அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பருத்திவீரன் 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் (அறிமுகம்), பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக சிவகுமாரின் மகன் கார்த்தி நடித்தார். இயக்குநர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.
பருத்திவீரன் | |
---|---|
இயக்கம் | அமீர் சுல்தான் |
தயாரிப்பு | அமீர் சுல்தான் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | கார்த்திக் சிவகுமார் பிரியாமணி |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
நடன அமைப்பு | தினேஷ் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | 23 மாசி 2007 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 கோடி ரூபாய் |
மொத்த வருவாய் | 65 கோடி ரூபாய் |
இது மதுரை வட்டாரத்தின் ஒரு உள் கிராமத்தில் அதாவது இன்னும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்கக்கூடிய ஒரு கிராமத்தில் நடப்பதாக புனையப்பட்ட கதையாகும்.
இக்கதையின் முக்கிய பாத்திரம் பருத்திவீரன். உயர் வகுப்பை (தேவர்) சேர்ந்த தந்தைக்கும் அதே ஊரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் (குறவர்) சேர்ந்த தாய்க்கும் பிறந்தவனாகிய பருத்திவீரன், இளம் வயதிலேயே பெற்றோர் இறந்து விட, தனது சிற்றப்பன் செவ்வாழை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறான். கல்வியில் நாட்டமில்லாமல் வளரும் இவன் வாலிப வயதில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு பல முறை நீதிமன்றம், சிறை என பொறுப்பில்லாமல் வாழ்கிறான். யாருக்கும் அடங்காத முரடனாக இருக்கிறான். சிறையில் இல்லாமல் வெளியே இருக்கும் காலங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் விலைமாதுகளுடன் தொடர்பில் இருக்கிறான் அதன்மூலம் சில கூட்டாளிகளையும் சம்பாதித்துக் கொள்கிறான்.
அதே ஊரில் பெரிதும் மதிக்கப்படும் நபர் கழுவன். இவர் பருத்திவீரனின் அத்தையைத் திருமணம் செய்தவர் ஆவார். கலப்புத் திருமணம் செய்ததால் பருத்திவீரனின் பெற்றோரையும், அவர்களுக்குப் பிறந்த பருத்திவீரனையும் அவனை ஆதரித்து வளர்க்கும் செவ்வாழையையும் வெறுப்பவர். கழுவன் சாதிவெறி பிடித்தவராக காட்டப்படுகிறார்.
அவருடைய பெண் முத்தழகு. துணிச்சல் மிக்கவளாக காட்டப்படுகிறாள். சிறுவயதில் இருந்தே பருத்திவீரன் மீது காதல் கொண்டு இருந்த முத்தழகு, வளர்ந்ததும் பல முறை அவளுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் பருத்திவீரன் அவளை தவிர்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. இருவரும் தங்களது காதலை பரிமாறிக் கொள்கின்றனர். கழுவனின் வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறான் பருத்திவீரன். ஆனால் கழுவன் அவனை அவமானப்படுத்தி விரட்டி விடுகிறார்.
இதனால் முத்தழகு வீட்டை விட்டு வெளியேறி பருத்திவீரனின் வீட்டை அடைகிறாள். வேறு வழியின்றி பருத்திவீரனும் அவன் குடும்பமும் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்கின்றனர். அவ்விதம் பருத்திவீரனும் முத்தழகும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ( பருத்திவீரன் விலைமாதுகளுடன் இருக்க பயன்படுத்திக் கொண்டிருந்த) ஒரு வீட்டிற்கு வருகின்றனர்.
அங்கே முத்தழகை விட்டு விட்டு பருத்திவீரன் கடனாக சிறிது பணம் வாங்கி வர ஊருக்குள் செல்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே பருத்திவீரனின் கூட்டாளிகள் வருகின்றனர். தனிமையில் இருந்த முத்தழகைப் பார்த்து அவள் ஒரு விலைமாது என்று தவறாக எண்ணி அவளிடம் அத்துமீற முயல்கின்றனர். ஆனால் முத்தழகு அவர்களை கடுமையாக திட்டி, அரிவாளால் வெட்ட வருகிறாள். இதனைக் கண்டு பயந்து அவர்கள் வெளியேறும் போது முத்தழகு பருத்திவீரனின் பெயரைச் சொல்லி விடுகிறாள் அதைக் கேட்ட அந்த நபர்கள் அவன் மீது உள்ள கோபத்தில் முத்தழகைத் தாக்குகின்றனர் அப்போது எதிர்பாராத விதமாக அவளின் முதுகில் கூரிய ஆணி ஒன்று குத்தி பலத்த காயமடைந்து நிலத்தில் விழுகிறாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர்கள் அவளைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடுகின்றனர்.
சிறிது நேரம் கழித்து ஊருக்குள் சென்ற பருத்திவீரன் திரும்பி வருகிறான். முத்தழகின் நிலையைக் கண்டு அதிர்ந்து போய் அவளை மடியில் போட்டுக் கொண்டு அழுகிறான். அப்போது உயிர் பிரியும் நிலையில் முத்தழகு அவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறாள்.
"என்னைய இந்த நெலமைல யாரும் பாக்க கூடாது டா வீரா...... என்னைய கண்டந் துண்டமா வெட்டிரு டா" என்று சொல்லி விட்டு அவன் மடியிலேயே இறந்து விடுகிறாள். பருத்திவீரன் துக்கம் தாளாமல் அழுகிறான்.
வெளியே கழுவனும் அவரது ஆட்களும் முத்தழகைத் தேடி வரும் சத்தம் கேட்கிறது. அதையறிந்த பருத்திவீரன், அவர்கள் காதில் விழும்படி சத்தமாக ஆரவாரம் செய்கிறான்.
" நீ எனக்கு இல்லன்னா வேற எவனுக்கும் இல்லடீ னு சொன்னேல்ல டீ.......உங்கப்பன் உன்னைய எனக்கு தரமாட்டானா.....அப்ப சாவு டீ" என்று சொல்லியபடி அவளின் உடலை அரிவாளால் வெட்டுவதைப் பார்த்த கழுவனும் அவரது ஆட்களும் "முத்தழகு தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில் அவளை கடத்தி வந்து கொன்று விட்டான்" என நினைத்து பருத்திவீரனை அடித்தே கொன்று விடுகின்றனர். முத்தழகின் பெயரைச் சொல்லியபடி பருத்திவீரனும் இறந்து போகிறான்.
கழுவனின் சாதி வெறியும், முத்தழகின் அசட்டு துணிச்சலும், பருத்திவீரனின் ஒழுங்கீனமான குணமும், மனித மிருகங்களின் பாலியல் வெறியும் அநியாயமாக இரண்டு உயிர்களைக் குடித்து விட்டன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.