From Wikipedia, the free encyclopedia
ஓசனிச்சிட்டுகள் (Hummingbird) என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக்கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு) வகைகள் உள்ளன. [1]. உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவையாகிய தேனி ஓசனிச்சிட்டு இவ்வினத்தைச் சேர்ந்த பறவை ஆகும். கியூபாவில் வாழும் இப்பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 கிராம் மட்டுமே. ஓசனிச்சிட்டுகளின் அறிவியல் பெயர் டிரோச்சிலிடீ (Trochilidae). டிரோச்சிலசு (trochilus, τροχιλός) என்னும் கிரேக்க மொழிச்சொல் ஓடு (விரைந்தோடு) என்னும் பொருள் கொண்டது; இதிலிருந்து இச்சொல் ஆக்கப்பட்டது. இதனைத் தமிழில் சடுதிப்புள் துணைக்குடும்பம் என்று தமிழில் வழங்குகின்றோம். தமிழில் ஓசனிச்சிட்டை முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்கார சிட்டு என்றும் அழைக்கிறார்கள். இப்பறவையின் இதயம் நிமிடத்திற்கு 1260 முறை துடிக்கிறது. [2]
தேன்சிட்டு | |
---|---|
ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | புதிய பறவைகள் |
உள்வகுப்பு: | Neognathae |
தரப்படுத்தப்படாத: | Cypselomorphae |
வரிசை: | |
Subfamilies | |
Phaethornithinae |
இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள்[3]. அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. ஓசனிச்சிட்டுகள் அந்தரத்தில் ஓரிடத்திலேயே நின்று பறப்பதற்கு ஞாற்சி[4] (அல்லது நாற்சி) என்று பெயர். இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.
சிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய, குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு, குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு (கீழ்த்தாடை) பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.
ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும். இதில் உள்ள 320 இனங்களில் சுண்டு ஓசனிச்சிட்டு மிகச் சிறியது; ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது பட்டகோன கிகா (Patagona gigas) என்னும் அறிவியல் பெயர் கொண்ட பேரோசனிச்சிட்டு ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்கெந்தீனா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.
ஓசனிச்சிட்டுகளில் ஒரு வகையாகிய தேனி ஓசனிச்சிட்டு, அதனது சிறிதான உடல் அமைப்பின் காரணமாக, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 5 சென்டிமீட்டர் நீளத்தையும், சுமார் 2 கிராம் எடையையும் கொண்ட இந்த ஓசனிச்சிட்டு, பறவைகளிடையே மிகவும் சிறிதான பறவை எனும் சாதனையைப் படைத்துள்ளது. கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை, இப்பகுப்பில் மட்டுமின்றி மேலும் உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.[5]
ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து, அமினோக் காடிகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: செம்பருத்திப் பூ, பாச்சிசுடாச்சிசு லூட்டியா (Pachystachys lutea) , மோனார்டா (Monarda) ஃஎலியாக்கோனியா (Heliconia), படிலையா (Buddleia), புரோமெலியாடு (bromeliad), மணிவாழை (அல்லது கல்வாழை), வெர்பேனா (verbena), தேன்குழல்பூ (honeysuckle), சால்வியா (salvia), பெண்ட்டா (pentas), ஃவூக்சியா (fuchsia), பலவகையான பென்ஸ்டெமோன் (penstemon) பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது.
ஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011). இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action) நீர்ம வடிவான தேனை உறிஞ்சுகின்றது என்று 1833 முதல் பறவையறிஞர்கள் கூறிவந்தனர். ஆனால் அப்படி இல்லை என்று இப்பொழுது (2011 இல்) கண்டறிந்துள்ளனர். இதன் நாக்கு பிளவுடையது. இந்தப் பிளவுபட்ட இரட்டை நாக்கில் மிக மெல்லிய இழைகள் உள்ளன. இந்த இழைகள் ஒருவாறு வளைத்து சுழற்றும் இயக்கத்தால் தேன் கவர்ந்து வருகின்றது என்று அறிந்துள்ளனர்.
ஓசனிச்சிட்டுகளை ஆய்வுச்சாலைகளில் உள்ள "காற்றுக்குகைகளில்" பறக்கவிட்டு, விரைந்தியங்கும் ஒளிப்படக்கருவிகளின் துணையுடன் அறிவியலாளர்கள், அவற்றின் பறக்கும் இயல்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டுள்ளனர். இப்பறவைகள் தம் இறக்கைகளைக் கீழ்நோக்கி அடிக்கும் பொழுது 75% தன் உடலைத்தாங்கும் திறனும், மேல் நோக்கி இறக்கைகளை அடிக்கும்பொழுது 25% தாங்கு திறனும் கொண்டுள்ளதாக அறிகின்றனர். இதனால் இது அந்தரத்தில் நிற்கும் ஞாற்சியின் பொழுது இதன் இயக்கம் மற்ற பறக்கும் பூச்சிகளின் (எ.கா: பட்டாம்பூச்சி) இறக்கை இயக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது. பெரிய ஓசனிச்சிட்டுகளாகிய பேரோசனிச்சிட்டுகள் நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, ஆனால் சிறிய வகை ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 60-80 முறை அடிக்கின்றன. நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.