From Wikipedia, the free encyclopedia
அரசறிவியல் (political science) என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு சமூக அறிவியல் கற்கை நெறி ஆகும்.[1] இது குறிப்பாக அரசியல் கொள்கை, மற்றும் நடைமுறை, அரசாட்சி முறைமைகளைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் பொருளியல், சட்டம், சமூகவியல், வரலாறு, மானிடவியல், பொது நிர்வாகம், பன்னாட்டு உறவுகள், உளவியல், மற்றும் அரசியல் தத்துவம் போன்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பொலிடிக்ஸ் (politics) என்பது கிரேக்கப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந் நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டிற்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட்டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந் நகர அரசுகளை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அதாவது இவை அரசுகளாக மட்டுமன்றி சமுதாயமாகவும் விளங்கியதால் மக்களின் பொதுநடத்தையையும், தனி நடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந் நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருந்தன.
ஆரம்ப காலங்களில் அரசு பற்றிய விஞ்ஞானம் என்றும், அரசின் கடந்தகால – நிகழ்கால – எதிர்கால நிலை பற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், கோட்பாடுகள் பற்றிய கல்வியே அரசறிவியல் என்றும் அரசினை முன்னிலைப்படுத்தி அரசறிவியலுக்கு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு அரசினை முதன்மைப்படுத்தி கூறும் விளக்கத்தினை அரசியலறிஞர்களான பிளன்ற்சிலி (Bluntchili), கார்ணர் (Garner), கெட்டல் (Gettal), பிராங்குட்நோவ் (Frankgutnov), பொலொக் (Pollock), ஸ்ட்ரோங் (Strong) முதலானோர் ஆதரிக்கின்றனர்.
19ம் 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு நிலை சார்ந்த இக் கருத்துநிலைகள் கூடிய செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்ந்தன. Guy அரசியலானது அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமைகின்ற போதிலும் அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவையாகா. அவை ஒன்றிலிருந்து ஒன்று தம்மிடையே வேறுபட்டவை. அரசியல் என்பது அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியலோடு தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. அதாவது அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றை சார்ந்தவராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால் அரசியல் விஞ்ஞானி என்பவர் அரசுடன் தொடர்புடைய சரித்திரம், சட்டம், கோட்பாடு, நடைமுறை போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவார். அதே வேளை அரசியல் விஞ்ஞானிகளும் நேரடியாக அரசியலில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டலாம்.
J.W. கார்ணர் (Garner) என்பவர் மிகச் சுருக்கமாக “அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும் முடிவும் அரசு” என்கிறார். அவ்வாறெனின் அரசு என்பது யாது எனின், ஒரு மனித குழு ஒரு சமூகமாக இயங்குவதற்கு தனது நடத்தைகளையும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கின்றது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அச் சமூகம் அரசு என வர்ணிக்கப்படலாம். அதில் நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்குரிய விதிகள் அல்லது கோட்பாடுகள் சட்டம் எனப்படலாம். அச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் எனலாம். எனவே அரசு என்பதை மிகச் சுருக்கமாக கூறின் - “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்” என்று குறிப்பிடலாம்.
அரசியல் சிந்தனையில் அரசின் தோற்றம் தொடர்பாக பல்வேறு சிந்தனைகள் காணப்படுகின்றன.
இவ்வாறான கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும். அதாவது அரசானது சமூகத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு இக் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பில் பல்வகை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hopes), ஜோன் லொக் (John Lock), ரூசோ (Russaue) போன்றோரே சமூக ஒப்பந்தவாதிகளில் சிறப்பானவர்களாகும்.
அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.