிகள்[2] | எசுப்பானியம் மற்றும் 36 பூர்வகுடி மொழிகள் |
இனக் குழுகள் (2018[3]) |
|
மக்கள் | பொலிவியர் |
அரசாங்கம் | ஒற்றையாட்சி அதிபர் ஆட்சிமுறை அரசியல்சட்டக் குடியரசு |
• அதிபர் | ஜெனின் அனெஸ் (இடைக்காலம்)[4][5] |
• துணை அதிபர் | வெற்றிடம் |
சட்டமன்றம் | பன்னாட்டு சட்டமன்றம் |
• மேலவை | செனட் |
• கீழவை | பிரதிநிதிகள் அவை |
விடுதலை ஸ்பெயின்-இடமிருந்து | |
• அறிவிப்பு | 6 ஆகஸ்ட் 1825 |
• அங்கீகாரம் | 21 ஜூலை 1847 |
• ஐக்கிய நாடுகள் அவையில் சேர்க்கை | 14 நவம்பர் 1945 |
• நடப்பு அரசியலமைப்பு | 7 பிப்ரவரி 2009 |
பரப்பு | |
• மொத்தம் | 1,098,581 km2 (424,164 sq mi) (27ஆவது) |
• நீர் (%) | 1.29 |
மக்கள் தொகை | |
• 2019[6] மதிப்பீடு | 11,428,245 (83ஆவது) |
• அடர்த்தி | 10.4/km2 (26.9/sq mi) (224ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $89.018 பில்லியன் |
• தலைவிகிதம் | $7,790[7] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $43.687 billion |
• தலைவிகிதம் | $3,823[7] |
ஜினி (2016) | 44.6[8] மத்திமம் |
மமேசு (2018) | 0.703[9] உயர் · 114th |
நாணயம் | பொலிவியானோ (BOB) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 (BOT) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +591 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BO |
இணையக் குறி | .bo |
எசுப்பானிய காலனி ஆதிக்கத்திற்கு முன் பொலியாவின் ஆந்தீசு பகுதி இன்கா பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது, வடக்கு கிழக்கு தாழ்நிலங்களில் பழங்குடியினர் வசித்தனர். குசுக்கோ, அசுன்சியோன் நகரங்களில் இறங்கிய எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் 16ஆம் நூற்றாண்டில் அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினார்கள். எசுப்பானிய காலனியாதிக்கத்தில் பொலிவியா மேல் பெரு என்றே அறியப்பட்டிருந்தது. பொலிவியா சார்கசு மன்னர் மன்றத்தால் நிருவகிக்கப்பட்டது. எசுப்பானிய பேரரசு உருவாக்கத்திற்கு இப்பகுதி சுரங்களில் கிடைத்த வெள்ளி தாதுக்களும் பெரும் பங்கு வகித்தன.
எசுப்பானிய பேரரசுக்கு எதிராக விடுதலைக்கான முதல் குரல் 1809ஆம் ஆண்டு ஒலித்தது. 16 ஆண்டுகள் விடுதலைப்போர் நீடித்தது. வட பகுதியிலிருந்து சிமோன் பொலிவார் இப்போரில் பங்கெடுத்து எசுப்பானிய படைகளை பின்னுக்குத்தள்ளினார். ஆகத்து 6, 1825 அன்று பொலிவியா விடுதலை பெற்றது. சிமோன் பொலிவார் பொலிவியாவின் முதல் அதிபர் ஆனார். விடுதலைக்குப் பின் பல ஆண்டுகள் பொலிவியாவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற தன்மை நீடித்தது. ஏக்லே, பெரும் சாக்கோ போன்ற நிலங்கள் பக்கத்து நாடுகளிடம் இழக்கப்பட்டன. சிலி நாட்டுடன் நடைபெற்ற பசிபிக் போரில் (1879-84) சிலி வென்றதையடுத்து பொலிவியா பசிபிக் பெருங்கடல் பகுதியையும் இழந்து நிலங்களால் சூழப்பட்ட நிலைக்கு ஆளாகியது. பக்கத்து நாடுகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டையடுத்து பசிபிக்கையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெற்றுள்ளது.
பொலியாவின் மக்கள் தொகை தோராயமாக 10 மில்லியனாகும். ஐரோப்பியர், ஆசியர், ஆப்பிரிக்கர், அமெரிக்க முதற் குடிகள், மெச்டிசோ போன்ற பல் இனத்தவர் வாழும் நாடு பொலிவியாவாகும். எசுப்பானிய காலணி ஆதிக்கத்தில் இருந்த மற்ற இனத்தவர்களை ஐரோப்பியர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. எசுப்பானியம் அதிகாரபூர்வமான தலைமையிடத்திலுள்ள மொழியாகும். 36 உள்நாட்டு மொழிகளும் அதிகாரபூர்வ தகுதி நிலை பெற்றுள்ளன. அவற்றில் குவாரனி, ஐமர, கெச்வா அதிகம் பேசப்படுபவையாகும்.
பொலிவியா என்பது எசுப்பானிய அமெரிக்க விடுதலைப்போரின் தலைவர் சிமோன் பொலிவார் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது [10]. புதிதாக உருவாக்கப்பட்ட பெரு குடியரசின் கீழ் மேல் பெரு என்று இப்பகுதியை வைத்துக்கொள்ளலாமா அல்ல புதிய விடுதலை பெற்ற நாடாக இப்பகுதியை அறிவிக்கலாமா என்ற முடிவை வெனிசுவேலேவின் தலைவர் அந்தோனியோ யோச் தே சுரே அவர்களிடம் பொலிவார் கேட்டபொழுது அந்தோனியார் விடுதலை பெற்ற நாடாக அறிவித்துவிடலாம் என்று கூறிவ புதிய நாட்டுக்கு பொலிவாரை சிறப்புவிக்கும் விதமாக பொலிவிய குடியரசு என்று பெயர் சூட்டினார்[11]. பல தேசிய இனக்குழுக்கள் நாட்டில் உள்ளது குறிக்கும்விதமாகவும் பொலிவிய முதற் குடி மக்களின் நிலையை உயர்த்தவும் 2009இல் அரசியல்யமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு நாட்டின் அதிகாரபூர்வ பெயர் பல்தேசிய இன பொலிவியா என மாற்றப்பட்டது.[12]
தற்போது பொலிவியா என அறியப்படும் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஐமாரா இனத்தவர்கள் குடியேறியிருந்தனர். தற்போதைய ஐமாரா இனத்தவர்கள் மேற்கு பொலிவியாவிலுள்ள தியாகுனாக்குவில் உள்ள முன்னேற்றமடைந்த நாகரிகத்தில் இருந்து வந்ததாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். கிமு 1500 இல் சிறு கிராமமாக இருந்த தியாகுனாக்கு தியாகுனாக்கு பேரரசின் தலைநகரமாகவும் இருந்தது.[13]
கிமு 600 - 800 சமூகம் பெருமளவில் வளர்ந்தது. தியாகுனாக்கு பேரரசு தென் ஆந்திசு பகுதியில் பலம்மிக்கதாகவும் சிறப்பனாதாகவும் விளங்கியது. பழங்காலத்தில் தியாகுனாக்கு நகரத்தில் 15,000 முதல் 30,000 மக்கள் வாழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.1996இல் செயற்கைகோள் உதவியுடன் இப்பகுதியை ஆராய்ந்த போது தியாகுனாக்குவாவின் மூன்று முதன்மையான பள்ளத்தாக்குகளில் பயன்படுத்தப்பட்ட அதிகநீர் கொண்டு உயர்த்தி கட்டப்பட்ட வேளாண்மைக்கு உதவும் பாத்திகளின் விபரம் தெரிந்தது. அப்போது அப்பள்ளத்தாக்குகளில் 285,000 முதல் 1.482,000 மக்கள் வசித்திருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டது.[14]
கிமு 400 வாக்கில் தியாகுனாக்கு உள்ளூரில் மட்டும் அதிகாரம் கொண்ட அரசு என்ற நிலையிலிருந்து மாறி நாடு பிடிக்கும் அரசாக மாறியது. யுன்காசு பகுதிக்கு தன் அதிகாரத்தை விரிவாக்கியது. தன் பண்பாட்டை பெரு, சிலி, பொலிவியாவின் மற்ற பண்பாடுகளின் மீது திணித்தது. இருந்த போதும் தியாகுனாக்குகாக்கள் மோசமான பண்பாட்டு திணிப்பில் ஈடுபடவில்லை. பண்பாட்டு திணிப்புக்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். அடுத்த பண்பாட்டு மக்களுடன் வணிக உடன்பாடு, அரசின் பண்பாடாக தியாகுனாக்கு பண்பாட்டை திணித்தது, அரசியல் ரீதியாக தங்கள் பண்பாட்டை புகுத்தியது, காலணிகளை உருவாக்கியது எனப்பல வழிகளை கையாண்டனர்.
பேரரசு முடிவில்லாமல் விரிந்து கொண்டிருந்தது. வில்லியம் இசபெல் தியாகுனாக்கு பேரரசு கிபி 600 முதல் 700 வரையான காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது என்கிறார். அக்காலகட்டத்திலேயே நினைவுச்சின்னங்களுக்கான கட்டடக்கலைக்கு வரையறை வகுக்கப்பட்டது என்றும் நிலையாக குடியிறுப்பவர் எண்ணிக்கை அதிகமானது என்றும் கூறுகிறார்.[15] தியாகுனாக்கு மற்ற பண்பாட்டை அழிக்காமல் அவற்றை தன்னுல் உள்வாங்கிக்கொண்டது. தியாகுனாக்குக்கள் பீங்கானை தங்கள் பண்பாட்டின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு இருந்ததை தொல்பொருளார்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தியாகுனாக்குக்கள் நகரங்களுக்கிடையேயான வணிகம் மூலமும் தங்கள் பேரரசின் பிடியை உறுதிப்படுத்தினார்கள்.[16]
தியாகுனாக்குக்களில் மேட்டிமைவாதிகள் பெருமளவிலான உணவுப்பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம் பொதுமக்கள் மீது செல்வாக்கு செலுத்தினார்கள். வெளிப்புறப் பகுதிகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களை கையகப்படுத்தி பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார்கள். மேட்டிமைவாதிகள் லாமா மந்தைகளின் உரிமையாளர்களாயிருந்தனர். லாமாக்களே பொருட்களை நகரின் மையத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்ட செல்ல உதவும் ஒரே முறையாகும். லாமா மந்தை உரிமையே பொதுமக்களுக்கும் மேட்டிமைவாதிகளையும் வேறுபடுத்தி காட்டிய குறியீடாக விளங்கியது. கிபி 950 வரை மேட்டிமைவாதிகளின் செல்வாக்கு வளர்ந்து கொண்டேயிருந்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் தியாகுனாக்குகளின் பகுதிகளில் மழைபொழிவு பெருமளவு குறைந்தது.[17] அது பெரும் பஞ்சத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தொல்லியலார்கள் கருதுகின்றர்.
மழைபொழிவு மிகவும் குறைந்ததால் தியாகுனாக்கு ஏரியிலிருந்து தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து வரும் உணவுப்பொருட்கள் குறைவாக வந்தன இதனால் மேட்டிமைவாதிகள் உணவுப்பொருட்களை பகிர்ந்தளிக்க முடியாமல் தவித்தனர் இது அவர்களின் செல்வாக்கு குறைய காரணமாகவிருந்தது. பொது மக்கள் மேல் மேட்டிவாதிகளுக்கு இருந்த அதிகாரம் வீழத்தொடங்கியது. நுட்டபான முறையில் உயர்த்தி கட்டப்பட்ட பாத்திகள் மூலம் வேளாண்மை நடைபெற்றதால் உணவுப்பொருட்களுக்காக மக்களின் கடைசி புகலிடமாக தலைநகரமே இருந்தது. மேட்டிமை வாதிகளின் செல்வாக்கு காரணமான உணவு உற்பத்தி பற்றாக்குறை காரணமாக கிபி 1000 காலப்பகுதியில் தியாகுனாக்கு பேரரசு மறைந்தது. அதன் பின் பல நூற்றாண்டுகளுக்கு இப்பகுதி மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது.[17]
எசுப்பானியர்கள் இன்கா பேரரசை 1524இல் கைப்பற்ற தொடங்கி 1533இல் முழுவதும் கைப்பற்றினார்கள். தற்போது பொலிவியா என்றழைக்கப்படும் பகுதி மேல் பெரு என்றழைக்கபட்டது. லிமாவிலுள்ள வைசிராயின் கீழ் இப்பகுதி இருந்தது. உள்ளூர் நிருவாகம் சுகியுசா பகுதியிலிருந்த ஆடின்சியா டே சார்கசு கீழ் இருந்தது. 1545இல் உருவாக்கப்பட்ட பொட்டோசி என்ற நகரம் தன் பகுதியிலுள்ள சுரங்கத்தின் மூலம் ஏராளமான செல்வத்தை கொடுத்தது. புதிதாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தென் அமெரிக்காவில் விரைவில் இது பெரும் நகராக 150,000 மக்களுடன் உருவெடுத்தது.[18]
16ஆம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானியப் பேரரசுக்கு பொலிவியா சுரங்கங்களில் கிடைத்த வெள்ளி முதன்மையான வருமானமாக இருந்தது.[19] தென் அமெரிக்காவின் தொல்குடிகள் மிக மோசமான சூழலில் அடிமைகளாக சுரங்கங்களில் வேலை வாங்கப்பட்டனர். மிடா என்றழைக்கப்பட்ட முன்-கொலம்பியக் கால இன்காக்களிடம் இருந்த அடிமை பண்பாட்டை எசுப்பானியர்கள் மாற்றி தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தினர்.[20] இன்கா முறையிலிருந்து எசுப்பானிய முறையை வேறுபடுத்தி காட்ட இதை என்கோமிஎன்டா என்பர். 1776இல் மேல் பெரு ரியோ டா லா பிலாடா வைசிராய் நிருவாகத்தின் கீழ் வந்தது. 1781 மார்ச்சு மாதம் தொல்குடிகள் எசுப்பானிய அரசுக்கெதிராக புரட்சியில் ஈடுபட்டு, டுபேக் கட்டரி என்ன தொல்குடியினத்தவர் தலைமையில் லா பாச் நகரை முற்றுகையிட்டனர்.[21] இதில் 20,000 பேர் பலியாயினர்.[22] எசுப்பானிய பேரரசு நெப்போலியன் போர்களால் வலுகுறைந்து இருந்தது. இந்நிலையால் காலணியாதிக்கத்துக்கு எதிர்ப்பு அதிகமாக வளர்ந்தது.
சுக்ரே நகரிலிருந்து 1809 மே 25 அன்று தென் அமெரிக்காவின் விடுதலை என்று முதலில் விடுதலை போராட்டம் தொடங்கிற்று. இது உள்ளூர் ஆட்சியாளர்களால் தூண்டப்பட்டது. இதற்கு அடுத்து லா பாச் புரட்சி ஏற்பட்டது. அதன்போது பொலிவியா விடுதலையானதாக அறிவித்துக்கொண்டது. இப்புரட்சிகள் சிறிது காலமே நீடித்தது இவையிரண்டும் எசுப்பானிய ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எசுப்பானியர்களிடம் இருந்து விடுதலை கேட்கும் எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்கள் தென்னமெரிக்கா முழுவதும் பரவியது.
பல முறை எசுப்பானிய அதிகாரிகளாலும் விடுதலை வேண்டுபவர்களாலும் பொலிவியா மாறி மாறி கைப்பற்றப்பட்டது. புவெனசு ஐரிசு பகுதியிலிருந்த எசுப்பானிய ஆட்சியாளர்களால் மூன்று முறை அனுப்பப்பட்ட. படைகள் தோற்கடிகப்பட்டன. இதனால் படைகன் அர்கெந்தீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சால்டா எல்லைப்புறத்தை பாதுகாப்பதுடன் நின்றுவிட்டன. பொலிவியாவானது அன்டானியோ யோசு சுக்ரே அவர்களால் எசுப்பானியர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. வடக்கு பகுதியில் படைகளுடன் சைமன் பொலிவார் உதவிக்கு வந்ததும் இவருக்கு உதவியது. 16 ஆண்டுகள் போருக்கு பின் ஆகத்து 6, 1825இல் பொலிவியா குடியரசு தோன்றியதாக அறிவிக்கப்பட்டது.
1839இல் பொலிவியா அதன் தலைவர் ஆண்டரசு சான்டா குருசு தலைமையில் பெருவின் மீது படையெடுத்து கைப்பற்றியது. அவர் ஆட்சியிலுருந்து அகற்றப்பட்டிருந்த பெருவின் அதிபர் லூயிசு யோசு தே ஆர்பிகோசாவை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பெருவும் பொலிவியாவும் ஆண்டரசு சான்டா குருசு தலைவராக கொண்ட பெரு-பொலிவிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்த கூட்டமைப்புக்கும் சிலிக்கும் பதற்றம் நிலவியது, சிலி 28 திசம்பர் 1836இல் இதன் மீது போர் தொடுத்தது. சிலியின் நட்பு நாடானா அர்கெந்தீனா 9 மே 1837இல் கூட்டமைப்பின் மீது போரை அறிவித்தது. இப்போரில் கூட்டமைப்பு பல பெரு வெற்றிகளை பெற்றது. சிலி கூட்டமைப்பிடம் உடன்பாடு கண்டது அதன்படி சிலி பெரு-பொலிவியா பகுதியிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சிலி கைப்பற்றிய கூட்டமைப்பின் கப்பல்களை திரும்ம ஒப்படைக்கவும் ஒப்புக்கொண்டது. பொருளாதார உறவுகள் பழைய படி சீரமைக்கப்பட்டது. பெரு சிலியிடம் பெற்ற கடன்களுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த உடன்பாடு சிலியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அதனால் சிலி இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி கூட்டமைப்பு மீது இரண்டாம் முறை படையெடுத்தது. யங்காய் என்னுமிடத்தில் நடந்த போரில் கூட்டமைப்பு தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின் சான்டா குருசு பதவி விலகி எக்குவடோர் நாட்டில் வாழ்ந்தார் பின் பாரிசுக்கு சென்றார். கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
பெருவுக்கு விடுதலை கிடைத்த பின்பு அதன் அதிபர் தளபதி அகுசுடின் காமார்ரா பொலிவியாவின் மீதி படையெடுத்தார். 20 நவம்பர் 1841 அன்று இன்காவி என்னுமிடத்தில் நடந்த போரில் பெருவின் படைகள் பெரும் தோல்விகண்ன, அங்கேயே அகுசுடின் காமார்ரா கொல்லப்பட்டார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் இருந்த நிலையற்ற தன்மையால் பொலிவியா வலுவிழந்து இருந்தது. 1876-93 காலத்தில் நடந்த பசிபிகிற்கான போரில் சிலி பொலிவியாவின் வளங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதியையும் கடற்கரை பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டது. தற்போதைய சுகிகேமாதா (Chuquicamata) பகுதியும் அந்தகோயாசுதா (Antofagasta) துறைமுக நகரம் போன்றவை பொலிவியாவின் பகுதியாக இருந்தவை.
விடுதலை பெற்றதில் இருந்து பொலிவியா தன் நிலப்பகுதியில் பாதியை அருகாமை நாடுகளிடம் இழந்துவிட்டது.[23] தற்போது பிரேசிலிடம் உள்ள ஆக்ரி (மாநிலம்) பொலிவியாவின் பகுதியா இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டின் பொருளாதார வளம் வெள்ளியியில் இருந்து வெள்ளீயத்துக்கு மாறியது.தொடர்ந்து வந்த அரசுகள் பொருளாதாரத்தாலும் மேட்டிமைவாதிகளாகளும் கட்டுப்படுத்தப்பட்டனர். முதலாளித்துவ கொள்கைகளில் ஒன்றான கட்டுப்பாடற்ற தனியார் மயம் (லேசிப்பியர் (Laissez-faire)) இங்கு நடைமுறையில் இருந்தது தனியார் நிறுவனங்கள் மேட்டிமைவாதிகளிடம் இருந்தது.[24] 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளுக்கு இந்நிலை நீடித்தது.
நாட்டில் பெரும்பான்மையாக இருந்த அதன் தொன்குடிகளுக்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது. 1932-35 காலத்தில் பொலிவியாவுக்கும் பராகுவே நாட்டிற்கும் இடையே நடந்த சாகோ போரில் பொலிவியா தோற்று சாகோ பெருநிலப்பரப்பை இழந்தது. இது பொலிவியாவின் வரலாற்றில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.[25][26][27]
புரட்சிகர தேசிய இயக்கம் என்ற அரசியல் கட்சி பலதரப்பட்ட மக்களின் ஆதரவுடன் தோன்றியது. 1951ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் இதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனுடை தொடர் போராட்டத்தின் காரணமாக 1952ஆம் ஆண்டு ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ தலைமையில் ஆட்சி அமைத்தது. இக்கட்சி பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நாட்டின் அனைத்து குடிகளுக்கும் வாக்குரிமையும் உள்ளூரில் இருப்பவர்களுக்கு கல்வியும் கிடைத்தது. நிலச்சீர்திருத்த சட்டத்துடன் பெரிய வெள்ளீய சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியது.
12 ஆண்டு ஆட்சிக்குப்பின் புரட்சிகர தேசிய இயக்கம் பிளவுண்டது. 1964இல் ராணுவ அதிகாரிகள் அதிபர் ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ ஆட்சியை கவிழ்த்து அவர் மூன்றாம் முறை ஆட்சிக்கு வருவதை தடுத்தது. 1966இல் ஆட்சிக்கு வந்த இராணுவ அதிகாரி ரினே பாரின்டோசு ஓர்டுனோ (René Barrientos Ortuño) 1969இல் இறந்த பின்பு தொடர்ந்து வந்த அரசுகள் பலவீனமாகவே இருந்தன. மக்களின் அவையும் (Popular assembly) அதிபர் நுவான் ஓசு டோர்ரசும் (Juan José Torres) புகழ்பெறுவதைக் கண்டு கலவரமடைந்த இராணுவம், புரட்சிகர தேசிய இயக்கம் ஆகியவையும் மற்றவர்களும் சேர்ந்து கூகோ பன்சார் சுஅர் (Hugo Banzer Suárez) அவர்களை 1971இல் அதிபர் ஆக்கினர்.
1960இல் ஐக்கிய அமெரிக்க உளவு நிறுவனம் பொலிவிய இராணுவத்துக்கு நிதியும் பயிற்சியும் கொடுத்து இராணுவ சர்வாதிகாரத்திற்கு துணை புரிந்தது. புரட்சிகர பொதுவுடமைவாதி சே குவேரா அமெரிக்க உளவு அமைப்பாலும் பொலிவிய இராணுவத்தாலும் 9 அக்டோபர் 1967 அன்று பொலிவியாவில் கொல்லப்பட்டார். சே குவேராவை கொன்ற அமெரிக்க உளவு அமைப்பின் அதிகாரி பெலிக்சு ரோடிரிக் (Félix Rodríguez) என்பவர் ஆவார். பெலிக்சு பொலிவிய அதிபரிடமிருந்து சே குவேராவை கொல்லும் ஆணையை பெற்ற பின்பு சே குவேராவை கொல்லும் இராணுவ வீரனிடம் கவனமாக இருப்பதோடுமல்லாமல் குறி தப்பக்கூடாது என்று கூறியதாகவும் பொலிவிய அரசு வெளியில் சொல்லும் சே குவேரா இராணுவ தேடுதல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார் என்று சொல்லுவதைப் போலவே எங்கும் சொல்லவேண்டும் என்று கூறியதாக கூறினார். தன்னால் பொய்யான உத்தரவுகளை சொல்லி அமெரிக்க அரசு விரும்பியது போல் சே குவேராவை பனாமா நாட்டுக்கு கொண்டு சென்றிருக்கு முடியும் என்றும் ஆனால் அவ்வாறு செய்யாமல் பொலிவியா விரும்பியதை போலவே செய்ததாக கூறினார்.
1979, 1981 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல் மோசடி மிகுந்ததாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆட்சி கவிழ்ப்புகளும் ஆட்சி கவிழ்ப்புமூலம் அதிகாரம் பெற்றவர்களை எதிர்த்து எதிர் ஆட்சி கவிழ்ப்புகளும் தற்காலிக அரசுகளும் அக்காலத்தில் ஏற்பட்டன. 1980இல் லூயிசு கார்சியா மேசா (Luis García Meza Tejada) கடுமை நிறைந்த ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவருக்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு வேண்டி தான் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சியில் இருக்கப்போவதாக கூறி ஆதரவு திரட்டினார். ஆண்டு இறுதியில் தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி தான் ஆட்சியில் நீடிக்கப்போவதாக கூறினார். இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அவர் 1981ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். அடுத்த 14 மாதங்களில் மூன்று இராணுவ அரசுகள் ஏற்பட்டும் அவைகளால் பொலிவியாவின் சிக்கலை தீர்க்கமுடியவில்லை. மக்களிடம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இராணுவம் நாட்டின் அவையை கூட்டியது. அந்த அவை 1980இல் புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது நாட்டு குழப்பங்களை தீர்க்க பணித்தது. 1982 அக்டோபர் மாதம் 1956-60இல் அதிபராக இருந்த எர்னன் சிலாசு யுவாயோ (Hernán Siles Zuazo) 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிபர் ஆனார்.
1993இல் அதிபர் கான்சாலோ சென்சசு (Gonzalo Sánchez de Lozada) டுபக் கடரி புரட்சிகர விடுதலை இயக்கத்துடன் உடன்பாடு கண்டிருந்தார், அது தொல்குடிகளின் உணர்ச்சிக்கும் பல் இன விழிப்புணர்ச்சி கொள்கைக்கும் ஊக்கமூட்டியது. அவர் நடுவண் அரசிடம் இருந்த அதிகாரங்களை பல அமைப்புகளுக்கு பரவலாக்கி அதிகார குவியல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பல் இன மக்களுக்கு இருமொழிக் கொள்கையை நடைமுறைபடுத்தினார் வேளாண் சட்டத்தை அறிமுக்படுத்தினார், சுரங்கம் தவிர மற்ற அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். புதிய தனியார் மயகொள்கைப்படி அரசு குறைந்தபட்சம் 51% நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும். இதன் மூலம் நிறுவனங்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுவதும் போகாமல் இருக்கும். இந்த புது தாராளமயக் கொள்கை பொலிவியாவில் பலவகைப்பட்ட மக்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறது. சட்டமானது கல்வி, வேளாண் கட்டமைப்பு, நலத்துறை, உள் கட்டமைப்பு போன்றவற்றை மைய அரசிடம் இருந்து பிரித்து நகராட்சிகள் நிருவகிக்க வேண்டுமென்கிறது.
இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பொருளாதார சீர்திருத்தங்கள் சமூகத்தின் சில பிரிவினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதை எதிர்த்து அடிக்கடி போராடினர், சிலமுறை போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. குறிப்பாக இப்போராட்டங்கள் 1994-96 காலப்பகுதியில் லா பாசு சாபாரே என்ற கோகோ வளரும் பகுதியிலும் நடந்தன. இக்காலகட்டத்தில் பொலிவியாவின் தொழிலாளர் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் திறன் அற்று வலுவிழந்து இருந்தது. 1995இல் நடந்த ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதற்கு இக்கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவாக ஆலை தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் போன்ற தன் உறுப்பினர்களை திரட்டாததே காரணம்
1997 தேர்தலில் வலதுசாரிக்கட்சியான தேசிய செயல்படும் சனநாயக கட்சி சார்பாக முன்னா் சர்வதிகாரி கூகோ பன்சார் 22% வாக்குகள் பெற்றார். புரட்சிகர தேசிய இயக்கம் 18% வாக்குகளை பெற்றது. பன்சார் சிறப்பு காவல் படைகளை கொண்டு சாபாரே பகுதியிலிருந்த சட்டத்திற்கு புறம்பான கோகோ பயிர்களை அழித்தார். புரட்சிகர இடது இயக்கம் கூட்டணியில் இறுதி வரை பங்குபெற்று பென்சாரின் கோகோ பயிர்களை அழிக்கும் செயலுக்கு துணை நின்றது. பென்சார் அரசு முந்தைய அரசுகளின் பொருளாதரக்கொள்கைகளை பின்பற்றியது.1990இன் நடுகாலம் வரை பொருளாதாரம் நன்கு வளர்ந்தது. 1990இன் இறுதி காலப்பகுதியில் உள்நாட்டு, பன்னாட்டு காரணிகளால் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. பிரேசில் அர்கெந்தீனா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் உலக அரங்கில் பொலியாவின் ஏற்றுமதிப் பொருட்களின் விலை வீழ்ந்தது, கோகோ விலை வீழ்ச்சியால் வேலைவாய்ப்பு குறைந்து பொலிவிய பொருளாதாரம் சிக்கலை சந்நித்தது.
நகருங்களுக்கான நீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டு தனியாருக்கு விற்றதாலும் அதன்காரணமாக நீரின் விலை இருமடங்காக உயர்ந்ததாலும் 1999-2000 காலப்பகுதியில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரான கோச்சம்பாம்பா (Cochabamba) போராட்டம் வெடித்தது. ஆகத்து 2001 பென்சார் பதவி விலகினார்.
2002ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் அதிபர் கான்சாலோ சென்சசு 22.5% வாக்குகளை பெற்றார் சோசலிசத்தை நோக்கிய இயக்கம் கட்சி சார்பில் போட்டியிட்ட கோகோ ஆதரவாளரும் தொன்குடிகளின் தலைவருமாகிய ஏவோ மொராலெசு 20.9% வாக்குகளைப்பெற்றார். நான்காம் இடம் பிடித்த புரட்சிகர இடது இயக்கமானது புரட்சிகர தேசிய இயக்கத்துக்கு ஆதரவு அளித்ததால் இரு வழிப்போட்டியில் கான்சாலோ சென்சசு அதிபர் பதவியை அடைந்தார். 2003ஆம் ஆண்டு பொலிவியாவில் இயற்கை எரிவளி போராட்டம் வெடித்தது. எல் ஆல்டோ நகரில் 16 பேர் காவல் துறை துப்பாக்கிச்சூடில் இறந்ததாலும் பலர் காயமுற்றதாலும் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. போராட்டம் அதிகரிக்கும் என்ற நிலையில் கான்சாலோ சென்சசு பதவி விலகினார்.துணை அதிபர் கார்லோசு மெச்சா அதிபர் பொறுப்பை ஏற்றார். 2005இல் மீண்டும் இயற்கை எரிவளி போராட்டம் வெடித்தது. கார்வலோசு 10 யூன் 2005 பதவி விலகினார். பொலிவிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடைக்கால அதிபராக செயல்பட்டார்.
2005ஆம் நடந்த அதிபர் தேர்தலில் 53.7% வாக்குகளுடன் ஏவோ மொராலெஸ் வெற்றிபெற்றார். இப்பேராதரவு பொலிவிய அரசியலில் புதிதாகும். தன் பரப்புரையில் கூறியபடி 1 மே, 2006 அன்று நாட்டின் அனைத்து இயற்கை எரிவளி வளங்களையும் நாட்டுடைமை ஆக்கப்போவதாக அறிவித்தார். 6 ஆகத்து 2006 அன்று புதிய அரசியலமைப்பை வரையறுத்து அதில் தொல் குடிகளுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கப்போவதாக கூறினார்.
2007இல் சுக்ரேவில் போராட்டங்கள் நடந்தன. இந்நகரத்திற்கு சட்டமன்றத்தில் இடம் வேண்டும் என கோரப்பட்டது. அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்புப் பிரிவுகள் நகருக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடைமுறைக்கு ஏற்றது அல்ல எனக் கூறி இக்க்கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.. 2009இல் நடந்த அஅதிபர் தேர்தலில் 64.22% வாக்குகளுடன் மொராலெஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்டோபர் 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் ஏவோ மொராலெஸ் வென்று மீண்டும் அதிபரானார். இத்தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. பிறகு தொடர் மக்கள் போராட்டம் காரணமாக நவம்பர் 11, 2019 அன்று, ஏவோ மொராலெஸ் மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகியது. இதனால் அனைத்து மூத்த அரசாங்க பதவிகளும் வெறுமையடைந்தன. நவம்பர் 13, 2019 அன்று, பெனியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி செனட்டரான ஜெனின் அனெஸ் தன்னை பொலிவியாவின் செயல் தலைவராக அறிவித்தார். அவர் தற்போது பொலிவியாவின் இடைக்கால அதிபராகப் பணியாற்றி வருகிறார்.
தென் அமெரிக்காவின் நடு வட்டாரத்தில் ( 57°26'–69°38'மே & 19°38'–22°53'தெ. ) பொலிவியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1,098,581 சதுர கிமீ (424,164 சதுரமைல்). சாகோ பெருநிலப்பகுதியின் பாகமாக உள்ள ஆந்தீசு மலைத்தொடரின் நடுப்பகுதியிலிருந்து அமேசான், வரை இருந்த பொலிவியா தென் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நாடாகும். நாட்டின் நடுப்புள்ளி சான்டா குருசு துறையின் கீழ் இருந்த ரியோ கிரேனெடில் இருந்த போர்ட்டோ இசுரெல்லா ஆகும். இது பலவகையான நிலப்பரப்புகளையும் தட்பவெப்பத்தையும் அதிக அளவிலான பல்லுயிர்தன்மையும் உடைய நாடாகும். இதன் பல்லுயிர்தன்மை உலக அளவில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இது பல சூழ்மண்டலங்களையும் பொலிவிய மேட்டு நிலம், வெப்பமண்டல காடுகள் (அமேசான் காடுகளும் இதில் அடக்கம்), வறண்ட பள்ளத்தாக்குகள், வெப்ப மண்டல புல்தரைகள் போன்ற துணை சூழ் மண்டலங்களையும் கொண்டது. இப்பகுதிகளின் உயரம் மிகவும் வேறுபட்டது, நவாடொ சசாமா கடல் மட்டத்திலிருந்து 21,463 அடி உயரம் உடையது பராகுவே ஆற்றுப் பகுதி 230 அடி உயரமுடையது.
பொலிவியா ஆந்திசு பகுதி, கீழ் ஆந்திசு பகுதி, சமவெளி பகுதி என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
பொலிவியா மூன்று வடிநிலங்களை கொண்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.