Remove ads
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான ஐந்தாம் தேர்தல் 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. சுயாட்சிக் கட்சி வெற்றி பெற்றாலும், இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சியமைக்க மறுத்து விட்டது. தோல்வியடைந்த நீதிக்கட்சி முதல்வர் பொபிலி அரசர் சிறுபான்மை அரசமைத்து சென்னை மாகாணத்தின் முதல்வரானார். இரட்டை ஆட்சிமுறையின் கீழ் நடந்த கடைசித் தேர்தல் இதுவே. 1934ம் ஆண்டில் சென்னை மாகாண தமிழர் மாநாடு முதல் முறையாக நெல்லையில் கூடியது தலைவராக காசு பிள்ளை பங்கேற்றார்.
| ||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
|
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
1926 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் 1926 வரை மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். 1926 இல், பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[2][3][5][6][7]
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் ஆட்சியில் பங்கேற்கக் கூடாதென்ற நிலை எடுக்கப்பட்டது. இத்தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் சுயாட்சிக் கட்சி காங்கிரசுடன் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டது.
இத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் சென்னை மாகாணத்தில் கடுமையாக இருந்தது. பிராமணரல்லாதோர் அனைவருக்குமான இயக்கமாக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி காலப்போக்கில் தலித்துகள், முஸ்லிம்கள், தொழிலாளர்கள் என பல சமூகத்தவரின் ஆதரவை இழந்து, பணக்காரர்கள், ஜமீன்தார்களின் நலனை மட்டும் பாதுகாக்கும் கட்சியாக மாறியிருந்தது. 1930 களில் உலகைப் பீடித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியினால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மாகாண மக்கள் நீதிக்கட்சி அரசின் மேல் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்ததால், மக்களிடையே தேசிய உணர்வு மிகுந்திருந்தது. நீதிக் கட்சியின் பிரித்தானிய ஆதரவுப் போக்கு மக்களின் அதிருப்தியை அதிகப் படுத்தியது. பிரித்தானிய அரசை எதிர்த்துப் போராடி வந்த இந்திய தேசியக் காங்கிரசு, மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. காங்கிரசின் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், நில வரி குறைப்புப் போராட்டம், நெசவாளர்கள் கூலி உயர்வு போராட்டம் ஆகியவை மக்களின் ஆதரவை பெற்றிருந்தன. நீதிக்கட்சியின் முதல்வரான பொபிலி அரசரும் அவரது அமைச்சர்களும், தங்களது அலட்சிய சர்வாதிகாரப் போக்கால், மக்களிடம் வெறுப்பை சம்பாத்திருந்தனர். பெரியாரின் சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியை ஆதரிக்கும் வெகுஜன இயக்கங்கள் மிகச் சிலவற்றுள் ஒன்றாக இருந்தது. 1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் இத்தேர்தலில் மூலம் விலகியது. கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், வெளிப்படையான பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார். அவரது ஆதரவைப் பெறுவதற்காக நீதிக்கட்சி பொதுவுடமை அம்சங்கள் நிறைந்த அவரது “ஈரோடு திட்ட” த்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டது.[5][8][9][10]
நவம்பர் 1934 இல் நடைபெற்ற இத்தேர்தலில் 29 இடங்களில் வென்று சுயாட்சிக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நீதிக்கட்சி தோல்வியடைந்தது.[5][8][9]
சுயாட்சிக் கட்சி தேர்தலில் வென்றாலும், இரட்டை ஆட்சிமுறையின் கீழ் அரசமைக்க மறுத்து விட்டது. எனவே ஆளும் நீதிக்கட்சியே சிறுபான்மை அரசமைத்தது. பொபிலி அரசர் ராமகிருஷ்ண ரங்கா ராவ் இரண்டாம் முறை முதல்வரானார். இது இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடைபெற்ற கடைசித் தேர்தல். 1937 இல் இவ்வாட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப் பட்டது. இத்தேர்தல் தோல்விக்குப் பிறகு நீதிக்கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் பெரிய அளவில் ஏற்பட்டன.[9][10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.