மரியா அல்லது மரியாள் (அரமேயம்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்), என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.[2] உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

விரைவான உண்மைகள் மரியாள், பிறப்பு ...
மரியாள்
Thumb
குழந்தை இயேசுவுடன் மரியாள் (ஓவியர்: ராபர்ட் ஃபெருசி)
பிறப்புசெப்டம்பர் 8 (பாரம்பரியம்; மரியாவின் பிறப்பு) ஏ. 18 கி.முC[1]
சொந்த ஊர்நாசரேத்து, கலிலேயா
பெற்றோர்யோவாக்கிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி)
அன்னா (தாய்; பாரம்பரியத்தின்படி)
வாழ்க்கைத்
துணை
யோசேப்பு
பிள்ளைகள்இயேசு கிறிஸ்து
மூடு

பழைய ஏற்பாடு

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்"[3] என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்"[4] என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.

நற்செய்திகள்

நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய கபிரியேல் தேவதூதர், மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்[5] வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் παρθένος, parthénos) இருந்தார்[6] என்றே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.[7]

கன்னி மரியா பெத்லகேமில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக[8] லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. மரியாவும் யோசேப்பும் குழந்தைக்கு எட்டாம் நாளில் இயேசு என்று பெயரிட்டதாகவும், நாற்பதாம் நாளில் இயேசுவை கோவில் அர்ப்பணித்ததாகவும் நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, மரியா அவரை தம் கையில் வைத்திருந்ததாக மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகிறார். பின்னர் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் அவரை எகிப்துக்கு தூக்கிச் சென்றதாகவும் காண்கிறோம். பன்னிரு வயது சிறுவனான இயேசுவை அழைத்துக்கொண்டு, மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு பாஸ்கா விழா கொண்டாடச் சென்றதையும், கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்ததையும் நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கிறார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்[9] என்று வாசிக்கிறோம்.

இயேசு தம் முப்பதாம் வயதில் யோவானிடம் திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது கலிலேயாவின் கானாவில் நடைபெற்ற திருமணத்தில், தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் அற்புதம் செய்ய அன்னை மரியா தூண்டுதலாக இருந்தார்[10] என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்[11] என்று யோவான் நற்செய்தி கூறுவது, இயேசுவின் பணி வாழ்வின்போதும் அவரோடு மரியா உடன் பயணித்தார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்[12] என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுவதும் இதற்கு சான்றாக உள்ளது.

இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணித்த அன்னை மரியா, சிலுவைச் சாவு வரையிலும் அவரை பின்தொடர்ந்தார் என்று காண்கிறோம். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்[13] என்று யோவான் குறிப்பிடுகிறார். இவ்வாறு தம் அன்பு சீடருக்கு ஒரு தாயையும், மரியாவுக்கு ஒரு மகனையும் இயேசு ஏற்படுத்துகிறார். பரந்த பொருளில், இயேசு தம் சீடர் அனைவருக்கும் மரியாவைத் தாயாக கொடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.

மரபு வணக்கம்

முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்'[14] என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.[15] இந்த பின்னணியில், கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.