அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம்

From Wikipedia, the free encyclopedia

அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம் (European colonization of the Americas) 1492இல் கொலம்பசு அமெரிக்காவைக் கண்டறிந்ததிலிருந்து தொடங்குகின்றது. இருப்பினும், கொலம்பசிற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவிற்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர்கள் வைக்கிங் ஆவர். எசுக்காண்டினாவியாவைச் சேர்ந்த இந்த வலுமிகு மாலுமிகளும் போர்வீரர்களும் கி.பி 1000களில் வட அமெரிக்காவை அடைந்தனர். இந்த நோர்சுகள் அமெரிக்காவில் வந்திறங்கி வைன்லாந்தை உருவாகியிருந்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இருக்கவில்லை. எனவே, நடைமுறையில், அமெரிக்காக்களின் குடியேற்றம் கொலம்பசின் வரவுடனேயே தொடங்கியது.

வரலாறு

கி.பி 1300களிலும் 1400களிலும் மேற்கு ஐரோப்பியர் கிழக்கிந்தியத் தீவுகளை வந்தடைய புதிய ஒழிகளைக் கண்டறிவதில் ஈடுபட்டனர்; ஏற்கெனவே இருந்த நிலவழி மிகவும் கடினமாகவும் நீளமானதாகவும் இருந்தமையால் கடல்வழிகளை நாடினர். மேலும் இடைத்தரகர்கள் மூலமாக பொருட்கள் வந்தடைந்ததால் விலைகள் மிகவும் கூடுதலாக இருந்தன; நேரடி வணிகம் மூலம் விலைகளைக் கட்டுப்படுத்த முயன்றனர். சில புவியிலாளர்கள் உலகத்தின் சுற்றளவை சிறியதாக மதிப்பிட்டு மேற்கில் சென்றால் உலகைச் சுற்றிக்கொண்டு கிழக்காசியாவை அடையலாம் என கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதனை ஏற்ற செனோவாவின் கப்பல்தலைவர் கொலம்பசு முதலாம் இசபெல்லா அரசியை இத்தகைய கடற்பயணத்தை மேற்கொள்ள நிதி தர வேண்டினார்.

ஆகத்து 1492இல் கொலம்பசு எசுப்பானியாவின் தென்பகுதியிலிருந்து மூன்று கப்பல்களுடன் புறப்பட்டார்: நினா, பின்டா , சான்டா மாரியா. கடலில் பல வாரங்கள் பயணித்த பிறகு அக்டோபர் 12 அன்று கப்பல்கள் பகாமாசில் இருந்த தீவொன்றை அடைந்தன. இத்தீவை கொலம்பசு சான் சால்வடார் எனப் பெயரிட்டார். இதனை ஓர் இந்தியத் தீவாக கருதிய கொலம்பசு அங்கிருந்தவர்களை "இந்தியர்" என்றார். கரிபியனில் மேலும் பயணித்து கியூபா வந்தடைந்தார்; இங்கு மக்கள் புகையிலை புகைப்பதைக் கண்டார். பிறகு எசுப்பானியாவிற்குத் திரும்பினார். அங்கு இராணியும் அரசரும் பல விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

கொலம்பசின் மீள் பயணங்களில் கூடுதலான ஆட்களையும் கிறித்தவ பரப்புரையாளர்களையும் கூட்டிச் சென்றார்.இக்கப்பல்களில் குடியேற்றங்களை நிறுவ பண்ணை விலங்குகளும் விளைபொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. தற்போதைய டொமினிக்கன் குடியரசு அமைந்துள்ள தீவில் புதிய குடியேற்றத்தை நிறுவினார்.

தாங்கள் கண்டறிந்தது ஆசியாவிற்கான புதிய வழியல்ல, “புதிய உலகம்” என்பதை உணர்ந்தபின் எசுப்பானியர்களின் இலக்கு புதிய பகுதிகளை கைப்பற்றுவதாக இருந்தது. கைப்பற்றுகையாளர்கள் புதிய உலகின் நிலப்பகுதிகளை தேடவும் கைப்பற்றவும் அரசியியால் அனுமதிக்கப்பட்டனர்.

சில நூறு படைவீரர்களைக் கொண்டே எசுப்பானிய கைப்பற்றுகையாளர்கள் பெரும் உள்ளூர் பேரரசுகளை வாகை கொண்டனர். 1519இல் எர்னான் கோட்டெசும் சிலநூறு வீரர்களும் அசுடெக் தலைநகரில் உள்நுழைந்து நகரத்தை அழித்தனர். இவ்விடத்தில் மெக்சிக்கோ நகரம் கட்டமைக்கப்பட்டது. பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசை வீழ்த்தினார். எசுப்பானியர்கள் பல காரணங்களால் வெற்றி பெற்றனர் - உள்ளூர் குடிகள் அவர்களை கடவுள்கள் என்று நம்பினர்; குதிரைகளையும் துப்பாக்கிகளையும் கண்டு பயந்தனர்.

குடியேற்ற நாடுகள்

எசுப்பானியாவும் போர்த்துகல்லும் 16ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிலும் நடு அமெரிக்காவிலும் பெரும்பகுதிகளில் குடியேறியவர்களாவர். வட அமெரிக்காவிலும் பல பகுதிகளை வென்றனர். அடுத்த நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் அமெரிக்க ஐக்கிய நாடு பகுதிகளில் குடியேறினர். எசுப்பானியர்களும் போர்த்துகேயர்களும் ஏற்கெனவே வெப்பமான தென் பகுதிகளை பிடித்திருந்ததனால் இவர்கள் பெரும்பாலும் வட அமெரிக்காவில் குடியேறினர். இவர்களில் பிரான்சும் இங்கிலாந்தும் முதன்மையானவர்களாக இருந்தனர். இங்கிலாந்து கிழக்கு வட அமெரிக்காவின் நடுப்பகுதியையும், பிரான்சியர்கள் வடக்கிலும் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் ஆங்கிலேயர்கள் பெரும்பாலான பிரான்சியப் பகுதிகளை கைப்பற்றினர்.[1]

தெற்கத்திய ஆங்கிலேய குடியேற்றவாதிகள் தங்கம் தேடி அலைந்தனர். இருப்பினும், வளமான நிலமாக இருந்ததால் புகையிலை போன்ற பணப்பயிர்களை வேளாண்மை செய்தனர். வடக்கிலிருந்த ஆங்கிலேய குடியேற்றவாதிகள் அங்கு இவற்றை பயிரிட இயலவில்லை. எனவே தென்பகுதி மக்கள் செல்வந்தர்களாயினர். நியூ இங்கிலாந்தை நிறுவிய தூய்மையாளர்கள் தாய்நாட்டின் ஆங்கிலிக்க ஒன்றியத்திலிருந்து விடுபட விரும்பி வந்தவர்களாவர்.[1] நடு வட அமெரிக்காவில் இருந்த குடியேற்றங்கள் வணிக இலக்கு கொண்டவையாக இருந்தன. இவர்கள் விலங்குகளின் மென்மயிர்களில் வணிகம் புரிந்தனர்; தங்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபட்டதோடு மற்ற ஆங்கிலேயக் குடியேற்றங்களுக்கும் விற்பனை செய்தனர். பின்னாளில் இங்கிலாந்திற்கும் ஏற்றுமதி செய்தனர்.

எசுப்பானியர்கள் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் குடியேற்றங்களை நிறுவினர். தங்கம், வெள்ளி அகழ்வு, புகையிலை வேளாண்மை போன்றவற்றில் உள்ளூர் குடிகளைப் பணியாளர்களாக ஈடுபடுத்தி வந்தனர். பழக்கமில்லாதப் பணிகளால் பல உள்ளூர் குடிகள் உயிரிழந்தனர். இதனால் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். போர்த்துகேயர்கள் பிரேசிலில் கரும்பு போன்ற பணப்பயிர்களை விளைவித்தனர். இதற்காக அத்திலாந்திக் அடிமை வணிகத்தின் பெரும்பகுதி இப்பகுதிகளில் நடைபெற்றது.

பிரான்சிற்கு கரிபியனிலும் வட அமெரிக்காவின் வடக்கிலும் (கனடா), குடியேற்றங்கள் அமைந்தன. வடக்கில் வடமேற்குப் பெருவழி மூலமாக ஆசியாவிற்குச் செல்ல இவர்கள் வழிதேடினர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் பிரான்சியர்கள் உள்ளூர் மக்களுடன் உடன்பட்டு வாழ்ந்தனர். விலங்கு மென்மயிர் வணிகத்தில் பிரான்சு பெரும் இலாபம் ஈட்டியது.[1] பிரான்சியக் கரிபியன் குடியேற்றங்கள் வேளாண்மைக்கு ஏற்றவையாக இருந்தன. கனடாவின் விளைநிலங்களில் அடிமைகளைப் பயன்படுத்தாத பிரான்சியர்கள் இங்கு ஆபிரிக்க அடிமைகளை பயன்படுத்தினர்.

இவற்றையும் காண்க

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.