பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
முகம்மது யூனுஸ் கான் (பஷ்தூ, உருது: محمد یونس خان Mohammad Younus Khan, பிறப்பு: நவம்பர் 29, 1977), முன்னாள் பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரரும் பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவருமாவார்.[1][2] மர்தன் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் இடை நிலை மட்டையாளராவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் 300 ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்.[3] பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணி, கபீப் வங்கி அணி, நொட்டிங்காம்செயார் அணி, பெசாவார் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், தென் அவுஸ்திரேலியா, யோக்செயார் அணிகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்[1][2]. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[4] 11 நாடுகளுக்கும் எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு அடித்த ஒரே துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.[5][6][7]
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தானிய வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் மற்றும் அதிக நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[8] மேலும் ஒரு ஆட்டப் பகுதியில் 300 ஓட்டங்களுக்கும் மேல் அடித்த மூன்றாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்[9]. இவரின் தலைமையிலான பாக்கித்தான் அணி 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் கோப்பை வென்றது.[10] ஏப்ரல் 23, 2017 இல் இவர் தேர்வுப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இந்தச் சாதனை படைத்த முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் 13 ஆவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் படைத்த மிகவும் வயதான வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.[11]
மார்ச் 24, 2010 இல் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இவரையும் முகம்மது யூசுபையும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இடைநீக்கம் செய்தது.[12] அந்தத் தடை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.[13] பின் அக்டோபர் 22, 2014 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரே போட்டியில் தனது 25 ஆவது மற்றும் 26 ஆவது நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இரு நூறுகளை அடித்த 6 ஆவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[14] சூன் 25, 2015 இல் தனது நூறாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் நூறு போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் எனும் பெருமை பெற்றார் .அக்டோபர் 13, 2015 இல் 8,833 ஓட்டங்கள் எடுத்து ஜாவெட் மியன்டாட்டின் சாதனையை முறியடித்து அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[15][16][17]
நவம்பர் 2016 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[18] பின் மே, 2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரோடு அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[19]
30 மார்ச் 2007 அன்று யூனிஸ் அம்னாவை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். அவர்களின் மகன் ஓவைஸ் 26 டிசம்பர் 2007 அன்று பிறந்தார்.[20]
2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் யூனிஸ் தனது குடும்பத்தில் பல இறப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. முன்னதாக 2005 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் ஒரு சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இங்கிலாந்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, யூனிஸின் மூத்த சகோதரர் முகமது ஷெரீப் கான், உக்ரேனில் நடந்த கார் விபத்தில் 41 வயதில் இறந்தார்.[21] அவர்தான் இவருக்கு துடுப்பாட்டம் விளையாடக் கற்றுக் கொடுத்ததாக அவர் ஒரு நேர்காணலில் கூறினார். மற்றொரு மூத்த சகோதரர், ஃபர்மன் அலி கான் 2006 டிசம்பரில் ஜெர்மனியில் கார் விபத்தில் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39 ..
பைசலாபாத்தில்மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் யூனிஸ் களத்தில் மட்டையாடிக் கொண்டிருந்தார். யூனிஸ் தனது ஆட்ட்டப் பகுதியின் முடிவில் பெவிலியனுக்குத் திரும்பிய பின்னரே நிலைமை பற்றி அறிந்து கொண்டார். யூனிஸ் உடனடியாக தனது சொந்த ஊரான மர்தானுக்குப் புறப்பட்டார், மீதமுள்ள எந்தப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிய பின்னர் மார்ச் 2007 இல் பாப் வூல்மர் இறந்ததைப் பற்றிய தனது வருத்தத்தையும் யூனிஸ் குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த தந்தையை இழந்த பின்னர் பாப்பை ஒரு தந்தையாகவே தான் பார்த்ததாகவும், பல தனிப்பட்ட எண்ணங்களை தனது பயிற்சியாளருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்றும் அவர் கூறினார்.[22]
மே 2011 இல் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது, யூனிஸுக்கு ஜெர்மனியில் அவரது மூத்த சகோதரர் ஷம்ஷாத் கான் இறந்ததால் வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.[23]
அவர் துடுப்பாட்டம் விளையாடாத சம்யங்களில் மீன்பிடித்தலை பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.[21]
2008-09 ஆம் ஆண்டில், யூனிஸ் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு துடுப்பாட்ட அணியான தெற்கு ரெட்பேக்கிற்காக குறுகிய கால அடிப்படையில் விளையாடினார். பிரிஸ்பேனில் நடந்த ஷெஃபீல்ட் கேடய போட்டியின் முதல் இன்னிங்சில் குயின்ஸ்லாந்து புல்ஸுக்கு எதிராக அவர் ஒரு நூறு ஓட்டங்களை அடித்து அந்தப் போட்டியில் அவரின் வெற்றி பெற உதவினார்.
2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 225,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. ஆனல் இவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இதில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 1 ஓட்டஙக்ள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடவில்லை.[24]
ஆப்கானிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணியின் அடுத்த பயிற்சியாளராக யூனிஸ் கான் வருவதாக 11 மே 2017 அன்று ஏசிபி அறிவித்தது.[25] பின்னர், இந்த சலுகையை யூனிஸ் கான் மறுத்துவிட்டார்.
மார்ச் 23, 2010 அன்று, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அவர்களால் பெருமைமிக்க செயல்திறன் யூனிஸுக்கு வழங்கப்பட்டது.[26] 23 மார்ச் 2018 அன்று அவருக்கு சீதாரா-இ-இம்தியாஸ் விரு தினை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் வழங்கினார்.[27]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.