புனிதப்பயணம் From Wikipedia, the free encyclopedia
ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும். ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லாஹ்) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது.[1] துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவூதி அரேபியாவிலுள்ள மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரிலுள்ள திருக் கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும். இந்த புனிதப் பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12 வது மாதமான துல் ஹஜ் 8 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும். ஹிஜ்ரி நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால் ஆங்கில நாட்காட்டியை விட இது பதினொரு நாட்கள் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறி வரும். இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இஹ்றாம் என்னும் புனித நிலையில் இருக்க வேண்டும்.
இஸ்லாத்தில் ஹஜ் புனிதக் கடமை முகம்மது நபியின் காலத்தில் 7ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகும். ஆனால் அதற்கு முன்பாகவே இஸ்லாம், யூதம் மற்றும் கிறித்தவம் என்பவற்றின் தீர்க்கதரிசியாகிய இப்ராகீமின் காலத்திலேயே மக்கா நகருக்கு ஆயிரக்கணக்கானோர் பயணித்தனர். அவர்கள் கஃபாவை ஏழு முறை இடப்புறமாக வலம் வந்தும், அல்-சஃபா மற்றும் அல்-மர்வாஹ் மலைகளின் நடுவே மாறி மாறி ஓடியும், அறபா மலையிற் தங்கியும், சம்சம் கிணற்றின் புனித நீரைப் பருகியும், சைத்தானின் மீது கல்லெறிந்தும் வழிபட்டனர். பின் தங்கள் தலையை மொட்டை அடித்து, ஒரு கால்நடை விலங்கை அறுத்துப் பலியிட்டு ஈதுல் அள்ஹா எனும் மூன்று நாள் திருவிழாவான தியாகத் திருநாளைக் கொண்டாடினார்கள்.[2][3][4].
ஹதீசின் (நபிமொழிகள்) படி ஹஜ் புனிதப் பயணம் இப்ராகீமின் காலமான கி.மு 2000 வருடம் முதலே நடைபெற்று வருகிறது. ஆபிரகாமிய சமயங்களின் தொன்மவியலின்படி இறைவன் இப்ராகீமை, அவர் மனைவி ஹாஜர் மற்றும் குழந்தை இசுமாயில் இருவரையும் பாலைவனத்தில் தனியே விட்டு செல்லுமாறு பணித்தான். அவர் இல்லாத நிலையில் குழந்தை இசுமாயில் தண்ணீர் தாகத்தால் தவித்தார். அப்பொழுது நீரை தேடி ஹாஜர் அல்-சபா மற்றும் அல்-மார்வாஹ் மலைகளின் நடுவே ஏழு முறை மாறி மாறி ஓடினார். அப்பொழுது குழந்தை இசுமாயில் தண்ணீர் தாகத்தால் தம் காலால் தரையில் உதைத்தார். உடனே அதிசயமாக அவ்விடத்தில் தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகியது. இந்த நீர்நிலையே தற்பொழுது சம்சம் கிணற்றின் புனித நீராகக் கருதப்படுகிறது.
நபிகளின் காலத்திற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் அரேபிய தீபகற்பம் முழுதும் உள்ள பழங்குடியினர் அனைவரும் மக்கா நகரில் ஒன்று கூடினர். இதன் சரியான நோக்கம் என்னவென்று தெரியாத நிலையில் அரேபியக் கிறிஸ்தவர்களும் இதில் கலந்துகொண்டதால் இது அஞ்ஞானிகள் கூடுமிடமாகக் கருதப்பட்டது.[5] இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள், நபிகளின் முந்தைய காலத்தை ஜாஹிலியாஹ் அதாவது "அறியாமையின் நாட்கள்" என்று அழைக்கின்றனர். அந்த காலகட்டத்தில், கஃபாவினுள் நூற்றுக்கணக்கான வழிபாட்டிற்குரிய சிலைகள் இருந்தன. இச்சிலைகள் ஒவ்வொரு பழங்குடியினரின் கடவுள்களின் சிலைகளாக இருந்தன. அதில் ஹுபல், அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் போன்று அரேபிய புராணக் கடவுளரின் சிலைகளும், கிறிஸ்தவர்களின் தெய்வங்களான இயேசுநாதர் மற்றும் அன்னை மரியாளின் சிலைகளும் காணப்பட்டன.[6]
முகம்மது நபி கடவுளின் ஆசியைப் பெறுவதற்கு முன்னதாகவே அவர் உம்றாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.[2] வரலாற்றில், முஸ்லிம்கள் மற்ற முக்கிய நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகக் கூடி பின் மெக்கா நகருக்குப் பாதயாத்திரையாகப் பயணித்தனர். 631-ஆம் ஆண்டில், முகமது நபி மதீனா நகரிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் மக்கா நோக்கி வந்தார். இதுவே நபிகளின் ஒரே ஹஜ் பயணமாகும். அதற்கு முன்னர் முகம்மது நபி தம் தோழர் அபூபக்கரை ஹஜ்ஜின் தலைவராக நியமித்து அக்கடமையை நிறைவேற்றச் செய்ததாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. அவர் கஃபாவை சுத்தப்படுத்தி, அதிலிருந்த சிலைகளையும் அழித்தார். அதைக் கடவுளின் வீடாக அறிவித்தார்.[7] அப்போதைய முக்கிய நகரங்கள் கெய்ரோ மற்றும் திமிஷ்கு ஆகும். கெய்ரோ நகரில் அந்நாட்டு சுல்தான் புகழ்பெற்ற பாப் சுவேலா வாயிலின் அருகே ஒரு தளமேடையின் மீதிருந்து இந்த புனிதப்பயணத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கத்தைக் கண்டு களிப்பார்.[8]
அக்காலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்வது புனிதப் பயணிகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. இபன் சுபைர்இன் கூற்றின்படி, அவர் வழிகளில் தண்ணீர் தாகத்தால் மடிந்த பல பயணிகளின் எலும்புக் கூடுகளைக் கண்டதாக கூறியுள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எகிப்து நாட்டின் புனிதப்பயணிகளில் ஆயிரத்து ஐநூறு பேரும், 900 ஒட்டகங்களும் உயிரிழந்ததாக அறியப்படுகிறது. 1924 ஆம் ஆண்டில் சிரியா நாட்டு பயணிகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் மாண்டதாகவும், அதில் இருந்து இரண்டு ஆண்டுகளில் 12000 பேர் பயணத்தின் போது மாண்டதாகவும் கூறப்படுகிறது.[9]
பொதுவாக புனித பயணிகள் குழுக்களாகவே பயணிப்பர். இது ஒற்றுமையை குறிக்கின்றது. சில வானூர்தி நிறுவனங்கள், முஸ்லிம் மக்களுக்காக குறைந்த விலையில் சிறப்பு திட்டங்கள் வைத்துள்ளன. ஹஜ் புனித பயணத்தின் பொழுது, ஆண்கள் இஹ்றாம் முறைப்படி உடை அணிய வேண்டும். அவர்கள் ஓரங்கள் மடித்து தைக்கப்படாத இரண்டு வெள்ளை நிறத் துணிகளையே அணிய வேண்டும். கால்களில் வாருடன் கூடிய செருப்பை அணியலாம். பெண்கள் ஹிஜாப் அணிந்து முகத்தையும், கைகளையும் மறைக்காத சாதாரண உடை ஒன்றை அணிந்து கொள்ளலாம்.[10]
இஹ்றாம் அனைவரும் ஒன்றே என்று குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது. புனித பயணிகளில் அரசன் முதல் சாமானியன் வரை யாராக இருப்பினும் அனைவரும் இறைவனின் முன் சமமே என்று கூறுகிறது. மீக்காத் என்ற இடம் அனைவரும் இஹ்றாமிற்கு மாறுவதற்காகவே உருவாக்கப்பட்ட இடமாகும்.
இஹ்றாம் ஆடைகள் அணிந்த பின்னர் ஒருவர் நகங்களை வெட்டக் கூடாது, மற்றவருடன் சண்டையிடக் கூடாது. கலவியில் ஈடுபடுதல், மரங்களையோ செடிகளையோ அழித்தல் என்பனவும் கூடாது. ஆண்கள் சவரம் செய்யக்கூடாது. தங்கள் தலைகளை மறைக்கக் கூடாது. பெண்கள் கைகளையோ, முகத்தையோ மறைக்கக் கூடாது. தவறான செயல்கள் செய்வதோ, ஆயுதங்களை வைத்துக்கொள்வதோ கூடாது.
மக்காவிற்கு வந்தவுடன் பயணிகள் அனைவரும் ஹாஜி என்றே அழைக்கப் படுவர்.,[11] பின் ஹாஜிகள் அனைவரும் சில கடமைகளை செய்வார்கள். இவை அனைத்தும் இப்ராகீம், அவர் மனைவி ஹாஜர் ஆகியோரின் வாழ்க்கைகளில் நடந்ததை போன்று இருக்கும். இவை உலகம் முழுதும் இருக்கும் முஸ்லிம்களின் கூட்டு ஒருமைப்பாடை விளக்குகிறது.
சரியாக துல் ஹிஜ்ஜா மாதத்தின் எட்டாவது நாள் அன்று ஹாஜிகளின் புனிதப் பயணம் தொடங்கும். அதுவரை இஹ்ராமிற்கு மாறாதவர்கள் அன்றே உடைகளை மாற்றிவிட்டு அருகில் உள்ள மினா நகருக்கு செல்வார்கள். அந்த நகரத்தில் சவூதி அரேபியா அரசாங்கம் ஹாஜிகள் அனைவரும் தங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடில்களை அமைத்து கொடுக்கின்றது.[3]
பார்க்க விரிவான கட்டுரை: உம்றா
ஹஜ் பயணத்தின் முதல் நாளில் ஹாஜிகள் தங்கள் முதல் தவாஃபைச் செய்வார்கள். அதாவது ஹாஜிகள் கஃபாவினை ஏழுமுறை இடமாகச் சுற்றி வருவார்கள். ஒவ்வொரு முறை சுற்றிவரும் போதும் அவர்கள் புனித கருங்கல்லை (ஹஜ்ருல் அஸ்வத்) முத்தமிடுவர். கூட்ட மிகுதியால் அவர்கள் அக்கல்லை நெருங்க முடியவில்லை என்றால், தங்கள் வலது கரத்தை அக்கல்லை நோக்கிக் காண்பிக்கலாம். ஒவ்வொரு சுற்றை முடித்த பின்பும் இறைவனின் பெயரை உரத்துக் கூறவேண்டும். தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயீப் நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், நஸயீ, ஹாகீம்)
கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன”
(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ)
ஆகிய இடங்களில் அவரவர்களின் பாவச் செயல்களையும் தவறுகளையும் நினைத்து வருந்தி இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டும், அல்லாஹ் வின் கருணையும் அருளும் வேண்டி துஆ செய்வர்.
தவாஃப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.[10] இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.
தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.
கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.
தவாஃப் செய்து முடித்த உடன் அன்றே ஹாஜிகள் 'சஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓட வேண்டும். அதாவது இப்ராகீமின் மனைவி ஹாஜர் தன குழந்தைக்காக தண்ணீர் தேடி ஓடியதை போன்றே ஹாஜிகளும் ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓட வேண்டும். அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம்.[12] ஹாஜிகளின் வசதிக்காக தற்பொழுது இந்த நீர் குளிர்ந்த நீராக குளிராக்கிகளில் அங்கேயே கிடைக்கிறது. முன்பு திறந்த வெளியில் நடந்த இந்த தொங்கோட்டம் நடக்கும் இடம், தற்பொழுது குளிரூட்டப்பட்ட அல்-ஹராம் பள்ளிவாயிலினுள் இருப்பதால் பக்தர்கள் சிரமமின்றி இக்கடமையை நிறைவேற்றலாம். சில்லுக் கதிரையில் வரும் ஹாஜிகள் தனியாக உள்ளே உள்ள பாதையில் வலம் வரலாம். முன்பு கூட்ட நெரிசலால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதால் இப்பொழுது இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செய்து புனித நீரை பருகிய பின் அனைவரும் தங்கள் குடிலுக்கு திரும்பி ஓய்வெடுக்கலாம்.
பார்க்க விரிவான கட்டுரை: அரபா குன்று
அடுத்தநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் எட்டாம் நாள் (ஹஜ்ஜின் இரண்டாம் நாள்), ஹாஜிகள் மினா எனும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் இரவு பிரார்த்தனையில் (துஆவில்) ஈடுபடுவார்கள். மறுநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் ஒன்பதாம் நாள் (ஹஜ்ஜின் மூன்றாம் நாள்), அனைவரும் அறஃபா மலைக்கு செல்வார்கள். மினாவிற்கும் அரபாவிற்கும் இடையிலான தூரம் 17 கி. மீ ஆகும். அங்கு மலையில் முகமது நபி நடத்திய கடைசிச் சொற்பொழிவினை ஞாபகப்படுத்தி, அனைவரும் அங்கு குர்ஆனைப் படித்து, இறைவனின் பெயரை உச்சரித்து தொழுகையில் ஈடுபடுவர். அறஃபா மலைக்கு மன்னிப்பு வழங்கும் மலை என்ற பெயரும் இருப்பதால் இந்த கடமையே ஹஜ் பயணத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.அறஃபா வில் தங்கும் காலம் நடுப்பகலில் தொடங்குகிறது. இங்கு சூரியன் மறையும் வரை தங்க வேண்டும். சூரியன் மறையும் முன் அறஃபாவை விட்டுச் சென்றால் அந்தக் குற்றத்திற்காக தண்டம் (தம்) கொடுக்க நேரிடும். மதிய நேரத்தை இங்கு கழிக்காவிடின் ஹஜ் பயணமே முழுமையாகாமற் போய்விடும். இங்கு எந்தவிதமான சிறப்புத் தொழுகையும் இல்லை. ஆனால் அனைவரும் இங்கு சிறிது நேரதைக் கூட வீணாக்காமல் புனித குரானை ஓதுவார்கள்; தொழுகையிலேயே இருப்பார்கள்.[3]
சூரியன் மறைந்த பின்னர் அறஃபா மலையை விட்டு, அதற்கும் மினாவுக்கும் இடையே அமைந்த முஸ்தலிபா என்ற இடத்திற்கு செல்வார்கள். இவ்விடம் அறஃபாவிற்கும் மினாவிற்கும் இடையே சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு அனைவரும் கூடாரம் இல்லாத திறந்தவெளியில் இரவைக் கழிப்பார்கள். இங்கு மஃக்ரிப், இஷாத் முதலிய தொழுகைகளையும் திக்ரு முதலான தியானங்களைச் செய்வார்கள். இங்கு இஷாத் எனப்படும் தொழுகைக்குப் பின், அடுத்த நாள் காலையில் அவர்கள் அடுத்த கடமையான சைத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக கூழாங்கற்களை இங்கு சேகரித்து எடுத்துக்கொள்வர். சுமார் 49 மற்றும் 70 கற்களை எடுக்க வேண்டும். இங்கு எடுக்க மறந்து விட்டால் அல்லது எடுத்த கற்களில் சில தவறிவிட்டால் மினாவில் கற்களை எடுத்துக் கொள்ளலாம். தேவையான கற்களை மினாவில் எங்கிருந்தாவது எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சைத்தானுக்குக் கல்லெறியும் இடத்திலிருந்து கற்களை எடுக்கக்கூடாது. கற்களை கழுவாமலிருப்பது சிறந்தது.
மினாவில் ஹாஜிக்கள் ஜம்ரதுல் எனும் சாத்தான் மீது கல்லெறியும் கடமையை செய்வர். இவர்கள் சைத்தானின் மீது கொண்டுள்ள வெறுப்பை காட்ட இவ்வாறு செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் முன்னர் இப்ராகீம் தன் மகனை அல்லாஹ்வின் கட்டளையின்படி பலியிடத் தயாராகும் பொழுது சைத்தான் அவரை மூன்று முறை அழைத்தும் அவர் மறுத்தார். இங்கு இருக்கும் ஒவ்வரு தூணும் மூன்று முறை இவர் மறுத்ததை குறிக்கிறது. முதலில் அவர்கள் கல்லெறியும் பெரிய தூணின் பெயர் 'ஜம்ரதுல் ஊலா' வாகும்.[13] ஹாஜிகள் சைத்தானின் மீது கல்லெறிகிறோம் என்ற நினைவால் வெகுண்டெழுந்து இந்த கடமையை செய்கின்றனர். பல அடுக்குகள் கொண்ட ஜம்ரத் பாலத்தில் இருந்து இவர்கள் இதை செய்யலாம். அடுத்த இடத்தில் மற்ற தூண்களின் மீது கல்லெறியலாம். மொத்தம் அவர்கள் ஏழு கற்களை எறிவார்கள்.[3] அதிக கூட்டம் இங்கு வருவதால், 2004 ஆம் ஆண்டு இந்த தூண்கள் எறியும் கற்களை சேகரிக்கும் தொட்டிகளுடன் கூடிய சுவராக அந்த இடம் மாற்றப்பட்டது.
சைத்தானின் மீது கல்லெறிந்த பின்னர், ஹாஜிகள் விலங்குகளைப் பலியிடுவர். அதாவது இப்ராகீமின் மகனுக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டை பலியிடச் செய்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. முன்பு ஹாஜிகள் அவர்களாகவோ அல்லது அவர்களின் முன்னிலையிலோ செய்யப்பட்ட பலியானது, தற்பொழுது தனியாக ஹாஜிகளின் பெயரில் அறுப்போர்களால் செய்யப்படுகிறது. இதற்காக ஹஜ் பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே வங்கியில் குறிப்பிட்ட பணம் செலுத்தி இதர விவரங்களையும் தெரிவிப்பதன் பெயரில் குர்பானி கொடுப்பதற்கன ஏற்பாடு தற்பொழுது உள்ளது. இதைப் பயன்படுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் தன் பேரில் ஒரு ஆட்டையோ அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை குர்பானியாகப் பலியிடலாம். இந்த இறைச்சி பின்னர் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதற்கும் அனுப்பப்படுகிறது.[3] அதே சமயத்தில் உலகம் முழுதும் முஸ்லிம் மக்களால் தியாகத் திருநாள் மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.[14]
இந்த சடங்கு முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை சவரம் செய்தல் அல்லது சற்று வெட்டி "கஸ்ரை" முடிப்பர். பெண்கள் தங்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை வெட்டிக் கொள்வர்.
இன்று ஹாஜிக்கள் அனைவரும் மக்காவில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது. இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும். பின்னர் அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.
பதினோராம் நாளின் மதியம் மற்றும் அதற்கு அடுத்த நாளும் மீண்டும் சைத்தானின் மீது கல்லெறியும் கடமையை செய்வார்கள். பனிரண்டாம் நாள் சூரியன் மறையும் முன் மக்கா நகருக்கு அவர்கள் செல்வார்கள். அன்று அவர்கள் மாலை நேரத்திற்கு முன் செல்லவில்லை என்றால் அவர்கள் அடுத்த நாள் மீண்டும் கல்லெறியும் சடங்கை செய்தபின் தான் செல்ல முடியும்.
இறுதியாக ஹாஜிகள் அனைவரும் மக்காவிற்கு பயணிக்கும் முன்னர் கடைசியாக ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.[3]
மக்காவிலிருந்து சுமார் 470 கி.மீ தொலைவிலும், ஜித்தாவிலிருந்து 425 கி.மீ தொலைவிலும் வடக்கில் மதீனா உள்ளது. ஹாஜிக்கள் ஹஜ் பயணத்திற்கு முன்போ, பிறகோ மதீனா சென்று ஜியாரத் செய்கிறார்கள். இந்த பயணம் ஹஜ் புனிதப் பயணத்தில் முக்கிய இடம் இல்லாவிட்டாலும், அதிகமான ஹாஜிகள் மதீனா நகரில் உள்ள நபிகளின் பள்ளிவாயலுக்குச் செல்கின்றனர். அங்கு நபிகள் மற்றும் அவர் துணைவியார் (உமத் உல் மொமினேன்) மற்றும் பிற சஹாபாஹ்களின் நினைவிடங்களையும் காணச் செல்கின்றனர்.[15] மதீனாவில் இசுலாம் மார்க்கத் தலைவர்கள் பலர் அடக்கம் செய்யப்பட்ட 'ஜன்னத்துல் பஃகீ' என்ற இடம் உள்ளது.
ஆகிய மதீனாவின் புகழ் பெற்ற பள்ளிவாயில்களைக் காண ஹாஜிக்கள் செல்கின்றனர்.[16]
2010ஆம் ஆண்டின் கணக்கு படி சுமார் மூன்று மில்லியன் ஹாஜிகள் அந்த ஆண்டு மட்டும் வந்துள்ளனர்.[17][18] இந்த கூட்டத்தை சமாளிப்பதற்காகவே நிறைவேற்றும் கடமைகளில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புனித கருங்கல்லை முத்தமிடுவது தொடக்கம் சைத்தான் மீது கல்லெறிதல், பலி கொடுத்தல் போன்ற சடங்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் தவிர்க்க முடியாத சம்பவங்கள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. துல்ஹிஜ்ஜா மாதத்தில் ஹஜ் கடமைக்காகக் குறித்துரைக்கப்பட்ட நாட்கள் தவிர்த்து ஆண்டின் ஏனைய நாட்களில் உம்றா செய்யலாம். எனினும், அது ஹஜ்ஜாகக் கருதப்படுவதில்லை. எனவே இந்த கூட்டமும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக அமைகிறது.
சவூதி அரேபிய நாட்டின் தூதரகத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் பின் கூறப்பட்டுள்ள எண்ணிக்கையில் புனித பயணிகள் வந்துள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.