இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்க காலத் தமிழ் இலக்கியம் பதிற்றுப்பத்து. இதில் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை.
இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட அரசர்கள் தன்னைத் தானே புகழ்ந்த திறத்தை அடக்கினான். [6]
யவனரின் செல்வத்தையும், வயிரத்தையும் கைப்பற்றித் தன் ஊருக்குக் கொண்டுவந்து பிறருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை இழுத்துவந்தான். [7]சங்ககாலத் தண்டனை இவ்வாறு இருந்தது.
இவன் போர்க்களத்திலேயே பல காலம் வாழ்ந்ததால் பெரிதும் வாட்டத்துடனேயே காணப்பட்டான். [16]
வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [17]. எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்[18].
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழாஅத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது.