Remove ads
From Wikipedia, the free encyclopedia
இயேசு சபை (சேசு சபை - சுருக்கம்: சே.ச.) (இலத்தீன்: Societas Iesu, எஸ்.ஜே. மற்றும் எஸ்.ஐ.; ஆங்.: Society of Jesus) கத்தோலிக்க திருச்சபையில் அமைந்துள்ள ஒரு (Religious Order) துறவற சபை ஆகும். இயேசு சபையில் ஆண்கள் மட்டுமே உறுப்பினராகலாம். அவர்களில் பெரும்பான்மையினர் குருக்களும் சிலர் அருட்சகோதரரும் ஆவர். பொதுவழக்கில் "கடவுளின் வீரர்கள்" என்றழைக்கப்படும் இவர்கள் [2] தம் சபை அமைப்புக் கொள்கைகளுக்கிணங்க இயேசு கிறித்துவின் நற்செய்தியைப் பரப்புவதிலும் (evangelization) திருத்தூதுப் பணி (apostolic ministry) ஆற்றுவதிலும் 112 நாடுகளில் ஆறு கண்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சுருக்கம் | சே.ச. (SJ) |
---|---|
உருவாக்கம் | 27 செப்டம்பர் 1540 |
வகை | கத்தோலிக்க துறவற சபை |
தலைமையகம் | இயேசு கோவில் (தாய்க்கோவில்), |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 41°54′4.9″N 12°27′38.2″E |
உயர் தலைவர் | அடால்ஃபோ நிக்கோலசு |
முக்கிய நபர்கள் | லொயோலா இஞ்ஞாசியார் — நிறுவனர், பிரான்சிஸ் சவேரியார் |
பணிக்குழாம் | 19,216[1] |
வலைத்தளம் | sjweb.info |
இயேசு சபையினர் ஆற்றும் பல்வேறு பணிகளுள் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: கல்வித் துறை (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இறையியல் கல்லூரிகள், மெய்யியல் துறைகள் போன்றவை நடத்தல்); அறிவாய்ந்த ஆய்வுகள் நிகழ்த்தல்; கலைகளை வளர்த்து, பண்பாட்டு ஆய்வை மேம்படுத்தல். அவர்கள் ஈடுபடுகின்ற வேறு முதன்மைப் பணிகள் கிறித்தவ மறைபரப்புப் பணி, தியான முயற்சிகள் நடத்துதல், பங்குப் பணி, மருத்துவப் பணி, சமூக நீதிப் பணி, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணி, மனித உரிமைகள் காப்புப் பணி, கிறித்தவ ஒருமைப்பாட்டை வளர்க்கும் பணி, பல்சமய உரையாடல் பணி போன்றவை ஆகும்.
இயேசு சபை புனித லொயோலா இஞ்ஞாசியார் (1491-1556) என்பவரால் நிறுவப்பட்டது. ஒரு போரில் படுகாயமடைந்து படுக்கையிலிருந்த இஞ்ஞாசியார் இறையருளால் ஆழ்ந்ததொரு மனமாற்றம் அடைந்தார். இயேசு கிறித்துவைத் தம் வாழ்வில் இன்னும் அதிக ஈடுபாட்டோடு பின்பற்றிட இஞ்ஞாசியார் துணிந்தார். ஆன்ம பயிற்சிகள் என்றழைக்கப்படும் சிறந்ததொரு கிறித்தவ ஆன்மிக நூலை இயற்றினார். 1534இல் இஞ்ஞாசியார் பாரிசு நகர் பல்கலைக் கழகத்தில் தம்மோடு கல்விபயின்ற ஆறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து, வறுமை, தூய்மை மற்றும் பாப்பரசருக்கு (திருத்தந்தை) கீழ்ப்படிதல் என்ற உறுதிமொழிகளை எடுத்து, ஒரு குழு வாழ்வுக்கு வித்திட்டார். அதுவே நாளடைவில் இயேசு சபை என்னும் மரமாக வளர்ந்து தழைத்தோங்கியது.
கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து, அதன் மேலாண்மைக்குப் பணிந்து செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் மிகவும் வலியுறுத்தினார். "திருச்சபைத் தலைமைப்பீடம் வரையறுத்தால், நன் காணும் வெள்ளையும் கருப்பே என்று நம்பத் தயங்கமாட்டேன்" என்னும் அவரது கூற்று இதை உறுதிப்படுத்துகிறது (காண்க: "திருச்சபையோடு இணைந்து சிந்திப்பதற்கான ஒழுங்குகள்", ஒழுங்கு 13)[3]. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் பவுல் (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தம் கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் இயேசு சபையினர் ஊக்கத்தோடு ஒத்துழைத்தார்கள்.
இயேசு சபையின் தலைமையிடம் உரோமை நகரில் அமைந்துள்ளது. அதன் உயர் தலைவர் அருள்மிகு அடோல்ஃபோ நிக்கொலாசு ஆவார்.[4][5]
புனித இஞ்ஞாசியார் பணிபுரிந்த அலுவலகமும் அதோடு இணைந்த பயிற்சிக் கல்லூரி விடுதியும் இன்று இயேசு சபையினரின் முதன்மைக் கோவிலாகிய இயேசு கோவில் என்னும் பேராலயத்தின் பகுதியாக உள்ளன. இந்திய நாட்டில் மறைப்பணி ஆற்றி உயிர்நீத்த இயேசு சபை உறுப்பினரான புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) என்பவரின் வலது கை இக்கோவிலில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இயேசு கிறித்துவின் தாய் மரியா மீது இஞ்ஞாசியார் மிக்க பக்திகொண்டிருந்தார். அவர் தோற்றுவித்த இயேசு சபையும் "வழிகாட்டும் அன்னை" (Madonna Della Strada) என்னும் சிறப்புப் பெயர் பூண்ட அன்னை மரியாவின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் இயேசு சபையினர் பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில:
கீழ்வரும் இறையியல் கல்லூரிகளையும் இயேசு சபையினர் நடத்துகின்றனர்:
இயேசு சபையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களிலிருந்து பல விளையாட்டு வீரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (புனித இஞ்ஞாசியார் உயர்நிலைப் பள்ளி, கும்லா; புனித மேரி உயர்நிலைப் பள்ளி, சம்தோலி; இலயோலா பள்ளி, ஜாக்மா, கொஹீமா).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.