காந்தியம் From Wikipedia, the free encyclopedia
உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.[1]
காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பிந்தைய நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது. விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புகளில் இவை இடம் பெற்றன. உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது.[2] 80,000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்புச் சத்யாக்கிரகத்தின் விளைவாகச் சிறையிலடைக்கப்பட்டனர்.[2] இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் ஆங்கிலேயரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது.[3][4] மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களைச் சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாகப் போராட வழிவகுத்தது, ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து பெரியளவிலான சலுகைகளை வெல்லத் தவறியது.[5]
உப்புச் சத்தியாகிரகப் பிரச்சாரம் காந்தியின் கோட்பாடான வன்முறையற்ற அறப்போர் என்ற அறநெறியை அடிப்படையாகக் கொண்டது, அதை அவர் "உண்மைச்-சக்தி" என வரையறுத்தார்.[6] சத்தியாகிரகம் என்ற சமற்கிருதச் சொல்லில் சத்யம் என்பது உண்மையையும் கிரகம் என்பது சக்தியையும் குறித்தது. 1930 களின் துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அதன் முக்கியச் செயல்முறையாகச் சத்யாக்கிரகத்தைத் தேர்வு செய்து ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய விடுதலையை வெல்லவும் அதற்கான நடவடிக்கையை அமைப்பாக்கம் செய்யவும் காந்தியை நியமித்தது. காந்தி 1882 இல் ஆங்கிலேயர் விதித்த உப்புச் சட்டத்தைச் சத்யாக்கிரகத்தின் முதல் இலக்காகத் தேர்ந்தெடுத்தார். தண்டிக்கான உப்பு நடைப்பயணமும் தாராசனாவில் அறவழியில் போராடிய நூற்றுக்கணக்கான பொது மக்களைப் பிரித்தனிய காவலர்கள் அடித்ததும், சமூக மற்றும் அரசியல் அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களின் மீதான சட்ட அநீதியாக எடுத்துக் காட்டியது.[7] காந்தியின் சத்தியாக்கிரகப் போதனைகளும் தண்டி நடைப்பயணமும் அமெரிக்க மனித உரிமைச் செயல்வீரர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீதும், மேலும் 1960 களில் அவரது கருப்பர்கள் மற்றும் இதர சிறுபான்மை குழுக்களின் உரிமைகளுக்கான போரிலும் கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருந்தது.[8]
டிசம்பர் 31, 1929 நள்ளிரவில், இந்திய தேசிய காங்கிரஸ் லாகூரின் ராவி நதிக்கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியது. இந்திய தேசிய காங்கிரஸ், காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவால் வழிகாட்டப்பட்டு, ஜனவரி 26, 1930 இல் வெளிப்படையாக விடுதலைப் பிரகடனம் அல்லது முழு விடுதலையை வெளியிட்டது.[9] இவ்விடுதலைப் பிரகடனமானது மக்களின் மீதான வரிகளைத் தடுத்து நிறுத்தத் தயாராவதை உள்ளடக்கியிருந்தது, மேலும் அறிக்கையானது:
இது இந்திய மக்களின் பிரிக்க இயலாத, பிற மக்களைப் போல, விடுதலைப் பெறவும் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்க்கையின் தேவைகளைப் பெறவும், அதனால் வளர்ச்சியின் முழு வாய்ப்புக்களைக் கொள்ளவுமான உரிமையுடையது என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மேலும் நம்புவது எந்தவொரு அரசும் இந்த உரிமைகளை மக்களுக்கு மறுக்கிறது மற்றும் அவர்களை ஒடுக்குகிறது எனில் மக்களுக்கு இதற்கு மேலும் அவ்வரசினை மாற்ற அல்லது ஒழிக்கும் உரிமையுள்ளது. இந்தியாவின் ஆங்கிலேய அரசு இந்திய மக்களின் சுதந்திரத்தை மறுப்பதோடு அல்லாமல், மக்களின் மீதான சுரண்டலில் தனது அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது, மேலும் இந்தியாவை பொருளாதார, அரசியல், பண்பாட்டு மற்றும் ஆன்மீக ரீதியில் சீரழித்துள்ளது. ஆதலால் நாம் நம்புவது, இந்தியா ஆங்கிலேயர் தொடர்பைத் துண்டித்துப் பூர்ண ஸ்வராஜ் அல்லது முழு விடுதலையை அடைய வேண்டும்.[10]
காங்கிரஸ் செயற்குழு, காந்திக்குச் சட்ட மறுப்பு நடவடிக்கையை அமைக்கும் பொறுப்பினைக் கொடுத்தது, அத்தோடு காந்தியின் எதிர்பார்க்கப்பட்ட கைதினைத் தொடர்ந்து தானே பொறுப்பினை எடுத்துக் கொள்ளத் தயாராகவும் இருந்தது.[11] காந்தியின் திட்டமானது சட்ட மறுப்பினை அறவழியில் ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தைக் குறிவைத்துத் துவங்குவதாக இருந்தது. 1882 உப்புச் சட்டம் ஆங்கிலேயருக்கு உப்பின் சேகரிப்பிற்கும் உற்பத்திக்கும் ஒட்டுமொத்த உரிமையைக் கொடுத்தது, அதன் கையாளுகையை அரசு உப்புக் கிடங்குகளிலும் உப்பு வரி விதிப்பதிலும் வரையறுத்தது.[12] உப்புச் சட்டத்தை மீறுவது ஒரு குற்றச் செயலாகக் கருதப்பட்டது. உப்பானது கடற்கரையில் வாழ்பவர்களுக்கு (கடல் நீர் ஆவியாவதிலிருந்து) இலவசமாகக் கிடைத்து வந்தாலும் கூட, இந்தியர்கள் அதனைக் காலனிய அரசிடமிருந்து நுகர வற்புறுத்தப்பட்டனர்.
காந்தி தனது அறப் போரின் முதல் நடவடிக்கையாக ஆங்கிலேயரின் உப்பு வரி மீதான உப்புச்சட்டத்தைத் தேர்வு செய்ததற்குக் காங்கிரஸ் செயற்குழுவினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேரு மற்றும் திவ்யலோச்சன் சாகூ ஆகியோர் ஒரு தெளிவற்ற முடிவினைக்(அவ நம்பிக்கையை) கொண்டிருந்தனர்.[13] சர்தார் பட்டேல் உப்புச்சட்டத்திற்குப் பதிலாக நிலவருவாய்ச் சட்டத்தைப் புறக்கணிக்க ஆலோசனை தெரிவித்தார்.[14] இருப்பினும் காந்தி உப்பு வரியைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கான காரணங்களைக் கொண்டிருந்தார். உப்பு வரி ஆழமான குறியீடாயமைந்த தேர்வாக, உப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொருவராலும் பயன்படுத்தப்படுகிறது. அரசு வருமானத்தில் 8.2% உப்பினால் கிடைக்கிறது. காற்று, நீர் இவற்றுக்கு அடுத்தபடியாக உப்பு வாழ்க்கையின் மிகத் தேவையான ஒன்றாக உள்ளது.மேலும் இச்சட்டம் மிகக் குறிப்பாக ஏழ்மையிலும் ஏழ்மையான இந்தியர்களை மிகவும் பாதிக்கிறது.[15] காந்தி இந்த எதிர்ப்பு முழு விடுதலை என்ற நமது கருத்து கீழ்மட்ட இந்தியர்களுக்கு விளங்கிடும்படியான காட்சியாய் அமையலாம் என உணர்ந்தார். மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் காரணமாக, அவர்களைச் சமமாகப் பாதித்த ஒன்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஏற்படுத்தும் என நம்பினார்.[16] பின்னர் காந்தியின் இத்தேர்வு மிகச் சரியானதென நேரு உள்ளிட்ட தலைவர்கள் உணர்ந்தனர்.[16]
மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்களுடன், வன்முறையற்ற சட்ட மறுப்பிற்கு நீண்ட காலப் பொறுப்பினைக் கொண்டிருந்தார், இந்திய சுதந்திரத்தை அடைவதற்கான அடிப்படையாக அறப்போர் என்பதை வரையறுத்தார்.[17] அறப்போர் மற்றும் முழு விடுதலை இவற்றின் "வழிமுறைகளுக்கும் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பானது விதைகளுக்கும் மரங்களுக்கும் இடையிலானதைப் போலப் பிணைக்கப்பட்டிருந்தது.[18] இது குறித்து "கைக்கொள்ளப்படும் வழிமுறைகள் தூய்மையற்றதாக இருப்பின் மாற்றமானது முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்காது. மிக எதிர்மறையானதாக இருக்கலாம். நமது அரசியல் சூழல்களில் தூய்மையான வழிமுறைகளால் கொண்டுவரப்படும் மாற்றம் உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவிடலாம் எனக் காந்தி எழுதினார்."[19]
சத்தியாக்கிரகம் எனபது சம்ஸ்கிருத சொற்களான சத்ய (உண்மை) மற்றும் ஆக்ரஹா (உறுதியாகப் பற்றியிருத்தல்) ஆகியவற்றின் சேர்ப்பு ஆகும். காந்திக்கு, சத்தியாக்கிரகம் வெறும் "துன்பமேற்கிற எதிர்ப்பை" விட வன்முறையற்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவூட்டுவதாக ஆனது. அவரது சொற்களில்:
உண்மை (சத்யம்) அன்பை பொருளாகக் கொள்கிறது மற்றும் உறுதியை (ஆக்ரஹா) உண்டு பண்ணுகிறது ஆகையால் சக்திக்கு ஒத்ததொன்றாகப் பலனளிக்கிறது. ஆகையால் நான் இந்திய இயக்கத்தைச் சத்தியாக்கிரகம், என அழைக்கத் துவங்கினேன், மேலும் கூறுவதென்றால் பிறந்துள்ள சக்தியானது உண்மை மற்றும் அன்பு அல்லது வன்முறை இவற்றிலிருந்து ஏற்பட்டது, "துன்பமேற்கிற எதிர்ப்பை", ஆங்கிலத்தில் எழுதுகையில் கூட நாம் பலமுறை தவிர்த்திருக்கிறோம் அதற்குப் பதிலாக “சத்தியாக்கிரகம்”.... எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.[20]
அவரது முதல் குறிப்பிடத்தக்க முயற்சி இந்தியாவில் பெரும் அறப்போரை வழிநடத்திய, 1920-1922ஆம் ஆண்டுகளில் நடந்த ஒத்துழையாமை இயக்கமாகும். அது இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட எழுச்சியூட்டியதில் வெற்றியடைந்தாலும், சௌரி சௌராவில் வன்முறை வெடித்து, ஆயுதமற்ற 22 காவற்துறையினரை ஒரு கும்பல் கொன்றது. காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறிப் போராட்டத்தை நிறுத்தி வைத்தார். அவர் இந்தியர்கள் இன்னும் வெற்றிகரமான வன்முறையற்ற எதிர்ப்பிற்குத் தயாராகவில்லை என முடிவெடுத்தார்.[21] பர்தோலி சத்தியாக்கிரகம் 1928 இல் நடந்தது அதிக வெற்றிகரமானது. அது ஆங்கிலேய அரசைச் செயல்படவிடாமல் செய்வதில் வென்றது. மேலும் குறிப்பிடத்தக்க சலுகைகளை வென்றது. மிக முக்கியமாக, விரிவான ஊடகச் செய்திகளின் காரணமாக, அது ஒரு பிரச்சார வெற்றியை அதன் அளவு விகிதத்தை விடக் கடந்து பெற்றது.[22] பின்னர் காந்தி கூறியது பர்தோலியின் வெற்றி அவரது அறப்போர் மற்றும் விடுதலை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது: "படிப்படியாகவே நாம் பர்தோலியில் கிடைத்த வெற்றியின் முக்கியத்துவத்தை அறியச் செய்வோம்...பர்தோலி அதற்கு வழிகாட்டியுள்ளது. மற்றும் தெளிவாக்கியுள்ளது. விடுதலை வேரில் பதிந்துள்ளது, மேலும் அது மட்டுமே நோய் தணிக்கும்....""[23] காந்தி தண்டி நடைப்பயணத்திற்கு அதிகளவில் பர்தோலியிலிருந்து பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார், அது பர்தோலி போராட்டத்தில் பங்கேற்ற அதே கிராமங்கள் வழியே சென்றது.[24]
பிப்ரவரி 5 இல், காந்தி சட்ட மறுப்பினை உப்புச் சட்டங்களை மறுப்பதன் மூலம் துவங்கலாம் என்று செய்தித்தாள்கள் அறிவித்தன. உப்பு அறப்போர் மார்ச் 12 இல் துவங்கி காந்தி ஏப்ரல் 6 இல் தண்டியில் உப்புச் சட்டத்தை உடைத்தப் பிறகு முடிவடையும். காந்தி ஏப்ரல் 6 இல் பேரளவில் உப்புச் சட்டங்களை உடைக்க தேர்வு செய்தததற்கு மறைமுகமான காரணம்- 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராகக் காந்தி தேசியக் கடையடைப்பை (ஹர்த்தாலை) துவக்கிய "தேசிய வாரத்தின்" முதல் நாள் ஆகும்.[25] காந்தி வழக்கமான அறிக்கைகளைச் சபர்மதியிலிருந்து விடுத்தும், அவருடைய வழக்கமான பிரார்த்தனை கூட்டங்களின் மூலமும் ஊடகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமும் உலக முழுதுமான ஊடகங்களை நடைபயணத்திற்குத் தயாராக்கினார். அவர் கைதினை எதிர் நோக்கித் தொடர்ந்து விடுத்த அறிக்கைகளினால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன, அந்நிகழ்வு நெருங்கிவருகையில் மேலும் அவர் பரபரப்பூட்டுகிற மொழியில் "நாம் வாழ்வா சாவா போராட்டத்தில் நுழைகிறோம்; ஒரு புனிதப் போரை; நாம் அனைவரும் அனைத்தையும் தழுவிய தியாகங்களை நிகழ்த்தி அதில் நாம் நம்மையே பலியிட அளிக்கிறோம் எனக் கூறினார்.[26] இந்திய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க செய்தித் தாள்களிலிருந்து டஜன் கணக்கான செய்தியாளர்கள், திரைப்பட நிறுவனங்களிலிருந்தும், இந்நிகழ்ச்சிக்கான செய்திகளைச் சுறுசுறுப்பாகச் சேகரித்தனர்.[27]
நடைப்பயணத்திற்காக மட்டும், காந்தி கடுமையான ஒழுக்கத்தை விரும்பினார். மேலும் சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சையைக் கடைபிடிக்கவும் விரும்பினார். அந்தக் காரணத்திற்காக, அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நடை பயணத்திற்காகத் தேர்வு செய்யவில்லை, ஆனால் அவரது சொந்த ஆசிரமத்தில் குடியிருந்தவர்களை, காந்தியின் கடுமையான ஒழுக்க தரநிலைகளில் பயிற்சிப் பெற்றிருந்தவர்களைத் தேர்ந்தெடுத்தார்.[28] 24 நாள் நடைப்பயணம் 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது. நடைப்பயணத்தின் வழி, ஒவ்வொரு நாளின் மாலையில் பயணம் நிற்கும் இடம், ஆகியவை கடந்த காலத் தொடர்புகள் மற்றும் நேரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டது. காந்தி சாரணியர்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் நடைப் பயணத்திற்கும் முன்பே அனுப்பினார். ஆதலால் அவர் தனது ஒவ்வொரு ஓய்விடத்திலும் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கேற்ப திட்டமிட முடிந்தது.[29] ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிகள் அட்டவணையிடப்பட்டன மேலும் இந்திய மற்றும் அந்நிய ஊடகங்களில் இது குறித்து வெளியிடப்பட்டன.[30] மார்ச் 2, 1930 இல் பதினோரு கோரிக்கைகளை ஏற்றால் நடைப் பயணத்தை நிறுத்துவதாகக் கூறி,காந்தி அரசப் பிரதிநிதி இர்வின் பிரபுவிற்கு கடிதமொன்றை எழுதினார், அதில் நிலவரியை மதிப்பிடுவதை குறைப்பது, இராணுவ செலவை வெட்டுவது, அந்நியத் துணி மீது சுங்க வரி விதிப்பது மற்றும் உப்பு வரியை நீக்குவது ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன.[16] இர்வினுக்கான வலுவான கோரிக்கை உப்பு வரி பற்றியது:
கடிதமானது உங்கள் இதயத்தினை இம்மாதத்தின் பதினோராம் நாள் தொடவில்லை என்றால் நான் ஆசிரமத்தின் சக பணியாளர்களுடன் மேற்சென்று உப்புச் சட்டங்களின் விதிகளைப் புறக்கணிப்பதைச் செயல்படுத்துவோம். நான் இந்த உப்பு வரியை ஏழை மனிதனின் பார்வையிலிருந்து முழுமையாக மிகத் துன்பம் விளைவிப்பதாகக் கருதுகிறேன். இம்மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான விடுதலை இயக்கமானது, இந்தத் தீமையுடன் துவக்கம் செய்யப்படுகிறது.[31]
இர்வின் இந்த உப்பு எதிர்ப்பைத் தீவிரமான ஆபத்தாக எடுத்துக் கொள்ளவில்லை, "தற்போது உப்பு போராட்டத்தின் வாய்ப்பு என்னை இரவுகளில் விழித்திருக்கச் செய்யவில்லை என லண்டனுக்கு எழுதினார்.மேலும் அரசப் பிரதிநிதி கடிதத்தை அசட்டை செய்தார் மற்றும் காந்தியை சந்திக்க மறுத்தார். நடைப்பயணம் மேலே தொடர்ந்தது.[32] காந்தி இதனை" நான் மண்டியிட்டு ரொட்டி கேட்டேன் ஆனால் அதற்கு மாற்றாக எனக்குக் கற்களே கிடைத்தன" என நினைவு கூறுகிறார்."[33] நடைப்பயணத்தின் முந்தைய நாட்கள் ஏராளமான இந்தியர்களைச் சபர்மதிக்கு வந்து வழக்கமான மாலை பிரார்த்தனைக் கூட்டங்களில் காந்தி பேசுவதைக் கேட்க இழுத்தது. ஓர் அமெரிக்க கல்வியாளரின் தி நேஷனுக்கு எழுதியதில் கூறப்பட்டிருந்ததாவது "60,000 பேர் நதியின் கரைகளில் காந்தியின் போர்க்கோலம் தரிக்கக் கோரும் அழைப்பினைக் கேட்கத் திரண்டனர். இந்தப் போர்க்கோலம் தரிக்கக் கோரும் அழைப்பு ஒருவேளை எப்போதும் செய்யப்படாத மிக நினைவு கூறத்தக்க போருக்கானதாகும்."[34]
மார்ச் 12, 1930 இல் காந்தி மற்றும் 78 ஆண் சத்தியாக்கிரகிகள் அவர்களின் துவக்க முனையான சபர்மதி ஆசிரமத்திலிருந்து மேலிருந்த கடற்கரை கிராமமான குஜராத்தின் தண்டிக்கு கால் நடையாகக் கிளம்பிச் சென்றனர். அரசின் அதிகாரபூர்வ செய்தித்தாளான தி ஸ்டேட்ஸ்மேனின் கூற்றுப்படி, அது வழக்கமான காந்தியின் நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற கூட்டத்தை விடக் குறைந்தே இருந்தது. 100,000 பேர் அகமதாபாத்திலிருந்து சபர்மதியை பிரிக்கின்ற சாலையில் கூடியிருந்தனர் எனக் கூறியது.[35][36] முதல் நாள் நடைப்பயணம் அஸ்லாலி கிராமத்தில் முடிந்தது. அங்கு காந்தி சுமார் 4,000 பேர் இருந்த கூட்டத்தில் பேசினார். அஸ்லாலி, மற்றும் இதர கிராமங்களைக் கடந்து சென்ற நடைப்பயணத்தில் தன்னார்வலர்கள் நன்கொடை வசூலித்தனர்; புதிய அறப்போராளிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். மேலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ஒத்துழையாமையை விரும்பிய கிராம அதிகாரிகளிடமிருந்து பதவி விலகலைப் பெற்றனர்.[37]
ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் நுழைந்தபோது, நடைப்பயணம் செய்பவர்களை மத்தளம் மற்றும் கைத்தாளமிட்டு மக்கள் வரவேற்றனர். காந்தி உப்பு வரியை மனித நேயமற்றது எனத் தாக்கிப் பேசினார், மேலும் அறபோரை "ஏழை மனிதனின் போர்" என வர்ணித்தார். ஒவ்வொரு இரவும் அவர்கள் திறந்த வெளியில் தூங்கினர், கிராமவாசிகளிடம் எளிய உணவு மற்றும் தங்குவதற்கும் தூய்மை செய்துகொள்வதற்கும் ஓரிடம் தவிர கூடுதலாக எதையும் கோரவில்லை. காந்தி இந்நடைப்பயணம் ஏழைகளை விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைக்கும் என உணர்ந்தார், அது இறுதி வெற்றிக்குத் தேவையானது.[38]
ஆயிரக்கணக்கான சத்தியாக்கிரகிகளும் சரோஜினி நாயுடு போன்றத் தலைவர்களும் அவருடன் இணைந்தனர். கூட்டமானது சுமார் 2 மைல் நீளமிருந்தது.[39] நடைப்பயணத்தின் போது அறப்போரளிகள் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடலைப் பாடிக்கொண்டே நடந்தனர்.[40] ஒவ்வொரு நாளும், நடைப்பயணத்தில் இணைந்த மக்கள் எண்ணிக்கைப் பெருகியது. சூரத்தில், 30,000 மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்கள் தண்டியின் இருப்புப் பாதை முனையை அடைந்தப் போது 50,000 ற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். காந்தி வழியில் செல்லும் போது நேர்முகப் பேட்டிகளைக் கொடுத்தும் கட்டுரைகளை எழுதியும் வந்தார். அந்நிய இதழியலாளர்கள் அவரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அடிக்கடி உச்சரிக்கும் பெயராக ஆக்கினர். "மூன்று மும்பை திரைப்பட நிறுவனங்கள் செய்திச் சுருள் படமெடுக்க குழுக்களை உடன் அனுப்பின,. (1930 இன் கடைசியில் டைம் இதழ் அவரை "ஆண்டின் சிறந்த மனிதர்" எனக் குறித்தது).[41] தி நியூயார்க் டைம்ஸ் பெரும்பாலும், இரு முன் பக்க கட்டுரைகளை ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7 இல் வெளியிட்டதுடன் அனைத்து நாட்களும் உப்பு நடைபயணத்தைப் பற்றி எழுதியது.[42] மார்ச் மாத இறுதியில் "வலிமைக்கெதிரான உரிமைக்கான இப்போராட்ட களத்தில்நான் இந்த உலகின் இரக்கத்தை விரும்புகிறேன்" எனக் காந்தி அறிவித்தார்".[43]
ஏப்ரல் 5 இல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தபோது, காந்தி அசோசியேடட் பிரஸ் நிருபர் ஒருவரால் நேர் முகம் செய்யப்பட்டார். அவர் குறிப்பிட்டதாவது:
நான் அரசிடமிருந்தான எனது முகமனை நடைப்பயணம் முழுதும் தலையிடாக் கொள்கையை அவர்கள் மேற்கொண்டதற்காகத் தடுத்து வைக்க இயலாது..... நான் விரும்புவது நான் நம்பக்கூடியது இந்தத் தலையிடாமை உண்மையான இதய மாற்றமோ அல்லது கொள்கையின் காரணமாகவோ அல்ல என்பதே. அவர்களால் திட்டமிட்டு எம் உணர்வுகளுக்குச் சட்டமன்றத்தில் காட்டப்பட்ட மரியாதையின்மையும் அவர்களின் ஆணவமிக்க நடத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி எவ்விலை கொடுத்தாவது இதயமற்ற இந்தியச் சுரண்டல் கொள்கையைத் தொடரச் செய்வதேயாகும். மேலும் ஒரேயொரு விளக்கமாக, நான் இந்தத் தலையிடாமையின் மீது கூறுவது, ஆங்கிலேய அரசு, வலிமைமிக்கதாக இருந்தாலும், உலகின் கருத்துக்களுக்கும் மாறுதல்களுக்கும் உள்ளாகக்கூடியது, அது தீவிரமான அரசியல் போராட்டத்தை ஒடுக்குவதை பொறுப்பதில்லை, சட்ட மறுப்பும் ஐயத்திற்கிடமின்றி அது போன்றதே, மறுப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் வரை மேலும் அவசியமானதாகவும் வன்முறையற்றதாகவும் உள்ளது..... அரசானது நடைப்பயணத்தைப் பொறுத்தது போன்று, நாளைமுதல் எண்ணற்ற மக்களால் உப்புச் சட்டங்கள் உண்மையாக உடைக்கப்படும்போது பொறுக்குமா என்பதைக் காண வேண்டும்.[44]
தொடர்ந்த காலையில், ஒரு பிரார்த்தனைக்குப் பிறகு, காந்தி கையளவு உப்புபை எடுத்து உயர்த்திப் பிடித்து அறிவித்தார், "இதனுடன், நான் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்.[15] அவர் பிறகு அதனைக் கடல் நீரில் கொதிக்க வைத்து, சட்டத்தை மீறி உப்பெடுத்தார். அவர் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் அதேபோல உப்பினைக் கடற்கரை முழுதும் "எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு" தயாரிக்கத் துவங்குமாறும், மேலும் கிராமவாசிகளிடம் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பெடுப்பதையும் பரிந்துரைத்தார்.[45]
இந்தியா முழுதும் பேரளவில் சட்ட மறுப்பானது பரவியது. இலட்சக்கணக்கானவர் உப்புச் சட்டங்களை உடைத்து, உப்பு தயாரித்தனர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பானவகையில் உப்பை வாங்கினர்.[15] சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவின் கடற்கரை முழுதும் உப்பு விற்கப்பட்டது. காந்தியால் தயாரிக்கப்பட்ட சிட்டிகையளவு உப்பு கூட ரூபாய் 1,600 ற்கு விற்கப்பட்டது (அக்காலத்தில் $750 க்கு இணையானது). பதிலாக, ஆங்கிலேய அரசு அம்மாதத்தின் இறுதிக்குள் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைச் சிறையிலடைத்தது.[46] நடைபயணமாகத் துவங்கியது விரைவில் பேரளவிலான சத்தியாக்கிரகமாக மாறியது.[47] அந்நியத் துணிகளும் பொருட்களும் புறக்கணிக்கப்பட்டன. பரவலாக அறியப்படாத வனச் சட்டங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய மாகாணங்களில் மறுக்கப்பட்டன. குஜராத்தி விவசாயிகள் வரி கொடுக்க மறுத்தனர், அவர்களின் நிலங்களையும் பயிர்களையும் இழக்கும் அபாயத்தைச் சந்தித்தனர். மிட்னபூரில், பெங்காலிகள் சௌகிதார் வரியை கொடுக்க மறுத்துச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றனர்.[48] ஆங்கிலேய அரசு கூடுதல் சட்டங்களுடன், செய்தித் தொடர்பைத் தணிக்கைக்கு உட்படுத்தியும் காங்கிரஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களைச் சட்டத்திற்கு புறம்பானதாகவும் அறிவித்தது. இது போன்ற வழிமுறைகள் எதுவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பின்னடையச் செய்யவில்லை.[49]
பெசாவரில், காந்தியின் முஸ்லிம் சீடரான கான் அப்துல் கப்பார் கான் தலைமையில் குடாய் கிட்மத்கர் என்றழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற 50,000 படைவீரர்களால் (அறப்போராட்ட செயல்வீரர்கள்)அறப்போராட்டம் வழிநடத்தப்பட்டது.[50] ஏப்ரல் 23, 1930 இல் கான் அப்துல் கப்பார் கான் கைது செய்யப்பட்டார். குடாய் கிட்மத்கரின் குழுவொன்று பெசாவரின் கிசா கானி (கதைச் சொல்லிகள்) பஜாரில் கூடியிருந்தனர். ஆயுதம் தரிக்காத இந்தக் கூட்டத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடுமாறு ஆங்கிலேய அரசு ஆணையிட்டது. அதில் 200-250 எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.[51] பஷ்டூன் சத்தியாக்கிரகிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறவழிப் பயிற்சியின்படி, துருப்புகள் அவர்கள் மீது சுட்டப்போது குண்டுகளைச் சந்தித்தனர்.[52] ஒரு ஆங்கிலேய இந்திய இராணுவப் பிரிவு, பெயர்பெற்ற ராயல் கார்வால் துப்பாக்கியால் கூட்டத்தைப் பார்த்துச் சுட மறுத்தனர். இதனால் முழு படைப்பிரிவும் கைது செய்யப்பட்டது, மேலும் பலர் ஆயுள் தண்டனை உட்பட கடும் தண்டனைப் பெற்றனர்,[53]
காந்தி, இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அவரது நெருங்கிய கூட்டாளி இராசகோபாலாச்சாரி, பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநராகப் பதவி வகித்தவர்; கிழக்கு கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டார். அவரது குழு சென்னை மாகாணத்திலுள்ள திருச்சிராப்பள்ளியிலிருந்து கடலோரச் சிற்றூரான வேதாரண்யத்திற்கு நடைபயணத்தைத் தொடங்கியது. அங்கு இராஜாஜி சட்ட விரோதமாக உப்பை எடுத்தார். அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.[54]
1930 இன் சட்ட மறுப்பானது விடுதலைப் போரில் முதல் முறையாகப் பெண்களைப் பேரளவில் பங்கேற்கச் செய்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சத்தியாக்கிரகத்தில் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர்.[55] காந்தி ஆண்கள் மட்டுமே உப்பு நடைப்பயணத்தில் பங்கேற்கக் கோரினார், ஆனால் இறுதியில் பெண்கள் இந்தியா முழுதும் உப்பினை தயாரித்தும் விற்கவும் செய்தனர். மூத்த காந்திய செயல்வீரரான உஷா மேத்தா, "எமது வயதான மாமி/அத்தைகளும் மூத்த-மாமி/அத்தைகளும் மற்றும் பாட்டிமாரும் அவர்களின் வீட்டில் உப்புத் தண்ணீரைக் கொண்டு வந்து சட்டத்திற்குப் புறம்பான உப்பினைத் தயாரித்தனர். பிறகு நாங்கள் உப்புச் சட்டத்தினை உடைத்து விட்டோம்!எனக் கூச்சலிட்டனர்." என விமர்சித்தார்.[56] விடுதலைப் போரில் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு இர்வினைப் பொறுத்தவரை " புதிய மற்றும் தீவிரமான செயல்பாடாக" இருந்தது. "காங்கிரசின் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவும் மறியலில் உதவவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இல்லங்களின் தனிமையிலிருந்து வெளிவந்தனர்.... அவர்களின் இத்தகைய போராட்டங்களின் போதான பங்கேற்பு காவற்துறையினரை ஓர் மகிழ்வற்ற செயலைச் செய்யத் தேவையை ஏற்படுத்தியது." என ஒரு அரசு அறிக்கை பெண்களின் பங்கேற்பு பற்றிக் கூறியது.[57]
கல்கத்தா (தற்போது கொல்கொத்தா), கராச்சி, மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறை வெடித்தப் பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதான தனது முந்தைய ஒத்துழையாமை இயக்க வாய்ப்புகளைப் போலல்லாமல் இம்முறை காந்தி "இடங்கொடுக்கவில்லை". வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் வேண்டுகோள்விட்ட அதே நேரத்தில், காந்தி சிட்டகாங்கில் கொல்லப்பட்டவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களது பெற்றோர்களை நோக்கி வாழ்த்தி "அவர்களின் மகன்களின் பூர்த்தியான தியாகம்..... ஒரு வீரனின் மரணம் துன்பத்திற்கான விஷயம் அல்ல. என்றார்.[58]
ஆங்கிலேய அரசின் ஆவணங்கள் ஆங்கிலேய அரசானது சத்தியாக்கிரகத்தினால் கலங்கியது என்பதைக் காட்டியது. அறவழி எதிர்ப்பானது ஆங்கிலேயரைக் காந்தியைச் சிறையிலடைப்பதா வேண்டாமா எனும் குழப்பத்தில் விட்டது. இந்தியாவில் தங்கியிருந்த ஒரு ஆங்கிலேயக் காவல் அதிகாரியான ஜான் கோர்ட் கர்ரி, தனது நினைவுக் குறிப்புகளில், தான் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக 1930 இல் பொறுப்பேற்றிருந்தபோதும் வெறுப்புணர்ச்சிக்கு ஆளானதாக எழுதினார். ஆங்கிலேய அரசில் கர்ரியியும் மற்றவர்களும், வெட்ஜ்வுட் பென் என்ற இந்தியாவின் அரசு செயலர் உட்பட, அறவழியில் போராடுபவர்களை விட வன்முறையாளர்களுடன் சண்டையிடவே விருப்பப்பட்டனர்.[59]
காந்தி மேற்கொண்ட தனது சுறுசுறுப்பான ஈடுபாட்டினை நடைப்பயணத்திற்குப் பிறகு தவிர்த்தார், இருந்தாலும் இந்தியா முழுதுமான படிப்படியான வளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தார். அவர் தண்டிக்கு அருகில் தற்காலிக ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கிருந்தபடியே, பெண் தொண்டர்களைப் பம்பாயில் (தற்போது மும்பை) மதுக் கடைகளையும் அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கச் செய்யவும் வலியுறுத்தினார். அவர் அந்நியத் துணிகளைக் கொண்டு ஒரு சொக்கப்பனை கொளுத்தச் செய்ய வேண்டினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புறக்கணிக்கப் பட்டு வெறுமையடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்."[60]
காந்தி தனது அடுத்த பெரிய நடவடிக்கையாக, குஜராத்தின் தாராசனா உப்பு நிறுவனத்தைத் திடீர்த் தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். அவர் மீண்டும் இர்வின் பிரபுவிற்கு கடிதம் எழுதித் தனது திட்டங்களைக் கூறினார். மே 4 நள்ளிரவில், காந்தி மெத்தையில் மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சூரத்தின் மாவட்ட நீதிபதி, இரு இந்திய அதிகாரிகள் மற்றும் முப்பது கனரக ஆயுதங்தாங்கிய காவல்துறையினருடன் வந்திறங்கினார்.[61] அவர் 1827 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி புனா (தற்போது புனே) அருகில் தங்கவைக்கப்பட்டார்.[62]
தாராசனா சத்தியாக்கிரகம் திட்டமிட்டப்படி நடந்தது, அப்பாஸ் தியாப்ஜி என்ற ஒரு ஓய்வு பெற்ற எழுபத்தியாறு வயது நீதிபதி காந்தியின் மனைவி கஸ்தூரிபாயைத் தனது அருகில் வைத்துக் கொண்டு நடைப்பயணத்தை வழிநடத்தினார். இருவரும் தாராசனாவை அடையும் முன்பே கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களின் கைதிற்குப் பிறகு, நடைப்பயணம் சரோஜினி நாயுடு ஒரு பெண் கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தலைமையில் தொடர்ந்தது. அவர் சத்தியாக்கிரகிகளை எச்சரித்தார், "நீங்கள் எந்தச் சூழலிலும் எவ்விதமான வன்முறையையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் அடிக்கப்படுவீர்கள், ஆனால் நீங்கள் எதிர்க்கக் கூடாது; நீங்கள் ஒரு கரத்தைக் கூட அடிகளைத் தடுத்து விலக்க உயர்த்தக் கூடாது." துருப்புகள் சத்தியாக்கிரகிகளை ஒரு சம்பவத்தில் எஃகு முனைக் கொண்ட தடிகளைக் கொண்டு அடித்தனர் அது சர்வதேச கவனத்தைப் பெற்றது.[63]
யுனைடெட் பிரஸ் நிருபர் வெப் மில்லர் கட்டுரையில் எழுதியவை:
ஒரு நடைபயணிகூட ஒரு கரத்தைக் கூட அடியிலிருந்து விலக்க உயர்த்தவில்லை. அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தனர். நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூடப்படாத மண்டைகளில் காயம் ஏற்படுத்தும் ஒலிகளைக் கேட்டேன். காத்திருந்த வேடிக்கை பார்த்திருக்கும் கூட்டம் தேம்பியது. மற்றும் அவர்களது மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு அடியின் வலிக்கும் அனுதாபம் தெரிவிக்கும்படி செய்தனர். அடிபட்டவர்கள் கைகால்களை நீட்டியவாறு விழுந்தனர், உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்றோ அல்லது சுருண்டு நெளிந்தனர். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நிலம் மெத்தை மீது கிடத்தப்பட்ட உடல்களால் நிரம்பியது. அவர்களது வெள்ளை ஆடைகளில் பெரிய இரத்தக் கறைகள் படிந்தன. மீதமிருந்தவர் வரிசையை உடைக்காமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர்.[64]
விதல்பாய் படேல், முன்னாள் அவைத் தலைவர், அடிபடுவதை கண்டு கூறினார், "ஆங்கிலேயப் பேரரசு மீண்டும் இந்தியாவுடன் நட்புறவை உண்டாக்கும் செயலை எப்போதோ இழந்துவிட்டது.[65] மில்லரின் கதையைத் தணிக்கை செய்ய ஆங்கிலேயரின் முயற்சிகளையடுத்து, அது இறுதியாக உலகம் முழுதும் 1,350 செய்தித்தாள்களில் தோன்றியது, மேலும் அமெரிக்க மேலவையில் அதிகாரபூர்வமாக வாசிக்கப்பட்டது.[66] உப்பு சத்தியாக்கிரகம் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியடைந்தது. நடைப் பயணத்தைக் காண்பிக்கும் செய்திச் சுருளை இலட்சக்கணக்கானோர் கண்டனர். டைம் இதழ் காந்தியை அதன் 1930 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்தது. காந்தியின் உப்பு வரியை மறுத்துக் கடல் நோக்கிய நடைப் பயணத்தை "சில நியூ இங்கிலாந்தவர்களின் ஒருமுறை ஆங்கிலேய தேநீர் வரியை மறுத்தது போன்றது" என ஒப்பிட்டது."[67] சட்ட மறுப்பு 1931 இன் முற்பகுதி வரை தொடர்ந்தது, காந்தி சிறையிலிருந்து இறுதியாக இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்த விடுவிக்கப்பட்டார். இருவரும் சம தகுதியில் பேச்சு வார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.[68] பேச்சு வார்த்தைகள் 1931 இன் இறுதியில் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்கு வழிவிட்டது.
உப்பு சத்தியாக்கிரகம் குடியாட்சி அந்தஸ்தையோ அல்லது விடுதலையையோ நோக்கி மிகக்குறைவான முன்னேற்றத்தையே கொடுத்தது, மேலும் ஆங்கிலேயரிடமிருந்து எவ்விதமான பெரிய சலுகைகள் எதையும் வென்றெடுக்கவில்லை.[69] அது முஸ்லிம்களின் ஆதரவையும் பெறத் தவறியது-பல முஸ்லிம்கள் சத்தியாக்கிரகத்தை புறக்கணித்தனர்.[70] காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாக்கிரகம் அதிகாரபூர்வ கொள்கையாக இருப்பதை முடிவிற்கு கொண்டுவர 1934 இல் தீர்மானித்தனர். நேரு மற்றும் இதர காங்கிரஸ் உறுப்பினர்கள் காந்தியிடமிருந்து மேலும் விலகினர். காந்தி காங்கிரசிலிருந்து விலகியிருந்து தனது ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் செலுத்தச் சென்றார், அதில் அவரது தீண்டாமையை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளும் அடங்கியிருந்தன.[71] இருப்பினும் 1930 களின் மத்தியில் ஆங்கிலேயர் மீண்டும் இப்பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்த போதும், விடுதலைக்கான காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளிலிருந்த நியாயத்தை இந்திய, ஆங்கிலேய மற்றும் உலகின் கருத்துக்கேற்ப படிப்படியாக அங்கீகரிக்கத் துவங்கியது.[72] 1930 களில் சத்தியாக்கிரகம் ஆங்கிலேயரின் இந்தியா மீதான முழுமையான கட்டுப்பாட்டை இந்தியர்களைச் சார்ந்ததாக மாற்றியது.- உப்பு சத்தியாக்கிரகம் ஆங்கிலேயர் இந்தியர்களின் மீதான தனது முழுக் கட்டுப்பாட்டை இழந்ததற்கான குறிப்பிடத்தகுந்த அடியாகும்.[73]
நேரு உப்பு சத்தியாக்கிரகத்தை காந்தியுடனான தனது கூட்டணியில் அதிக பட்ச நீர்க் குறியீடு எனக் கருதினார்.[74] மேலும் அதன் நீடித்த முக்கியத்துவம் இந்தியர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் உணர்ந்தார்:
இயல்பிலேயே, இத்தகைய இயக்கங்கள் ஆங்கிலேய அரசு மீது மிகப் பெரிய அழுத்தத்தை விளைவித்தது மேலும் அரசு இயந்திரத்தை ஆட்டுவித்தது. ஆனால் உண்மையான முக்கியத்துவம், எனது நினைவிற்கு, நமது சொந்த மக்களின் மீது ஏற்படுத்திய பாதிப்பில் இருக்கிறது. மேலும் குறிப்பாகக் கிராம மக்களின் மீது....ஒத்துழையாமை அவர்களைக் கீழ்மையிலிருந்து வெளியேற்றியது; அவர்களுக்குத் தன்மானத்தையும் தற்சார்பையும் கொடுத்தது.....அவர்கள் துணிச்சலாகச் செயல் புரிந்தனர்; மேலும் மிக எளிதாக அநீதியான ஒடுக்குமுறைக்கு அடிபணியவில்லை; அவர்களது புறப்பார்வை விரிவடைந்தது; அவர்கள் சிறிதளவு இந்தியா முழுமைக்குமாக என்ற வரையறையில் சிந்திக்கத் துவங்கினர்....அதொரு நினைவு கூறத்தக்க மாற்றமாகும் மேலும் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அதற்கான பாராட்டுதலுக்கு உரித்தானது."[75]
முப்பதாண்டுகள் கழித்து, சத்தியாக்கிரகம் மற்றும் தண்டிக்கான நடைப் பயணம் அமெரிக்க மனித உரிமை செயல்வீரரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீதும், மற்றும் அவரது 1960 களின் கருப்பர்களுக்கான மனித உரிமை போராட்டத்தின் மீதும் வலுவான தாக்கத்தை விளைவித்தது:
பெரும்பாலான மனிதர்களைப் போல், நான் காந்தியைப் பற்றிக் கேட்டிருக்கிறேன், ஆனால் அவரைத் தீவிரமாகப் படித்ததில்லை. படித்தப்போது நான் அவரது அறவழி எதிர்ப்பு பிரச்சாரங்களினால் ஆழமாகக் கவரப்பட்டேன். நான் குறிப்பாக அவரது கடற்கரைக்கான உப்பு நடைப் பயணத்தினாலும் எண்ணற்ற உண்ணா நோன்புகளாலும் செயற்படத் தூண்டப்பட்டேன். சத்தியாக்கிரகம் எனும் முழுக் கருத்துருவமும் எனக்கு மிக ஆழமான முக்கியத்துவமுடையது. நான் காந்தியின் தத்துவத்தில் ஆழமாக உண்மையை நாடி ஆய்வு செய்யும் போது, எனது அன்புச் சக்தியின் மீதான சந்தேகங்கள் படிப்படியாகக் குறைந்தன, மேலும் நான் முதல் முறையாக அதன் சாத்தியத்தைச் சமூக சீர்த்திருத்த தளங்களில் கண்டேன்.[76]
பெரும் உப்பு நடைப்பயணத்தை நினைவு கூறத்தக்கவகையில், மகாத்மா காந்தி ஃபவுண்டேஷன் 75ஆவது நினைவு தினத்தில் மறு-அரங்கேற்றம் ஒன்றைப் பரிந்துரைத்தது. அந்நிகழ்வு "நீதி மற்றும் விடுதலைக்கான பன்னாட்டு நடை" என அறியப்பட்டது". மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தியும் உடன் வந்த பல நூறு நடைப்பயணிகளும் தண்டிக்கு அதே வழியினைப் பின்பற்றினர். அகமதாபாத்தில் மார்ச் 12, 2005 அன்று துவங்கிய நடைப்பயணம் சோனியா காந்தி மற்றும் பல இந்திய மைய அமைச்சர்கள் உட்பட பலரும் முதல் ஒரு சில கிலோமீட்டர்கள் நடந்தனர். பங்கேற்பாளர்கள் தண்டியில் ஏப்ரல் 5 இரவு தங்கினர், அத்துடன் ஏப்ரல் 7 இல் நினைவு தினம் நிறைவடைந்தது.[77][78]
75 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டித் தண்டி நடைப்பயண நிகழ்வுகள் குறித்த நினைவு அஞ்சல் தலை வரிசைகள் ஏப்ரல் 5, 2005 இல் வெளியிடப்பட்டன. இவை 5 இந்திய ரூபாய் மதிப்புக் கொண்டவை.[79]. தண்டி நடைப்பயணத்தை நினைவு கூறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பணத்தில் காந்தியடிகள் தொண்டர்களுடன், தண்டி யாத்திரை மேற்கொண்ட படம் அச்சிட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.