அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக வடக்குத் தெற்காக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.
இந்த மலைத்தொடரானது அதன் இயற்கை அமைப்பால் பல எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைப் பகுதியில் பல உயர்ந்த பீடபூமிகளின் இருப்பிடமாக உள்ளது - சிலவற்றில் கித்தோ, பொகோட்டா, அரேக்கிப்பா, மெதெயின், சுக்ரே, மெரிடா மற்றும் லா பாஸ் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. திபெத்திய பீடபூமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயரமான பீடபூமியான அலிப்ளானோ பீடபூமி இம் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியின் எல்லைகள் காலநிலை அடிப்படையில் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை: வெப்ப மண்டல ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், மற்றும் வெப்பமண்டல மழை மிகுந்த ஆண்டிஸ் போன்றவை ஆகும்.
ஆசியா கண்டத்துக்கு வெளியே உள்ள உலகின் மிக உயரமான மலைகளைக் கொண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் ஆகும். ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலை, அக்கோன்காகுவா மலை, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீ (22,838 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. புவியின் சுழற்சியின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விட பூமியின் மையத்திலிருந்து எக்குவடோர் ஆண்டிஸி மலையில் உள்ள சிம்போரசோ மலை உச்சி கூடிய தூரத்தில் உள்ள இடம் ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. சிலி-அர்ஜென்டீனா எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஓஜோஸ் டெல் சலாடோ உள்ளிட்ட உலகின் மிக உயரமான எரிமலைகள் உள்ளன, இது 6,893 மீ (22,615 அடி) உயரும் கொண்டது.
வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிவரை "முதுகெலும்பு" போல உருவான மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் சங்கிலி, ஆண்டிஸ் அமெரிக்கன் கார்டில்லெராவின் பகுதியாகும்.
ஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா[1](Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.
ஆண்டிஸ் என்ற வார்த்தையின் சொற்பிற்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தாக கெச்வா மொழிச் சொலான ஆண்டி என்ற சொல்லில் இருந்து இது உருவானது என கருதப்படுகிறது, இச்சொல்லின் பொருள் "கிழக்கு"[2] அதாவது அன்டிசுயுவில் ("கிழக்குப் பிராந்தியத்திற்கான கௌசோவா"),[2]இன்கா பேரரசின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாகும்.
ஆண்டிஸ் மலைத்தொடரை மூன்று பிரிவுகள் பிரிக்கலாம்:
அர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தெற்கு ஆண்டிஸ்;
எக்குவடோர், பெரு மற்றும் பொலிவியாவில் நடு ஆண்டிஸ்
வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள வடக்கு ஆண்டிசானது, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று இணை எல்லைகளைக் கொண்டது.
ஆண்டிஸின் வடக்கு பகுதியானது, சியரா நெவாடா டி சாண்டா மார்தா தீவு மலைத்தொடர் பெரும்பாலும் ஆண்டிசின் பகுதியாக கருதப்படுகிறது. ஆண்டிசு மலைப்பகுதி அதன் நீளம் முழுவதும் 200 கிமீ (124 மைல்) அகலத்தில் உள்ளது, இதில் 640 கிலோமீட்டர் (398 மைல்) அகலம் கொண்ட பொலிவிய பகுதி ஒரு விதிவிலக்கு ஆகும்.
அந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்னமெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும்.
அந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன.
இம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும்.
ஓஃகோஸ் டெல் சலாடோ (Ojos del Salado), 6,893 மீ
நெவாடோ டிரேஸ் குரூசெஸ் (Nevado Tres Cruces), 6,749 மீ (தென் முகடு) (III Region)
யுல்யையையாக்கோ (Llullaillaco), 6,739 மீ
இன்க்காவுசி (Incahuasi), 6,620 மீ
டுப்புன்காட்டோ (Tupungato), 6,570 மீ
நாசிமியென்ட்டோ (Nacimiento), 6,492 மீ
சியெர்ரா நெவாடா டெ லகூனாஸ் பிராவாஸ் (Sierra Nevada de Lagunas Bravas), 6,127 மீ
கோர்டோன் டெல் ஆசுஃவ்ரே (Cordón del Azufre), 5,463 மீ
செர்ரோ எஸ்க்கோரியால் (Cerro Escorial), 5,447 மீ
மைப்போ எரிமலை (Maipo)), 5,264 மீ
செர்ரோ சால்ட்டென்(Cerro Chaltén), 3,375 மீ or 3,405 மீ, பட்டகோனியா, இது செர்ரோ ஃவிட்ஸ் அல்லது செர்ரோ ஃவிட்ஸ் ராய் (Cerro Fitz Roy) என்றும் அழைக்கப்படுகின்றது.
நெவாடோ சஃகாமா (Nevado Sajama), 6,542 மீ
இல்யாமனி அல்லது இயாமனி (Illimani), 6,438 மீ
அன்க்கோவுமா(Ancohuma), 6,427 மீ
இல்யாப்பு அல்லது இயாம்ப்பு (Illampu), 6,368 மீ
உய்னா பொட்டோசி (Huayna Potosí), 6,088 மீ
கபாரே (Cabaray), 5,860 மீ
நெவாடோ அன்னாயாஃகசி (Nevado Anallajsi), 5,750 மீ
மாச்சீசோ டெ லரான்க்காகுவா (Macizo de Larancagua), 5,520 மீ
சக்கால்தயா (Chacaltaya), 5,421 மீ
தாத்தா சபாயா (Tata Sabaya), 5,430 மீ
மாச்சீசோ டெ பக்கூனி (Macizo de Pacuni), 5,400 மீ
பாட்டியா பட்டா (Patilla Pata), 5,300 மீ
அக்கோட்டாங்கோ (Acotango), 6,052 மீ
செர்ரோ மின்ச்சின்ச்சா (Cerro Minchincha), 5,305 மீ
இறுபுட்டுன்க்கு (Irruputuncu), 5,163 மீ
லிக்கான்காபுர் (Licancabur), 5,920 மீ
ஓல்க்கா (Olca), 5,407 மீ
பரினாக்கோட்டா எரிமலை (Parinacota), 6,348 மீ
பருமா (Paruma), 5,420 மீ
போமராப்பே (Pomerape), 6,282 மீ
மொன்டி சான் வலென்டின் (Monte San Valentin), 4,058m (13,314அடி)
கோடியெல்லேரா டெல் பெய்ன் (Cordillera del Paine), 2,750m (9,022அடி)