From Wikipedia, the free encyclopedia
வலிமிகு மகப்பேறு அல்லது வலிமிகு பேறு அல்லது பிரசவ அடைப்பு (Obstructed labour) என்பது குழந்தை பிறப்பு நடைபெறும் சூழலில், கருப்பை ஒழுங்காகச் சுருங்கி விரிந்தும்கூட, இயல்நிலையில் இடுப்பு வளையத்தின் ஊடாக, குழந்தை வெளியேற முடியாதபடிக்கு ஒருவகை அடைப்பு நிலை காணப்படுவதனால், மிகவும் வலிமிகுந்த மகப்பேறாக இருக்கும் நிலையைக் குறிக்கும். இந்நிலையில், பிறக்கும் குழந்தைக்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் போவதனால், குழந்தை இறப்பும் ஏற்படும் சாத்தியம் உண்டு.[1] அத்துடன் தாய்க்கு நோய்த்தொற்றுக்கள் ஏற்படல், கருப்பை கிழிவு (en:uterine rupture) ஏற்படல், பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு ஏற்படல் போன்ற சூழ் இடர்கள் நிகழலாம்.[1] நீண்ட நேரத்துக்கு இந்தச் சிக்கல் தொடருமாயின், தாய்க்கு பிறப்புப் பாதையில் துவாரம் ஏற்பட்டு (en:Obstetric fistula), அதனால் ஏற்படக்கூடிய புதிய சிக்கல்கள் தோன்றலாம்.[2] இப்படியான நிலையில் நீண்ட நேரப் பிரசவமும், சுறுசுறுப்பான முதலாம் நிலைப் பிரசவம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாகச் செல்லும் நிலை ஏற்படும்.[2]
வலிமிகு பேறு | |
---|---|
ஒத்தசொற்கள் | வலிமிகு மகப்பேறு அல்லது பிரசவ அடைப்பு |
குழந்தை பிறப்பில் சிக்கலை உருவாக்கக் கூடிய உருத்திரிபுக்குட்பட்ட இடுப்பு வளையம் | |
சிறப்பு | மகப்பேறியல் (en:Obstetrics) |
சிக்கல்கள் | en:Perinatal asphyxia, கருப்பைக் கிழிவு (en:uterine rupture), பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு[1] |
காரணங்கள் | பெரிய குழந்தை, குழந்தை அசாதாரணமாக நிலையில் தங்கியிருத்தல், சிறிய இடுப்பு வளையம், பிறப்புப் பாதையில் ஏதாவது சிக்கல்கள்[2] |
சூழிடர் காரணிகள் | தாயின் இடுப்பு எலும்பிற்குள் குழந்தையின் தோள்மூட்டு பிடிபட்டு நெருக்கத்திற்குள்ளாதல், ஊட்டக்குறை, உயிர்ச்சத்து டி குறைப்பாடு[3][2] |
நோயறிதல் | குழந்தை பிறப்பின் முதலாம் நிலையில் சுறுசுறுப்பான பகுதி, 12 மணித்தியாலத்திற்கு மேலாகச் செல்லுதல்[2] |
சிகிச்சை | அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தல், வெற்றிடம் உருவாக்கி வெளியேற்றும் முறை ([:en:[vacuum extraction]] [4] |
நிகழும் வீதம் | 6.5 மில்லியன் (2015)[5] |
இறப்புகள் | 23,100 (2015)[6] |
உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளில் 2 முதல் 5 வீதம் வரையிலான பிரசவங்களில் இவ்வகையான பிரசவ அடைப்பு ஏற்படுகின்றது.[7] 2015 ஆம் ஆண்டில் 6.5 மில்லியன் அளவில் இவ்வகையான பிறப்புச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.[5] 1990 ஆம் ஆண்டில் 29,000 ஆக இருந்த இவ்வகையிலான தாயின் இறப்பு 2015 இல் 23,000 ஆகக் குறைந்திருந்த போதிலும், இவ்வகைச் சிக்கலே, பிரசவத்தின் போதான தாயின் இறப்பில் 8% ஆக இருந்தது.[2][6][8] அத்துடன் செத்துப் பிறப்பு நிகழ்விற்கும் இதுவே மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது.[9] இவ்வகையான இறப்புகள் அநேகமானவை வளர்ந்துவரும் நாடுகளிலேயே காணப்படுகின்றது.[1]
வலிமிகு மகப்பேற்றுக்கு முக்கியமான காரணிகளாக பெரிய குழந்தை அல்லது அசாதாரண நிலையில் கருப்பையினுள் குழந்தை இருத்தல், சிறிய இடுப்பு வளையம், பிறப்புப் பாதையில் காணப்படும் சில சிக்கல்கள் என்பன சொல்லப்படுகின்றன.[2]
அசாதாரண நிலையெடுத்தல் என்னும்போது, குழந்தையின் முன்பக்கத் தோள்கள் இடுப்பெலும்பினூடாக வெளியேற முடியாமல் இறுகி இருக்கும் நிலையைக் குறிக்கும்.[2] சிறிய இடுப்பு வளையம் அமைவதற்கான சூழிடர் காரணிகளாக ஊட்டக்குறை, உயிர்ச்சத்து டி குறைபாடு என்பன இருக்கின்றன.[3] மேலும் விடலைப் பருவத்தில் இருப்பவர்களாயின், இடுப்பு வளையம் முற்றாக வளர்ச்சியடைந்து இருக்காது என்பதால், போதியளவு விரிவடைய முடியாத நிலை காணப்படும்.[1]
பிறப்புப் பாதையில் சிக்கல்கள் என்னும்போது, ஒடுங்கிய யோனி மற்றும் குதம், பெண்குறிக்கு இடையிலான இடைவெளி குறுகியதாக இருத்தல் போன்றவையாகும்.[2] இத்தகைய நிலையானது பெண் உறுப்பு சிதைப்பு மற்றும் கட்டிகள் இருப்பதன் காரணங்களால் ஏற்படலாம்.[2]
பிரசவத்தின் முன்நோக்கிய நடைமுறைகளை அறியவும், சிக்கல்களைக் கண்டறியவும் தாய், மற்றும் சேய் தொடர்பான அனைத்துத் தரவுகளும் நேரத்திற்கு எதிராக ஒரு வரைபட வடிவில் ஒரு தாளில் குறிக்கப்பட்டு வைக்கப்படும். இது en:Partogram அல்லது partograph என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.[1] பொதுவாக இவ்வாறான பிரசவ அடைப்பு அல்லது வலிமிகு மகப்பேறு மேற்குறிப்பிட்ட தரவுகளுடன் இணைந்த உடல் சோதனைகள் (en:Physical examination) மூலமே கண்டறியப்படும்.[10]
அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது வெற்றிடம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தல் பொதுவாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளாகும். வெற்றிடம் உருவாக்கி வெளியேற்றும் முறையில் சிலவேளை இடுப்பு வளையத்தை சிறிது திறக்கும் அறுவையும் மேற்கொள்ளப்படலாம். இவை தவிர தாயை நீரிழப்பு ஏற்படாத நிலையில் பாதுகாத்தல், சவ்வுகளில் கிழிவுகள் ஏற்பட்டு 18 மணித்தியாலங்களுக்கு மேலாகச் சிக்கல் தொடருமாயின், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுத்து நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்தல் போன்றனவும் மேற்கொள்ளப்படும்.[4]
அறுவைச் சிகிச்சை சரியான தருணத்தில் செய்யப்படுமாயின், தாயும், சேயும் நலத்துடன் பேணப்படலாம்.[1] அவ்வாறின்றி, நீண்ட நேரத்துக்கு வலிமிகு மகப்பேறு தொடருமாயின், அது தாய், சேய் இருவரின் இறப்பிற்கும் காரணமாகலாம்.[11]
மனிதன் தவிர்ந்த வேறு விலங்குகளிலும் இவ்வகையான வலிமிகு மகப்பேறு அல்லது பிரசவ அடைப்பு ஏற்படலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.