உதய்பூர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

உதய்பூர் மாவட்டம்map

உதய்பூர் மாவட்டம் (Udaipur District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் உதய்பூர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்த இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது. உதய்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட உதய்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக இருந்தது.

Thumb
இராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் மாவட்டம் - எண் 3

அமைவிடம்

உதய்பூர் மாவட்டத்தின் வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடர்கள் செல்லும் சிரோஹி மாவட்டம் மற்றும் பாலி மாவட்டம், வடக்கில் ராஜ்சமந்து மாவட்டம், கிழக்கில் சித்தோர்கார் மாவட்டம், தென்கிழக்கில் பான்ஸ்வாரா மாவட்டம், தெற்கில் துங்கர்பூர் மாவட்டம், தென்மேற்கில் குஜராத் மாநிலம் எல்லைகளாக அமைதுள்ளது.

மாவட்டப் பிரிப்பு

உதய்ப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய சலும்பர் மாவட்டம் நிறுவப்பட்டது.[1]

புவியியல்

11,724 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் பொதுவாக மலைகளால் சூழ்ந்தது. ஆரவல்லி மலைத்தொடர்களில் உற்பத்தியாகும் சபர்மதி ஆறு, மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பாய்ந்து குஜராத் மாநிலத்திற்குச் செல்கிறது. மாவட்டத்தின் வடக்கில் பாயும் பனாஸ் ஆறு உதய்பூர் நகரத்தின் வழியாக பாய்கிறது. மாவட்டத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மாகி ஆறு, சோம் ஆறு, மற்றும் கோமதி ஆறுகள் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

உதய்பூர் மாவட்டம் கிர்வா, கொவுண்டா, கேர்வாடா, ரிஷபதேவ், மாவ்லி, வல்லபநகர், கோத்தா, ஜதோல் லசாடியா, சலும்பர் மற்றும் சாரதா என பதினோறு வருவாய் வட்டங்களைக் கொண்டது.

பொருளாதாரம்

இம்மாவட்டத்தில் செம்பு, துத்தநாகம், ஈயம், வெள்ளி, சுண்ணாம்புக் கற்கள், கனிமப் பாறைகள், பாஸ்பேட், அஸ்பெஸ்டாஸ், சலவைக் கற்கள் கிடைக்கிறது.[2]

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் உதய்பூர் மாவட்டத்தையும் (இராஜஸ்தான் மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 13 மாவட்டங்களில் உதய்பூர் மாவட்டமும் ஒன்று) இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[3]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,068,420 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.17% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 19.83% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 23.69% % விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,566,801 ஆண்களும்; 1,501,619 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 958 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 11,724 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 262 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.74 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.45 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 508,550 ஆக உள்ளது. [4]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,869,976 (93.53 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 104,307 (3.40 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 78,647 (2.56 %)ஆகவும்; சீக்கிய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.