நேபாள நாட்டின் வரலாறு From Wikipedia, the free encyclopedia
நேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது. பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 முதல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர். நேபாளத்தின் தேசிய மொழியும், அதிக நேபாள மக்களால் பேசப்படும் ஒரே மொழி நேபாள மொழியாகும்.
மன்னராட்சி நாடாக இருந்த நேபாளத்தில், குடியரசு முறை ஆட்சி முறை அமைய 1990 முதல் 2008 முடிய உள்நாட்டு போர் நடைபெற்றது. நேபாள நாட்டை ஜனநாயக குடியரசு நாடாக மாற்ற, நேபாள மன்னருக்கும், நேபாள அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையே 2008ஆம் ஆண்டில் உடன்படிக்கை ஏற்பட்டது. முதன் முதலாக நேபாளத்தின் சட்டபூர்வமான நாடாளுமன்றத்திற்கு 2008இல் தேர்தல் நடைபெற்றது. 2008ஆம் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சூன் 2008இல் நேபாள நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டாச்சி ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
காத்மாண்டு சமவெளியில் 11 ஆயிரங்களுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தை சார்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[1]நேபாளத்தின் ஆதிகுடிகள் வேட்டைக்கார குசுந்தா எனும் பழமையாக இன மக்கள் என்று அறியப்படுகிறது.[2]
பிற்கால வேதகாலத்தில், குறிப்பாக உபநிடதங்களில் நேபாள நாடு குறித்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளது.[3]சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில், நேபாளத்தை, பாரத நாட்டின் எல்லைப்புற நாடாக, குறிப்பாக கிராத நாடாக குறித்துள்ளது. ஸ்கந்த புராணத்தில் நேபாள மகாத்மியம் என்று தனி அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் நேபாளத்தின் வளங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.[4] நாராயண பூஜா எனும் நூலில் நேபாள நாட்டை குறித்துள்ளது.[3]
நேபாளத்தில் திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுபவர்கள், 2500 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் [5]நேபாளத்தை லிச்சாவி [6] மற்றும் மல்லர் வம்சத்தை சார்ந்த மன்னர்கள் ஆண்டதை குறித்த விவரங்களும், கிழக்கு நேபாளத்தை கிராதர்கள் ஆட்சி செய்த குறிப்புகளும் தொல்லியல் புள்ளி விவரங்களில் காணப்படுகிறது.[7]
தெற்கு நேபாளத்தை புத்தர் பிறந்த சாக்கிய வம்சத்தவர்கள் கி மு 500க்கு முன்னர் ஆண்டனர்.
கி மு 320-இல் நேபாளத்தின் மத்தியப் பகுதியான காத்மாண்டு சமவெளி மற்றும் தெற்கின் தராய் பகுதியின் லிச்சாவி நாடு, மௌரியப் பேரரசின் கீழ் இருந்தது.
கி பி 645இல் இந்தியாவில் பயணித்த சீன நாட்டு பௌத்த பிக்குவான யுவான் சுவானின் குறிப்புகளில், நேபாளத்தைப் பற்றிய குறிப்புகளில் நேபாள நாட்டை குறித்த குறிப்புகள் குறைவாகவே உள்ளது.[8][9] காத்மாண்டு சமவெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகளில் நேபாள நாட்டைக் குறித்த முக்கிய வரலாற்று குறிப்புகள் காணப்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திபெத்திய பேரரசால் வீழ்ந்த நேபாள லிச்சாவி வம்சத்திற்கு பின்னர் இராகவதேவன் என்ற மன்னர் கி பி 869-இல் நிறுவிய தாக்கூரி வம்ச அரசு 869 முதல் 1200 முடிய நேபாளத்தை ஆண்டது. [10]
பின்னர் நேவார் எனப்படும் மல்லர் மன்னர்களின் ஆட்சி கி பி 1201 முதல் 1769 முடிய நடைபெற்றது. 11ஆம் நூற்றாண்டில் பொக்காரா பகுதியை நேபாளத்துடன் இணைக்கப்பட்டது. கி பி 11ஆம் நூற்றாண்டில், தென்னிந்திய சாளுக்கியப் பேரரசில் கீழ் நேபாள நாடு இணைக்கப்பட்டது. சாளுக்கியர் காலத்தில், பௌத்த சமயத்தின் ஆதிக்கத்திலிருந்த நேபாள நாடு இந்து சமய நாடாக மாறியது.
மல்ல வம்சத்து அரசர்களுக்கு பின்னர், நேபாளம் 24 குறுநில மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. 1482-இல் நேபாள நாடு, காட்மாண்டு, பாதன் மற்றும் பக்தபூர் என மூன்று நாடுகளாக பிளவு பட்டது.
ஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர், காட்மாண்டுப் போர் மற்றும் கீர்த்திப்பூர் போர்களில் நேவாரிகளான மல்லர் வம்சத்தினரை வென்று காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றி, 1768ல் நேபாள இராச்சியத்தை உருவாக்கினர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் போர்களை நேரில் கண்டவர் கிறித்தவப் பாதிரியார் குயுசெப்பி ஆவார்.[11] ஷா வம்சத்தினர் தற்கால நேபாளத்தை மே, 2008 முடிய ஆண்டனர்.
நேபாள கோர்க்கா மன்னர்களான ராணா பகதூர் ஷா, மேற்கில் வடக்கு இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரா, குமாவுன் மற்றும் கார்வால் பகுதிகளையும், கிழக்கில் சிக்கிம், டார்ஜிலிங் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்தனர். கோர்க்கா அரசு உச்சத்தில் இருக்கையில், கிழக்கில் டீஸ்டா ஆறு முதல் மேற்கில் சத்லஜ் ஆறு வரையும், தெற்கில் இமயமலையின் தெராய் சமவெளிப் பகுதிகள் வரை பரவியிருந்தது.
திபெத் பகுதியின் மலைக்கணவாய்களையும், உள் திங்கிரி சமவெளியின் கட்டுப்பாட்டுகள் குறித்து, சீனாவின் குயிங் பேரரசுக்கும்-நேபாள அரசுக்குமிடையே நடந்த போரில், நேபாளம் வெற்றியை இழந்தது. நேபாளத்திற்கு உண்டான இப்பின்னடைவால், 1816இல் ஏற்பட்ட நேபாள-சீன உடன்படிக்கையின்படி, நேபாளம், திபெத் மீதான கட்டுப்பாட்டை இழந்தது அல்லாமல், சீனாவிற்கு ஒரு பெருந்தொகை நட்ட ஈடுடாக செலுத்த வேண்டி வந்தது.
இந்திய-நேபாள எல்லைப்புறத்தில் இருந்த குறுநில மன்னராட்சிகள் தங்கள் நாட்டுடன் இணைப்பது குறித்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் நேபாள நாட்டுக்குமிடையே தோன்றிய கருத்து மோதல்கள், 1815-1816-இல் ஆங்கிலேய-நேபாளப் போருக்கு வித்திட்டது. போரின் முடிவில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தப்படி, நேபாளம் கைப்பற்றியிருந்த சிக்கிம், கார்வால், குமாவுன், சிர்மூர் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத் தரப்பட்டது.
நேபாளத்த்தின் ஷா வம்ச மன்னர்கள், நாட்டின் நிர்வாகத்தை கவணித்துக் கொள்ள, பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர் பதவிகளுக்கு ராணா வம்சத்தினரை நியமித்துக் கொண்டனர்.
பிற்கால ஷா வம்ச அரச குடும்பத்திற்குள் பிணக்குகள் நிலவியதன் விளைவாக, 1846ஆம் ஆண்டில் ராணா வம்சத்தின் நேபாள தலைமை அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான ஜங் பகதூர் ராணாவை, பதவியிலிருந்து நீக்க, நேபாள அரசி தீட்டிய சதித்திட்டம் வெளிப்பட்ட காரணத்தினால், நேபாள நாட்டு இராணுவத்திற்கும், நேபாள நாடு அரசியின் விசுவாசப் படைகளுக்கும் நடந்த போரில் அரசியும், அரச வம்சத்து இளவரசர்கள் மற்றும் அரண்மனை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை கோத் படுகொலைகள் என நேபாள வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
தங்களுக்கு எதிரான இச்சதித் திட்டத்தை முறியடித்த நேபாளப் படைத்தலைவர் ஜங் பகதூர் ராணா , நேபாள இராச்சிய மன்னர்களை பொம்மை மன்னர்களாக வைத்துக் கொண்டு, நாட்டை 1846 முதல் 1951 முடிய ஜங் பகதூர் ரானாவின் ராணா வம்சத்தினர் நிர்வகித்தனர்.
ராணா வம்ச பிரதம அமைச்சர்கள் , கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு உதவியாக இருந்தனர். 1857 சிப்பாய் கிளர்ச்சியை அடக்க, நேபாள நாட்டு கூர்க்கா படைகள் ஆங்கிலேயர்களுக்கு உதவின. பின்னர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், நேபாளம், பிரித்தானியப் பேரரசுக்கு உதவியது. அதற்கு கைம்மாறாக பிரித்தானிய அரசு, நேபாளி அல்லாத மக்கள் வாழும் தெராய் சமவெளிப் பகுதிகளை, நேபாளத்திற்கு பரிசாக வழங்கியது.
நேபாளத்தில் இருந்த அடிமை முறை 1924இல் ஒழிக்கப்பட்டது.[12] தெராய் சமவெளிப் பகுதியில், கடனை திருப்பி செலுத்தாத குடியானவர்கள், தங்கள் குடும்பத்துடன், கடனை வழங்கியவர்களுக்கு, அடிமையாக்கப்பட்டனர். தங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அடிமைகளின் உழைப்பை சுரண்டினர். ராணா வம்ச அரசர்கள் இத்தகைய அடிமை முறையை ஒழித்தனர்.[13][14]
1951 நேபாள புரட்சியின் முடிவில் நேபாளத்தில் ராணா வம்சத்தின் 105 ஆண்டு கால பரம்பரை கொடுங்கோல் ஆட்சி முடிவிற்கு வந்தது. திரிபுவன் வீர விக்ரம் ஷா மீண்டும் நேபாள மன்னரானார். மாத்ரிக பிரசாத் கொய்ராலா தலைமையில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது. முடியாட்சிக்கு எதிராக, ஜனநாயக அரசு முறை நடைமுறைப்படுத்திடவும், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் போராட்டங்கள் துவங்கின. 1960களில் நேபாளத்தில் அரசியல் கட்சி சார்பற்ற நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1955 முதல் 1972 முடிய நேபாள மன்னராக இருந்த மகேந்திரா, நேபாள அரசின் நிர்வாகத்தை ஏற்று நடத்த, அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையை 1960இல் உருவாக்கினார். இப்பஞ்சாயத்து அமைப்பு, நேபாளத்தை 1990 முடிய நிர்வகித்தது. 1972 முதல் 2001 முடிய நேபாள மன்னராக இருந்த வீரேந்திரரின் காலத்தில், ஜன் அந்தோலான் எனும் மக்கள் இயக்கத்தின் நீண்டகால போராட்டத்திற்குப் பின் மன்னர் பிரேந்திரா, அரசியல் அமைப்புச் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொண்டு, மே 1991இல் பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.[15]
1996ஆம் ஆண்டில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), மன்னரின் கீழ் இயங்கும் நாடாளுமன்ற நடைமுறையை நீக்கி, மக்கள் குடியரசு அமைய கிளர்ச்சிகள் செய்தன. இதனால் நேபாளம் முழுவதும் நீண்டகாலம் நடந்த உள்நாட்டுப் போரில் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
1 சூன் 2001இல் நேபாள அரண்மனையில் நேபாள அரச குடும்பத்தில் நடந்த படுகொலைகளில், மன்னர் வீரேந்திரர், ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு காரணமான பட்டத்து இளவரசர் திபெந்திரா, மூன்று நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னர் பிரேந்திராவின் இறப்பிற்கு பின், அவரது சகோதரர் ஞானேந்திரா நேபாள மன்னராக பட்டமேற்றார். நேபாள பொதுவுடமைக் கட்சியின் வன்முறைகளை ஒடுக்க, 1 பிப்ரவரி 2005இல் மன்னர் ஞானேந்திரர் நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அனைத்து ஆட்சி அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டார்.[15]பொதுவுடமை கட்சியின் ஆயுதப் போராளிகள், நேபாள நாட்டுப் புறங்களில் ஆதிக்கம் செலுத்தியதால், அவர்களை ஒடுக்கும் முயற்சிகள் எடுபடாது தோல்வி அடைந்ததால் மன்னர் ஞானேந்திரர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.
நேபாளத்தில் நாடாளுமன்ற மக்களாட்சியை நிறுவவும், நேபாள மன்னரின் சனநாயகமற்ற நேரடி முடியாட்சியை ஒழிக்கவும், நேபாள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இரண்டாவது மக்கள் இயக்கம் போராடியதின் விளைவாக, [16]நேபாளத்தில் 29 மே 2008 அன்று மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார். 24 ஏப்ரல் 2006இல் முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் நேபாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 28 டிசம்பர் 2007 அன்று நேபாள அரசியல் சட்டத்தின் பிரிவு 159இல் திருத்தம் மேற்கொண்டு, நேபாள நாட்டை, ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து, முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டது. [17][18]
10 ஏப்ரல் 2008ஆம் ஆண்டில் நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சி, 564 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 28 மே 2008இல் புதிய கூட்டணி அரசை அமைத்தது. [18] நேபாள மன்னரையும், அவரது குடும்பத்தினரையும் அரண்மனையிலிருந்து வெளியேற்றி, அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றி அமைத்தனர். [19]
மே 2009இல் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சியை ஒதுக்கி, மற்ற அரசியல் ஒன்று சேர்ந்து புதிய அரசை அமைத்தனர்.[20]
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சியின் மாதவ குமார் நேபாள் என்பவரை பிரதமராக ஏற்றனர்.[21] பிப்ரவரி 2011இல் ஜலாநாத் கானால் பிரதமராக பதவிக்கு வந்தார்.[22] ஆகஸ்டு 2011இல் பாபுராம் பட்டாராய் பிரதமராக பதவி ஏற்றார்.[23]
குறித்த காலத்தில் அரசு நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை இயற்றத் தவறியது.[24] எனவே அரசை கலைத்து விட்டு புதிய தேர்தலுக்கு குடியரசுத் தலைவர் ஆணையிட்டார். நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான தற்காலிக அரசு, நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. [25][26]2014இல் சுசில் கொய்ராலா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27]
நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் ஆகும் நிலையில், நோபாளத்தை மதசார்பற்ற, ஜனநாயக நாடாக புதிய அரசியல் சாசனம் ஏற்றது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார்.
நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரது நாடு என அறிவிக்கப்பட்டது.
ஈரவை முறைமையில் 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது.
20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாக் கொண்டு, நேபாளத்தின் 75 மாவட்டங்களைக் கொண்டு ஏழு புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. [28] [29]
புதிய குடியரசுத் தலைவர் தேர்தலில், பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியை சேர்ந்த வித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்று, 29 அக்டோபர் 2015 அன்று முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.[30]
நேபாளத்தின் 7 மாநிலங்களில் உள்ள 6 மாநகராட்சிகள், 11 துணை-மாநகராட்சிகள், 276 நகர்புற நகராட்சிகள் மற்றும் 481 கிராமிய நகராட்சிகளுக்கும், 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[31] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[32] [33]
ஐந்தாண்டு பதவிக்கால நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[34] [35] தேர்ந்தெடுக்கப்பட்ட 275 உறுப்பினர்களில், 138 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதம அமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்பர்.
நாடாளுமன்றத் தேர்தலுடன், நேபாளத்தின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடைபெற்றது.
நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி நேபாள பொதுவுடமைக் கட்சி சார்பாக பிபரவரி, 2018-இல் பிரதம அமைச்சர் கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது.
நேபாளத்தை ஆளும் நேபாள பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களான பிரசந்தா மற்றும் கட்க பிரசாத் சர்மா ஒளி குழுவினர்களுக்கிடையே பல மாதங்களாக தொடர்ந்த சர்ச்சைகள் காரணமான, நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் ஒளியின் பரிந்துரையின் படி, நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 20 டிசம்பர் 2020 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நேபாள நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[36]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.