From Wikipedia, the free encyclopedia
சுஹாஸ் ஜோஷி (Suhas Joshi) என்ற தனது திரைப் பெயரால் பிரபலமாக அறியப்பட்ட சுஹாசினி ஜோஷி,[1] (Suhasini Joshi) மராத்தி நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றில் தோன்றும் நடிகையாவார். பல பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.[2]
இவர், தனது கல்லூரி நாட்களிலிருந்தே நடிப்புத் துறையில் ஈர்க்கப்பட்டார். அங்கு இவர் சில நாடகங்களில் நடித்தார். அதை தமது விருப்பமாகக் கொண்டுக் கொண்டு புது தில்லி, தேசிய நாடகப் பள்ளியில் மூன்று வருட சான்றிதழ் படிப்பை முடித்தார்.[3] அங்கு இவர் நாடக இயக்குனரான இப்ராஹிம் அல்காசியிடம் பயிற்சி பெற்றார்.[1]
ஜோஷி 1972 இல் விஜயா மேத்தாவின் இயக்கத்தில் மராத்தி நாடகமான பாரிஸ்டர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஜெயவந்த் தால்வி என்ற மராத்தி எழுத்தாளர் தான் ஏற்கனவே வெளியிடப்பட்ட நூலான அந்தராச்சிய பரம்பியா என்ற புதினத்தின் அடிப்படையில் இதை நாடகமாக எழுதியிருந்தார். நாடகத்தின் தலைப்பு வேடத்தில் விக்ரம் கோகலே என்பவர் நடித்த இந்த நாடகத்தில் இராதா என்ற பாத்திரத்தில் இவர் நடித்த்திருந்தார். பின்னர், இவர் வேறு பல நாடகங்களிலும் நடித்தார். இவருடைய குறிப்பிடத்தக்க நாடகங்களில், சாய் பரஞ்சப்யாவின் சகே சேஜாரி என்ற நாடகமும், விஜய் டெண்டுல்கரின் கன்யாதான் என்ற நாடகமும் அடங்கும். கன்யாதானில் இவர் மூத்த நடிகர் முனைவர் ஸ்ரீராம் லகூவுக்கு இணையாக நடித்திருந்தார். இந்த நாடகத்தை இந்தியன் நேஷனல் தியேட்டர் என்ற அமைப்பின் மராத்தி பிரிவு தயாரித்தது. இந்த நாடகத்தில் ஒரு பாத்திரத்தை வகித்த சதாஷிவ் அம்ராபுர்கர் இயக்கிய இந்த நாடகம் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது.[4] பின்னர் இவர் , அக்னிபங்கா, நாடசம்ராட், ஏகாச் பியாலா போன்ற பல்வேறு நாடகங்களில் லாகூவுடன் இணைந்து நடித்தார்.
ரெவெரண்ட் நாராயண் வாமன் திலக்கின் மனைவி இலட்சுமிபாய் திலக்கின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட ஸ்மிருதி சித்ரே என்ற ஒருவரே பல்வேறு பாத்திரங்களில் தோன்றி நடிக்கும் நாடகத்தையும் ஜோஷி நிகழ்த்தினார்.[5] இந்த நாடகம் ஒரு இந்து - பிராமணப் பெண்ணிலிருந்து தனது கணவரின் அடிச்சுவட்டில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதற்கான இலட்சுமிபாயின் பயணத்தைப் பின்பற்றுகிறது சுயசரிதை மராத்தி இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் "ஐ ஃபாலோ ஆஃப்டர்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகம் ஒருவரால் மட்டுமே மேடையில் நிகழ்த்தப்படுவதால், இவர் ஆண்களின் குரல் உட்பட 3-4 வெவ்வேறு குரல்களில் பேசினார். இந்த நாடகத்தில் முன்பு குசும்தாய் என்பவர் நடித்திருந்தார்.[6]
இவர் பல்வேறு பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் சில வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களாயின. அவற்றில் தேசாப் (1988), சாந்தினி (1989), ஜோஷ் (2000) போன்றவையும் அடங்கும். மராத்தி படங்களான டு திதே மீ (1998), சாட்சியா ஆத் காரத் (2004) ஆகியவற்றிலும் நடித்துள்ளார். து திதே மீ திரைப்படத்தில் பணியாற்றியதற்காக, இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், பரவலாக பாராட்டப்பட்டார். சுமிதா தல்வால்கர் தயாரித்து, சஞ்சய் சுர்கர் இயக்கியிருந்த இப்படம் 46 வது தேசிய திரைப்பட விருதுகளில் மராத்தியில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. விருது அமைப்பினர், "மோகன் ஜோஷி மற்றும் சுஹாஸ் ஜோஷி ஆகியோரின் அழகான நடிப்பு இந்த படத்தின் சிறப்பம்சங்கள்" என்று மேற்கோள் காட்டி இவரையும் இவரது இணை நடிகர் மோகன் ஜோஷியின் படைப்புகளையும் நடுவர் பாராட்டினார்.[7]
இவர், தனது பரந்த நீண்ட நாடக மற்றும் திரைப்பட வாழ்க்கையைத் தவிர, மராத்தி மற்றும் இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காணப்பட்டார். 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமோஷியான் என்ற இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார்.[8]
இவர், புனே பல்கலைக்கழகத்தில் தத்துவம், உளவியல் சமசுகிருதம் ஆகிய பாடங்களில் இளங்கலையை முடித்துள்ளார். மேல்நாட்டுச் செந்நெறி இசையிலிம் பயிற்சி பெற்ற இவர், புதில்லியின் கந்தர்வ மகாவித்யாலயாவின் நான்கு தேர்வுகளையும் (மத்யமா) எழுதியுள்ளார்.[1] இவர் நாடகக் கலைஞரான சுபாஷ் ஜோஷியை மணந்தார்.
து திதே மீ படத்தில் நடித்ததற்காக, இவருக்கு மராத்தித் திரைப்பட பிரிவில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. [1] அதே படத்துக்காக, அதே வகையிலும், இவர் 1999 இல் சிறந்த நடிகைக்கான திரை விருதையும் பெற்றார்.[9] 2011 ஆம் ஆண்டில், மராத்தி நாடகங்களில் தனது படைப்புகளுக்காக "கங்கா-யமுனா விருதையும்" பெற்றார். இந்த விருதை தானே மாநகராட்சி மற்றும் பி சவலராம் ஸ்மிருதி சமிதி இணைந்து வழங்குகின்றன.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.