மறுபிறப்பு (reincarnation) என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும். இந்து, புத்தம் போன்ற இந்திய சமயங்கள் அனைத்திலும் இது முக்கிய கொள்கையாகும்.[1] இது டியூரிசம், ஆன்மீகம், தியாசபி மற்றும் ஏக்காங்கர் முதலான சமயங்களிலும் சைபீரியா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலான இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே உள்ள நம்பிக்கையாகவும் உள்ளது.[2]

இந்து சமயத்தில் மறுபிறப்பு பற்றிய ஒரு ஓவியம்

இந்து சமயத்தில் மறுபிறப்பு

இந்து சமயத்தின்படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்தக் கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.

சிவபுராணப் பாடல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

யஜுர் வேதம்

இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.

ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்

- என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழற்சியின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

ஒருவருடைய பாவ-புண்ணியங்கள் (கர்மங்கள்) முழுதும் தீருமாயின், பிறவிச்சுழற்சி முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி அல்லது விடுதலை எனப்படுகிறது.

இயான் ஸ்டீவனன்சனின் கண்டுபிடிப்பு

இயான் ஸ்டீவன்சன் கனடாவைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். மறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார்.[3] 40 ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார். மனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையென நிறுவப்பட்டது.[4] முன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை வயது மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.