ஆ பாமோசா
1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டை From Wikipedia, the free encyclopedia
1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டை From Wikipedia, the free encyclopedia
ஆ பாமோசா (மலாய் மொழி: Kota A Famosa; போர்த்துகீசியம்: Fortaleza Velha (The Famous); ஆங்கிலம்: A Famosa; டச்சு மொழி: De Misericorde (Our Lady of Mercy); பிரெஞ்சு: Notre Dame de Miséricorde; சீனம்: 法摩沙堡) என்பது 1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டையாகும்.[1]
ஆ பாமோசா A Famosa | |
---|---|
மலாக்கா, மலேசியா | |
ஆ பாமோசா கோட்டையில் எஞ்சியிருக்கும் வாயில் பகுதி | |
ஆள்கூறுகள் | 2°11′29.82″N 102°15′1.10″E |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | போர்த்துகல் பேரரசு (1511–1641) டச்சு அரசு (1641–1795) பிரித்தானியா (1795–1807) |
மக்கள் அனுமதி |
உண்டு |
நிலைமை | சில கட்டமைப்புகளைத் தவிர பெரிய அளவில் அழிக்கப்பட்டது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1511 |
பயன்பாட்டுக் காலம் |
1511–1807 |
கட்டியவர் | போர்த்துகல் பேரரசு |
கோட்டையின் மிகப் பழமையான பகுதி, ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அந்தப் பகுதி உடைக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த கோட்டைக்கும் ஆ பாமோசா என்று பெயர் வைக்கப்பட்டது.[2] போர்த்துகீசிய மொழியில்: Fortresse de Malacca. புகழ்மிக்க அல்லது பிரபலம் என்று பொருள்.
இந்தக் கோட்டை, ஆசியாவில் எஞ்சி இருக்கும் பழைமையான ஐரோப்பிய கட்டிடக்கலை எச்சங்களில் ஒன்றாகும். போர்டா டி சாண்டியாகோ (The Porta de Santiago) எனும் ஒரு சிறிய வாயில் மட்டுமே கோட்டையின் எஞ்சிய பகுதியாக இன்னும் உள்ளது. அதைத்தான் ஆ பாமோசா என்று அழைக்கிறார்கள்.
1641-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களுக்கும் இடச்சுக்காரர்களும் இடையே மலாக்காவில் ஒரு பெரிய போர் நடந்தது. அதற்கு மலாக்கா போர் (1641) என்று பெயர். அதில் போர்த்துகீசியர்கள் தோல்வி அடைந்தார்கள். வெற்றி பெற்ற இடச்சுக்காரர்கள், ஆ பாமோசா கோட்டையின் பல பகுதிகளை அப்போதே அழித்து விட்டார்கள்.
பீரங்கித் தாக்குதல்களால் ஆ பாமோசா கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் கடுமையாகச் சேதம் அடைந்தன. அவற்றைப் புனரமைக்க நீண்ட காலம் பிடிக்கலாம் என்பது இடச்சுக்காரர்களின் கணிப்பு. அத்துடன் கோட்டையை மீட்டமைக்க அதிகச் செலவாகலாம் என்பதால் தகர்த்து விடுவதே சிறப்பு என இடச்சுக்காரர்கள் முடிவு செய்தார்கள்.
ஆ பாமோசா கோட்டை டச்சுக்காரர்களின் கைவசம் வந்ததும், கோட்டையின் வெளிப்புறச் சுவர்களின் சில இடங்கள் பலப்படுத்தப்பட்டன. இருப்பினும், 1807-இல், மலாக்காவிற்கு வந்த பிரித்தானியர்கள், எஞ்சியிருந்த பெரும்பாலான கோட்டைப் பகுதிகளை அழித்து விட்டார்கள்.
போர்ட்டா டி சந்தியாகோ எனும் நுழைவாயிலும்; மிடல்பர்க் கொத்தளம் (Middelburg Bastion) எனும் நடுப்பகுதிகள் மட்டுமே இன்றைய வரையில் எஞ்சியுள்ளன. ஆ பாமோசா கோட்டையின் எஞ்சிய பாகங்கள், தென்கிழக்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில், பழைமையான ஐரோப்பியக் கட்டிடக்கலை எச்சங்களாக இன்றும் விளங்கி வருகின்றன.
1511-ஆம் ஆண்டு அபோன்சோ டி அல்புகெர்க் தன்னுடைய கடல் படையுடன் மலாக்காவிற்கு வந்தார். மலாக்கா சுல்தானகத்துடன் போரிட்டார். அந்தப் போரில் வெற்றி பெற்று மலாக்காவைக் கைப்பற்றினார். அதுவே மலாக்கா வரலாற்றில் போர்த்துகீசிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[3]
அபோன்சோ டி அல்புகெர்க் உடனடியாக ஒரு குன்றின் அடிவாரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார். இப்போது அந்தக் குன்று செயின்ட் பால் குன்று (St. Paul’s Hill) என்று அழைக்கப் படுகிறது.
சீனாவையும் போர்த்துகல் நாட்டையும் இணைக்கும் ஒரு முக்கியத் துறைமுகமாக மலாக்கா நகரம் மாறும் என்று அபோன்சோ டி அல்புகெர்க் நம்பினார். அப்போதைய நாளில் ஆசிய நறுமண சாலையின் (Spice Route) முக்கியத் தளமாக மலாக்கா நகரம் பெயர் பெற்று விளங்கியது.
அதே சமயத்தில் அந்த நேரத்தில் போர்த்துகீசியர்களுக்கு சீனா, மக்காவ் நகரத்திலும், இந்தியா கோவா நகரத்திலும் வணிக நிலையங்கள் இருந்தன. இந்தியாவின் சென்னை, கொச்சி, கோவா, மும்பை துறைமுகப் பட்டினங்களும் வணிக மையங்களாக புகழ்பெற்று விளங்கின.
கோட்டைக்கு நீண்ட பாதுகாப்பு அரண்கள் இருந்தன. நான்கு கோபுரங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கின. கோபுரங்களில் ஒன்று 60 மீ. உயரத்தில் நான்கு அடுக்கு மாடிகளைக் கொண்டது. இந்தக் கோபுரம் 1641-ஆம் ஆண்டு உடைப்பட்டு விட்டது.
மற்றவற்றில் கேப்டனின் குடியிருப்பு; அதிகாரிகளின் குடியிருப்பு; வெடிமருந்துகள் இருக்கும் சேமிப்பு அறைகள் இருந்தன. பல ஆண்டுகளாக, ஆ பாமோசா கோட்டை சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. பிற பகுதிகளும் சேர்க்கப் பட்டன. [4]
கோட்டைச் சுவர்களுக்குள் பெரும்பாலான நகர வீடுகளும்; கிராமங்களும் குவிந் இருந்தன. மலாக்காவின் மக்கள் தொகை கூடியதால், அசல் கோட்டையைத் தாண்டி வெளியேயும் மக்கள் தொகை பெருகி வழிந்தது.[5]
அதனால் கோட்டை விரிவாக்கங்கள் 1586-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன. அத்துடன் இடையிடையே பூர்வீக மக்களின் பெரிய தாக்குதல்களும் நடைபெற்றன. அவற்றையும் இந்தக் கோட்டை தாங்கிக் கொண்டது.[6]
1670-ஆம் ஆண்டில் கோட்டையின் வாயிலை டச்சுக்காரர்கள் புதுப்பித்தனர். கோட்டை வாயிலின் வளைவில் அன்னோ 1670 (ANNO 1670) எனும் சின்னத்தைப் பதித்தனர். அதற்கும் மேலே டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் (Dutch East India Company) சின்னம் பொறிக்கப்பட்டது.[3]
இந்தக் கோட்டை, பல நூற்றாண்டுகளாகக் காலனித்துவக் கால மாற்றங்களைக் கண்டுள்ளது. டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய போது, 1670-ஆம் ஆண்டில் நுழைவாயிலை மாற்றி அமைத்தனர்.
ஆனால் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும், கோட்டையை இடிக்க உத்தரவிட்டனர். நெப்போலிய போர்களின் முடிவில் கோட்டையை டச்சுக்காரர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களுக்கு இந்த நகரத்தைப் பயனற்றதாக மாற்றுவதில் உறுதியாக இருந்தனர். மக்களை இடம் மாற்றவும், கோட்டையை இடிக்கவும் திட்டமிட்டனர். கோட்டையை உடைப்பதற்கு தலைமை தாங்கியவர் வில்லியம் பார்குவார். இவர்தான் மலாக்காவின் முதல் பிரித்தானிய ஆளுநர்.[5]
சர் இசுடாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) தலையிட்டு, கோட்டையின் வாயிலை இடிக்காமல் விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். இல்லை என்றால் அதுவும் உடைக்கப்பட்டு இருக்கும்.
சிங்கப்பூரை உருவாக்கியவர் என்று புகழப்படும் சர் இசுடாம்போர்ட் ராபிள்ஸ், நோய்வாய்ப்பட்டு இருந்ததால், சிங்கப்பூரில் இருந்து பினாங்கு சென்று கொன்டு இருந்தார். செல்லும் வழியில் மலாக்காவிற்கு வந்த போது கோட்டை இடிபாடுகள் நடந்து கொன்டு இருந்தன.
2006 நவம்பர் மாதம், மலாக்கா நகரத்தில் 110 மீட்டர் சுழலும் கோபுரம் கட்டும் போது, மிடல்பர்க் கொத்தளம் (Middelburg Bastion) என்று நம்பப்படும் ஆ பாமோசா கோட்டையின் கொத்தளத்தின் ஒரு பகுதி தற்செயலாகச் கண்டுபிடிக்கப்பட்டது. கோபுரத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.
சுழலும் கோபுரம் கட்டும் இடம், பின்னர் மலாக்கா மெர்டேகா சாலையில் உள்ள பண்டார் ஈலிர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அந்தக் கோபுரம் அதிகாரப்பூர்வமாக 18 ஏப்ரல் 2008-ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
1641 முதல் 1824 வரை மலாக்காவை இடச்சுக்காரர்கள் ஆட்சி செய்த போது இடச்சுக்காரர்களால் மிடல்பர்க் கொத்தளம் கட்டப்பட்டு இருக்கலாம் என்று மலாக்கா அரும்காட்சிய அமைப்பு (Malacca Museums Corporation) கூறுகின்றது. 2006-2007-ஆம் ஆண்டுகளில் மிடல்பர்க் கோட்டை மீட்டு எடுக்கப்பட்டது.
இதற்கும் முன்னதாக சூன் 2004-இல், டாத்தாரான் பாலவான் (Dataran Pahlawan) எனும் வீரர்கள் சதுக்கம் கட்டப்படும் போது சாந்தியாகோ பேசன் (Santiago Bastion) என்ற காவல் கொத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது.[7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.