From Wikipedia, the free encyclopedia
ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.[சான்று தேவை]
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.[1] இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். “தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[2] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[3][4] ராதா, காமராசரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில்[5] அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.[6]
முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[7] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[8] இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.
அரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது நாத்திகம் இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர்.
மேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.[1] தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா "சுட்டாச்சு, சுட்டாச்சு" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
அரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய வழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த நாடோடி திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது.
மேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கூறினர். பின்பு சிறுக சிறுக உடல் நலம் பாதித்தது. சில ஆண்டுகள் மட்டுமே நடிக்கவும் முடிந்தது. குரலில் மாற்றம் இருந்த போதும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. தொண்டையில் குண்டுடனே வாழ்ந்து வந்தார். பின்பு உடல்நலம் குன்றி 1987-ல் இறந்து விட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.