கார்த்திகை தீபத்திருநாள் From Wikipedia, the free encyclopedia
கார்த்திகை விளக்கீடு(கார்த்திகைத் தீபம், தீபம்; ஆங்கிலம்:Kārtthigai Vilakkēdu) என்பது கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளும் கார்த்திகை நாண்மீனும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு விளக்கீட்டுத் திருநாள் ஆகும்.
கொண்டாட்டங்களும் |
---|
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் திங்கள் கார்த்திகைத் திங்கள். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகைத் திங்கள். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் திங்கள் கார்த்திகைத் திங்கள். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 விளக்குகள் ஏற்றுவது தான் சிறப்பு: இவை 27 நாண்மீன்களைக் குறிக்கும்
பண்டைய தமிழர்கள் ஒரு திங்களில் உள்ள புவிநாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை நாள். இவ்வாறு ஒவ்வொரு திங்களும் வருகின்ற கார்த்திகை நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகைத் திங்களில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று கோவில்களில் விளக்கீட்டுத் திருவிழா நடைபெறும். பத்தர்கள் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். கோவிலின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். தீப்பொறி சிதறும் மாவலி எனும் வான வெடிக்கயும் இன் நாளில் செய்து அதை சுழற்றி கொண்டாடுவர். [2][3]
கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விட்டுணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல ஆண்டுகள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நாளன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.
இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார். பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத அரசகுலத்தினர் ஆவர். [சான்று தேவை] இத்தீபம் ஏற்றச் சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.[4]
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.[6]
அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.[7]
ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.[8]
ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.[9]
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.