From Wikipedia, the free encyclopedia
பல்யானைச் செல்கெழு குட்டுவன், சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது.[1] இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) [2]
25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்[3], பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.
இவனது பெயரில் உள்ள 'பல்யானைச் செல்' என்பது செல் (மேகம்) போன்று தோன்றும் இவனது யானைப்படை.
Seamless Wikipedia browsing. On steroids.