ஐதராபாத்தின் பிரதமர் From Wikipedia, the free encyclopedia
சர் மிர் துராப் அலி கான், முதலாம் சலார் ஜங் (Mir Turab Ali Khan, Salar Jung I) (21 ஜனவரி 1829 - 8 பிப்ரவரி 1883), ஓர் இந்திய பிரபு ஆவார். இவர் 1853 க்கு இடையில் ஐதராபாத் மாநிலத்தின் பிரதம அமைச்சராக 1883 இல் தான் இறக்கும் வரை பணியாற்றினார். இவர் 1869 மற்றும் 1883 க்கு இடையில் ஆறாவது நிசாம் ஆறாம் ஆசாப் ஜாவின் அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார் [1][2]
மிர் துராப் அலி கான், முதலாம் சலார் ஜங் | |
---|---|
தேதி அறியப்படாத ஒரு புகைபடத்தில் சலர் ஜங் | |
பிறப்பு | பிஜாப்பூர், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | சனவரி 21, 1829
இறப்பு | பெப்ரவரி 8, 1883 54) ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | (அகவை
ஐதராபாத்தின் பிரதமர் | |
பதவியில் 1853–1883 | |
ஆட்சியாளர்கள் | நாசிர்-உத்-தௌலா ஐந்தாம் ஆசப் ஜா மக்பூப் அலி கான் |
முன்னையவர் | சிராஜ் உல்-முல்க் |
பின்னவர் | இரண்டாம் சலார் ஜங் |
வருவாய் மற்றும் நீதித்துறை அமைப்புகளின் மறுசீரமைப்பு, ஐதராபாத் மாநிலத்தை மாவட்டங்களாகப் பிரித்தல், அஞ்சல் சேவை நிறுவனம், முதல் நவீன கல்வி நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் முதல் ரயில் மற்றும் தந்தி வலையமைப்புகளின் கட்டுமானம் உள்ளிட்ட நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக இவரது பதவிக்காலம் அறியப்படுகிறது.[3] 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சியின் ஒரு சிறிய பகுதி இவரது பதவிக்காலத்தில் நடந்தது. மேலும் அதை அடக்குவதற்கு இவர் ஒரு பகுதியாக இருந்தார்.
மாநிலத்தின் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்றான சாலர் ஜங் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பிரதம அமைசர்களில் இவரும் ஒருவர். இவரது மகள் அமாத்-உசு-செக்ரா நிசாம் ஆறாம் ஆசப் ஜாவை மணந்தார். எனவே இவர் கடைசி நிசாமான மிர் ஓசுமான் அலி கானின் தாய்வழி தாத்தா என்று அறியப்பட்டார்.
கான் பிஜாப்பூரில் 1829 இல் பிறந்தார். முதலில் பீஜாப்பூரின் அடில் ஷாஹி வம்சத்தின் கீழும், பின்னர் முகலாயப் பேரரசின் கீழும், கடைசியாக நிசாம்களின் கீழும் பல்வேறு பதவிகளை வகித்த குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். இவரது தந்தை முகம்மது அலி கான், மீர் ஆலமின் மூத்த மகன், மற்றும் இவரது தாயார் சயத் காசிம் அலி கானின் மகள். [4]
1847 இல் கம்மம் தாலுகாதாராக நியமிக்கப்பட்டார். 8 மாதங்கள் அந்தப் பதவியில் இருந்தார்.[5]
இவர் தனது மாமா சிராஜ்-உல்-முல்க்கைத் தொடர்ந்து 1853 இல் தனது 23வது வயதில் பிரதமரானார். [6] இந்த நேரத்தில், ஐதராபாத்து மாநிலத்தின் நிர்வாகம் ஊழல் நிறைந்ததாக இருந்தது. மேலும் முறையான ஆட்சி வடிவமும் இல்லை.
ஐதராபாத்து நீதி மன்றங்களின் அமைப்பு, காவல் படையின் அமைப்பு, நீர்ப்பாசனப் பணிகளை நிர்மாணித்தல் மற்றும் சரிசெய்தல் மற்றும் பள்ளிகளை நிறுவுதல் ஆகியவை இவரது முந்தைய சீர்திருத்தங்களில் அடங்கும். [6] [7] 1854 ஆம் ஆண்டில், ஐதராபாத்தில் முதல் நவீன கல்வி நிறுவனம் தார்-உல்-உலூம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. [8]
1857 நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சியின் போது இவர் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். [9] இதன் காரணமாக பிராந்தியத்தில் அமைதி உறுதிப்படுத்தப்பட்டது. சலார் ஜங் தனது சீர்திருத்தங்களை மேலும், தைரியமாக முன்வைக்க கிளர்ச்சியில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆர்வத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். [1]
1867 ஆம் ஆண்டில், மாநிலம் பேரர், பீதர், பிஜாப்பூர், ஔரங்காபாத் மற்றும் ஐதராபாத்து என ஐந்து பிரிவுகளாகவும் ( சுபாக்கள்) [10] பதினேழு மாவட்டங்களும் உருவாக்கப்பட்டு ஐந்து பிரிவுகளுக்கும் சுபேதார்கள் அல்லது ஆளுநர்களும், மாவட்டங்களுக்கு தாலுகாதார்களும் தாசில்தார்களும் நியமிக்கப்பட்டனர்.[11][3]
சாலார் ஜங் அறிமுகப்படுத்திய மற்ற முக்கியமான சீர்திருத்தம் நாணயத்தை நிலைப்படுத்தியதாகும். மாவட்ட நாணயங்கள் ஒழிக்கப்பட்டு ஐதராபாத்தில் ஒரு மத்திய நாணயச்சாலை நிறுவப்பட்டது. இவர் ஹாலி சிக்கா என்ற ரூபாயை வெளியிட்டார். இது அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் நிலையான நாணயமாக மாறியது. நகரத்தில் ஒரு அரசுக் கருவூலம் நிறுவப்பட்டது. மேலும் சுங்கத் துறை நேரடியாக அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[3]
26 பிப்ரவரி 1869 அன்று, ஐந்தாம் ஆசப் ஜா இறந்தார். அபோது இரண்டு வயதே நிரமியிருந்த அவரது மூத்த மகன் மக்பூப் அலி கான், ஆறாவது நிசாமாக முடிசூட்டப்பட்டார். சலார் ஜங், பிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில், மாநிலத்தின் முக்கிய பிரபுவான சம்சு-உல்-உமாராவுடன் இணைந்து அரசப் பிரதிநிதியாக இருந்தார். 1881 இல், சம்சு-உல்-உமாரா இறந்த பின்னர் சலார் ஜங் மட்டுமே ஒரே அரசப் பிரதியாக இருந்தார். [12] ஐந்தாம் ஆசப் ஜாவின் வாழ்நாளில், நிசாமின் மேற்பார்வையால் சலார் ஜங் கணிசமான அளவு பாதிக்கப்பட்டார். ஆனால் தான் ஆட்சியாளராக இருந்த காலத்தில், அதிக அதிகாரத்தை அனுபவித்தார்.[11] சலார் ஜங் தனிப்பட்ட முறையில் புது நிசாமுக்கு மாநில விவகாரங்களில் பயிற்சி அளித்தார். [13]
1868 ஆம் ஆண்டில், ஈகைத் திருநாள் தினத்தன்று, நிசாம் அரசவைக்குச் செல்லும்போது இவர் மீது ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கைத்துப்பாக்கி-குண்டுகள் சுடப்பட்டன. அதில் ஒன்று இவரது உதவியாளரைக் காயப்படுத்தியது. மற்றொன்று இவரது தலைப்பாகையை உரசிச் சென்றது.[14] சதிகாரர் உடனடியாக பிடிபட்டார். [14] கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்காததால் குற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. [15]
1876 இல், பேரரின் மறுசீரமைப்பைப் பெறுவதற்கான நோக்கத்துடன் இவர் இங்கிலாந்துக்குச் சென்றார். [16] இவர் அந்த முயற்சியில் தோல்வியுற்றாலும், இவரது தனிப்பட்ட தகுதிகள் இவருக்கு முழு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 1876 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவப் பட்டம் பெற்றார்.
1876 ஆம் ஆண்டு பிரான்ஸ் பயணத்தின் போது தனித்துவமான மெஃபிஸ்டோபிலஸ் & மார்கரெட் என்ற "இரட்டை சிற்பம்" இவரால் வாங்கப்பட்டது. இவர் உரோம் நகருக்குச் சென்றபோது அங்கு இவர் வெயில்ட் ரெபேக்கா என்ற பளிங்குச் சிலையை வாங்கினார்.
சலார் ஜங் குடும்பம் சேகரித்த கலைச் சேகரிப்புகள் அனைத்தும் ஐதராபாத்தின் சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மகள் அமாத்-உசு- செக்ரா ஆறாம் ஆசப் ஜாவை மணந்தார். எனவே இவர் கடைசி நிசாம் மிர் ஓசுமான் அலி கானின் தாய்வழி தாத்தா ஆவார்.
வாந்திபேதி ஏற்பட்ட இவர் பிப்ரவரி 8, 1883 இல் ஐதராபாத்தில் இறந்தார். இவரது உடல் தைரா மிர் மோமின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறப்பிற்காக ஐதராபாத் மாநிலம் முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. [17] இவருக்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் சலார் ஜங் பிரதமரானார். இவரது பேரன் 1486 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ஒரு தோட்டத்தைக் கொண்டிருந்தார். அதில் கிட்டத்தட்ட £60,000 வருமானம் ஈட்டுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.