உடலை இயங்கச் செய்யும் ஆற்றல் From Wikipedia, the free encyclopedia
உயிர் | |
---|---|
உகாண்டாவில் இரிவஞ்சோரி மலையில் உள்ள நிலைத்திணைகள் (தாவரங்கள்) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | உயிர் |
ஆள்களங்கள், மீக்குழுக்கள் | |
புவியில் நிலவும் உயிரிகள்:
|
உயிர் (ⓘ) (Life) என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உருப்படிகளின் சிறப்பாகப் பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உருப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை தாவரங்கள், விலங்குகள், காளான்கள், முகிழுயிரிகள், தொல்லுயிரிகள், குச்சுயிரிகள் என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர் வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். உயிரியல் உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன.
உயிர் பற்றிய வரையறை முரண்பாடானதாகும். நடப்பு வரையறை உயிரிகள் தன்நிலைப்புள்ளவை; உயிர்க்கலன்களால் ஆனவை; வளர்சிதைமாற்றமுள்ளவை; தொடர்ந்து வளர்பவை; சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்பவை:தூண்டலுக்கு ஏற்ப துலங்குபவை; இனப்பெருக்கம் செய்பவை என வரன்படுத்துகிறது. என்றாலும் வேறுபல வரையறைகளும் முன்மொழியப்படுகின்றன. நச்சுயிரிகள் போன்றவை விளிம்பு நிலையில் உள்ளனவாகும். வரலாறு முழுவதும் உயிர் பற்றி வரையறுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. உயிரின் இயல்புகள் பற்றியும் உயிரின் தோற்றம் பற்றியும் பொருள்முதலியம் போன்ற பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. பொருள்முதலியம் உயிர் பொருண்மத்தில் இருந்தே தோன்றியது எனவும் உயிர் பொருண்மத்தின் சிக்கலான வடிவமே எனவும் கூறுகிறது; பொருள்வடிவியம் (hylomorphism) அனைத்து உருப்படிகளும் பொருண்மமும் வடிவமும் கொண்டவை எனக் கூறுகிறது. உயிர்வகையின் வடிவம் உயிர் அல்லது ஆன்மா என்கிறது; தன்னியல்புத் தோற்றம் உயிரற்றதில் இருந்தே உயிரும் உயிரியல்பும் தொடர்ந்து எழுகிறது எனக் கூறுகிறது. என்றாலும், உயிரிகள் உயிர்விசை அல்லது உயிர்ப்பொறியைக் கொண்டுள்ளன என்ற கருதுகோள் இப்போது வழக்கிறந்துவிட்டது. பல அறிவியல் புலங்களின் வளர்ச்சிகளை உள்ளீடாகக் கொண்ட நிகழ்கால வரையறை மிகவும் சிக்கலானதாகும். உயிரியற்பியலாளர்கள் வேதி அமைப்புகளைச் சார்ந்து பல வரையறைகளை முன்மொழிந்துள்ளனர்; கையா கருதுகோள் போன்ற உயிர்வாழ் அமைப்புகள் சார்ந்த சில வரையறைகளும் நிலவுகின்றன. கையா கருதுகோள் புவியை உயிருள்ளதாகக் கருதுகிறது. மற்றொரு கோட்பாடு உயிர் என்பது சூழல் அமைப்புகளினியல்பாக்க் கருதுகிறது. மேலும் ஒன்று, கோட்பாடு, கணிதவியல் உயிரியலின் கிளையான அருஞ்சிக்கல் அமைப்பு உயிரியலில் விரிவாக விளக்கப்படுகிறது. உயிரிலித் தோற்றம் எளிய கரிமச் சேர்மத்தில் இருந்து அதாவது உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல்நிகழ்வாகத் தோன்றியதென விவரிக்கிறது.அனைத்து உயிரிகளின் பொதுவான இயல்புகள் உயிர்வேதியியல் நிகழ்வுகள் நிலைகொள்ள, சில அடிப்படை வேதித் தனிமங்களின் தேவையைச் சுட்டுகின்றன.
இயற்பியலாளர்களான, ஜான் பர்னல், எர்வின் சுரோடிங்கர், இயூஜீன் விக்னர், ஜான் அவெரி ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.
புவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது. புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாகக் குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில் (LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர்.[1]
முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.
உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். செயற்கை உயிர் என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. இறப்பு என்பது உயிர் நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். மறைதல் அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும்.
உயிர்க்கலன் இல்லாத உயிரினம், உயிர்க்கலன் உள்ள உயிரினம் என உயிர்த்திணை உலகம் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
உயிரைப் பற்றி வரையறுத்தல் அறிவியலாளருக்கும் மெய்யியலாளருக்கும் ஓர் அறைகூவலாகும்.[2][3][4][5][6] உயிர் என்பது பொருளாக அமையாது நிகழ்வாக இருத்தலால் இச்சிக்கல் அரியதாகிறது.[7][8][9] எந்தவொரு வரையறையும் புவியில் வாழும் அனைத்து உயிர்வகைகளையும் இவற்றினும் வேறுபட்ட அறியப்படாத உயிர்வகைகளையும் பொதுவாக உள்ளடக்கிப் பொதுவாக வரையறுக்க போதுமானதாக இருக்கவேண்டும்.[10][11][12] உயிர் பற்றி சுமார் 123 வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.[13] உயிரைப் பற்றி அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஏற்கும் ஒரு வரையறையாவது "தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டு டார்வினிய பரிணாமம் அடையக்கூடிய இயல்பையுடைய ஒரு வேதியியல் அமைப்பு" என்பதாம்.[14][15][16][17] இதைவிட எளிமையாகக் கூறின், உயிர் என்பது "தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலும் வாழ்நிலையின் வகுத்தலுக்கிணங்க பரிணமிக்கும் தன்மையும் கொண்ட ஒரு பருப்பொருள்."[18][19][20]
உயிர் பற்றிய மறுக்கவியலாத வரையறை ஏதும் இல்லையென்பதால், உயிரியலில் நிலவும் நடப்பு வரையறைகள் அனைத்துமே விவரிப்புகளாக மட்டுமே அமைகின்றன. எனவே, உயிர் பின்வரும் அனைத்து அல்லது பெரும்பாலான பண்புகளை வெளிப்படுத்தும் பான்மையதாகக் கருதப்படுகிறது.[11][21][22][23][24][25][26]
இந்தச் சிக்கலான நிகழ்வுகள் உடலியங்கியல் செயல்பாடுகள் எனப்படுகின்றன. இவை உயிர்பேணலுக்குச் சாரமாகத் தேவையான இயற்பியல், வேதியியல் அடித்தளக் கட்டமைப்புகளையும் குறிகைசெலுத்தல், கட்டுபடுத்தல் ஆகிய இயங்கமைப்புகளையும் பெற்றுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.