சலார் ஜங் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாலார்சங் அருங்காட்சியகம் (Salarjung Museum) ஐதராபாத்திலுள்ள ஒரு அருங்காட்சியகமாகும். ஏழாவது நிசாம், நவாப் மிர் ஓசுமான் அலிகானின் (Nawab Mir Osman Ali Khan), ஏழாவது நிசாமின் முதன்மை அமைச்சராக, மிர் யுசுப் அலி கான் (Mir Yusaf Ali Khan) மூன்றாவது சாலார் சங் (Salar Jung 111) 1899 முதல் 1949 வரையில் இருந்தார். இவர் ஒரு சிறந்த கலை இரசனையாளர். இவரது சொந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்களே இந்த அருங்காட்சியகத்தில் உள்ளவை. மக்களைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இது விளங்குகிறது. முதலில் இவ் வருங்காட்சியகம் சாலார்சங் குடும்ப மாளிகையான திவான் டியோரியில்தான் (Dewan Deorhi) அமைக்கப்பட்டிருந்தது. 1968 ல் தான் முசி ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இந்திய நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று[2]. இங்கு உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய, மத்திய கிழக்கு, நேப்பாளம், திபெத்து, மியன்மார், தூரகிழக்கு மற்றும் ஐரோப்பிய கலைப் பொருட்களும் சிறுவர் பகுதியும் உள்ளன. இது ஒரு கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.
நிறுவப்பட்டது | 1951 |
---|---|
அமைவிடம் | Nayapul, ஹைதராபாத், தெலங்கானா, இந்தியா |
சேகரிப்பு அளவு | 1 மில்லியன் பொருட்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | 11,24,776 (மார்ச் 2009 இன்படி)[1] |
வலைத்தளம் | http://www.salarjungmuseum.in/ |
ஐதராபாத்தின் ஏழாவது நிசாமின் பிரதம அமைச்சரான மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலி கான் சலார் ஜங் (1889-1949) தனது வருமானத்தில் குறிப்பிடத் தக்க அளவைச் செலவு செய்ததுடன் 35 ஆண்டுகள் முயன்று இந்த அரும் பொருட்களைச் சேகரித்தார். அவரது முன்னோரது மாளிகையான திவான் தேவ்டியில் அவர் விட்டுச்சென்ற இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி முதலில் அந்த மாளிகையிலேயே ஒரு தனியார் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை 1951 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். சலார் ஜங் சேகரித்த பொருட்களில், இப்போது இருப்பது பாதியளவே எனப் பலர் கருதுகிறார்கள். இவர் மணம் செய்து கொள்ளாது தனியே வாழ்ந்ததால் இப் பொருட்களின் பாதுகாப்புக்கு அவர் தனது அலுவலர்களையே நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் அவற்றில் பலவற்றை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சில பொருட்கள், திவான் தேவ்டியில் இருந்து பொருட்களை இப்போதுள்ள கட்டிடத்துக்கு மாற்றும் போது தொலைந்தோ களவுபோயோ விட்டதாகத் தெரிகிறது. இந்த அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டில் இப்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டின் சலார் ஜங் அருங்காட்சியகச் சட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுனரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் உலோகச் சிற்பங்கள், சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள், தந்தத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கலைப் பொருட்கள், விதவிதமான துணிகள், பீங்கான் சாடிகள், விரிப்புகள், கடிகாரங்கள், இருக்கைகள் என்று சுமார் 42.000 பொருட்களும், 60,000 நுால்களும் 950 கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவற்றுடன் பெரிய நுாலகம், படிக்கும் அறை, பதிப்பகம், இரசாயண முறையில் பொருட்களைப் பாதுகாக்கும் ஓர் ஆய்வகம், விற்பனையகம் பாேன்றவையும் உள்ளன. ராஜா ரவிவர்மா ஓவியங்கள், ஒளரங்கசீப், ஜஹாங்கீர், நுார்ஜஹானுடைய வாள்கள், திப்பு சுல்தானின் அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் என்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்காடு போட்டிருக்கும் இரபேக்கா சிலை மிகவும் புகழ் பெற்றது. 1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட குரான் நுால்கள், விதவிதமான அளவுகளிலும், வடிவங்களிலும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம், வெள்ளித் தகடுகளில் எழுதப்பட்ட குரான், மிகச் சிறிய குரான் போன்று பல இங்குள்ளன. கடிகாரங்களுக்கு என்று தனி அறை உள்ளது. பழங்கால சூரியக் கடிகாரத்திலிருந்து இருபதாம் நுாற்றாண்டின் அதிநவீன கடிகாரங்கள் வரை வைக்கப்பட்டிருக்கின்றன. உருப்பெருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி பார்க்கக்கூடிய கடிகாரமும் இங்குள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் ஒரு பொருள் இசைக்கடிகாரம் ஆகும். 200 வருடங்களாக இந்தக் கடிகாரம் ஒரு முறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.