From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தையின் பணி துறப்பு என்பது திருத்தந்தை ஒருவர் தனது சொந்த விருப்பத்தால் தனது திருத்தந்தை பணியைத் துறப்பதைக் குறிக்கும். இதற்கு கத்தோலிக்க திருச்சபையின் சட்ட எண் 332 பிரிவு 2இன் கீழ் இடமுண்டு. இப்பணி துறப்பு செல்லத்தக்க நிலையில் இருக்க அது திருத்தந்தையால் தன்னுரிமையுடன் செய்யப்பட வேண்டும்; மற்றும் உரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்; ஆனால் அது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது யாரிடமேனும் சமர்ப்பிக்கப்படவோ வேண்டிய தேவை இல்லை. ஆயினும் புதிய திருத்தந்தையினை தேர்வு செய்ய ஏற்ற விதமாக கர்தினால் குழுவிடமோ அல்லது குறைந்தது கர்தினால் குழு முதல்வரிடமோ அறிவிப்பது வழக்கம்.
1045 ஆம் ஆண்டு, ஒன்பதாம் பெனடிக்ட் காசுக்காக தனது பதவியினைத் துறந்தார். இவரிடமிருந்து திருச்சபையை காக்க இவருக்கு பணமளித்து இவரை பணி துறக்க கட்டயாப்படுத்திய ஆறாம் கிரகோரி இவருக்குப்பின் திருத்தந்தையானார். ஆயினும், ஆன்மிக அதிகாரத்தை விலைபேசுவது (simony) முறைகேடு என்பதால், அத்தகைய செயலைச் செய்த ஆறாம் கிரகோரி முறைகேடாக நடந்தார் என்பதால் அவரும் தானாகவே பணியினைத் துறந்தார். இவருக்குப்பின் திருத்தந்தையான இரண்டாம் கிளமெண்ட் 1047இல் இறந்ததால் ஒன்பதாம் பெனடிக்ட் மீண்டும் திருத்தந்தையானார்.
நன்கறியப்பட்ட திருத்தந்தையின் பணி துறப்பு ஐந்தாம் செலஸ்தீன் 1294இல் செய்தது ஆகும். இவர் திருத்தந்தைப் பணியை ஏற்க விருப்பமில்லை என்று கூறியபோதிலும் வற்புறுத்தலின் பேரில் அப்பணியை ஏற்றார். மேலும், அக்காலத்தில் திருத்தந்தை பணி துறப்பினை பற்றி எந்த சட்டமும் இல்லாததாலும், திருத்தந்தை பணி துறப்பு என்பது நிகழ முடியாத ஒன்றாகக் கருதப்பட்டதாலும், இவர் திருத்தந்தையான 5 மாதங்களுக்குப் பின்பு 'ஒரு திருத்தந்தைக்கு தனது பணியினை துறக்க அதிகாரம் உண்டு' என சட்டம் இயற்றி, அதனைப்பயன்படுத்தி தனது பணியினை துறந்தார். இதற்குப் பின் இரண்டு வருடங்கள் இவர் வனவாசியாக வாழ்ந்து மரித்தார். இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிக்கத்தக்கது.
பன்னிரண்டாம் கிரகோரி (1406-1415), மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டு வர தனது பணியினைத் துறந்தார். இவரோடு சேர்ந்து பிசா எதிர்-திருத்தந்தை 23ஆம் யோவானும் பணியினை துறந்தனர். ஆயினும் அவிஞான் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பணி துறக்க மறுத்ததால், அவர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே நடப்பில் இருந்த காண்ஸ்டன்சு சங்கத்துக்கு தனக்குப்பின் வரும் திருத்தந்தையை தேர்வு செய்ய பன்னிரண்டாம் கிரகோரி அதிகாரம் அளித்தார்.
11 பெப்ருவரி 2013 அன்று பதினாறாம் பெனடிக்ட் 28 பெப்ருவரி 2013 அன்று தன் பணியிடத்தை துறப்பதாக அறிவித்தார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.[1]திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013ஆம் ஆண்டு பெப்ருவரி 28ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 8:00 மணியில் (வத்திக்கான்/மைய ஐரோப்பிய நேரம்) திருத்தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு முடிசூட்ட பாரிஸுக்கு 1804இல் செல்வதற்கு முன், ஏழாம் பயஸ் (1800–1823), தான் பிரான்சில் சிறை வைக்கப்பட்டால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு ஒரு ஆவணம் தயாரித்து அதில் கையெழுத்திட்டார்.[2]
இரண்டாம் உலகப் போரின் போது பன்னிரண்டாம் பயஸ், தான் நாசி படையினரால் கடத்தப்பட்டால், தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறும், கர்தினால்கள் உடனே நடுநிலை நாடான போர்த்துகலுக்கு சென்று அங்கே புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யவும் ஆணையிட்டு ஒர் ஆவணத்தை தயார் செய்தார்.[3]
இரண்டாம் யோவான் பவுல் பிப்ரவரி 1989இல் தான் ஒரு குணப்படுத்த முடியாத நோயினாலோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வாலோ தனது கடமையை சரிவர செய்ய இயலாது போனால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு கர்தினால் குழு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.[4]
திருத்தந்தையின் பெயர் | படம் | பதவிச் சின்னம் | ஆட்சிக்காலத் தொடக்கம் |
ஆட்சிக்கால முடிவு |
இயற்பெயர் | பிறப்பிடம் | அடக்கம் செய்த இடம் | திருத்தந்தையர் வரிசையில் |
---|---|---|---|---|---|---|---|---|
முதலாம் கிளமெண்ட் | 92 | 99 | உரோமை | இலாத்தரனில் உள்ள புனித கிளமெண்ட் பேராலயம், உரோமை (?) | 4 | |||
புனித போன்தியன் | சூலை 21 230 | செப்டம்பர் 28 235 | உரோமை | புனித கலிஸ்து கல்லறை, உரோமை | 18 | |||
சில்வேரியஸ் | சூன் 8 536 | மார்ச்சு 537 | செக்கானோ (புரோசினோனே மாநிலம்) | போன்சா தீவு, இலத்தீனா மாநிலம் | 58 | |||
ஒன்பதாம் பெனடிக்ட் | (1°) சனவரி 1 1033 (2°) மார்ச்சு 10 1045 (3°) நவம்பர் 8 1047 | (1°) சனவரி 13 1045 (2°) மே 1 1045 (3°) சூலை 17 1048 | தூஸ்குலோ ஆளுஞர் தெயோஃபிலாத்தோ | உரோமை | ? | 147 | ||
ஆறாம் கிரகோரி | மே 51045 | திசம்பர் 20 1046 | ஜோவான்னி கிராசியானோ | உரோமை | ? | 148 | ||
ஐந்தாம் செலஸ்தீன் | சூலை 5 1294 | திசம்பர் 12 1294 | பியேத்ரோ மொரோனே (ஆஞ்சலேரி) | மொலீசே | கோல்லேமாஜ்ஜியோ புனித மரியா பேராலயம், ஆக்விலா | 192 | ||
பன்னிரண்டாம் கிரகோரி | நவம்பர் 30 1406 | ஜூலை 4 1415 | ஆஞ்செலோ கோரேர் | வெனிசு | புனித பிளாவியானோ கோவில், ரெக்கனாட்டி (மாசெராத்தா மாநிலம்) | 205 | ||
பதினாறாம் பெனடிக்ட் | ஏப்பிரல் 19 2005 | பெப்ருவர் 28 2013 | யோசப் அலோசியஸ் ராட்சிங்கர் | மார்க்ட்டெல் (செருமனி) | 265 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.