From Wikipedia, the free encyclopedia
நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர். இவர் 1299-இல் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார்.[1][2] இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா என்றும் உயர் அரச மொழியில் அழைத்தார்கள்.
நீல உத்தமன் / ஸ்ரீ திரி புவனா | |
---|---|
சிங்கப்பூரின் அரசர் | |
ஆட்சிக்காலம் | 1299–1347 |
பின்னையவர் | ஸ்ரீ விக்கிரம வீரா |
பிறப்பு | 13-ஆம் நூற்றாண்டு சுமத்திரா, இந்தோனேசியா |
இறப்பு | 1347 சிங்கப்பூரம் |
புதைத்த இடம் | கென்னிங் மலை அல்லது புக்கிட் லாராங்ஙான், சிங்கப்பூர் |
மரபு | சபூர்பம் (Sapurba) |
தந்தை | சபூர்பா (Sang Sapurba) |
திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும். இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார்.
இவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372இல் காலமானார். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் பராக்கிரம வீரா சிங்கப்பூர் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.[3]
நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஒரு சிற்றசரர். இந்தோனேசியா, தென் சுமத்திராவின் பலெம்பாங்கைச் சேர்ந்த ஸ்ரீ விஜயப் பேரரசின் வாரிசுகளில் ஒருவர். சின்ன வயதில் இருந்தே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆசை கொண்டசவர்.
பலெம்பாங் கடல் கரையோரத் தீவுகளுக்குச் சென்று பொருத்தமான ஓர் இடத்தைத் தேடினார். அதற்காக நீல உத்தமன் பல கப்பல் பயணங்களை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் பிந்தான் தீவுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிந்தான் தீவு என்பது, ரியாவு தீவுக் கூட்டத்தில் இருக்கிறது. பிந்தான் தீவு அப்போது ஓர் மகாராணியாரின் பார்வையில் இருந்தது. ஒரு நாள் பிந்தான் தீவு தீவுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு தீவுக்கு நீல உத்தமன் வேட்டையாடச் சென்றார்.
வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு கலைமான் கண்ணில் பட்டது. அதை விரட்டிக் கொண்டு ஒரு குன்றின் மீது ஏறினார். குன்றின் உச்சியை அடைந்ததும் அந்தக் கலைமான் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. அது மறைந்த இடத்தில் ஒரு பெரிய கல் பாறை இருந்தது. நீல உத்தமன் அந்தக் கல் பாறையில் ஏறினார்.
கல் பாறையின் மேலே ஏறிப் பார்க்கும் போது ஒரு தீவு தெரிந்தது. வெள்ளை மணல் பரவிய கடல் கரை, வெள்ளைக் கம்பளம் விரித்தது போல காட்சி அளித்தது. அந்த இயற்கையின் எழில் காட்சி அவரை மிகவும் கவர்ந்து விட்டது.
அந்தத் தீவின் பெயர் துமாசிக் (Temasek) என்று அவருடைய பாதுகாவலர்கள் சொன்னார்கள். அந்தத் தீவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். தீவை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் போது பயங்கரமான புயல்காற்று வீசியது. கப்பல் மூழ்கி விடும் ஆபத்தான நிலைமையும் ஏற்பட்டது. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து துமாசிக் சென்று அடைந்தனர்.
இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார்.[4] சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது.
நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.[5][6]
பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் அழைத்து வந்து குடியேற்றினார்.
இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த துமாசிக் எனும் சிற்றரசை தெமாகி என்பவர் ஆட்சி செய்து வந்தார். தெமாகிக்கு சயாம் அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வந்தது. இருப்பினும் நீல உத்தமன் துமாசிக் மீது படை எடுத்தார். அந்தப் படையெடுப்பில் தெமாகி கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நீல உத்தமன் துமாசிக்கின் அரசர் ஆனார்.
அதன் பின்னர், சிங்கப்பூரை ஆட்சி செய்த நீல உத்தமன் அதனைச் செல்வச் சிறப்பு மிக்க ஓர் இடமாக மாற்றினார். 1372-ஆம் ஆண்டு நீல உத்தமன் காலமானார். அவருடைய உடல் சிங்கப்பூரில் கெனிங் கோட்டை மலை எனும் புக்கிட் லாராஙான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது.
அவருடைய மனைவியின் உடலும் அங்கேதான் புதைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர்கள் இருவரும் அந்த இடத்தில் புதைக்கப் படவில்லை என்றும் அவர்களுடைய சமாதிகள் அங்கு இல்லை என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[7]
நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர்.
1399 ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய பரமேஸ்வரா அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய ஆட்சி நீடிக்கவில்லை. 1401 -இல் மஜாபாகிட் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார்.
அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். பரமேஸ்வராவுக்கு எதிராகவும் மஜாபாகிட் அரசுக்கு உடந்தையாகவும் போனார். சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் பரமேஸ்வரா அங்கு இருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402 -இல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.