மாப் பொருள் From Wikipedia, the free encyclopedia
கார்போவைதரேட்டு (carbohydrate) கார்பன், ஐதரசன், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் மட்டுமே சேர்ந்து உருவாகக்கூடிய ஓர் உயிர் மூலக்கூறு ஆகும். வழக்கமாக தண்ணீரில் உள்ளதைப் போல ஐதரசன்-ஆக்சிசன் அணுக்கள் 2:1 என்ற விகிதத்தில் கார்போவைதரேட்டுகளில் இருக்கின்றன. இச்சேர்மத்தின் அனுபவ வாய்ப்பாடானது பொதுவாக Cm(H2O)n என்பதாக அமையும் (இங்கு 'm' என்பது 'n' லிருந்து வேறுபடும்) [1]. இவ்வாய்ப்பாடு மோனோ சாக்கரைடுகள் எனப்படும் ஒற்றைச்சர்க்கரைகளுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. ஆனால் சில விதிவிலக்குகளும் உண்டு. சான்றாக, டி.என்.ஏவின்[2] மூலக்கூற்றில் உள்ள டி ஆக்சி ரிபோ-சர்க்கரையின் அனுபவ வாய்ப்பாடு C5H10O4.ஆகும்[3]. தொழில்நுட்ப ரீதியாக கார்போவைதரேட்டுகளை நீரேற்றமடைந்த கார்பன்கள் எனலாம்[4]. கட்டமைப்பு ரீதியாக நோக்கினால் இவற்றை ஆல்டோசுக்கள் மற்றும் கீட்டோசுக்கள் எனக் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும்[5].
உயிர் வேதியியலில் கார்போவைதரேட்டு என்ற சொல் பயன்பாடு மிகவும் பொதுவானது ஆகும். சர்க்கரை, சிடார்ச்சு, மற்றும் செல்லுலோசு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு குழுவான சாக்ரைடு என்ற வகையில் இது உயிர்வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படுகிறது. சாக்கரைடுகள் நான்கு வேதியியல் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை ஒற்றைச் சர்க்கரைகள் அல்லது மோனோசாக்ரைடுகள், இரட்டைச் சர்க்கரைகள் அல்லது டைசாக்ரைடுகள், ஆலிகோ சாக்கரைடுகள், மற்றும் பாலிசாக்கரைடுகள் என்பன அந்த நான்கு வகை வேதிப் பொருட்களாகும். குறைந்த மூலக்கூறு எடை கொண்ட மோனோசாக்ரைடுகளும் டைசாக்ரைடுகளும் எளிய கார்போவைதரேட்டுகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவற்றை சர்க்கரைகள் என்ற பெயரால் அழைக்கிறார்கள் [6].
கார்போவைதரேட்டுக்கள் வாழும் உயிரினங்களில் பல முக்கிய செயல்களில் பங்கு வகிக்கின்றன. பாலி சாக்கரைடுகள் ஆற்றலைச் சேமிக்கும் பணியைச் செய்கின்றன.(எ.கா:மாப்பொருள், கிளைக்கோசன் வடிவில்), கட்டமைப்பு உட்கூறுகளாக இருக்கின்றன. (தாவரங்களில் செல்லுலோசு, கணுக்காலிகளில் கைட்டின் வடிவில்) . ஐந்து கார்பன் அணுக்களைக்கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் புரதமல்லா இணைநொதியாக (உதாரணம்:ஏ.டி.பி., பிளாவின் அடினைன் டைநியூக்ளியோடைடு|பி.அ.டை]], நிக்கோட்டினமைன் அடினைன் டைநியூக்ளியோடைடு|நி.அ.டை]] மற்றும் ஆர்.என்.ஏ என்ற மரபணுவிற்கான முதுகெலும்பு போன்ற மூலக்கூறாகவும் இவை இருக்கின்றன. பல முக்கிய உயிர் மூலக்கூறுகளில் அடங்கியுள்ள சாக்கரைடுகள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை , கருத்தரித்தல், தொற்று நோய் தடுப்பு, குறுதி உறைதல், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன [7].
கார்போவைதரேட்டுகள் பல்வேறு வகையான உணவுப்பொருட்களில் காணப்படுகின்றன. முக்கியமாக கோதுமை, சோளம், அரிசி போன்ற தானியங்கள், உருளைக்கிழங்கு, கரும்பு, பழங்கள், சர்க்கரை (சுக்ரோசு), ரொட்டி, பால், இத்யாதி.. முதலியவற்றில் நிறைந்து இருக்கின்றன. மாப்பொருளும் சர்க்கரையும் நமது உணவில் இருக்கும் முக்கியமான கார்போவைதரேட்டு ஆகும். உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற தானியங்களில் மாப்பொருள் அதிகம் உள்ளது. நமது உணவில் பயன்படுத்தப்படும் சர்க்கரை ஒரு முக்கியமான சுக்ரோசு ஆகும். பானங்கள் மற்றும் பல தயாரிக்கப்பட்ட உடனடி உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. இயற்கையாகவே பழங்களிலும் சில காய்கறிகளிலும் குளுக்கோசும் பிரக்டோசும் காணப்படுகின்றன. கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைக்கோசன் என்ற கார்போவைதரேட்டு உள்ளது. சில தாவரங்களின் செல் சுவற்றில் செல்லுலோசு காணப்படுகிறது. இச்செல்லுலோசு நமது உணவில் முக்கியமாக இருக்க வேண்டிய நார்சத்து ஆகும். இது செரிமானத்திற்கு அவசியாமான உணவாகும் [8].
கார்போவைதரேட்டு என்ற சொல்லுக்கு அறிவியலில் பரந்துபட்ட அளவில் பல பொருள்கள் அறியப்படுகின்றன. சர்க்கரை, சாக்கரைடு, ஓசு, குளுசைட்டு, கார்பன் நீரேற்று அல்லது கார்பன் ஐதரைடு, அல்லது பல்லைதராக்சி சேர்மங்களான ஆல்டிகைடு அல்லது கீட்டோன் என்பவை அவற்றில் சிலவாகும். கார்போவைதரேட்டு, சர்க்கரை என்ற சிறப்புச் சொற்கள் வேறு பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
உணவு அறிவியல் மற்றும் பல முறைசாரா சூழல்களில் கார்போவைதரேட்டு என்ற சொல் பெரும்பாலும் சிக்கலான கூட்டு மாப்பொருட்கள் அடங்கிய தானியங்கள், ரொட்டி மற்றும் பாசுதா போன்றவற்றைக் குறிக்கின்றன. அல்லது சர்க்கரை போன்ற எளிய கார்போவைதரேட்டுகள் அடங்கிய சாக்லேட், மிட்டாய் மற்றும் இனிப்புவகைகளைக் குறிக்கின்றன.
அமெரிக்க வேளாண்மைத்துறையின் தேசிய ஊட்டச்சத்து தரவுதளம் போன்ற பெரும்பாலான ஊட்டச்சத்து தகவல்கள் பட்டியலில் கார்போவைதரேட்டு என்ற சொல் நீர், புரதம், கொழுப்பு, சாம்பல், மற்றும் எத்தனால் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து உணவுப் பொருள்கலையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது [9]. பொதுவாக கார்போவைதரேட்டுகளாக கருதப்படாத அசிட்டிக் அல்லது லாக்டிக் அமிலம் போன்ற இரசாயன சேர்மங்களும் இதற்கான பொருளில் உள்ளடங்குகிறது.
நார்ச்சத்து உணவு ஆற்றலின் கலோரியில் அதிக பங்களிக்காது என்றாலும் இதுவும் ஒரு கார்போவைதரேட்டு ஆகும். மொத்த உணவு சக்தியையும் கணக்கிடுவதில் இது ஒரு சர்க்கரையாக இருப்பினும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. மிகச் சரியாக சொல்வதென்றால் சர்க்கரை என்பது இனிப்புக்காக சேர்க்கப்படுவது, கரையக்கூடிய ஒரு கார்போவைதரேட்டு எனலாம். இது பலவகையான உணவுகளில் பயன்படுகிறது.
தொடக்கத்தில் Cm (H2O)n. என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள வேதிப்பொருட்கள் யாவும் கார்போவைதரேட்டுகள் எனப்பட்டன. இவ்வரையறையின் அடிப்படையில் வேதியியலாளர்கள் CH2O என்ற எளிய வாய்ப்பாட்டைக் கொண்ட பார்மால்டிகைடு ஓர் எளிய கார்போவைதரேட்டு என்றனர் [10]. அதேவேளையில் மற்றவர்கள் கிளைக்கோலால்டிகைடை ஓர் எளிய கார்போவைதரேட்டு என்றனர் [11]. தற்போது ஒன்று அல்லது இரண்டு கார்பன்கள் கொண்ட சேர்மங்கள் தவிர்த்து இவ்வாய்ப்பாட்டின் வழியாக வருவிக்கப்படும் பல உயிரியல் கார்போவைதரேட்டுகளை உள்ளடக்கிய சேர்மங்களைக் குறிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
உதாரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட வாய்ப்பாட்டின்படி பொதுவாக அறியப்பட்ட , எங்கும் இருக்கின்ற, அதிகமாக கானப்படுகின்ற கார்போவைதரேட்டுகள் அனைத்தும் இதில் உள்ளடங்குகின்றன. அசிட்டைல் என்ற குழுவை வெளிப்படுத்தும் கைட்டின், சல்பெட்டு குழுவை வெளிப்படுத்தும் கிளைக்கோசு அமினோ கிளைக்கன்கள், கார்பாக்சிலிக் குழுவை வெளிப்படுத்தும் சியாலிக் அமிலம், முதலானவையும் கார்போவைதரேட்டுகளேயாகும்.
இயற்கைச் சாக்கரைடுகள் பொதுவாக எளிய கார்போவைதரேட்டுகள் எனப்படும் ஒற்றைச்சர்க்கரைகளால் ஆக்கப்படுகின்றன. இவற்றின் பொதுவாய்ப்பாடு (CH2O)n என எழுதப்படுகிறது. இங்குள்ள n மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிக்கிறது.
H–(CHOH)x(C=O)–(CHOH)y–H என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த எளிய ஒற்றைச் சர்க்கரையாகும். இதுவொரு ஆல்டிகைடு அல்லது கீட்டோனைக் குறிக்கும். இதில் பல ஐதராக்சில் குழுக்கள் இணைந்திருக்கும். பெரும்பாலும் ஒரு கார்பனுக்கு ஒரு ஐதராக்சில் எனவே இவை இணைந்திருக்கும். ஆல்டிகைடு அல்லது கீட்டோனின் வேதி வினைக்குழுவுடன் இதற்கு தொடர்பிருக்காது. குளுக்கோசு, பிரக்டொசு, கிளிசரால்டிகைடு போன்றவை ஒற்றைச் சர்க்கரைக்கு எடுத்துக்காடுகளாகும். இருப்பினும் மோனோசாக்கரைடுகள் என பொதுவாக அழைக்கப்படும் சில உயிரியல் பொருள்கள் இவ்வாய்ப்பாட்டிற்கு பொருந்தாதனவாய் இருக்கின்றன. யுரோனிக் அமிலம் மற்றும் பியுகோசு சர்க்கரை போன்றவை இதற்கு எடுத்துக் காட்டாகும். அதேபோல பல வேதிப்பொருட்கள் இவ்வாய்ப்பாட்டிர்கு பொருந்தி வருவனவாய் இருந்தாலும் அவை மோனோசாக்கரைடுகளாக இல்லை என்றும் அறியப்படுகிறது. பார்மால்டிகைடு (CH2O) மற்றும் இனோசிட்டால் (CH2O)6) போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.[12] மோனோசாக்கரைடுகளின் திறந்த சங்கிலி வடிவம் பெரும்பாலும் மூடிய வளைய வடிவத்துடன் ஒன்றுசேர்ந்தே காணப்படுகிறது. இங்கு ஆல்டிகைடு/கீட்டோன் கார்பனைல் குழு கார்பனும் (C=O) ஐதராக்சில் குழுவும் (–OH) வினைபுரிந்து புதிய C–O–C பாலத்துடன் எமி அசிட்டாலாக உருவாகிறது.
ஒற்றைச்சர்க்கரைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பாலிசாக்ரைடுகளாக அல்லது ஆலிகோசாக்கரைடுகளாக பல்வேறு வழிகளில் உருவாக முடியும். பல கார்போவைதரேட்டுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைச் சர்க்கரை அலகுகளின் மாறிய வடிவத்தைக் கொண்டுள்ளன. உதாரணமாக டி.என்.ஏ வின் அங்கமான டி ஆக்சி ரிபோசு ரைபோசின் மாறிய வடிவமாகும். நைட்ரசனைக் கொண்ட குளுக்கோசு வடிவமான என்-அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகள் சேர்ந்து உருவாவது கைட்டின் ஆகும்.
அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் ஒற்றைச்சர்க்கரைகள் எனப்படுகின்றன. காபோவைதரேட்டு என்பது பொதுவாக சர்க்கரை அல்லது சர்க்கரைட்டுக்களுக்கு உயிர்வேதியியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகும். இவை காபோவைதரேட்டுக்களின் மிக எளிய மூலக்கூறுகளும், அடிப்படை மூலக்கூறுகளுமான ஒற்றைச்சர்க்கரைகள், இரு ஒற்றைச்சர்க்கரைகளின் பிணைப்பால் வரும் இரட்டைச்சர்க்கரைகள், மேலும் பல ஒற்றைச் சர்க்கரைகளின் பிணைப்பால் வரும் கூட்டுச்சர்க்கரைகள் எனப் பிரிக்கப்படும்.
கூட்டுச்சர்க்கரைகளில் மூன்று தொடக்கம் ஆறு[13] அல்லது ஒன்பது[14][15] ஒற்றைச்சர்க்கரைகளின் பிணைப்பால் உருவாகும் மூலக்கூற்றுநிறை குறைந்தவை குறை கூட்டுச்சர்க்கரைகள் (Oligosaccharide) எனவும், அதைவிடவும் அதிகமான எண்ணிக்கை ஒற்றைச்சர்க்கரைகளின் பிணைப்பால் உருவாகும் மூலக்கூற்றுநிறை கூடியவை பல்சர்க்கரைகள் (polysaccharide) எனவும் அழைக்கப்படும்.[16] ஒற்றைச்சர்க்கரைகளில் குளுக்கோசு, ஃப்ரக்டோசு (Fructose), காலக்டோசு, சைலோசு (Xylose), ரைபோசு என்னும் வகைகளும், இரட்டைச்சர்க்கரைகளில் மால்டோசு (Maltose), சுக்குரோசு (Sucrose), லாக்டோசு (Lactose) என்னும் வகைகளும், கூட்டுச்சக்கரைகளில் மாப்பொருள், கிளைக்கோசன், செலுலோசு, கைட்டின் போன்றனவும் அடங்குகின்றன.
ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் சீனி அல்லது சர்க்கரை என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன[17]. மாற்றப்படாத ஒற்றைச்சக்கரைகளின் பொதுச் சூத்திரம் (CH2O)n. இங்கே n மூன்றுக்கு மேற்பட்ட எந்தவொரு எண்ணாகவும் இருக்கலாம். எனினும் எல்லா ஒற்றைச்சக்கரைகளும் இச் சூத்திரத்துக்குள் அடங்கும் என்றோ, இச் சூத்திரத்துள் அடங்கும் எல்லாமே ஒற்றைச்சக்கரைகள் என்றோ கூற முடியாது. எடுத்துக் காட்டாக, இச் சூத்திரத்தினின்றும் சிறிது வேறுபடுகின்ற மூலக்கூறுகள் பலவும் காபோவைதரேட்டுகள் என அழைக்கப்படுவதையும், இதே மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட போமல்டிகைட்டு போன்றவை காபோவைதரேட்டுக்கள் அல்ல என்பதையும் குறிப்பிடலாம்.
வகுப்பு (DP*) | துணைக்குழு | பகுதிப்பொருட்(கள்) |
---|---|---|
சர்க்கரை(கள்) (1–2) | ஒற்றைச்சர்க்கரை(கள்) | குளுக்கோஸ், காலக்டோசு, புருக்டோசு, க்ஸைலோசு |
இரட்டைச்சர்க்கரை(கள்) | சுக்குரோசு, லாக்டோசு, மால்டோசு, ட்ரெஹலோஸ் | |
பாலியோல்கள் | சார்பிடோல்கள், மற்றும் மானிட்டோல்கள் | |
ஆலிகோசாக்கரைடு(கள்) (3–9) | மால்டோ-ஆலிகோசாக்கரைடுகள் | மால்டோ-டெக்ஸ்ட்ரின்கள் |
மற்ற-ஆலிகோசாக்கரைடுகள் | ராஃபினோஸ், ஸ்டாக்கியோஸ், ஃப்ரக்டோ-ஆலிகோ சாக்கரைடுகள் | |
கூட்டுச்சர்க்கரை(கள்) (>9) | மாப்பொருள் | அமைலோசு, அமைலோபெக்டின், மாற்றம் பெற்ற ஸ்டார்ச்சு |
மாப்பொருள் அற்ற கூட்டுச்சர்க்கரை(கள்) | செல்லுலோசு, ஹெமி செல்லுலொசு, பெக்டின்கள், ஹைட்ரோகொலாய்டுகள் |
இங்கு DP என்பது மீச்சேர்ம இணைவு எண் (Degree of polymerization) ஆகும்.
மேலும் நீராற்பகுத்து சிறிய சர்க்கரை மூலக்கூறுகளைப் பெற இயலாத சர்க்கரையை மோனோசாக்கரைடுகள் என்கின்றனர். இவையே எளிய கார்போவைதரேட்டுகள் ஆகும். பொதுவாக இவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஐதராக்சில் குழுக்கள் இருக்கும். ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்கள் மோனோசாக்கரைடுகளாகக் கருதப்படுகின்றன. கார்பனின் நீரேற்றுகளான இவ்வகை சாக்கரைடுகளின் பொதுவாய்ப்பாடு (C•H2O)n, என்று எழுதப்படுகிறது. n=3 என்ற எண்ணிக்கையில் உள்ள டை ஐதராக்சி அசிட்டோன், மற்றும் டி-கிளிசரால்டிகைடு, எல்-கிளிசரால்டிகைடு போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும். எரிபொருள்களாகவும் நியூக்ளிக் அமிலங்களின் கட்டுறுப்புகளாகவும் இவை பயன்படுகின்றன.
கார்பனைல் தொகுதியின் இடம், கார்பன் அணுக்களின் எண்ணிக்கை, நாற்தொகுதியின் கைப்பழக்கம் முதலான மூன்று வெவ்வேறு வகையான பண்புகளால் மோனோசாக்கரைடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. கார்பனைல் தொகுதி ஓர் ஆல்டிகைடாக இருக்குமேயானால் அந்த ஒற்றைச் சாக்கரைடை ஆல்டோசு என்கின்றனர். கார்பனைல் தொகுதி ஒரு கீட்டோனாக இருக்குமேயானால் அந்த ஒற்றைச் சாக்கரைடை கீட்டோசு என்கின்றனர். மூன்று கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஒற்றைச் சாக்கரைடு டிரையோசு என்றும் நான்கு கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஒற்றைச் சாக்கரைடு டெட்ரோசு என்றும் ஐந்து கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஒற்றைச் சாக்கரைடு பெண்டோசு என்றும் ஆறு கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஒற்றைச் சாக்கரைடு எக்சோசு என்றும் வகைப்படுத்தப்படுகின்றன [19]. இவ்விருவகையான வகைப்படுத்தும் திட்டங்களும் பெரும்பாலும் இணைத்தே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஆறு கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்டிகைடான குளுக்கோசு ஆல்டோ எக்சோசு எனப்படுகிறது. ஐந்து கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்டிகைடான ரிபோசு ஆல்டோபெண்டோசு எனப்படுகிறது. ஆறு கார்பன் அணுக்கள் கொண்ட கீட்டோனான பிரக்டோசு கீட்டோ எக்சோசு எனப்படுகிறது.
இரு மூலக்கூறுகளுடைய ஒற்றைச்சர்க்கரைகளைப் பெற்றுள்ளதால் இரட்டைச்சர்க்கரை எனப்படுகின்றன. சான்று : மால்டோசு, லாக்டோசு.
எளிய ஒற்றைச்சர்க்கரைகளைக் கொண்டிருக்கும் சில சர்க்கரைகள், ஆலிகோசர்க்கரைகள் எனப்படும்.
பல ஒற்றைச்சர்க்கரைகளின் தொகுப்பு பாலிசாக்கரைடுகள் (அ) கூட்டுச்சர்க்கரைகள் எனப்படும். மேலும் ஒற்றைச்சர்க்கரைகளின் தொகுப்பு வகைகளின் படி, இருவகைப்படும்.
உயிரினங்கள் வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்யவும், தமது உடலைப்பராமரிப்பதற்கும் உதவுவது வளர்சிதைமாற்றம் ஆகும். இவ்வளர்சிதை மாற்றம் வளர்மாற்றம் (anabolism), சிதைமாற்றம் (catabolism) என இருவகைப்படும்.
கார்போவைதரேட்டுகளின் எரிசக்தியைப் பயன்படுத்தி புரதம், நியூக்ளிக் அமிலம் போன்றவற்றை உருவாக்குதல் ஆகும்
பெரிய வேதிமூலக்கூற்றை சிறியனவாக உடைத்தல் சிதைமாற்றம் எனப்படுகிறது.
அரிசி, கோதுமை போன்ற பல தானிய வகைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றில் கார்போவைதரேட்டு அதிகளவில் காணப்படும். கார்போவைதரேட்டு ஒரு அத்தியாவசியமான ஊட்டக்கூறாக இல்லாமல் இருப்பினும், உயிரினங்களின் ஆற்றல் உருவாக்கத்தில் காபோவைதரேட்டே முக்கிய பங்கு வகிக்கின்றது.[20].
கார்போவைதரேட் வாழும் உயிரினங்களின் ஒரு பொதுவான ஆற்றல் மூலமாக இருக்கிறது.எனினும் கார்போவைதரேட் மனிதர்களில் முக்கிய ஊட்டச்சத்தாக இருப்பதில்லை.மனிதர்கள் புரதம் மற்றும் கொழுப்பில் இருந்தே தங்கள் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்துகொள்ளலாம். கார்போவைதரேட் மிக குறைந்த அளவு கொண்ட உணவு பொருட்களை அதிகமாக உண்ணும் போது இரத்ததில் கீற்றோன் அளவு அதிகரிக்கின்றது. இதுவே முதலாம் வகை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.
மூளை செல்கள் மற்றும் நரம்புகள் அதன் நேரடி சக்தி ஆதாரமாக கொழுப்பு அமிலங்களை பயன்படுத்த முடியவில்லை.கொழுப்பு அமிலங்கள் மூளை இரத்த அடுக்கை கடக்க முடிவதில்லை ஆதலால் மூளை செல்கள் அவற்றின் சக்தி ஆதாரமாக குளுக்கோஸ் மற்றும் கீற்றோன் பயன்படுத்துகிறது.
உயிரினங்கள் பொதுவாக அனைத்து கார்போவைதரேட்களையும் ஆற்றலாக பயன்படுத்த முடியாது.எனினும் குளுக்கோஸ் கிட்டத்தட்ட பெரும்பாலான உயிரினங்களிலும் ஆதாரமாக உள்ளது. ஆனால் சில உயிரினங்களில் ஒற்றைச்சர்க்கரைகள் மற்றும் இரட்டைச்சர்க்கரைகள் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.
இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆபத்துகள் இருப்பதால் அமெரிக்க மற்றும் கனேடிய மருத்துவ கல்வி நிலையம் பெரியவர்கள் தங்கள் அன்றாட உணவில் 45-65 % வரை பரிந்ந்துரைக்கிறது. மேலும் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு கூட்டாக கார்போவைதரேட்டிலிருந்து கிடைக்கும் மொத்த ஆற்றல் 55-75 % வரையிலும் இருக்கலாம் என பரிந்துரைக்கிறது.
பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து தெளிவான கரைசலை வடித்தெடுத்த பின் நீல நிறமான பெனடிக்ரின் கரைசல் (அ) ஃபெலிங்க் கரைசல் சேர்த்து வெப்பப்படுத்தும் போது செங்கட்டிச் சிவப்பு நிற வீழ்படிவு கிடைக்குமாயின் அது எளிய வெல்லமாகும்.
கரைசல் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறுமாயின் சிறிதளவு குளுக்கோசு அடங்கியிருப்பதாகப் பொருளாகும்.
பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து எடுக்கப்பட்டுஅதை வெள்ளைப்பீங்கான் ஒன்றின் மீது வைத்து அயடீன் கரைசலின் (கபில நிறம்) சில துளிகளை இடும் போது உணவுப் பொருள் கருநீல நிறமாக மாறும்.
கார்போவைதரேட்டின் மிக முக்கியமான வேலை உடலுக்குத் தேவையான சக்தியளிப்பது ஆகும். ஒரு கிராம் கார்போவைதரேட்டு 4 கிலோ சக்தியளிக்க வல்லது. இந்திய உணவுப்பொருட்களில் 60%-80% சக்தியானது கார்போவைதரேட்டுகளில் இருந்து பெறப்படுகிறது.
புரதம் உடல்வளர்ச்சிப் பணியைச் செய்ய வேண்டுமானால் நம் உணவில் தேவையான அளவு கார்போவைதரேட்டுகள் சேர்க்கப்படவேண்டும். இதனால் புரதத்தின் தேவை குறைக்கப்படுகிறது.
செரிக்க இயலாத நார்ச்சத்துகள் என்பவை கார்போவைதரேட்டுகளின் கூட்டுக்கலவை ஆகும். இந்நார்ப்பொருள் நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், குடலிலுள்ளவற்றை இளக்குகிறது. இதனால் கழிவுப்பொருள் அலைச்சுருக்க அசைவின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
உடலில் கார்போவைதரேட்டின் அளவு குறையும் போது கொழுப்பானது உடலுக்குத் தேவையான சக்தியளிப்பானாக மாற்றம் கொள்கிறது. இதனால் அமிலத்தன்மைக் கொண்ட பொருட்கள் உடலில் சேர்கின்றன. இது கீட்டோன் உடலம் எனப்படும்.
அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பாற்றலை அளிக்க வல்ல கிளைகோ புரதங்கள், நரம்பு மண்டலத்தின் பகுதி உயிரணு சுவர் பகுதிகளில் பகுதிப்பொருட்களாக உள்ள கிளைகோ லிப்பிடுகள், போன்றவற்றை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் குடற்பகுதியிலுள்ள உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.